தமிழரசுக்கட்சியின் தனிக்காட்டு ராஜ்சியம்!!: சுரேஷின் வெளியேற்றம் புதிய கூட்டணிக்கு வழிவகுக்குமா!! – கருணாகரன் (கட்டுரை)

0
645

• நாட்டில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு.

• சைக்கிளில் பாராளுமன்றத்துச் சென்ற மகிந்த ராஜபக்ஸ.

• வரவு – செலவுத்திட்டம்.

• தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் (சுரேஸ் பிமேச்சந்திரன்) பிரிந்து செல்கிறது. அப்படிச் செல்லும் சுரேஸ் பிரேமச்சந்திரன் எந்த அணியோடு, யாரோடு கூட்டுச் சேரப்போகிறார்? அந்தக் கூட்டுப் பலமானதாக இருக்குமா?

• மறுபக்கத்தில், புதிய அணிகளைத் தேடி தமிழரசுக்கட்சி (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு) வலைவிரிப்பு.

• “வடக்குக் கிழக்கு இணைக்கப்பட்டால், இரத்த ஆறு ஓடும்” என்று அமைச்சர் ஹிஸ்புல்லா அடித்த ‘ஆட்லறி’.

• அதற்குத் தோதாக, “வடக்குக் கிழக்கு இணைப்பை அனுமதிக்கவே மாட்டோம்” என்று கூறும் றிஸாத் பதியுதீன்.

• “வரவு செலவுத் திட்டம் நாட்டுக்குக் கிடைத்திருக்கும் அற்புதமான ஒரு கொடை. இதற்காக நிதி அமைச்சரைப் பாராட்ட வேணும்” என்ற ஹக்கீமின் பாராட்டு.

இப்பிடி இந்த வாரம் அமர்க்களமான – சூடான, சுவாரசியமான செய்திகளால் கொதித்துப் போயுள்ளது. இதில் எதைப் பற்றி இந்தப் பத்தி பேசப்போகிறது? என்று நீங்கள் எண்ணக்கூடும்.

முதலில் ஒன்றைக் கவனியுங்கள். நீங்கள் மேலே படித்த இந்தப் புதிய செய்திகளால் – இந்தக் கொதிப்புகளால், கடந்த வாரங்களில் முன்னணியிலிருந்த அரசியலமைப்புப் பற்றிய விவாதங்கள் பின்னகர்ந்து விட்டன. அதாவது கடந்த வாரத்தில் உங்களைக் சூடேற்றிக்கொண்டிருந்த நெருப்புத் தணிந்து விட்டது.

பதிலாக இந்த விடயங்கள் அந்த முன்னணி இடத்தைப் பிடித்துள்ளன. நாளையோ அடுத்த கணமோ இவை பின்னகர்ந்து இன்னொன்று முன்னுக்கு வந்து நிற்கும்.

இப்படியே, சூடாகப் பேசுவதற்கென்று எப்போதும் ஏதாவது ஒரு சரக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும்.

நம்முடைய வாழ்க்கையில் எத்தனையோ சூடான விசயங்களைப் பற்றி விவாதித்திருப்போம்! அப்பொழுதெல்லாம், எங்களின் உடல், பொருள், ஆவி அனைத்துமே அந்த விசயத்தைச் சுற்றியிருந்ததுண்டு. அவற்றில் பற்றி எரிந்ததும் உண்டு.

ஆனால், நாட்செல்ல அல்லது காலம் சென்ற பிறகு அவற்றின் பெறுமதி என்ன என்று பார்த்தால், நமக்கே ஆச்சரியமாக இருக்கும்.

அவற்றில் பலவும் சிறிய அளவில் கூடப் பொருட்படுத்தக் கூடியனவாக இருக்காது. சிலவேளை அவை நமக்குச் சிரிப்பையே உண்டாக்கும்.

இதுக்காகவெல்லாம் நாங்களா இப்படி அப்போது குதித்துக் கொந்தளித்தோம் என. அந்தளவுக்கு நாங்கள் அவற்றோடு, அப்போது கொண்டிருந்த சீரியஸ் தன்மை மறைந்து, பிறகு பெரிய கொமடியாக மாறியிருக்கும்.

