மாகாணசபை தேர்தலும் போர் நிறுத்தமும்! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 132)

0
414

தேர்தலும்-இந்தியாவும்.

1988 நவம்பரில் வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவது என்று இந்திய அரசு முடிவு செய்தது. இலங்கை ஜனாதிபதியின் இந்தியா செய்த முடிவு அது.

வடக்கு-கிழக்கில் அவலங்கள் தலைவிரித்தாடும் நிலையில் அங்கொரு தேர்தலை நடத்தும் அறிவிப்பு கேலிக்குரிய ஒன்றாகவே கருதப்பட்டது.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினரும், ஈ.என்.டி.எல்.எஃப் தாங்கள் போட்டியிடத் தயார் என்று கூறிவிட்டால் இந்திய அரசுக்குத் தேர்தலை எப்படியாவது நடத்திவிடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருந்தது.

வடக்கு-கிழக்கில் ஜனநாயக சூழல் ஏற்பட்டுவிட்டதாக பிரச்சாரம் செய்வதற்கும் தமது விருப்பு வெறுப்பிற்கு ஏற்ப செயற்படக்கூடிய மாகாண அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதும் இந்திய அரசுக்குத் தேவையாக இருந்தது.

இல்லாவிட்டால் இலங்கைப் பிரச்சினையில் ராஜீவ்காந்தி சாதித்தது என்ன? என்று இந்தியாவில் எழும் கேள்விகளுக்கு பதில்சொல்வது சிரமமாக இருக்கும்.

ராஜீவ்காந்தியையும், இந்திரா காங்கிரசையும் தேர்தலில் தோல்வியடையச்செய்யக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த எதிர்கட்சிகள் இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்பியதையும், இலங்கைப் பிரச்சினையில் ராஜீவ்காந்தியின் கொள்கையையும் குறைகூறத் தொடங்கினர்.

இந்தியத் தேர்தலும், தமிழக சட்டசபைத் தேர்தலும் நெருங்கிக்கொண்டிருந்தன.

ஆகவே காலதாமதம் செய்யாமல் வடக்கு-கிழக்கில் தமக்குச் சாதகமான அரசாங்கத்தை, சுருக்கமாகச் சொன்னால் ஒரு பொம்மை அரசாங்கத்தை நிறுவும் அவசரத்தில் இந்திய மத்திய அரசு இருந்தது.

varathrajperuma_CIவரதராஜப்பெருமாள்

யார்வேண்டும் என்றாலும் தேர்தலில் போட்டியிடலாம் என்று கூறப்பட்ட போதும், ஈ.பி.ஆர்.எல்.எஃப் பதவிக்கு வருவதையும் குறிப்பாக அக் கட்சியில் இருந்து வரதராஜப்பெருமாள் முதலமைச்சராக வேண்டுமென கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் முற்கூட்டியே செய்யப்பட்ட முடிவாகும்.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பாகப் பரவலாக கண்டனங்கள் எழுந்தமையால் இந்தியத் தூதர் திக்ஷித் யாழ்ப்பாணம் சென்றார். அங்கு பலதரப்பட்டவர்களையும் சந்தித்து தமது முடிவுக்கு ஆதரவு தேடுவதுதான் அவரது விஜயத்தின் நோக்கமாகும்.

1988, செப்டம்பர் 17ம் திகதி யாழ்ப்பாணம் கச்சேரியில் தூதர் திக்ஷித் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு ஏற்ற சூழல் காணப்படவில்லை என்றே திக்ஷித்தைச் சந்தித்த பலர் கருத்துக் கூறியிருந்தனர்.

திக்ஷத்தின் யாழ் விஜயமும் அவரது நோக்கமும் குறித்து, வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாகவும் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டனர்.

யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஐம்பதுபேர் அந்த அறிக்கையில் கையொப்பமிட்டிருந்தனர்.

அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய விடையங்கள் பின்வருமாறு.

இந்தியத் தூதர் ஜே.என். திக்ஷித் யாழ்ப்பாணப் பொதுமக்களின் பல்வேறுதரப்பினருடன் யாழ் கச்சேரியில் கூட்டங்களை நடத்தினார்.

