“வருமான வரித் துறையினரின் வரலாறு காணாத அதிரடி சோதனை நடந்த இடங்கள்”

0
308

வருமான வரித் துறையினர் சோதனை நடத்திய மன்னார்குடியில் உள்ள சசிகலாவின் சகோதரர் வி. திவாகரன் வீடு.

சசிகலா, தினகரன் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகள், அலுவலகங்கள் என தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம் உள்பட 190 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.

இவற்றில் குறிப்பிடத்தக்க இடங்களின் விவரம்:

1. ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா தொலைக்காட்சி அலுவலகம்.

2. நமது எம்ஜிஆர் நாளிதழ் அலுவலகம்.

3. போயஸ்கார்டனில் உள்ள ஜெயா தொலைக்காட்சியின் பழைய அலுவலகம் மற்றும் தொடர்புடைய 20 இடங்கள்.

4. மகாலிங்கபுரத்திலுள்ள இளவரசியின் மகன் விவேக் வீடு.

5. வேளச்சேரியில் உள்ள விவேக்கின் ஜாஸ் திரையரங்கம்.

6. தி.நகரிலுள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா வீடு.

7. அண்ணா நகரில் உள்ள விவேக்கின் மாமனார் பாஸ்கர் வீடு.

8. கிண்டியில் உள்ள ஜாஸ் சினிமாஸ் அலுவலகம்.

9. கே.கே.நகரில் உள்ள தினகரனின் உதவியாளர் ஜனார்த்தனன் வீடு.

10. நீலாங்கரையிலுள்ள டிடிவி. தினகரனின் உறவினர் டாக்டர் சிவக்குமாரின் வீடு.

11. அடையாறு, நேரு நகரில் உள்ள ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் வீடு.

12. சௌகார்பேட்டையில் உள்ள சுரானா கார்ப்பொரேஷன் நிறுவனம்.

13. ஜெயா தொலைக்காட்சியின் பொதுமேலாளர் வீடு.

14. தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலையிலுள்ள மருத்துவர் வெங்கடேஷ் வீடு.

15. தாம்பரம், படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை.

16. தஞ்சை அருளானந்த நகரில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜன் வீடு.

17. மன்னார்குடி, மன்னை நகரில் உள்ள தினகரன் வீடு.

18. சுந்தரக்கோட்டையில் உள்ள திவாகரன் வீடு.

19. நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்.

20. கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் தனி அறை.

21. திருச்சி மாவட்டம், சுந்தரக்கோட்டையில் உள்ள திவாகரனின்

செங்கமலத் தாயார் கலை அறிவியல் கல்லூரி.

22. செங்கமலத் தாயார் கலை அறிவியல் கல்லூரி ஊழியர் அன்பு வீடு.

23. சென்னையில் உள்ள வழக்குரைஞர் வேலுகார்த்திகேயன் வீடு.

24. நாமக்கல் மோகனூரில் உள்ள தினகரனின் நண்பர் வழக்குரைஞர் செந்தில் வீடு.

25. அறந்தாங்கி அருகே நெற்குப்பையிலுள்ள வழக்குரைஞர்

பரணி கார்த்திகேயன் வீடு.

26. தஞ்சாவூரில் சசிகலாவின் அண்ணன் மகனான மறைந்த மகாதேவன் வீடு.

27. கோவை ரேஸ்கோர்ஸ் சாலையிலுள்ள மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி வீடு.

28. மேட்டுப்பாளையத்தில் உள்ள செந்தில் ஃப்ரூட்ஸ் நிறுவனம்.

29. அன்னூரில் உள்ள டிரஸ்ட் அலுவலகம்.

30. கோவை, ராம் நகரில் உள்ள செந்தில் குரூப் ஆஃப் கம்பெனிகள், திரையரங்கு.

31. ஈரோடு மாவட்டம், பவானிசாகர், இக்கரைதத்தப்பள்ளியிலுள்ள செந்தில் பேப்பர் போர்டு காகித ஆலை.

