கும்பகோணம் மகாமகம் விழாவில் நடந்த துயர சம்பவம்!! : (சசிகலா ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 44)

0
549

1991-ம் ஆண்டு ஜெயலலிதா முதல் அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்பே சசிகலா, ஜெயலலிதாவின் இணைபிரியாத் தோழியாகி இருந்தார்.

சசிகலா இல்லாமல் ஜெயலலிதா இல்லை என்ற நிலை அப்போதே உருவாகி இருந்தது.

அதனால்தான், போயஸ் கார்டன் மற்றும் கட்சிக்குள் இருந்து தினகரன், திவாகரன், நடராசனை ஒதுக்கி வைத்த ஜெயலலிதாவால் சசிகலாவை விலக்கவே முடியவில்லை; விலகவும் அவர் விரும்பவில்லை.

அதே நேரத்தில் சசிகலாவின் கணவர் நடராசனிடம் ஜெயலலிதா கொஞ்சம் எச்சரிக்கையைக் கடைபிடிக்க ஆரம்பித்தார்.

“நம்மை அரியணையில் ஏற்றி வைக்க நடராசனால் இத்தனை திட்டங்களைத் தீட்ட முடிகிறதென்றால்… நம்மை அரியணையில் இருந்து இறக்குவதற்கும் நடராசனால் பல திட்டங்களைத் தீட்ட முடியும்” என்ற எச்சரிக்கை அது.

நடராசனின் செயல்பாடுகளும் ஜெயலலிதாவின் உள்ளுணர்வு ஒலித்த எச்சரிக்கைக்கு ஏற்பவே இருந்தன.

தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க எம்.பி-க்களை அழைத்துக் கொண்டு போய் மத்திய அமைச்சர்களைச் சந்திப்பது, தமிழகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் வட்டத்தை தனக்கு நெருக்கமானவர்களைக் கொண்டு நிரப்புவது, தன் தயவு இல்லாமல் ஜெயலலிதாவால் எதையும் செய்ய முடியாது என்று பேசுவது, பேட்டி கொடுப்பது என்று புதிராகவே நடராசன் வலம் வந்தார்.

கடைசிவரை ஜெயலலிதாவால் அவரைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அதனால் வெறுத்துப்போய் கொஞ்சம் ஒதுக்கி மட்டும் வைத்தார்.

makamagam_start_new_2_15338மகாமகம் விழாவில் ஜெயலலிதா, சசிகலா

சசிகலா விவகாரத்தில் அதைக்கூட அவரால் செய்ய முடியவில்லை. தமிழகத்துக்கே முதல்வர் ஆன பிறகும்கூட சசிகலாவின் தயவு இல்லாமல் ஜெயலலிதாவால் செயல்பட முடியவில்லை.

முதல்வராகும் வரை இணை பிரியாத்தோழி என்றளவில் இருந்த ‘ஜெயலலிதா-சசிகலா நட்பு’, ஜெயலலிதா முதல்வரான பிறகு, ‘சசிகலா, ஜெயலலிதாவின் உடன் பிறவாச் சகோதரி’ எனச் சொல்லும் கட்டத்தை நோக்கி நகர்ந்தது.

தினகரன், திவாகரன், நடராசனுக்குப் பதில் சசிகலாவின் அண்ணன் விநோதகன் போயஸ் தோட்டத்துக்குள் ஆட்சி செய்து கொண்டிருந்தார்.

தமிழகத்தை கேடு காலம் மெல்லச் சூழத் தொடங்கியது. அதேநேரத்தில், சசிகலா குடும்பத்துக்கு நல்ல யோகம் பொங்கிப் பிரவாகம் எடுக்கத் தொடங்கி இருந்தது.

திருத்துறைப்பூண்டியில் விநோதகன் ஆடம்பரத் திருமண மண்டபம் ஒன்றை கட்டத் தொடங்கினார்.

அந்தக் காலத்திலேயே அது முழுமையான ஏ.சி வசதி செய்யப்பட்ட திருமண மண்டபமாக கட்டப்பட்டது. திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையமே இடம் மாற்றத்தில் சிக்கி சில நாள்கள் தவித்துப்போனது.

tharasu_office_15199தமிழகத்தின் இருண்ட காலம் தொடக்கம்!

