இந்திராவைப் பற்றி ஃபிடல் காஸ்ட்ரோவிடம் என்ன சொன்னார் யாசர் அராஃபத்? கே.நட்வர் சிங் முன்னாள் இந்திய வெளியுறவு அமைச்சர்

0
955

கம்பீரமான, அதிகாரம் பொருந்திய ஒருவராகவே பெரும்பாலும் இந்திரா காந்தி பார்க்கப்படுகிறார்.

இயல்பானவர், பழகுவதற்கு இனிமையானவர் என்றோ, பிறரை கவரும் நபராகவோ அல்லது பிறர் மீது அக்கறை கொண்டவராகவோ இந்திரா காந்தி பார்க்கப்படவில்லை.

ராணி இரண்டாம் எலிசபெத்துடன் இந்திரா காந்தி

உண்மையில் தனது நாவன்மையால் அனைவரையும் ஈர்க்கக்கூடியவர் இந்திரா காந்தி. அரசியலைத் தவிரவும் பல தளங்களில் அக்கறை கொண்டவர், ஆளுமையின் சின்னம் அவர்.

கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், திறன்படைத்தவர்களின் தோழமையை விரும்புபவர், நகைச்சுவை உணர்வு கொண்டவர் இந்திரா என்பது பெரிதும் அறியப்படாத தகவல்கள்.

1984 அக்டோபர் 31ஆம் தேதியன்று அவர் படுகொலை செய்யப்பட்டபோது, என்னுடைய வாழ்வின் வசந்தமே முடிந்துவிட்டதாக உணர்ந்தேன்.

அனைவரையும் உற்சாகப்படுத்தி, எப்போதும் ஊக்கம் அளிக்கும் இந்திரா நட்புணர்வுடன் பழகுபவர், பிறரை மதிக்கும் குணம் படைத்தவர்.

நான் அவருக்கு நன்றிக்கடன்பட்டவன். அவர் எனக்கு கற்றுக் கொடுத்தவை அளப்பரியவை, அளவிட முடியாதவை. அவர் கற்றுக் கொடுத்ததில் ஓரு சிறிய பகுதியை மட்டுமே நான் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்றால் அது மிகையாகாது.

_98805407_802614f4-f524-4a50-b45d-e399c04c6a34 கே.நட்வர் சிங்

தங்கள் வாழ்க்கையைப் பற்றி மட்டுமே சிந்தித்து முடிவெடுப்பவர்கள் மற்றும் பிரச்சனைகளை சந்திக்காமல் பின்வாங்குபவர்கள் மீது இந்திரா காந்திக்கு பெரியளவு அபிமானம் இருந்ததில்லை.

தனது கூர்மையான பார்வையினால் பல சமூக மற்றும் அரசியல் தடைகளை உடைத்து ஒரு பெரிய விடுவிக்கும் சக்தியாக இருந்த இந்திரா காந்தி, மிகுந்த வலிமை மிக்கவர்.

எனக்கு எழுதிய முதல் கடிதம்

1968 ஆகஸ்டு மாதம் 28ஆம் நாள், கைப்பட எனக்கு ஒரு கடிதம் எழுதினார் இந்திரா காந்தி. எனது மகன் ஜகத் பிறந்த சமயம் அது. அதில்,

அன்புள்ள நட்வர்,

உங்களுக்கு மகன் பிறந்த செய்தியை செயலாளர் சொன்னதும் உடனே தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் அது முடியவில்லை.

இருவருக்கும் வாழ்த்துகள். மனம் நிறைந்த மகிழ்ச்சியையும், சிறப்பையும் கொண்டு வந்து சேர்க்கும் வகையில் உங்கள் மகன் வளர வாழ்த்துகிறேன்.

உங்கள் உண்மையுள்ள,

இந்திரா காந்தி

1970 ஜனவரி 27ஆம் தேதியன்று இந்திரா காந்திக்கு நான் ஒரு குறிப்பு அனுப்பினேன்.

உங்களை எப்படி அழைப்பது என (அன்பான மேடம், மதிப்பிற்குரிய மேடம், மேடம், திருமதி காந்தி, அன்பான ஸ்ரீமதி காந்தி, அன்பான பிரதமர்) பலவிதமாக முயற்சித்தேன். இறுதியாக எதுவுமே சரியில்லை என்று தோன்றியதால் ஒரு குறிப்பு வடிவில் இதை அனுப்புகிறேன்.

இரண்டு வாரங்களுக்கும் மேல் படுத்த படுக்கையாக இருக்கிறேன். தரையில் இருந்த மகனின் பொம்மையை எடுத்து கொடுப்பதற்காக கீழே குனிந்தபோது, இடுப்பு எலும்பு சுளுக்கிவிட்டது.

