விடிய விடிய காக்க வைத்த நடிகர்; தயாரிப்பாளரை அழ வைத்த நகைச்சுவை நடிகர்: யாரை விளாசினார் ஞானவேல் ராஜா”

0
242

சென்னை: நடிகர் விஜய் ஆண்டனியின் ‘அண்ணாதுரை’ பட ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலர் ஞானவேல் ராஜா யாரைக் கண்டித்து பேசினார் என்பது தற்பொழுது சர்ச்சையாகியுள்ளது.

விஜய் ஆண்டனி, டயனா, மஹிமா மற்றும் ராதா ரவி நடிப்பில், புதுமுக இயக்குநர் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அண்ணாதுரை’ ராதிகா சரத்குமாரின் ராடான் நிறுவனத்துடன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இப்படத்தினை தயாரித்துள்ளார்.

இப்படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று நடைபெற்றது. இதில் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலர் ஞானவேல் ராஜாவின் பேச்சு தற்பொழுது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

நிகழ்வில் அவர் பேசியதிலிருந்து:

விஜய் ஆண்டனி தன்னமபிக்கையின் மொத்த உருவமாகத் திகழ்கிறார். அதற்கு கிடைத்த ஊதியம்தான் அவரது இந்த வெற்றி.

நிறைய புது இயக்குநர்களை அவர் அறிமுகம் செய்கிறார். இவரைப் போல ஈடுபாட்டுடன் உழைக்கும் நபர்கள் இத்துறையில் இருக்கும் பொழுது, பொறுப்பற்ற நடிகர்களுமிருக்கிறார்கள். தற்பொழுது கூட தயாரிப்பாளர்  சங்கத்தில் மூன்று புகார்கள் வந்துள்ளது.

வெறும் 30% மட்டுமே படப்பிடிப்பு முடிந்த நிலையில், ‘இத்துடன் படத்தை வெளியிட்டுக் கொள்ளுங்கள்; நான் முழுமையாக படத்தினை முடிக்க வேண்டும் என்றால் மூன்று வருடங்கள் ஆகும் என்று ஒரு நடிகர் கூறியிருக்கிறார்.

அவர் மொத்தமே 29 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் பங்குபெற்றுள்ளார் என்பதும், சில சமயங்களில் ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரம் மட்டுமே ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளார் என்பதும் வருத்தம் தரும் செய்தி. இந்தியாவின் மோசமான நடிகர் என்றும் கூட அவரைக் கூறலாம்.

அத்துடன் பட வெளியீட்டின் பொழுது பிரச்னைகள் வந்த சமயம், தயாரிப்பாளர் தரப்பில் நாங்கள் அவரைச் சந்திக்க சென்றிருந்தோம்.

நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த அவர், இரவு 11 மணி முதல் அதிகாலை 05.30 மணி வரை காத்திருந்தும் எங்ககளைச் சந்திக்க மறுத்து விட்டார்.

மற்றொரு ஜாம்பவான் நகைச்சுவை நடிகர் அவரை வைத்து படம் எடுக்க முயன்ற ஒரு தயாரிப்பாளர் இனி அவரை எப்போழுதும் பார்த்து சிரிக்கவே முடியாத நிலைக்கு ஆளாக்கி இருக்கிறார்.

இவ்வாறு ஞானவேல் ராஜா பேசினார். ஆனால் அவர் தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டது சிம்பு மற்றும் வடிவேலுவைத்தான் என்று சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.

விடியோ:

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.