ஐந்து நட்­சத்­திர வசதியுடைய சிறைச்சாலையில் தரையில் படுத்­து­றங்கும் இள­வ­ர­சர்­கள்!!

0
1747

சவூதி அரேபியாவில் இடம்பெற்ற மிகப்பெரிய ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட 11 இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்கள் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றனர்.

இவர்கள் தரையில் போடப்பட்ட மெல்லிய மெத்தையில் வரிசையாக உறங்கும் படம் ஒன்றை பிரிட்டன் நாட்டு நாளிதழான டெய்லி மெயில் வெளியிட்டுள்ளது.

சவூதி தலைநகர் ரியாதில் இருக்கும் ரிட்ஸ் கார்லடன் ஹோட்டலிலேயே இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

போர்வையால் போர்த்தியபடி உறங்கும் படம் ஒன்றே வெளியாகியுள்ளது. இவர்களில் உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான இளவரசர் அல் வலீத் பின் தலாலும் இருப்பதாக சவூதி வட்டாரத்தை மேற்கோள் காட்டி அந்த பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சவூதி மன்னரின் மைத்துனரான அல் வலீத்தின் சொத்து மதிப்பு 18 பில்லியன் டொலர்களாகும்.

சவூதி அரச வட்டாரத்தில் இருந்தே இந்த புகைப்படம் கிடைத்ததாக டெய்லி மெயில் குறிப்பிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சிலர் ரிட்ஸ் கார்லடன் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருக்கும் செய்தியை ரோய்ட்டர்ஸ் மற்றும் வோல் ஸ்டிரீட் ஜெர்னல் முதல் முறை வெளியிட்டது.

4614D61200000578-5055923-Humiliation_This_image_passed_to_DailyMail_com_by_sources_inside-a-58_1510007911587492 அறைகள் கொண்ட அந்த ஹோட்டல் நவம்பர் இறுதி வரை முழுமையாக பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் டிசம்பரில் மீண்டும் முன்பதிவுகள் பெறப்படவிருப்பதாகவும் சி.என்.என் தொலைக்காட்சி செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கடந்த வார இறுதியில் இந்த ஹோட்டலில் இருந்த விருந்தினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

ஞாயிறு காலையில் ஹோட்டலின் பிரதான வாயில் மூடப்பட்டு பாதுகாப்பு காரணங்களை கூறி செய்தியாளர்கள் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஹோட்டலுக்கு தனியார் கார்கள், அம்புலன்ஸ்கள் நுழைவதாகவும் ரோய்ட்டர்ஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று எதிர்பாராத சூழ்நிலை காரணமாக அடுத்த அறிவிப்பு வரும்வரை ஹோட்டலின் இணையதள மற்றும் தொலைபேசி தொடர்புகள் துண்டிக்கப்படுவதாக அந்த ஹோட்டலின் இணைய பக்கத்தில் திங்களன்று கூறப்பட்டிருந்தது.

எனினும் இந்த கைதிகள் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையின் ஆரம்பம் என்று சட்டமா அதிபர் ஷெய்க் சவூத் அல் முஜிப் வெளியிட்ட அறிவிப்பொன்றில் கூறப்பட்டுள்ளது.

“ஊழலை ஒழிக்கும் ஒரு முக்கிய வழிமுறையில் இது வெறும் ஆரம்பமாகும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் சவூதியின் முடிக்குரிய இளவரசரான முஹமது பின் சல்மானின் அதிகாரத்தை பலப்படுத்தும் வகையில் இருப்பதாக பரவலாக கருதப்படுகிறது.

32 வயதான முடிக்குரிய இளவரசரின் தலைமையிலான ஊழல் எதிர்ப்பு குழுவே 11 இளவரசர்கள், நான்கு அமைச்சர்கள் மற்றும் பல டஜன் முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய உத்தரவிட்டது.

சவூதி அரேபியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் வரவேற்றுள்ளார்.

“சவூதி மன்னர் சல்மானும் முடிக்குரிய இளவரசரும் தாம் என்ன செய்கிறோம் என்று புரிந்தே செயற்படுகிறார்கள் என்று நான்கு உறுதியாக நம்புகிறேன்” என டிரம்ப் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

“இன்று அவர்களால் கடுமையான நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுபவர்கள் எல்லாம் பல காலமாக நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்து வந்தவர்கள்” என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசாரணையின் முதல் கட்டம் பூர்த்தி அடைந்திருப்பதாக ஷெய்க் சவூத் அல் முஜிப் குறிப்பிட்டுள்ளார்.

“பெருமளவான ஆதாரங்கள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ளன. விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இன்றைய தேதி வரை, சந்தேகத்திற்கு உரியவர்கள் அனைவருக்கும், சட்டரீதியான உதவிகளை பெறுவதற்கான முழு அணுகுமுறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளதோடு, விசாரணை சரியான நேரத்திலும், வெளிப்படைத்தன்மையுடனும் நடக்கும்” என்றார்.

ஊழல் குறித்த நடவடிக்கைகளின் அடுத்தகட்டமாக, அதிகாரிகள், சவூதி அரேபியாவின் எல்லையில் நடந்த ஹெலிகொப்டர் விபத்து குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை, அசிர் பிராந்தியத்தின் இணை ஆளுநரான இளவரசர் மன்சூர் பின் மிக்ரின், ஆய்வுப்பயணத்தை முடித்து திரும்பும் போது, அப்ஹா அருகில் அவரின் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது.

விபத்திற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.