32. கொடநாடு எஸ்டேட் கணக்குகள் பராமரிக்கப்படும் நீலகிரியில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளை.

33. புதுச்சேரி ஆரோவில்லில் உள்ள தினகரனின் பண்ணை வீடு.

34. பெங்களூரிலுள்ள கர்நாடக மாநில அதிமுக தலைமை அலுவலகம்.

35. கர்நாடக மாநில அதிமுக செயலர் புகழேந்தி வீடு, அலுவலகம்.

36. புதுச்சேரி லட்சுமி ஜூவல்லர்ஸ்.

37. தஞ்சாவூரில் சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் வீடு.

38. மன்னார்குடியில் திவாகரன் உதவியாளர் ராசுப்பிள்ளை வீடு.

39. திவாகரன் ஆதரவாளர்களான வடுவூர் அக்ரி ராஜேந்திரன், மன்னார்குடி சுஜய், செல்வம் ஆகியோரின் வீடுகள்.

40. திருச்சி மங்கம்மாள் நகரிலுள்ள சசிகலாவின் உறவினர் கலியபெருமாள் வீடு.

41. திருவாரூர் திருப்பாலக்குடியில் திவாகரன் உதவியாளர் விநாயகம் வீடு.

42. தினகரன் அணியின் திருவாரூர் மாவட்டச் செயலர் எஸ். காமராஜ் வீடு.

43. கூடலூரிலுள்ள கொடநாடு பங்களாவில் பணியாற்றி வந்த சஜீவனுக்குச் சொந்தமான இடங்கள்.

44. தஞ்சாவூரில் நடராஜன் உதவியாளர் சுரேஷ் வீடு.

45. தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலை, காந்தி நகரில் உள்ள சுந்தரவதனம் வீடு.

46. கொடநாட்டில் உள்ள கர்சன் எஸ்டேட்.

47. நாமக்கல்லில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் வழக்குரைஞர் பாலுசாமி வீடு.

48. நீலகிரியிலுள்ள சசிகலாவின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான எஸ்டேட்டுகள் உள்பட தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட 190 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

201711100010184430_The-raid-will-continue--High-officials-informed_SECVPF.gifமன்னார்குடியில் உள்ள சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீட்டில் சோதனை

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள அதிமுக (அம்மா அணி) பொதுச் செயலாளர் சசிகலாவின் சகோதரர் வி. திவாகரனின் வீடு, அமைச்சர் ஆர். காமராஜின் உறவினர், ஆதரவாளரின் வீடுகள் உள்பட மொத்தம் 14 இடங்களில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

14 கார்களில்…திருச்சியிலிருந்து 14 கார்களில் தனித்தனி குழுவாக மன்னார்குடிக்கு வந்த வருமான வரித் துறை அதிகாரிகள், வியாழக்கிழமை காலை 6 மணிக்கு ஒரே நேரத்தில் மன்னார்குடியை அடுத்த சுந்தரக்கோட்டையில் உள்ள சசிகலாவின் சகோதரர் வி. திவாகரன் வீடு, அதே பகுதியில் உள்ள அவருக்குச் சொந்தமான மகளிர் கல்லூரி, மன்னார்குடி மேலப்பாலம், மன்னை நாராயணசாமி நகரில் உள்ள திவாகரனின் பழைய வீடு ஆகிய இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

மேலும், அதே நகரில் உள்ள அவரது சகோதரியும், டிடிவி. தினகரனின் தாயாருமான வனிதாமணி வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

பழிவாங்கும் நடவடிக்கை: சுந்தரக்கோட்டையில் திவாகரனின் வீட்டில் ஆய்வு செய்த அதிகாரிகள், பின்னர் அவரை காரில் அழைத்துக்கொண்டு மன்னார்குடியில் உள்ள அவரது பழைய வீட்டுக்கு வந்தனர்.

அங்கு ஒரு மணி நேரம் விசாரணை நடத்திவிட்டு, திவாகரனை மீண்டும் சுந்தரக்கோட்டைக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் அழைத்து வந்தனர்.