ஆகவே, இந்தப் பத்தி, இதையெல்லாம் கவனத்திற் கொண்டே தன்னுடைய பார்வையை முன்வைக்கிறது. இது தமிழரசுக் கட்சியிலிருந்து சுரேஸ் பிரேமச்சந்திரன் அணி விலகிச் செல்வதைப்பற்றிய சிறிய குறிப்பாகும். “தமிழரசுக் கட்சியிலிருந்தா அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்தா சுரேஸ் அணி பிரிந்து செல்கிறது?” என்று நீங்கள் கேட்கலாம்.

நடைமுறை அர்த்தத்தில் தமிழரசுக் கட்சியிலிருந்தே சுரேஸ் விலகுகிறார். அவர் தமிழரசுக் கட்சி உறுப்பினர் இல்லை என்றாலும் கூட்டு வைத்திருந்தது, தமிழரசுக் கட்சியினுடனேயே. தமிழரசுக் கட்சியின் தீர்மானம், அதனுடைய நடைமுறை ஒழுங்கு, போட்டியிட்ட சின்னம் என எல்லாமே தமிழரசுக் கட்சியினுடையவையே.

அவருடைய மோதல்கூட தமிழரசுக் கட்சியுடனேயே (சுமந்திரன், சம்மந்தன், சிறிதரன், ஐங்கரநேசன் தரப்புடனேயே) நடந்தது. ஆகவே இப்பொழுது விலகுவதும் தமிழரசுக் கட்சியை விட்டேயாகும். இந்த உண்மையைச் சுரேஸ் பிரேமச்சந்திரனே அறிவார்.

2001அக்டோபர் 20 இல் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எஃப் – சுரேஷ் அணி) தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) என மூன்று கட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்டதே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. அதில் தமிழரசுக் கட்சியோ, இப்போதுள்ள புளொட்டோ சேர்க்கப்படவில்லை.

சம்மந்தன், மாவை சேனாதிராஜா போன்றோர் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பிலேயே கூட்டமைப்பில் இருந்தனர். அப்போதைய அரசியற் சூழலில் இந்தக் கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கு விடுதலைப்புலிகளும் இணக்கம் தெரிவித்து, ஆதரித்திருந்தனர்.

ஆனாலும் அன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்பதை ஒரு கட்சியாகப் பதிவு செய்ய முடியவில்லை. புலிகளுக்கு அதில் ஆர்வமும் இருக்கவில்லை.

தாங்கள் உருவாக்கிய “விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி” என்ற கட்சியை மீளவும் இயக்குவதைப் பற்றியே புலிகள் சிந்தித்தனர்.

16-1471320561-ltte1ஆனால், அதிலே சிக்கல் இருந்தது. விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி கட்சியாகப் பதிவு செய்யப்பட்ட பிறகு அதனுடைய நடவடிக்கைகள் சில மாதங்கள் வரையுமே நீடித்தது.

அதற்குப் பிறகு கட்சி அரசியலுக்குப் பதிலாக யுத்தத்திலேயே புலிகள் கவனம் கொண்டிருந்தனர்.

மட்டுமல்ல, விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணியின் தலைவர் மாத்தயா என்ற கோபாலசாமி மகேந்திரராஜாவும் செயலாளர் யோகரட்ணம் யோகியும் புலிகளின் தலைமைப்பீடத்தினால் கைது செய்யப்பட்ட பிறகு கட்சியே இயங்கவில்லை.

இதனால், 2001 இல் மீளவும் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியை அவர்களால் அரங்கிற்குக் கொண்டு வர முடியவில்லை.

ஆகவே வேறு வழியில்லாமல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் புலிகள் ஏற்றுக்கொண்டனர்.

ஆனாலும் அது தேர்தலில் போட்டியிடும்போது எந்தச் சின்னத்தில் களமிறங்குவது என்ற பிரச்சினையிருந்தது. இதற்குக் காரணம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டாலும் அதைக் கட்சியாகப் பதிவு செய்வதற்கான கால அவகாசம் இருக்கவில்லை.

இதனால், கூட்டமைப்புக்கான சின்னத்தைப் பெற முடியவில்லை. இந்தச் சந்தர்ப்பத்திலேதான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை எந்தச் சின்னத்தில் களமிறக்குவது என்று புலிகள் சிந்தித்தனர்.