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில், 7 துப்பாக்கிச் சூடுகள் தமிழகத்தில் நடந்தன. ஜெயலலிதாவை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்கள் கொலை வெறியோடு துரத்தி துரத்தி தாக்கப்பட்டனர்.

ப.சிதம்பரத்துக்கு எதிராக, திருச்சி விமான நிலையத்தில் அ.தி.மு.க-வினர் கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தை அறிவித்தனர்.

பெயருக்குத்தான் அது கறுப்புக் கொடி காட்டும் போராட்டம். ஆனால், உண்மையில் அது சிதம்பரத்தை சின்னாபின்னப்படுத்துவதற்கான திட்டம். அதில் இருந்து தப்பித்து, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சிதம்பரம் பட்டபாடு அவர் மனதில் இன்னும் இருக்கிறது.

இப்போது அவரைச் சந்தித்து அந்தச் சம்பவம் குறித்துக் கேட்டாலும், அது ஏற்படுத்திய வடுவை அவர் வார்த்தைகளில் உணர முடியும்.

மணிசங்கர் அய்யர் பாண்டிச்சேரி வரை துரத்தி அடிக்கப்பட்டார். ஆளும்கட்சியை விமர்சித்த பத்திரிகைகளின் குரல்வளைகள் நெரிக்கப்பட்டன. மற்ற ஆட்சிகளிலும் அது நடக்கும்.

ஆனால், அவதூறு வழக்குகள், தொலைபேசியில் கெட்ட வார்த்தைகளால் நடத்தப்படும் அர்ச்சனை என்ற அளவில் மட்டுமே இருக்கும்.

ஆனால், ஜெயலலிதா ஆட்சியில் ஆளும் கட்சியை, ஜெயலலிதாவை விமர்சித்த பத்திரிகைகளை அடக்க, பாக்ஸர் வடிவேலு போன்ற ரவுடிகள் களம் இறக்கப்பட்டனர். கொலைவெறித் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. தராசு பத்திரிகை ஊழியர்கள் சுப்பிரமணி, சத்தியமூர்த்தி கொல்லப்பட்டனர்.

tharasu_staff_1_15263நக்கீரன் கோபாலுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான தலைவலி காத்திருந்தது. திடீரென்று நக்கீரன் அலுவலகத்தில் மட்டும் கரண்ட் கட் ஆகும்; திடீரென்று நக்கீரன் அலுவலகத்துக்குள் போலீஸ் படை உள்ளே நுழையும்; விசாரணை என்ற பெயரில் நக்கீரன் கோபாலை படுத்தி எடுத்துவிடுவார்கள்.

ஆசிட் வீச்சு, ஆட்டோவில் குண்டர்கள், அடி-தடி, ரவுடிகள் ராஜ்ஜியம், துப்பாக்கிச் சூடு, ஒவ்வொரு துறையிலும் ஊழல்… ஊழல்… ஊழல்… என தமிழகம் அல்லோலகல்லோலப்பட்டது.

ஆறே மாதத்தில் இந்த ஆட்டம் என்றால், மீதமிருக்கும் நான்கறை ஆண்டுகளையும் கடத்தப் போகிறோம் என்று தெரியாமல் தமிழகம் விழி பிதுங்கி நின்றது.

தமிழகம் கண்ட இந்த வேதனைகள் எல்லாவற்றுக்கும் பின்னால் ஆளும் கட்சி இருந்தது; ஆளும் கட்சிக்குப் பின்னால் ஜெயலலிதா இருந்தார்; ஜெயலலிதாவுக்குப் பின்னால் சசிகலா இருந்தார்; சசிகலாவுக்குப் பின்னால் சசிகலா குடும்பம் இருந்தது.