அவரது மகளிர் கல்லூரி தவிர சோதனை நடைபெற்ற அனைத்து இடங்களிலும் வெளிநபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. வீட்டிலிருந்தவர்களும் வெளியே அனுப்பப்படவில்லை. மாலை 4.30 மணி வரை இந்த அதிரடி சோதனை நடைபெற்றது.

இதுகுறித்து திவாகரன் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. எங்களை ஒடுக்க வேண்டும் என்பதற்காக எனது வீடு மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது’ என்றார்.

உதவியாளர் வீட்டில்: இதைத்தொடர்ந்து, மன்னார்குடி அன்னவாசல் தெருவில் உள்ள அதிமுக (அம்மா அணி) மாவட்டச் செயலர் எஸ். காமராஜ், திவாகரனின் நண்பர்கள் பெரியக்கடைத் தெருவில் உள்ள சுஜை, காசுக்காரசெட்டித் தெருவில் உள்ள செல்வம், குன்னோஜிராஜம்பாளையம் தெருவில் உள்ள நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் சூ. ராசூப்பிள்ளை, திவாகரனின் உதவியாளர் விநாயகத்தின் கீழத்திருப்பாலக்குடியில் உள்ள வீடு உள்ளிட்டவற்றிலும் இந்த சோதனை தொடர்ந்தது.

அமைச்சரின் ஆதரவாளர் வீட்டிலும்: இதேபோல், தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜின் ஆதரவாளரும், ஜெ. பேரவை மாவட்டச் செயலருமான பொன். வாசுகிராமுக்குச் சொந்தமான பூக்கொல்லை சாலையில் உள்ள வீடு, அமைச்சரின் உறவினரும், வழக்குரைஞருமான எஸ். உதயகுமாரின் மூன்றாம் தெரு வீடு என மொத்தம் 14 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.

திவாகரனின் நண்பர் வீட்டில்… திருத்துறைப்பூண்டி கச்சேரி சாலையில் வசித்து வருபவர் த. நடேசன். ஓய்வுபெற்ற வேளாண் துறை துணை இயக்குநரான இவர், திவாகரனுக்கு நண்பராகவும், அவரது பண்ணை தொடர்பான தொழில்நுட்ப ஆலோசகராகவும் உள்ளார்.

இவரது வீட்டில் வியாழக்கிழமை காலை முதல் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இரவிலும் சோதனை நீடித்தது. இதில், ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை.

சசிகலாவின் உறவினர் இல்லத்தில்… திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள ரிஷியூரில் திவாகரனின் பராமரிப்பில் 50 ஏக்கர் நிலங்களுடன் பண்ணை வீடு உள்ளது.

இந்த வீட்டிலும், திவாகரனுடன் நெருங்கிய தொடர்புடைய ரிஷியூரைச் சேர்ந்த ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கிருஷ்ணமேனன், ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோரது வீடுகளிலும் வருமான வரித் துறையினர் காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், கிருஷ்ணமேனனின் மகன் திருமணம் பட்டுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதனால் அவரது வீட்டின் அறைகள் பூட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு வருமான வரித் துறையினர் முகாமிட்டிருந்தனர். இதேபோல், புள்ளவராயன் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த அக்ரி ராஜேந்திரன் வீட்டிலும் (இவர் திவாகரனின் நெருங்கிய உறவினர்) வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சசிகலா கணவர் நடராஜன் வீட்டில்...

தஞ்சாவூரில் உள்ள அதிமுக (அம்மா அணி) பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் ம. நடராசன், துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் மைத்துனர் வெங்கடேஷ் உள்ளிட்ட 7 பேரின் வீடுகளில் வருமான வரித் துறையினர் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.

தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள சசிகலாவின் கணவர் ம. நடராசன், பரிசுத்தம் நகரில் உள்ள சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் (மறைவு), அருளானந்த நகரில் உள்ள இவரது சகோதரர் தங்கமணி, நடராசனின் அக்காள் மகன் சின்னையா, மேல வஸ்தா சாவடியில் உள்ள டி.டி.வி. தினகரனின் மைத்துனர் டாக்டர் வெங்கடேஷ், வங்கி ஊழியர் காலனியைச் சேர்ந்த தஞ்சாவூர் வடக்கு மாவட்ட அதிமுக (அம்மா அணி) வழக்குரைஞர் அணிச் செயலர் வேலு கார்த்திகேயன், யாகப்பா நகரைச் சேர்ந்த அம்மா பேரவை மாநில இணைச் செயலர் ராஜேஸ்வரன் ஆகியோரது வீடுகளில் இச்சோதனை நடைபெற்றது.

நெல்லை, தூத்துக்குடி, மதுரையைச் சேர்ந்த வருமான வரித் துறை அலுவலர்கள் சுமார் 20 பேர் வியாழக்கிழமை காலை 6.30 மணி முதல் இரவு வரை இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.

மருத்துவர் சிவக்குமார் வீட்டிலும்… திருச்சியில் உள்ள சசிகலாவின் உறவிரும், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவருமான சிவக்குமார் உள்ளிட்ட இருவரின் வீடுகளிலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

திருச்சி கே.கே. நகர் அருகே, ஐயப்பநகர் மங்கம்மா சாலையில் உள்ள நெடுஞ்சாலைத் துறையில் ஓய்வு பெற்ற பொறியாளரும், இளவரசியின் சம்பந்தியுமான கலியபெருமாள் வீட்டிலும், கண்டோன்மென்ட் ராஜா காலனியில் உள்ள சசிகலாவின் உறவினரும், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவருமான சிவக்குமார் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இச் சோதனையில் மதுரையிலிருந்து வந்த 6 அதிகாரிகள் ஈடுபட்டனர்.

கலியபெருமாள் வீட்டில் காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை வரை நீடித்தது. இதற்கிடையே, பிற்பகல் 3.15 மணியளவில், வருமான வரித் துறை அதிகாரிகளில் இருவர் மட்டும் கலியபெருமாளின் காரில் வெளியே சென்றனர்.

பிறகு, சுமார் 30 நிமிடங்களில் அந்த கார் திரும்பியபோது, இரு பைகளில் டைரிகள், மற்றும் பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து வந்தனர்.

ராஜா காலனியில் உள்ள மருத்துவர் சிவக்குமாரின் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து கதவில் இருந்த பூட்டுக்களை, பூட்டு பழுது நீக்கம் செய்பவரை அழைத்து வந்து திறந்தனர்.

தொடர்ந்து உள்ளே இருந்த மற்ற அறை கதவுகளின் பூட்டுக்களை அவர் திறக்க மறுத்துவிட்டதை அடுத்து, அந்த வீட்டில் சோதனை மேற்கொள்ள முடியாமல் அதிகாரிகள் காத்திருந்தனர்.

இதையடுத்து மாலை 5.45 மணியளவில் சிவக்குமாரின் வீட்டு சாவி அவரது நண்பர் மாறன் மூலம் கொண்டு வரப்பட்டது. அதனையடுத்து உறவினரைக் கொண்டே வீடு திறக்கப்பட்டு சோதனை நடைபெற்றது.

மருத்துவர் சிவக்குமார், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மருத்துவ ஆலோசகராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்பு இல்லை: இதனிடையே, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம் தஞ்சையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘முறையாக வரி செலுத்தாதவர்கள், சந்தேகத்துக்கு உரியவர்களின் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்துவது வழக்கமானதுதான். இது புதிதல்ல’ என்றார்.

இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காகத் தினகரனை மிரட்ட இச்சோதனை நடத்தப்படுகிறதா? என்ற கேள்விக்கு, ‘இது முற்றிலும் தவறான செய்தி’ என்றார் அவர்.