இது தொடர்பாக இந்தப் பத்தியாளரோடும் புலிகளின் உயர் மட்டத்தினர் உரையாடியிருக்கின்றனர். அப்பொழுது பலராலும் பலவிதமான அபிப்பிராயங்கள் முன்வைக்கப்பட்டன.

ஒன்று கூட்டமைப்பைச் சுயேட்சையாகக் களத்திலிறக்குவது. இரண்டாவது, தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது.

மூன்றாவது. தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தைப் பயன்படுத்துவது. தமிழரசுக் கட்சி நேரடியாக இந்தக் கூட்டில் இல்லையென்றாலும் (அது அப்போது செயலற்ற நிலையில் இருந்தது) அந்தக் கட்சியின் சார்பில் சம்மந்தனும் மாவை சேனாதிராஜாவும் முடிவெடுக்கக் கூடியவர்களாக இருந்தனர் என்பதால் இந்த அபிப்பிராயம் முன்வைக்கப்பட்டது.

indexஇந்த மூன்று தெரிவுகளிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தைத் தெரிவு செய்வதிலேயே பலரும் உடன்பாடு கொண்டிருந்தனர். இந்தப் பத்தியாளரும் வேறு சிலரும் மட்டுமே மாற்று அபிப்பிராயத்தை முன்வைத்தனர்.

ஆனால், எதிர்பார்த்தமாதிரி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியாமற் போய்விட்டது.

தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நடப்பதற்கு முன்பே வீ. ஆனந்தசங்கரிக்கும் புலிகளுக்குமிடையில் முரண்பாடுகள் வலுத்து விட்டன.

தன்னை யாருமே கட்டுப்படுத்த முடியாது என்று ஆனந்தசங்கரி சொல்லிவிட்டார். இதனால் புதிய நெருக்கடி ஒன்று உருவாகியது. உதயசூரியன் சின்னத்தைப் பயன்படுத்த முடியாது என்று சங்கரி இறுக்கமாகவே நின்றார்.

1508443075இது சம்மந்தனுக்கும் சங்கரிக்குமிடையே தலைமைப் போட்டியை, தீர்மானமெடுக்கும் அதிகாரப் போட்டியைக் கொண்டு வந்தது. இறுதியில் சம்மந்தனைக் கூட்டணியிலிருந்து விலக்கினார் சங்கரி.

அப்போதுதான் உறங்கு நிலையிலிருந்த தமிழரசுக் கட்சியைத் தூசி தட்டி எடுத்து வந்தார் சம்மந்தனும் மாவையும்.

இந்த நிலையில் உதயசூரியன் சின்னத்திற்குப் பதிலாக வீட்டுச் சின்னத்தைப் பயன்படுத்தலாம் என்று சிலர் புலிகளுக்கு ஆலோசனை சொன்னார்கள்.

இந்த யோசனையை இந்தப் பத்தியாளர் மறுத்தார். காரணம், வீட்டுச் சின்னமும் தமிழரசுக் கட்சியும் காலாவதியாகி விட்டன என்ற நிலையில்தான் புதிய அரசியலை அடிப்படையாகக் கொண்ட போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

ஆகவே மீண்டும் தமிழரசுக் கட்சிச் சின்னத்தைப் பயன்படுத்துவது, மக்களுக்கும் வரலாற்றுக்கும் முரணாகவே இருக்கும் என.

இதை அப்பொழுது வன்னியிலிருந்த முக்கியமான அரசியல் ஆய்வாளர் ஒருவர் மறுத்துரைத்தார். அவருடைய பார்வையில் 2002 தேர்தல் புலிகள் தமது பலத்தை – அடையாளத்தை – செல்வாக்கை வெளிப்படுத்துவதற்கானது.

ஆகவே, அவர்கள் எந்த நிலையிலும் பலவீனமாகக் கூடாது. சுயேட்சை மூலமாகக் கிடைக்கும் புதிய சின்னம் மக்களுக்கு அறிமுகமில்லாமல் இருக்கும். இது எதிர்த்தரப்பாகிய ஈ.பி.டி.பி மற்றும் வன்னி, கிழக்குப் பகுதிகளில் போட்டியிடும் புளொட் உள்ளிட்ட வேறு அமைப்புகளுக்கு வாய்ப்பாகி விடும்.

ஆகவே மக்களுக்கு நன்கு பரிச்சயமான வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதே பொருத்தமானது என்றார் அவர்.