அவருடைய செய்தியின் சாரம்சம் இதுதான். தமிழ் மக்களுக்கு இப்போதுள்ள நடைமுறைச்சாத்தியமான, புத்திபூர்வமான ஒரேவழி, தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மாகாணத்திற்காக நடைபெற இருக்கும் மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் பங்குகொள்வதாகும்.

அரசியல் வெற்றிடத்தை இட்டு நிரப்பவும், சிக்கல் மிகுந்த குடியேற்றத்திட்டம் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் இது வழிவகுக்கும்.

தெரிசெய்யப்படும் மாகாணசபை அதிகாரப் பரவலாக்கத்தை யதார்த்த முறையாக்கி, சமாதானத்தையும் சாத்தியமாக்கும்.

மேலோட்டமாகப் பார்க்கும்போது அவர் கூறுவது சரிபோல தோன்றக்கூடும். ஆனால் இது நடைமுறை யாதார்த்தத்தோடு ஒத்துப்போகக் கூடியதா?

சுதந்திரமான நேர்மையான தேர்தல் என்பது யார் துப்பாக்கியை வைத்திருந்தாலும் சரி, துப்பாக்கி முனையில் மக்களை நெருக்குதல்களுக்கு உள்ளாக்கி அவர்கள். தாமே சிந்தித்து முடிவு மேற்கொள்கின்ற ஒரு சூழ்நிலை அமைந்திருக்க வேண்டும் என்பதை முன் அனுமானம் செய்கிறது.

இன்றைய நிலை?

இன்றைய உண்மைநிலை என்ன? தனிநபர்களோ அல்லது சமூக அமைப்புக்களோ இன்று தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும்பல மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தமது குரலை சரியான முறையில் உயர்த்தமுடியாத சூழல் இருப்பதை நாமறிவோம்.

இந்திய அமைதிப்படை மற்றும் பல்வேறு ஆயுதம் தாங்கிய விடுதலை இயக்கங்களின் புண்ணியத்தில் மக்கள் எதிர்காலம் குறித்து எவ்விதமான நிச்சயமற்ற பயங்கரத்தால் மௌனிக்கப்பட்ட நிலையில்தான் வாழ்ந்துவருகின்றனர்.

தேர்தல் நியமன காலத்தில் நிலமை மேலும் மோசமாகிவிட்டது. அனேகமாக ஒவ்வொரு நாளும் பழிவாங்கும் கொலைகள் நடந்தவண்ணமே உள்ளன.

ஒருபாவமும் அறியாத மத்திய வயது ஆண், பெண்கள்தான் இவ்வாறு பலியாகினர். பல சந்தர்ப்பங்களில் இந்திய அமைதிப்படையும் இந்த அநியாயங்களுக்குத் துணைபோயிருந்தது.

பெரும்பாலான தமிழர்கள் இந்தியாவை ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கிறார்கள் என்பதைச் சொல்லித்தானாகவேண்டும். இரு சாராருக்கும் சமய, கலாசாரப் பிணைப்புக்கள் உள்ளன. இந்திய சுதந்திரப் போராட்ட தலைவர்களை விசுவாசத்தோடு பின்பற்றுவோர் இங்குள்ளனர்.

அண்மைக்காலத்தில் இலங்கையில் அரச ஆதரவுடன் நடைபெற்ற வன்முறைகளின் போது நாட்டைவிட்டு ஓடிய தமிழர்களை அரவணைத்து புகலிடம் கொடுத்தவர்கள் இந்தியர்கள் என்ற நன்றியுணர்வும் தமிழர்களுக்கு உண்டு.

இலங்கையரசின் இனத்துவேசத்தை சர்வதேச ரீதியல் அம்பலப்படுத்துவதில் இந்தியா அதிக பங்கேற்றிருக்கிறது. ஆனால் 1987ல் அக்டோபரின் பின்னர் நிலைமைகள் துரிதமா மாறத்தொடங்கின.