கொடநாடு எஸ்டேட்டில்…

நீலகிரி மாவட்டத்தில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கி மற்றும் கோத்தகிரியில் 3 இடங்களிலும், கூடலூரில் 3 இடங்களிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கொடநாடு எஸ்டேட்டைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் பெயரிலேயே வாங்கப்பட்ட கர்சன் எஸ்டேட் குறித்த தகவல்கள் ஆவணங்களில் முழுமையாக இல்லாததால், கர்சன் எஸ்டேட்டில் சோதனை தொடர்ந்து நீடிக்கிறது. இதன் காரணமாக சோதனைக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் கொடநாட்டை விட்டு வெளியேறாமல் அங்கேயே உள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் கொடநாடு எஸ்டேட், கர்சன் எஸ்டேட் மற்றும் இவ்விரு எஸ்டேட்டுகளின் கணக்கு வழக்குகளைப் பார்த்து வந்த பாங்க் ஆஃப் இந்தியாவின் கிளையும் சோதனைக்கு உள்படுத்தப்பட்டது. இந்த சோதனையில் 30 -க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

இதேபோல், கூடலூரில் சசிகலாவுக்கு நெருக்கமானவரும், பிரபல மர வியாபாரியுமான சஜீவனின் அல்லூர் பண்ணை வீடு, அல்லூர் மர ஆலை மற்றும் தமிழக-கேரள எல்லையையொட்டியுள்ள பகுதியில் அமைந்துள்ள அவரது மற்றொரு வீடு ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டது.

கொடநாடு எஸ்டேட்டில் காலை 6 மணிக்குத் தொடங்கிய சோதனை முற்பகல் 11 மணிக்கு முடிவடைந்தது. இதில், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் தொடர்ந்து பலமுறை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.கொடநாடு எஸ்டேட்டில் சோதனை நடைபெற்றுபோது, தினகரன் அணியைச் சேர்ந்த நீலகிரி மாவட்டச் செயலர் கலைச்செல்வன், அவைத் தலைவர் தேனாடு லட்சுமணன் ஆகியோர் அங்கு சென்றிருந்தனர்.

கோவையில் ஏழு இடங்களில்... கொடநாடு எஸ்டேட்டை தொடர்ந்து, சசிகலாவுக்கு நெருக்கமானவராக அறியபப்டும் சஜீவனுக்கு சொந்தமாக கோவை போத்தனூர், ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் உள்ள பர்னிச்சர் கடைகளிலும், மதுக்கரை அருகே மரப்பாலத்தில் உள்ள அவரது வீடு ஆகிய இடங்களிலும், கூடலூரில் உள்ள அவரது எஸ்டேட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதேபோல், கோவையைச் சேர்ந்த மணல் ஒப்பந்ததாரர் ஓ.ஆறுமுகசாமி என்பவருக்கு சொந்தமாக ராம் நகரில் உள்ள அவரது அறக்கட்டளை அலுவலகம், ரேஸ்கோர்ஸில் உள்ள அவரது வீடு, அவிநாசி சாலையில் உள்ள அவரது அலுவலகம் ஆகிய இடங்களில் வருமான வரித் துறையினர் வியாழக்கிழமை சோதனை நடத்தினர். மேலும் அவரது பங்குதாரரான பழனிசாமி என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

சசிகலாவின் வழக்குரைஞர் வீட்டில்…

: நாமக்கல்லில் சசிகலாவின் வழக்குரைஞர் வீடு, அவரது நண்பர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் ஒருவரின் வீடு, அலுவலகம் என 8 இடங்களில் சோதனை நடந்தது.

நாமக்கல் மோகனூர் சாலையில் வசித்து வரும் சசிகலாவின் வழக்குரைஞரும், டிடிவி. தினகரனின் ஆதரவாளருமான எஸ்.செந்தில் வீட்டுக்கு வியாழக்கிழமை காலை சுமார் 9 மணிக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் காரில் வந்தனர். அவர்கள் வீட்டுக்குள் சென்றவுடன் வீட்டின் வாயில் கதவு பூட்டப்பட்டது.

அதன் பின்னர், வீட்டில் ஒவ் வொரு அறையாகச் சென்று அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேல் மாடிக்குச் சென்றும் சோதனை நடத்தினர். சாக்கு மூட்டைகள், பீரோ உள்ளிட்டவற்றில் இருந்த ஆவணங்களைச் சோதனையிட்டனர்.