இதனையடுத்து வீட்டுச் சின்னத்தையே புலிகள் தேர்வு செய்தனர். கூட்டமைப்பில் தமிழ்க் காங்கிரஸின் ஆட்களான அப்பாப்பிள்ளை வினாயகமூர்த்தி, கஜேந்திரகுமார் போன்றவர்கள் உள்வாங்கப்பட்டிந்தாலும் சைக்கிள் சின்னத்தைப் பற்றி யாருமே சிந்திக்கவில்லை.

இதனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்யும் உடனடி முயற்சியும் சின்னம் பற்றிய பிரச்சினையும் இல்லாமற் போய் விட்டது. கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றதையடுத்து, புலிகள் அதற்குக் கட்டளைகளை இட்டுக் கொண்டிருந்தனரே தவிர, அதைப் பதிவு செய்து பலமாக்குவதற்கு முயற்சிக்கவில்லை.

suresh_premachandran_350_seithycomபுலிகள் தோற்கடிக்கப்பட்டுக் களத்திலிருந்து அகற்றப்பட்ட பிறகு, சம்மந்தன் தனிக்காட்டு ராஜாவாகினார். இதுவே பின்னாட்களில் பெரும் பிரச்சினையாகியது.

ஆனாலும் கூட்டமைப்பைப் புதிவு செய்து, ஒரு ஜனநாயக அமைப்பாக அதைச் செயற்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தோடு குரலெழுப்பி வந்தவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

இதற்காக அவர் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்தார். இதுவே அவருக்கும் சம்மந்தனுக்குமிடையிலான மோதலாகவும் இடைவெளியாகவும் உருவானது.

இதேவேளை கூட்டமைப்பில் அங்கத்துவம் பெற்றிருந்த ரெலோவிலிருந்து சிறிகாந்தாவும் சிவாஜிலிங்கமும் ஒரு கட்டம் வரையில் கூட்டமைப்பை பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பாக உருவாக்க வேண்டும். கூடி முடிவெடுக்கும் ஒழுங்கு பேணப்பட வேணும் என்று வலியுறுத்தினார்கள்.

அவர்களுடைய கோரிக்கையும் சம்மந்தனால் புறக்கணிக்கப்பட்டது. இதனால், 2010 இல் கஜேந்திரகுமார், கஜேந்திரன், பத்மினி, சிவாஜிலிங்கம், சிறிகாந்தா போன்றவர்கள் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினர். அப்பொழுது வெளியேறிய அணி, சுரேசிற்கும் ரெலோ செல்வத்திற்கும் அழைப்பு விடுத்தது.

சம்மந்தனின் உள் நோக்கங்களைப் பற்றியும் தமிழரசுக் கட்சியின் முதன்மைப்பாட்டையும் பற்றி எச்சரித்தது. எல்லாவற்றையும் பரிசீலிக்கிறோம் என்று சுரேசும் செல்வமும் சொன்னார்களே தவிர, சம்மந்தனை விட்டு விலகத் தயாரில்லாமலே இருந்தனர்.

இரண்டாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சிறிகாந்தாவும் சிவாஜிலிங்கமும் ரெலோ என்ற கதவின் வழியாகத் தமிழரசுக் கட்சியோடு சங்கமித்து விட்டனர்.

போதாக்குறைக்கு “புளொட்” என்ற அடையாளத்தோடு வெளியே நின்ற சித்தார்த்தனும் தமிழரசுக் கட்சியில் சேர்ந்து விட்டார். இதற்கு அவருக்கு கூடுதலாக உதவியது, அவருடைய தந்தை, வி. தர்மலிங்கம் தமிழரசுக்கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்தது. அந்த உறவைச் சொல்லிக் கொண்டு புளொட் தமிழரசுக் கட்சியில் கரைந்து கொண்டிருக்கிறது.

.இப்பொழுதுள்ள யதார்த்தத்தின்படி தமிழரசுக் கட்சியே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற பேரில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் அரசியற் பாரம்பரியம் எதையுமே கொண்டிராத சுமந்திரன் எதைப் பற்றிய முடிவுகளையும் எடுப்பவராக, யாரைப்பற்றியும் தீர்மானிக்கிறவராக வலுப்பெற்றுள்ளார்.

