“சாவுகள் சரித்திரமாகும்!” போர்க்களத்திலிருந்து கலைஞர் கருணாநிதிக்கு பிரபா எழுதிய உருக்கமான கடிதம்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை -130)

0
1260

புலிகளை சந்தித்த் முஸ்லிம் தூதுக்குழு. வரலாற்றில் முதல் உடன்பாடு

துரோகம் செய்யேன்.

இந்தியப் படைக்கு எதிராகவும், இந்தியப் படையுடன் இணைந்து செயற்பட்ட இயக்கங்களுக்கு எதிராகவும் பல்வேறு தாக்குதல்களை நடத்திய தும்பன் பற்றி கடந்த வாரம் விபரித்திருந்தோம்.

ஏற்கனவே கட்டுவனில் இலங்கை இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதல் ஒன்றில் தும்பனுக்கு கையில் காயம்பட்டிருந்தது. தமிழ்நாட்டுக்குச் சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பினான்.

இந்தியப் படைக்கு எதிராக தும்பன் தனித்தும், தனது குழுவினருடனும் சேர்ந்தும் தாக்குதல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தும்பனின் தாக்குதல் குழுவில் இருந்த உறுப்பினர்கள் பலர் இந்தியப் படையின் சுற்றிவளைப்புக்களில் கொல்லப்பட்டனர்.

தும்பனையும் எப்படியாவது பிடித்துவிடவேண்டும் என்று இந்தியப் படையினர் தீவிமாக தேடத் தொங்கினர்.

தும்பனின் அண்ணன் அமெரிக்காவில் இருந்தார். தும்பனின் உயிருக்கு எந்நேரமும் ஆபத்து வரலாம் என்று அறிந்து தும்பனை தன்னுடன் அழைத்துச் செல்ல அவர் கொழும்புக்கு வந்தார்.

தும்பனுக்கு அது தெரியவந்தபோது தன் அண்ணனுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினான்.

போராளிகளின் உணர்வுகள், தன்னலங்கருதாத அர்ப்பணிப்புகளுக்கு அக்கடிதமும் ஒரு எடுத்துக்காட்டு. அக்கடிதம் இதுதான்:

“எனது அன்பின் அண்ணா அறிவது:

நான் நலம். உமது நலத்துக்கும் எனது நல்லாசிகள். மேலும் நீங்கள் வந்திருப்பதை இன்றுதான் அறிந்தேன். ஒருபுறம் சந்தோசமாயும், மறுபுறம் வேதனையாகவும் இருக்கிறது.

நீங்கள் இங்கு வருவது (யாழ்ப்பாணம்) நல்லதல்ல. தேவியிடம் கேட்டால் விளக்கமாகக் கூறுவா. நீ வந்து என்னைக் கூட்டிச் செல்லலாம் என்று மாத்திரம் நினைக்க வேண்டாம்.

உனக்கு நான் மதிப்புக் கொடுக்கிறேன். உன்னுடைய அன்பை மதிக்கிறேன். ஆனால் இவற்றையெல்லாம் விட தாம் கொண்ட இலட்சியத்துக்காக உயிரை விட்டார்களே எமது போராளிகள், அவர்களுக்கு மிக மிகமதிப்புக் கொடுக்கிறேன்.

என்னுடன் திரிந்தவர்களில் பலர் இறந்துவிட்டார்கள். கடைசியாக ஒரு நண்பன் இறந்து இன்னும் ஒரு கிழமைகூட ஆகவில்லை. அவர்களுக்கும் உன்னைப்போல் அண்ணன்மார் உண்டு.

ஆனால் அவர்கள் மண்ணை மறக்கவில்லை. எமது ஊரில் ஐந்துபேர் வெளிக்கிட்டு மூவர் இறந்துவிட்டனர்.

ஒருவர் (ஐயர்) படுகாயம். நான் ஒருவன்தான் மீதி. நிச்சயமாக அந்த மூவருக்கும் துரோகம் செய்யமாட்டேன். நான் இப்படிச் சொல்வதற்கு எவரும் காரணமல்ல. எவர் மீதும் பழி போட வேண்டாம்.

நீ அப்படி என்னுடன் கதைக்க வேண்டுமானால் யாழ்ப்பாணத்திற்கு வந்து நின்றுகொண்டு விலாசம் அனுப்பிவிட்டால் நான் வந்து சந்திப்பேன்.

ஆனாலும் வருவது கவனம். எல்லா இடங்களிலும் பிரச்சனை. நீ வருவதால் என்னுடைய எந்தமுடிவும் மாறப்போவதில்லை. நீ என்னைப் புரிந்துகொண்டிருப்பாய் என்று நம்புகிறேன்.

‘இந்த இனிய தென்றல்கள்
புயல்களானது
வசந்தத்தின் மீது கொண்ட
விரக்தியினர் அல்ல:
அடக்குமுறையை
உடைத்தெறியவே!

இப்படிக்கு
அன்பின் தம்பி

13.01.89ல் கீரிமலையில் இந்தியப் படையினருடன் நடைபெற்ற மோதல் ஒன்றில் தும்பன் பலியானான்.

பலியாகும் போதும் ஓர் இராணுவ உயரதிகாரியையும், ஒரு சிப்பாயையும் தனது துப்பாக்கிக்கு இரையாக்கினான் தும்பன். சொந்தப் பெயர் தம்பித்துரை மரியாதுரை. பிறந்தது பண்டததரிப்பு. புலிகள் இயக்கத்தில் மேஜர் தரத்தில் இருந்தான்.