ஆனால், அவர்கள் எல்லாம் வேறு உலகத்தில் இருந்தனர். தமிழக அரசியல் அதுவரை காணாத ஆடம்பரத்தைக் காணத் தொடங்கியது. தனிப்பட்ட முறையில் ஜெயலலிதாவும் சசிகலாவும் அப்போது அனுபவித்த ஆடம்பரங்களை, அதிகாரத்தின் உச்சத்தை, உலகத்தையே ஒரு காலத்தில் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த விக்டோரியா மாகராணியேகூட அனுபவித்திருப்பாரா? என்பது சந்தேகம் தான்.

அவற்றைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் அந்த காலத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் சேர்ந்து அரங்கேற்றிய சில சம்பவங்களைத் திரும்பிப் பார்க்க வேண்டும்.

கும்பகோணம் மகாமகம், மதுரை உலகத் தமிழ் மாநாடு, வளர்ப்பு மகன் திருமணம், மிரட்டி வாங்கப்பட்ட மாளிகைகள், போயஸ் கார்டன் வீட்டில் இருந்த வைர-வைடூரிய-தங்க நகைகளின் மதிப்பு, ஜெயலலிதா, சசிகலா பெயரில் வாங்கிக்குவிக்கப்பட்ட சொத்துக்களின் கதைகளுக்குள் போய் வரவேண்டும்.

அந்தச் சொத்துக்கள், சொகுசுகள், ஆடம்பரங்களின் கதைகளுக்குப் பின்னால்தான், ஜெயலலிதா ஏன் சசிகலாவை விலக்கி வைக்கவில்லை என்பதற்கான காரணம் இருக்கிறது. சசிகலா ஏன் ஜெயலலிதாவை விட்டு விலகவில்லை என்பதற்கான காரியமும் அதற்குள்தான் ஒளிந்திருக்கிறது.

jaya_to_sasi_to_jaya_15522கும்பகோணம் மகாமகம் தொடக்கம்…

1992 பிப்ரவரி 18-ம் தேதி கும்பகோணம் மகாமகம். அதற்கான நாள் நெருங்க நெருங்க பலவிதமான சர்ச்சைகளும், இனம் புரியாத அச்சமும் தமிழகத்தில் பரவிக் கொண்டிருந்தன.

கும்பகோணம் மகாமகக் குளத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா நீராடப் போகிறார் என்ற செய்தி மேலும் பதற்றத்தை உருவாக்கியது.

கும்பகோணம் முழுவதும் ஜெயலலிதாவின் வானுரய கட்-அவுட்களால் நிறைந்து போனது.

அ.தி.மு.க-வினர் தீவிர வசூல் வேட்டையில் இறங்கினர். 17-ம் தேதியே போலீஸ் கெடுபிடிகள் தொடங்கின.

ஜெயலலிதா நீராடுவதற்காக பல லட்சங்களைக் கொட்டி குளியலறை அமைக்கப்பட்டது. “முதல்வர் வந்து நீராடிவிட்டுப் போகும்வரை பக்தர்கள் யாரும் குளத்தில் இறங்கக்கூடாது” என்று போலீஸ் கட்டுப்பாடு விதித்தது.

திகிலடைந்தவர்கள் மகாமகத்துக்கு முதல் நாளே நீராடிவிட்டுக் கிளம்பினர். மகாமகத்தன்று காலை 8.30 மணிக்கு குளத்தருகே பக்தர்கள் மெதுவாகக் கூடத் தொடங்கினர்.

போலீஸ் அவர்களைக் கட்டுப்படுத்தியது. அந்தக் கட்டுப்பாடு எல்லாம், 9.30 மணி வரை மட்டுமே. அதன்பிறகு, குளத்தில் நின்ற மக்கள் கூட்டம் வேகமாகக் கூடிக் கொண்டே போனது. போலீஸால் அதைக் தடுக்க முடியவில்லை.

ஜெயலலிதா நீராடுவதைப் பார்க்க மக்கள் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு அந்த இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டே இருந்தனர்.

ஜெயலலிதா வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே குளத்தருகே வந்த தேவாராம் ஐ.ஜி. பைனாகுலரில், மக்கள் நெருக்கியடித்து அவதிப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆனால், அவர் கையை விட்டு எல்லாம் போய் இருந்தது. அவரால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் சூழல் அப்போது.