இதைப் பற்றி இறுதியாக (10.11.2017) யாழ்ப்பாணத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பிலும் சுரேஸ் வன்மையாக வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழரசுக் கட்சியின் மெத்தனப் போக்கைப் பிரதிபலிப்பவர்களாகச் சுமந்திரனைப்போல அரசியல் பாரம்பரியமோ திறனோ முதிர்ச்சியோ இல்லாத யோகேஸ்வரன், சிறிநேசன், சிவமோகன், சிறிதரன், சரவணபவன் போன்றவர்கள் வெறுமனே குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆகவேதான், இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்ற நிலையில் சுரேஸ் வெளியேற முடிவெடுத்திருக்கிறார். சுரேசின் இந்த முடிவுக்கு வலுவான – தொடர்ச்சியான காரணங்கள் உண்டு.

1. கூட்டமைப்பை பதிவு செய்வதற்குச் சம்மந்தனும் தமிழரசுக் கட்சியும் மறுத்து வருகின்றமை.

2. அரசியற் தீர்மானங்கள் தொடக்கம் முக்கியமான எந்தப் பிரச்சினையிலும் பங்காளிக் கட்சிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்காமல், தன்னிச்சையாக முடிவெடுக்கும் சம்மந்தன் தரப்பின் ஏதேச்சாதிகாரப்போக்கு.

3. அரசியற் தீர்வு, தமிழ் மக்களுடைய கோரிக்கை, அரசியலமைப்புத் திருத்தம் போன்ற முக்கியமான அடிப்படை விசயங்களில் கூட்டமைப்பின் பொது நிலைப்பாடு என்பதற்கு அப்பால், தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டைப் பொது நிலைப்பாடாகக் காட்ட முற்படுகின்றமை.

4. சுரேஸ் தன்னுடைய கட்சியின் சார்பில் அரசியலுக்குக் கொண்டு வந்து வெற்றியீட்ட வைத்தவர்களை (சிறிதரன், சிவமோகன். ஐங்கரநேசன் போன்றவர்களை) தந்திரமாகத் தமிழரசுக்கட்சி பிடுங்கிக் கொண்டமை.

இந்த மாதிரியான ஒரு நிலையில் சுயாதீனமாகச் சிந்திப்போரும் சுய கௌரவத்தை இழக்க விரும்பாதோரும் தொடர்ந்து தாக்குப் பிடிக்கவே முடியாது.

ஆனால், சுரேசின் வெளியேற்றத்தை தமிழர்களின் ஒற்றுமையைச் சிதைக்கிற ஒரு நடவடிக்கையாகக் காட்டுவதற்கு தமிழரசுக் கட்சி முயற்சிக்கும்.

இதற்கு முதலில் தனக்குள்ளே ஒற்றுமையாக உள்ளதாக இருக்கிறதா என்று தமிழரசுக் கட்சி சிந்திக்க வேண்டும்.

தவிர, ஒரு கூட்டமைப்பு என்பது பொதுக்கொள்கை, பொது உடன்பாடு, முடிவெடுக்கும் முறைமை, உட்கட்சி ஜனநாயகம், அனைவருக்குமான அந்தஸ்து அல்லது சமனிலை, வெளிப்படைத்தன்மை போன்ற அடிப்படையான விடயங்களில் உறுதியாகவும் சரியாகவும் இருக்க வேண்டும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இது மருந்துக்கும் கிடையாது. அங்கே இருப்பது தமிழரசுக் கட்சியின் ஏகபோகமே. இது முற்றிலும் தவறானது.

ஆகவேதான், சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழரசுக் கட்சியிலிருந்து (கூட்டமைப்பிலிருந்து) வெளியேறுவதற்கு முடிவு செய்துள்ளார். இதற்கு மேற்சொன்ன காரணங்களும் நீண்ட காலச் சகிப்பும் அவருடைய நியாயங்களாகின்றன.

அவர் பிரிந்து செல்கிறார் என்று கவலைப்படுவோரும் அது தவறானது என்று சொல்வோரும் தமிழரசுக் கட்சியின் பிடியிலிருந்து கூட்டமைப்பை முதலில் மீட்டெடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சுரேஸின் தீர்மானத்தைப் பற்றிப் பேசலாம்.

கூட்டமைப்பிலிருந்து விலகிச் செல்லும் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு ஈழத்தமிழர் அரசியலில் முக்கியமான ஒரு பங்களிப்புப் பாத்திரமுண்டு. அதேயளவுக்கு அவர் மீதான விமர்சனங்களும் உண்டு.