வருமான வரித் துறை சோதனைக்கு உள்ளான வழக்குரைஞர் செந்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் முக்கியமானவராக செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

jayatv48 இடங்களில் சோதனை: வழக்குரைஞர் செந்தில் வீடு மட்டுமின்றி, செந்திலின் தொழில் பங்குதாரரும், தொழிலதிபருமான சுப்பிரமணியத்தின் வீடு, அலுவலகம் மற்றும் கோழிப்பண்ணையிலும் சோதனை நடத்தப்பட்டது.

மேலும், மோகனூர் சாலை காந்தி நகரில் வசித்து வரும் டிஎன்பிஎஸ்சி உறுப்பினரும், வழக்குரைஞருமான ஏ.வி.பாலுசாமி வீடு மற்றும் அலுவலகத்திலும், முல்லை நகரில் உள்ள வழக்குரைஞர் செந்திலின் உதவியாளரான வழக்குரைஞர் பாண்டியன் வீடு மற்றும் பரமத்தி சாலையில் உள்ள செந்திலின் நண்பர் வழக்குரைஞர் பிரகாஷின் அலுவலகம் என நாமக்கல்லில் 8 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. காலை 9 மணிக்குத் தொடங்கிய இந்தச் சோதனையில், கோவை, சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 50 -க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 9 குழுக்களாகப் பிரிந்து சோதனை நடத்தினர். இந்த சோதனையானது மாலை 5 மணிக்குப் பிறகும் நீடித்தது.

குடிநீர் தொட்டியிலும் சோதனை

ஜெயா தொலைக்காட்சியின் முதன்மைச் செயல் அதிகாரி விவேக் வீட்டில், வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது, அவரது வீட்டின் மாடியில் உள்ள குடிநீர் தொட்டியிலும் அதிகாரிகள் இறங்கி ஆய்வு செய்தனர்.

சமையல் கூடம், கழிவறை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த விவேக்கின் காரிலும் சோதனை நடத்தினர்.

புதுச்சேரி: தினகரனின் பண்ணை வீட்டில்…

புதுச்சேரியை அடுத்துள்ள பொம்மையார்பாளையத்திலுள்ள டி.டி.வி. தினகரனின் பண்ணை வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

பொம்மையார்பாளையத்தில் தினகரனுக்குச் சொந்தமாக 8 ஏக்கர் பரப்பில் பண்ணை வீடு உள்ளது. அங்கு வியாழக்கிழமை அதிகாலை முதலே 5 அதிகாரிகள் கொண்ட குழு சோதனை மேற்கொண்டது. 6 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை தொடர்ந்தது.

பண்ணை வீட்டின் காவலாளி கர்ணாவை தனி அறையில் வைத்து, வருமான வரித் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தினகரன் எப்போது வந்து தங்குவார், அவரைச் சந்திக்க வருபவர்களின் விவரம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

jayatv-5பூங்குன்றன் இல்லத்திலும்…

சென்னை, நவ.9: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தனி உதவியாளரான பூங்குன்றன் வீட்டிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

ஜெயலலிதா மறைவுக்கு முன்பு, அவரது தனி உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் தற்போது இவரது பராமரிப்பில்தான் உள்ளது.

இந்நிலையில், சசிகலா, தினகரன் குடும்பத்தினர், ஆதரவாளர் வீடுகள், அலுவலகங்களில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட வருமானவரித் துறை சோதனையின் ஒரு பகுதியாக சென்னை அடையாறு, நேரு நகரில் உள்ள பூங்குன்றன் வீட்டிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

போயஸ் கார்டன் வேதா நிலையத்துக்கு அருகே பூங்குன்றனின் பராமரிப்பில் உள்ள பழைய ஜெயா தொலைக்காட்சி அலுவலகக் கட்டடத்திலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மிகப் பெரிய அளவில் சோதனை

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சோதனையை வருமான வரித் துறை நடத்தியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இந்த அதிரடிக்குப் பிறகு, கடந்த ஆண்டு டிசம்பரில் தொழிலதிபர் சேகர் ரெட்டி இல்லத்தில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் உள்ளிட்டோரின் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவின் அலுவலகம், அவரது மகன் இல்லம் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டன. இந்தச் சோதனைகளால் தமிழகம் பெரும் பரபரப்புக்கு உள்ளானது.