நடுத்தர வயதில், சிறிது வலியை அனுபவிக்க வேண்டியிருக்கும். இப்போது நான் டெல்லியில் இருந்து தொலைவில் இருப்பதும் துன்பத்தை அதிகரித்துள்ளது.

பொறுக்கமுடியாத வலியுடன் வெறுமனே கூரையைப் பார்த்துக் கொண்டே படுத்திருப்பதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியவில்லை. கூரைக்கு வண்ணம் பூச வேண்டியது அவசியம் என்று தோன்றுகிறது.

எனது குறிப்புக்கு ஜனவரி 30ஆம் தேதியன்று இந்திரா பதிலனுப்பினார். அதில்…

நீங்கள் விடுமுறையில் இருப்பதை அறிந்தேன், ஆனால் உடல் நலக்குறைவு என்று தெரியவில்லை. இடுப்பு எலும்பு சுளுக்கினால் ஏற்படும் வேதனையை உணர்வேன்.

அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன், ஆனால் இந்த நேரத்தை, உங்களுடைய கடந்தகாலம் நிகழ்காலம், எதிர்காலம் பற்றி நன்கு சிந்தித்து பகுப்பாய்வு செய்ய பயன்படுத்துங்கள். அது எப்போதும் நம் அனைவருக்கும் தேவைப்படுவது.

வெளிநாட்டு விருந்தினர்கள், முக்கிய பிரமுகர்களின் வருகை என குடியரசு தின நிகழ்வுகளின்போது ஒரு வார காலம் டெல்லி எப்படி பரபரப்பாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும். நாளைக் காலையில் ஒரு நிகழ்ச்சிக்காக செல்கிறேன். நீங்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

கே.பி.எஸ் மேனனும் இப்படி சிரமப்பட்டாரே நினைவிருக்கிறதா? அஜந்தா சிலைபோல் அவர் அசையாமல் நின்று கொண்டிருக்கவேண்டிய நிலையில் இருந்தார். நீங்கள் இப்போது தந்தை என்ற நிலையில் இருப்பதால் ஏற்படும் சில ஆபத்துகளையும் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

கோபமடைந்த யாசர் அராஃபத்

_98805408_07f30913-7945-47c2-b730-2040999f276d யாசர் அராஃபத்

1983 மார்ச் ஏழாம் தேதியன்று அணிசேரா நாடுகளின் உச்சிமாநாடு டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. அப்போது நான் பொதுச் செயலாளராக பணிபுரிந்தேன்.

உச்சிமாநாட்டின் முதல் நாளே ஒரு பிரச்சனை எழுந்தது. பாலஸ்தீன லிபரேசன் அமைப்பின் தலைவர் யாசர் அராஃபத்தை சமாதானப்படுத்த வேண்டிய நிலை உருவானது.

மாநாட்டில் தனக்கு முன்னரே ஜோர்டான் மன்னர் உரையாற்றியதை தனக்கு நேர்ந்த அவமானமாக கருதிய யாசர் அராஃபத், மதிய உணவுக்கு பின் டெல்லியில் இருந்து கிளம்பிவிடும் முடிவில் இருந்தார்.

இந்திரா காந்திக்கு தொலைபேசியில் தகவலைச் சொல்லிவிட்டு, விஞ்ஞான் பவனுக்கு வரமுடியுமா என்று கேட்டேன். கியூபாவின் அதிபர் ஃபிடரல் கேஸ்ட்ரோவும் வந்திருப்பதையும் கூறினேன். காஸ்ட்ரோவிடம் இந்திரா பேசியதும், அவர் உடனே அராஃபத்திடம் பேசினார்.

“நீங்கள் இந்திரா காந்தியின் நண்பரா” என்று கேஸ்ட்ரோ, அராஃபத்தை கேட்டார். அதற்கு பதிலளித்த அராஃபத், “நண்பரே, அவர் எனது மூத்த சகோதரி, அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்” என்றார்.

_98805409_37f24637-51ce-493d-b93f-82707208b01cபிடரல் கேஸ்ட்ரோ

உடனே அதை பிடித்துக் கொண்ட கேஸ்ட்ரோ “அப்படியென்றால், இளைய சகோதரன் போல் நடந்துக்கொள்ளுங்கள், உச்சி மாநாட்டின் மதிய அமர்விலும் கலந்துகொள்ளுங்கள்,” என்று அன்புடன் கடிந்துக்கொண்டார். அதன் பிறகே அராஃபத் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.