1976 இலிருந்தே அவர் அரசியல் தளத்தில் செயற்பட்டு வருகிறார். போராளியாக, இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினராக, கட்சித் தலைவராக, பாராளுமன்ற உறுப்பினராக, தேசிய அளவிலான அரசியற் போராட்டங்களில் பங்கெடுத்தவராக எனப் பலவகையில் 40 வருடங்களாகச் செயற்பட்டு வருகிறார்.

இந்த 40 வருடங்களிலும் அவர் எதிர்கொண்ட சவால்கள் ஏராளம். உயிராபத்துக் கணங்கள் உள்பட அவர் சந்தித்த நெருக்கடிகள் உச்சமானவை.

இருந்தும் அவர் எந்த நிலையிலும் பின்வாங்கியதில்லை. இப்பொழுதுகூட அவருக்கு உச்சமான ஒரு நெருக்கடியே. கூட்டமைப்பிற்குள்ளிருந்து கொண்டே, அவர் நியாயமானவற்றுக்காகக் குரல் எழுப்பிய போது கூட சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்கள் கூடச் சுரேசுக்கு ஆதரவாகச் செயற்படவில்லை.

ஆகவே அங்கே அவர் தனித்தே குரல் எழுப்பினார். இதுதான் சுரேசின் தனிச் சிறப்புக்குரிய அடையாளமாகியது. இப்பொழுது தமிழரசுக் கட்சியின் பிடியிலிருந்து அவர் தன்னை இன்னொரு தளத்துக்கு நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

இது அவருக்கு எத்தகைய சாதக – பாதக விளைவுகளை உண்டாக்கும் என்று இப்பொழுது சொல்ல முடியாது. ஏனெனில் எதைப் பற்றியும் ஆராய்ந்தறியாத, படிப்பினைகளைப் பாடமாகக் கொள்ளாத, அரசியல் அறிவற்ற சமூகத்தின் மத்தியில் அரசியல் சதுரங்கமாடுவது என்பது சாதாரணமான ஒன்றல்ல.

ஆனாலும் தமிழரசுக் கட்சியினால் தோற்கடிக்கப்பட்டு நிர்க்கதியாக்கப்படுவதை விடவும் இது ஒன்றும் குறைவானதல்ல.

இதேவேளை இந்தப் பத்தி இன்னொரு புள்ளியைச் சுட்டிக் காட்டி நிறைவு செய்ய விரும்புகிறது.

இன்று தமிழ் அரசியல் அரங்கில் தமிழரசுக் கட்சியே வலுவுள்ள சக்தியெனச் சிலரால் கூறப்படுகிறது. ஆனால், அதற்கு நிகராக உள்ள சக்தி, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகும். சுரேஸ் அணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்), சுகு ஸ்ரீதரன் (நாபா அணி – ஈ.பி.ஆர்.எல்.எவ்) டக்ளஸ் தேவானந்தா (ஈ.பி.ஆர்.எல்.எவ் – ஈ.பி.டி.பி) முருகேசு சந்திரகுமார் (ஈ.பி.ஆர்.எல்.எவ்). இவை இன்று தனித்தனி அமைப்புகளாகப் பிளவுண்டிருக்கின்றன. ஆனாலும் இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளங்களில் வலுவுடனேயே இயங்குகின்றன.

இதைப்போல வெளியரங்கில் வேறு சில நல்ல சக்திகளும் உண்டு.

அப்படியிருக்கும் ஏனைய சக்திகளையும் ஒருங்கிணைத்தால்… அது ஒரு உண்மையான – சமூகப் பொறுப்புடைய – விடுதலைக்கான அரசியற் சக்தியாக வளரலாம். அதில் “இந்த மூத்த அண்ணன்மார்” தலையீடுகளைச் செய்யாமல், புதிய தலைமுறைக்கு இடம் கொடுத்துவிட்டு, அவர்களுக்கு அனுசரணையாக இருந்தால் போதும்.

தலைக்கு மேலே பிள்ளை வளர்ந்தால், அவர்களுக்கு இடமளித்து விட்டுத் தந்தையர்களும் தாயர்களும் அனுசரணையாக – பக்கபலமாக இருக்க வேணும்.

-கருணாகரன்-

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.