“பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!

0
498

‘பிச்சையெடுக்குமாம் பெருமாளு, அதைப் பிடுங்குமாம் அனுமாரு’ என்ற பழமொழியைத்தான் இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும். ஆனால், பாருங்கள், இங்கே… மைசூரில் 80 வயதான ஒரு பாட்டி, நாள்தோறும் கோயில் வாயிலில் அமர்ந்ததால் தனக்குக் கிடைத்த பணம் அத்தனையையும் சேர்த்து வைத்து சுமார் 2.1/2 லட்சம் ரூபாய்த் தொகையை ஆஞ்சநேயர் கோயிலுக்குக் காணிக்கையாக அளித்துள்ளார் என்று பரபரப்பாக இணைய ஊடகங்களில் பேச்சு அடிபடுகிறது.

அந்தப் பாட்டியின் பெயர் எம்.வி. சீதாலட்சுமி. மைசூர், வொண்டிக்கொப்பில் இருக்கும் பிரசன்ன ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில் வளாக வாசலில் அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் கும்பலுடன் சேர்ந்து இவரும் அமர்ந்திருப்பது வாடிக்கை.

ஆனால், அங்கிருப்பவர்கள் சொல்லித்தான் தெரிய வருகிறது. இவர் தானாக முன் வந்து ஒருநாளும் பிச்சை கேட்பது இல்லையாம், கோயிலுக்கு வரும் பக்தர்கள் மனமுவந்து தட்டில் போடும் காசையும், பணத்தையும் வேண்டாமென்று மறுப்பதும் இல்லையாம்.

இப்படிச் சேர்த்த பணத்திலிருந்து தான் சுமார் 21/2 லட்சத்தை கோயிலுக்கு காணிக்கையாக்கியுள்ளார்.

இதைப் பற்றிப் பேசும் போது சீதாலட்சுமி பாட்டி கூறியது;

‘ஆரம்பத்தில் வீட்டு வேலை செய்து ஜீவித்துக் கொண்டிருந்த நான் வயது முதிர்ந்து தள்ளாமை வந்து வேலை செய்ய முடியாத நிலைக்கு ஆளானதும் சில காலம் என் தம்பி வீட்டில் இருந்தேன்.

ஆனால் பைசா பிரயோஜனமின்றி… யாருக்கும் பாரமாகவோ, தொல்லையாகவோ இருக்கக் கூடாது என்று தோன்றியதால் நாள் தோறும் இந்த ஆஞ்சநேய ஸ்வாமி கோயிலில் வந்து அமரத் தொடங்கினேன்.

பக்தர்கள் எனக்கும் மனமுவந்து பிச்சையிடத் தொடங்கினர். சிறுகச் சிறுகப் பணம் சேர்ந்தது. அதிலிருந்து கணேச பூஜைக்கு 30,000 ஐ எடுத்து கோயில் தர்மகர்த்தாவுக்கு அளித்தேன்.

அவரை என்னுடன் வங்கிக்கு அழைத்துச் சென்று அந்தப் பணத்தை எடுத்துக் கொடுத்தேன்.

தற்போது என்னிடம் மீதமிருந்த தொகையையும் கோயிலுக்கே காணிக்கையாக அளித்து விட்டேன்.

ஏனென்றால் என்னிடமிருந்தால் யாரேனும் அந்தப் பணத்தை திருட முயற்சிக்கலாம். அந்தப்பணத்தை ஆஞ்சநேய ஸ்வாமி கோயில் காரியங்களுக்கு காணிக்கையாக்கினால் அதன் மூலம் என்னைப் போன்ற பலருக்கு பலன் கிடைக்கலாம் என்று எனக்குத் தோன்றியது.

ஏனெனில், இந்தக் கோயிலில் நான் காணிக்கை அளிப்பதற்கும் முன்பிருந்தே என்னை நன்றாகக் கவனித்துக் கொள்கிறார்கள்.

நான் அளித்த பணத்திலிருந்து வருடா வருடம் ஹனுமன் ஜெயந்தி அன்று பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்க வேண்டும் என்பதே எனது ஆசை!’ என்கிறார்.

பிச்சை எடுத்துச் சேர்த்த பணத்தை ஆஞ்சநேயருக்கு காணிக்கையாக்கிய சீதாலட்சுமி பாட்டி பற்றி கேள்விப்பட்டு அவரை கோயில்விழா நாளொன்றில் அவ்வூர் எம் எல் ஏ வாசு பாராட்டிப் பெருமைப்படுத்தவே இப்போது பாட்டிக்கான மவுசு கூடி விட்டது.

சில பக்தர்கள் ஆஞ்சநேயரை வணங்கி விட்டு பாட்டியின் காலிலும் விழுந்து ஆசி வாங்கிச் செல்லத் தொடங்கி இருக்கிறார்கள், அதுமட்டுமல்ல, இப்போதெல்லாம் சீதலட்சுமி பாட்டியின் தட்டில் விழும் பணத்தின் மதிப்பும் அதிகரிக்கத் தொடங்கி விட்டதாம். இதைப் பற்றிப் பேசும் போது கோயில் நிர்வாகத்தார் தரப்பில் சொல்லப்பட்ட விஷயம்;

பாட்டியைப் பற்றிக் கேள்விப்பட்டு அவர் மீது அன்பும், மரியாதையும் கொண்டு பக்தர்கள் தரும் காசிலிருந்து பெருகி இன்று கோயிலுக்கே காணிக்கையாக்கப் பட்ட பணத்தை நாங்கள் நேர்மையான முறையில் பாட்டி குறிப்பிட்ட விதத்தில் செலவழித்து அவரைப் போன்ற பக்தர்களின் மனங்களைக் குளிர்விப்போம். என்றனர்.

சீதாலட்சுமி பாட்டி குறித்து அவர் தம்பி கூறியது; அவருக்குத் தள்ளாமை வந்ததும் எங்கள் வீட்டில் வைத்துத் தான் பராமரித்து வந்தோம், இடையில் ஒருமுறை விபத்தில் சிக்கி அவர் அவதிப்பட்ட போதும் நாங்கள், எங்களால் முடிந்தவரை அவரை நன்றாகவே பார்த்துக் கொண்டோம்.

ஆனால், அவருக்கு வீட்டில் தங்க விருப்பமில்லை. கோயிலில் சென்று அமர்ந்திருக்கவே விரும்புகிறார். அவரது விருப்பப்படியே இன்றும் அவர் கோயிலுக்குச் சென்று அமர்வதை நாங்கள் தடுப்பதில்லை.

காலையில் கோயிலுக்குச் சென்று அமரத் தொடங்கும் பாட்டி இருள் சூழந்த பின் இரவில் தூங்குவதற்கு மட்டும் தான் வீட்டுக்கு வருவது வழக்கம். என்கிறார்.

எது எப்படியோ, வயதான காலத்திலும் மற்றவர்களுக்குப் பாரமாக இருக்கக் கூடாது என்று தீர்மானித்து கோயில் வாசலில் பிச்சையாகக் கிடைத்த பணத்தைக் கூட முழுதாக அந்த தெய்வத்துக்கே மீண்டும் காணிக்கையாக்கிய சீதாலட்சுமி பாட்டியை எத்தனை பாராட்டினாலும் தகும்.

உண்மையில் இவர் பெற்றது பிச்சையில்லை. அதுவும் மக்கள் இவருக்கு அளித்த காணிக்கையே!

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.