ஆண்கள், பெண்கள், குழந்தைகளைக் கொலை செய்ததும், காணாமல் போவோரின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே செல்வதும், இன்றுவரைத் தடுப்புக்காவல்களில் சித்திரவதைகளும், சாவுகளும் தொடர்வதும் தான் இந்தியாமீது தமிழர்களுக்கு இருந்த நம்பிக்கையில் விரிசல் ஏற்படக் காரணமாயிருந்தது.

இந்தக் குரூரமான உண்மைகளை ஒருபுறம் தள்ளிவைத்துவிட்டு தந்தையின் தோரணையிலும், அச்சுறுத்தும் தொனியிலும் இந்தியா பேச முயலும்போது, எமது சொந்தப் பலவீனங்கள்தான் இவற்றையெல்லாம் அனுமதிக்கின்றன என்பதைச் சமூகம் உணரவேண்டும்.

இலங்கை இந்திய அரசுகளுடனான தமது உறவுகளை மட்டுமல்ல, எம்மையே நாம் பரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும்.

நம் சமுகத்திற்குள்ளேயே பயங்கரவாதத்துக்கு நாம் வந்தனை செய்து நிற்பதும், எமது சந்தர்ப்பவாதமும், பெரும்பாலான உட்கொலைகளின் போது கொள்கைப் பிடிப்புக்களை இழந்து நின்றதும்போன்ற அதே ஆயுதங்களை வைத்தே வெளிச்சக்திகள் நம்மை இலகுவாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தன.

ltte-members-beginஎன்ன செய்யலாம்?

எம் சமுகத்துக்குள்ளேயே ஜனநாயகவிரோதப் போக்குகளை ஆட்சேபனை எதுவுமின்றி நாம் ஏற்றுக்கொண்ட நிலையில் ஜனநாயத்திற்காக நாம் கூக்குரலிடுவது அர்த்தமற்றதாகப் போய்விடும்.

ஆகவே மக்கள் இழந்துபோன தமது சுயநம்பிக்கை, பெருமைகளை மீண்டும் பெறுவதாயின் கொள்கை அடிப்படையிலான கூட்டு நடவடிக்கையென்ற வழியில் இயங்க ஆரம்பிக்க வேண்டும்.

அழுந்திக் கொண்டிருக்கும் பல பிரச்சினைகள் குறித்து யாருமே துணிவுடன் ஒரு நிலைப்பாட்டை எடுக்காத நிலையில் நாம் நம்மை மக்களாக வலியுறுத்துவது எவ்வாறு?

எங்கள் அயலில் பணிமனைகளில், தொழில் சங்கங்களில், சங்கங்களில் தனிநபர்களாகவும் வேறு சில குழுக்களாகவும் இருக்கும் நாம் நமது கடந்த காலங்களைப்பற்றி கேள்விகள் எழுப்பி எங்கே தவறிழைத்திருகின்றோம் என்பதைப் புரிந்து கொண்டு நமது கொள்கைகளை மீட்டெடுக்க முனைய வேண்டும்.

மற்றவர்களுக்காகப் போராடும் போது நாம் நமக்கே போராடுகிறோம் என்ற கடந்த கால அனுபவம் வழங்கியருக்கும் செய்தியினை நாம் எப்போதும் நினைவில் கொண்டிருக்க வேண்டும்.

இந்தப் பாதை துணிச்சலை வேண்டிநிற்கிறது. வேறு பாதைகள் எதுவும் திறந்திருப்பதாகத் தெரியவில்லை. கடந்த காலங்களில் எதிலும் பட்டுக்கொள்ளாமல் கவனமாக வாழக் கற்றுக்கொண்டுள்ளோம். இதன் விளைவுதான் பல்வேறு திசைகளிலுமிருந்து வந்த படுகொலைகள்.

‘தயாரற்ற முறையில் நாம் தொடர்ந்து இருந்துகொண்டிருக்க முடியாது. இன்னொருவர் நமக்கு விடுதலை வாங்கித்தருவார் என நம்பிக்கொண்டிருக்காது நாம் நம்மைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.’

யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் வெளியிட்ட கூட்டறிக்கையில் காணப்பட்ட பல பல விடயங்கள் அக்காலகட்டத்தின் தேவையே உணர்ந்திருந்தன.