சரியாக காலை 11.32 மணிக்கு ஜெயலலிதா நீராடுவதற்காக பிரத்யோகமாக அமைக்கப்பட்டு இருந்த பகுதிக்கு வந்தார். அங்கிருந்து கூட்டத்தைப் பார்த்துக் கையசைத்தார்.

makamagam_end_15411கும்பகோணம் மகாமகம் முடிவு…

ஜெயலலிதா கை அசைத்ததை அவருக்கு நேர் எதிரில், வடக்கு வீதிப்பக்கம் இருந்தவர்களால் பார்க்க முடியவில்லை.

இடையில் இருந்த ஒரு கோயில் அவர்களை மறைத்தது. எனவே, அந்தப் பகுதியில் இருந்தவர்கள் முன்னுக்கு வந்து பாங்கூர் தர்மசாலா கட்டடத்தின் வெளிப்புறம் இருந்த கிரில் வைத்த கட்டைச் சுவர் மீது ஏற முயன்றனர்.

அதைத் தொடர்ந்து இரும்பு கிரில் கட்டைச் சுவரோடு சாய்ந்தது. அதில் நசுங்கி பலர் இறந்தனர். அந்தத் துயரம் ஏற்படுத்திய ஓலம், பதற்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தெறித்து ஓடத் தொடங்கினர்.

அதே நேரத்தில் குளத்துக்குள் இருந்தவர்கள் வெளியில் ஏறி ஓடத் தொடங்கினர். இதனால், நேரேதிரில் பதற்றத்தோடு ஓடிய கும்பல், கூட்டம் ஒன்றும் புரியாமல், ஒன்றோடு ஒன்று மோதி, கீழே விழுந்து, நசுங்கி, மூச்சுத் திணறி உயிரைவிட்டது.

அதற்கு நூறு அடி தூரத்துக்குள் சசிகலா ஒரு குடத்தில் மகாமகக் குளத்தின் தண்ணீரை அள்ளி அள்ளி ஜெயலலிதாவின் தலையில் ஊற்றினார்.

அதன்பிறகு ஜெயலலிதா அதேபோல் சசிகலாவின் தலையில் தண்ணீரை ஊற்றினார். கொஞ்சம் தள்ளி மக்கள் உயிரை விட்டுக் கொண்டிருந்தனர்.

நிகழ்ச்சியை வர்ணித்தவர்களின் வர்ணனை ஒலியில் மக்களின் மரண ஓலம் ஜெயலலிதா-சசிகலாவின் காதுகளில் விழவில்லை.

போலீஸ் தரப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 48 என்று சொல்லப்பட்டது. ஜெயலலிதாவும் சசிகலாவும் கும்பகோணத்தில் இருந்து தனி ஹெலிகாப்டரில் இரண்டறை மணிக்கு மேல்தான் கிளம்பினார்கள்.

ஆனால், இறந்த உடல்கள் வைக்கப்பட்டு இருந்த குடந்தை மருத்துவமனைப் பக்கமோ… காயம்பட்டவர்கள் சிகிச்சை பெற்ற அவசர சிகிச்சைப் பிரிவையோ திரும்பிக்கூட பார்க்கவில்லை.

‘ரெட் கிராஸ்’ அமைப்பின் ஆம்புலன்ஸ்கள் மட்டும் இறந்தவர்களையும் காயம்பட்டவர்களையும் தேடி அலறிக் கொண்டிருந்தது.

தமிழகம் முழுவதும் கடும் சர்ச்சைகளை எழுப்பிய இந்த விவகாரத்துக்குப் பின்னால், சசிகலாவின் செல்வாக்கு கார்டனுக்குள் இன்னும் கூடியது.

அதன்பிறகு அவர் தினம்தோறும் நமது எம்.ஜி.ஆர் அலுவலகத்துக்குச் செல்ல ஆரம்பித்தார். அதோடு எப்போதும் சசிகலா-நடராசனுக்கு ஆகாத ஆர்.எம்.வீ-யின் அமைச்சர் பொறுப்பும் பறிக்கப்பட்டது.

கதை தொடரும்…

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.