இந்நிலையில், கடந்த ஓராண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான சோதனையை வருமான வரித் துறை வியாழக்கிழமை மேற்கொண்டது. சுமார் 200 இடங்களில் இந்தச் சோதனை நடந்தது. சசிகலா, தினகரன் உறவினர்கள் அனைவரின் வீடுகளிலும் நடந்த இந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியின் மகன் விவேக் இல்லத்தில் சில ஆவணங்கள் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. பல இடங்களில் வருமான வரித் துறை சோதனைகள் வெள்ளிக்கிழமையும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

200 கார்கள் முன்பதிவு

jayatv-6

தமிழகம் முழுவதும் வருமானவரித் துறையினர் மேற்கொண்ட சோதனைக்காக தனியார் நிறுவனத்தில் 200 கார்களை வருமான வரித்துறை முன்பதிவு செய்திருந்தது தெரியவந்துள்ளது.

சசிகலா, தினகரன் குடும்பத்தினர், உறவினர் வீடுகளில் நடைபெறும் இந்த சோதனை குறித்து விவரங்கள் வெளியில் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அதிகாரிகள் ஒவ்வொரு நடவடிக்கையையும் ரகசியமாக மேற்கொண்டனர்.

இதற்காக, வழக்கமாக முன்பதிவு செய்யும் நிறுவனத்தின் கார்களைப் பயன்படுத்தாமல், இம்முறை ‘பாஸ்ட் டிராக்’ நிறுவனத்தில் 200-க்கும் மேற்பட்ட கார்கள் முன்பதிவு செய்யப்பட்டன.

பெரிய பணக்காரர் வீட்டுத் திருமணத்திற்காக கார் தேவை எனக்கூறி 4 நாட்களுக்கு முன்பே வாடகைக்கு இந்தக் கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. வியாழக்கிழமை அதிகாலை சோதனைக்குச் செல்வதற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் கார்களில் ஏறும்போது அனைத்து ஓட்டுநர்களிடமும் ‘ஸ்ரீநி வெட்ஸ் மஹி’ என்ற வாசகங்கள் கொண்ட அட்டையை காரில் ஒட்டக் கூறியிருந்ததும் தெரியவந்துள்ளது.

மிடாஸ் மதுபான ஆலையில்…

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையை அடுத்த சிறுமாத்தூர் பகுதியில் இயங்கி வரும் மிடாஸ் மதுபான தொழிற்சாலையில் வருமான வரித் துறையினர் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

படப்பையை அடுத்த சிறுமாத்தூர் பகுதியில் படப்பை-புஷ்பகிரி சாலையில் வி.கே.சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான மதுபானங்கள் உற்பத்தி செய்யும் மிடாஸ் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இத்தொழிற்சாலைக்கு வியாழக்கிழமை காலை 6.45 மணியளவில் மூன்று கார்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட வருமானவரித் துறையினர் தொழிற்சாலையில் அதிரடிச் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், அங்கு ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணிபுரியும் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் வியாழக்கிழமை காலை பணிக்கு வந்தனர்.

அவர்களை தொழிற்சாலை வளாகத்துக்குள் அனுமதித்த வருமான வரித் துறையினர், பணியில் ஈடுபடக்கூடாது எனக் கூறி தொழிற்சாலை வளாகத்தின் ஒரு பகுதியில் அமர வைத்தனர். மதியம் 2 மணியளவில் அவர்களை வீட்டுக்கு அனுப்பினர். இதனால் வியாழக்கிழமை இத்தொழிற்சாலை இயங்கவில்லை.

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.