தேர்தல் தொடர்பாக எத்தகைய கண்டனங்கள் எழுந்தாலும் நடத்தியே தீருவோம் என இந்திய-இலங்கை அரசுகள் பிடிவாதமாக இருந்தன.
போர் நிறுத்தம்.

வடக்கு, கிழக்கு மாகாணசபைத் தேர்தலை ஜனநாயக ரீதியில் நடத்துவதாகக் காட்டுவதற்கு இந்திய அரசும், இந்திய இராணுவமும் செய்யாத முயற்சிகள் இல்லை.

திடீரென்று இந்தியப் படையினர் யுத்த நிறுத்த அறிவித்தலை வெளியிட்டனர்.

1988 செப்டம்பர் 15ம் திகதி காலை 7 மணிமுதல் ஆரம்பமாகும் யுத்தநிறுத்தம் தொர்ந்தும் 5 நாட்கள் அமுலில் இருக்கும் என்று இந்தியப் படையினரால் அறிவிக்கப்பட்டது.

யுத்த நிறுத்தத்தை முன்னிட்டு இந்திய இராணுவத் தளபதி ‘கல்கட்’ விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது இதுதான்.

“சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு உத்தரவிடுமாறு இந்திய அரசாங்கம் எனக்குப் பணித்திருக்கிறது”

அந்தப் பணிப்பின் பிரகாரம் செப்டம்பர் மாதம் 15ம் திகதி (1988) முதல் இலங்கை நேரப்படி காலை 7 மணியிலிருந்து ஐந்து நாட்களுக்குக் களத்திலுள்ள எமது துரப்புக்கள் போர் நிறுத்தம் செய்துள்ளனர்.

இப் போர் நிறுத்தம் செப்டம்பர் 5ம் திகதி வரையிலும் அமுலில் இருக்கும்.

சகல போராளிக் குழுக்களையும் தமது ஆயுதங்களை முன்வந்து ஒப்படைக்குமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன்.

இது தொடர்பாக அவர்கள் தம் அருகிலுள்ள அமைதிப்படை முகாம்களின் கொமாண்டரோடு தொடர்புகொள்ளுமாறு கேட்கப்படுகிறார்கள். கொமாண்டர்கள் போராளிகளது ஆயுதங்களை ஒப்படைக்க உதவுவார்கள். அதுதொடர்பாக வழிநடத்தவும் செய்வார்கள்.

போர் நிறுத்தத்தை துஷ்பிரயொகம் செய்யும் போராளிகள் எவரினதும் நிலைகுறித்து விழிப்பாக இருக்க வேண்டுமென நான் துரப்புகளுக்கு உத்தரவிடுகிறேன்.

போராளிகள் அல்லது அவர்களத தலைவர்கள் உதவிகள் தேவைப்படின் அருகிலுள்ள இந்திய அமைதிப்படை கொமாண்டவுடன் தொடர்புகொள்ளவும்.

இத்தகைய அரிய சநிதர்ப்பத்தைப் பயன்படுத்தி சகல போராளிக் குழுக்களும் தேசிய நீரோட்டத்தில் சேர்ந்து, வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் எதிர்காலத்தையும், நல்வாழ்வையும் கருத்தில்கொண்டு ஒத்துழைக்க வேண்டுமென்று இந்தியா எதிர்பார்க்கின்றது.

ஆயுதங்களைப் பாவித்து தேசிய நீரோட்டத்திலிருந்து விலகிச் சென்றவர்கள், மீண்டும் அமைதி வழிக்குத் திரும்புமாறு வற்புறுத்த வேண்டுமென்று சமுதாயத்தின் சகல தரப்பினரையும் நான் கேட்டுக்கொள்கின்றேன். அவர்களை நாம் பகைமை உணர்வு எதுவுமின்றி வரவேற்போம்.

அமைதிப்படை அதிகாரி விடுத்திருந்த அறிக்கையில் சகல போராளிக் குழுக்களும் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டுமென கோரப்பட்டிருந்தது.