1983 நவம்பர் மாதம், டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டின் தலைமை ஏற்பாட்டாளராக பொறுப்பு வகித்தேன்.

உச்சி மாநாட்டின் இரண்டாவது நாளன்று பிரச்சனை வெடித்தது. மகாராணி இரண்டாம் எலிசபெத், குடியரசுத் தலைவர் மாளிகையில் அன்னை தெரசாவுக்கு ‘ஆர்டர் ஆஃப் மெரிட்’ என்ற விருதை வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் தகவல் பிரதமருக்கு தெரிந்தது.

உண்மையை கண்டறியுமாறு பிரதமர் எனக்கு உத்தரவிட்டார். உண்மையிலுமே குடியரசுத் தலைவர் மாளிகையில் விழா ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஆனால் குடியரசுத் தலைவரைத்தவிர இதுபோன்ற நிகழ்ச்சியை வேறு யாரும் ஏற்பாடு செய்ய முடியாது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மகாராணிக்கு அனுமதியளிக்கமுடியாது என்று கூறுமாறு பிரிட்டன் பிரதமர் மார்கரெட் தாட்சரிடம் சொல்லச்சொன்னார் இந்திராகாந்தி. நானும் உத்தரவை நிறைவேற்றினேன்.

ஆனால், இடத்தை மாற்றுவதற்கான காலம் கடந்துவிட்டது என்று சொன்ன மார்கரெட் தாட்சர், இப்போது நிகழ்ச்சியில் மாறுதல்கள் செய்வது மகாராணிக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் என்று கூறி மறுத்துவிட்டார். தாட்சரின் பதிலை இந்திராவிடம் சொல்லிவிட்டேன்.

அதை ஏற்றுக்கொள்ளாத இந்திரா, மீண்டும் தாட்சரிடம் பேசும்படி சொன்னார். மேலும் இந்த பிரச்சனை அடுத்த நாள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் அப்போது பிரிட்டன் அரசியின் செயல் விமர்சிக்கப்படும் என்பதையும் கூறச்சொன்னார்.

பிரச்சனை பெரிதாகும் என்பதால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையின் தோட்டத்தில் நடைபெற்ற சிறிய நிகழ்ச்சி ஒன்றில் அன்னை தெரேசாவுக்கு ‘ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருதை மகாராணி இரண்டாம் எலிசபெத் வழங்கினார்.

_98805406_49fbf494-a569-42b8-87d1-70c81f286892 இந்திரா காந்தி

பின்னணியில் நடைபெற்ற சச்சரவுகள் பற்றிய தகவல்கள் எதுவும் அன்னை தெரெசாவுக்கு தெரியாது என்பது ஆறுதல் அளித்தது.

காமன்வெல்த் உச்சிமாநாட்டின் இறுதி நாளன்று பிரதமர் இந்திரா காந்தியை சந்திப்பதற்காக அனுமதி கோரினேன். 31 வருடங்களாக இந்திய வெளியுறவுத்துறையில் பணியாற்றும் நான் பணியில் இருந்து வெளியேறும் விருப்பத்தை தெரிவித்தேன்.

அரசியலில் ஈடுபடும் எனது ஆர்வத்தையும் அவரிடம் வெளிப்படுத்தினேன், அதற்கு இந்திரா அனுமதி கொடுத்தார்.

நவம்பர் 28ஆம் தேதியன்று, டெல்லி செளத் பிளாக்கில் அவரை சந்தித்தேன். ஓரிரு நாட்களில் பரத்பூருக்கு செல்கிறேன், அங்கிருந்து அரசியல் பயணத்தை தொடங்குகிறேன் என்று சொன்னேன். கதராடையும் நேரு கோட்டும் வாங்கப்போவதாக பேச்சுவாக்கில் சொன்னேன்.

அப்போது, “இனி நீ அரசியலில் காலடி எடுத்துவைக்கிறாய், அதற்கு உனது தோல் தடித்து இருப்பது நல்லது” என்று அறிவுரை சொன்னார் இந்திரா காந்தி.

(காங்கிரஸ் தலைவர் நட்வர் சிங், வெளியுறவு அமைச்சராக பதவி வகித்தவர். வெளியுறவு அமைச்சக செயலராகவும் பணியாற்றியவர். ‘One life is not enough’ என்ற தனது சுயசரிதையில் இந்திரா காந்தி மற்றும் அவரது குடும்பத்தைப் பற்றி எழுதியிருக்கிறார் நட்வர் சிங். இந்திராகாந்தி நூற்றாண்டு இம்மாதம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி வெளியாகும் பல கட்டுரைகளில் ஒன்று இது)

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.