தனது ஆதரவு இயக்கங்களுக்குப் பெட்டி பெட்டியாக ஆயுதங்களை வழங்கிக்கொண்டிருந்தது இந்தியப்படை.

அதே இந்தியப் படையின் தளபதிதான் ஆயுதங்களை ஒப்படைக்குமாறு போராளிகளுக்கு சமூகப் புத்தி சொல்ல வேண்டும் என்று கோரியிரந்தார்.

சகல போராளிகளுடனும் தாம் ஒரேவிதமாக நடந்துகொள்கிறோம் எனக் காட்டுவதற்கு கல்கட்டின் அறிக்கை முயற்சித்தது. உண்மையில் புலிகளை நோக்கி மட்டுமே அப்போது ஆயுத ஒப்படைப்புக் கோரிக்கைவிடப்பட்டது.

padammasபயனற்ற போர் நிறுத்தம்.

போர்நிறுத்தம் செய்யுமாறு வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள பல பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்தபோது செவிசாய்க்காது இருந்தது இந்திய அரசு.

அதே இந்திய அரசு தானாக முன்வந்து போர் நிறுத்தம் செய்தது ஏன்?

மாகாணசபைத் தேர்தல் நாடகத்தை அரங்கேற்றவும், புலிகளை நெருக்கடிக்கு உள்ளாக்கவுமே தற்போது போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. புலிகளைப் பேச்சுக்கு அழைக்கச் செய்த போர்நிறுத்தம் என்றால் வரவேற்கலாம்.

ஆனால் இதுவோ புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை மட்டும் கொண்டிருக்கின்றது. இதன் பிரகாரம் பேச்சுக்கான கதவுகளை மூடுகின்றது எனப் பிரஜைகள் குழு அறிக்கை வெளியிட்டனர்.

இந்திய அரசின் உள்நோக்கம் புரியாமல் போர் நிறுத்தத்தை வரவேற்றவர்களும் இருந்தனர். அவர்களில் ஒருவர் தொண்டமான்.

‘இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு அதிகளவு மதிப்பளிக்கும் நடவடிக்கை’ என போர்நிறுத்தத்தைப் புகழ்ந்திருந்தார் இ.தொ.கா தலைவர் தொண்டமான்.

தந்திர அறிக்கை.

அப்போது புலிகள் இயக்கத்துடன் தொடர்பாக இருந்தது ஈரோஸ். புலிகளையும் பகைக்காது, இந்தியாவையும் ஒரு வரையறைக்கு மேல் பகைக்காது ஈரோஸ் தனது நடவடிக்கைகளை மேற்கொண்டது.

போர் நிறுத்தம் தொடர்பாக ஈரோஸ் விடுத்த அறிக்கை கழுவிய நீரில் நழுவிய மீனைப் போன்று அதன் செயற்பாட்டிற்கு ஒரு சான்று.
ஈரோஸ் தொடர்பாக அதன் தலைவர் வே. பாலகுமார் விடுத்த அறிக்கை இதுவாகும்.

‘யுத்த நிறுத்த அறிவிப்பை நாம் வரவேற்கிறோம். காலம் தாழ்த்திய இந்த யுத்த நிறுத்த அறிவிப்பானது இனிமேலாவது தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளும் நிலைக்கு இட்டுச் செல்ல வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இந்தியா எவ்வித நிபந்தனைகளையும் வைக்காது பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும். அதேவேளை தமிழ் பேசும் மக்களின் நலன்கருதி இந்தச் சந்தர்ப்பத்தைப் பொருத்தமான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தமிழீழ விடுதலைப் புலிகளைக் கேட்டுக்கொள்கின்றோம்’

இந்தியா அறிவித்த போர் நிறுத்தம் கண்துடைப்பு என்று தெரிந்தும்கூட விடப்பட்ட அரசியல் தந்திர அறிக்கையே அதுவாகும்.

“விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் பட்சத்தில்தான் போர்நிறுத்தம் முழுமை பெறக்கூடியதா இருக்கும்” என்று யாழ் மாநகர ஆணையாளர் சிவஞானம் கருத்து வெளியிட்டிருந்தார்.

இக்கட்டத்தில்தான் சென்னையில் கிட்டுவையும் அவருடன் இருந்த புலிகளையும் தேசிய பாதுகாப்குச் சட்டத்தின்கீழ் கைதுசெய்தது தமிழக அரசு.

அதுவரை வீட்டுக்காவலில் இருந்த கிட்டுவும், புலிகள் இயக்க உறுப்பினர்களும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறைக்குள் புலிகள் முரண்டுபிடிக்க ஆரம்பித்தனர்.

தொடரும்…

-அரசியல் தொடர் -எழுதுவது அற்புதன்-

தொகுப்பு கி.பாஸ்கரன்

46கலைஞர் அன்றும் இன்றும்

சமீபத்தில் ஜெயின் கமிஷன் முன்பாக தி.மு.க சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியத்தில் தமிழக அரசு கைதுசெய்த புலிகளை இந்திய மத்திய அரசு விடுத்திருந்தது என்று கூறப்பட்டுள்ளது.

புலிகளுக்கு இந்திய மத்திய அரசு ஆதரவாக இருந்தது, தி.மு.க புலிகளுக்கு விசேஷ சலுகை காட்டவில்லை என்று நிரூபிப்பதில் இப்போது தி.மு.க அக்கறை செலுத்துவதன் பிரதிபலிப்பே அச்சாட்சியாகும்.

ஆனால் 1988 ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு (அப்போது தமிழ் நாட்டில் கவர்னல் ஆட்சி நடந்தது. கவர்னராக இருந்தவர் அலெக்சாண்டர்)

கிட்டு உட்பட புலிகளைக் கைதுசெய்த போது அதனைக் கண்டித்துக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியது தி.மு.க

கவர்னல் ஆட்சியின் மனிதாபிமானமற்ற செயல்;’ என்று காட்டமகாகக் கண்டித்திருந்தார் கலைஞர் கருணாநிதி. அன்று வெளியான பத்திரிகைச் செய்தியின் நகல் இது.

காஷ்மீர் இந்தியாவின் பகுதி என்பதை காட்ட தேர்தல் நடத்தினோமா?? வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தை நிரூபிக்க வர்வசன வாக்கெடுப்புத் தேவையில்லை

சென்னை. ஆக,28: காஷ்மீர் இந்தியாவைச் சேர்ந்தது என்பதற்கு எப்படிச் சர்வசன வாக்கெடுப்பு நடத்தத் தேவையில்லையோ அதே போல் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ‘தமிழர் தாயகம் என்று முடிவெடுக்க மக்கள் வாக்கெடுப்பை நடத்தத் தேவையில்லை.’ என்று தி.மு.க தலைவர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.

கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அக் கூட்டத்தின் முடிவில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

“இலங்கைப் பிரச்சினையைப் பிரதமர் ராஜீவ்காந்தி தனது கௌரவப் பிரச்சினையாகக் கருதாமல், இலங்கையில் உடனடியாகப் போர்நிறுத்தம் செய்து விடுதலைப் புலிகளுடனும் மற்றவர்களுடனும் பேச்சுவார்த்தைக்கு வழிகோல வேண்டும் என்ற தீர்மானம் இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. என அவர் கூறினார்.”

“தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள நூற்றுக் கணக்கான ஈழத் தமிழர்களைத் தமிழக அரசு கைதுசெய்து சிறையில் அடைத்திருப்பதைக் கண்டிக்கும் தீர்மானத்தில் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக இவர்கள் அனைவரையும் விடுதலைசெய்ய வேண்டுமென்று மத்திய மாநில அரசுகள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன”. என்றும் அவர் சொன்னார்.

தேவையில்லாமல் தனது அதிகாரத்தைக் காட்டுவதற்காக தமிழக அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், கடுமையான காயங்களுடன் படுக்கையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஈழத் தமிழர்களும், தீவிர சிகிச்சைபெற்று வருவோரும் கைதுசெய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளமை அலெக்சாண்டர் அரசின் இதயமற்ற நிலையையும், மத்திய அரசின் இதயமற்ற நிலையையும் காட்டுவதாக இருக்கின்றதென்றும் அத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.