லோலோ

இந்தியப் படைக்கு எதிரான நடவடிக்கைகளில் தனிநபராகச் சென்று தாக்குதல் நடத்தியவர்களில் குறிப்பிடத்தக்க மற்றொருவர் லோலோ. யாழ்ப்பாணம் புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்த லோலோவின் சொந்தப் பெயர் சிறீதரன்.

கிளிநொச்சியில் இந்தியப் படையினரால் கைதுசெய்யப்பட்ட லோலோ அங்கிருந்து சாமர்த்தியமாகத் தப்பினான்.

அரைக்காற்சட்டையுடன்தான் அதிகம் திரிவது வழக்கம். பார்வைக்குப் பாடசாலை மாணவன் போன்ற தோற்றம். அந்தத் தோற்றம்தான் இந்தியப் படையினர் வலைவீசித் தேடியபோதும் தப்பித்திரிய உதவியது.

இந்தியப் படையினருக்கும், அவர்களுடன் இணைந்து செயற்பட்ட இயக்க உறுப்பினர்களுக்கும் சிம்ம சொப்பனமாய் விளங்கினான் லோலோ

இறுதியாக சுன்னாகத்தில் வைத்து இந்தியப் படையினால் கொல்லப்பட்டான் லோலோ.

pirapakarannaபுலிகளும் – முஸ்லிம் முன்னணியும்

வடக்கு – கிழக்கு மாகாண சபைக்கு தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய அரசு அறிவித்தது. ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈ.என்.டி.எல்.எஃப்.ஆகிய இயக்கங்கள் மட்டுமே இந்திய அரசின் முடிவை ஏற்றுக் கொண்டன.

ரெலோ, புளொட், ஈ.பி.டி.பி, ஈரோஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவை தேர்தல் நடத்தப்படுவதை எதிர்த்ததுடன், போட்டியிடவும் மறுத்தன.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தை நம்பித்தான் வடக்கு – கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தும் முடிவை எடுத்தது இந்திய அரசு.

இக்கட்டத்தில் தான் முஸ்லிம் ஐக்கிய விடுதலைத் தூதுக்குழு புலிகளைச் சந்தித்துப் பேச தமிழ்நாட்டுக்குச் சென்றது.

முன்னால் கல்வியமைச்சர் டாக்டர் பதியூதீன் மகமூது தலைமையில் அத்தூதுக்குழு சென்றிருந்தது. சென்னையில் தமிழர் விடுதலைக் கூட்டணியினரையும் தூதுக்குழுவினர் சந்தித்தனர். ஆயினும் புலிகளுடன் சில உடன்பாடுகளைக் காண்பதே அவர்களது நோக்கமாக இருந்தது.

1988 ஏப்ரல் 15,16,17ம் திகதிகளில் சென்னையில் விடுதலைப்புலிகளுக்கும், முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் இடையே கலந்துரையாடல் நடைபெற்றது.

விடுதலைப் புலிகள் இயக்கப் பிரதிநிதிகளுக்கு கிட்டு தலைமை தாங்கினார்.

அக்கலந்துரையாடலின் முடிவில் இரு தரப்பும் இணங்கிக்கொண்ட விடயங்கள் தொடர்பாக கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழர் தரப்பும், முஸ்லீம் தரப்பும் முதன் முதலாக ஓர் உடன்பாட்டுக்கு வந்த விடயங்கள் என்றவகையில் அவை முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

அதுமட்டுமல்லாமல், விடுதலைப் புலிகளுடன் முதன் முதலாகப் பேச்சு நடத்திய முஸ்லிம் கட்சியும் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணிதான்.

கூட்டறிக்கை

இணக்கம் காணப்பட்டதாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்ட முக்கிய விடயங்கள் இவைதான்:

1. இலங்கைவாழ் முஸ்லிம்கள் தமிழ் மொழியைப் பேசுபவர்களாக இருப்பினும் அவர்கள் வேறுபட்ட தனித்துவத்தைக் கொண்ட, தமிழ்த் தேசியத்தினுள் உள்ளடங்கிய ஒரு இனக்குழு என்பதனையும், வடக்கு-கிழக்கு மாகாணம் ஏனைய தமிழ் பேசும் மக்களின் பாரம்பரியத் தாயகமாக உள்ளது போலவே, முஸ்லிம்களது பாரம்பரியத் தாயகமாக உள்ளது என்தனையும் ஏற்றுக் கொனள்கிறோம்.

2. முஸ்லிம்களினதும், ஏனைய தமிழ் பேசும் மக்களினதும் அபிலாசைகள் பாதிக்கப்படாத வகையில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு விடுதலைப் புலிகளும், முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியும் ஒத்துழைப்பு வழங்குவர்.

3. மாகாணசபைக்கான 13வது சட்டத்திருத்தத்தினுள் உள்ளடக்கிய சில சரத்துக்களும் இந்திய-இலங்கை உடன்பாட்டிற்கு முரணாகவுள்ளது. இந்நிலையில் 13வது அரசியல் திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்ள இயலாது.

4. முஸ்லிம் மக்களது உரிமைகளைப் பாதுகாக்கவும், ஆட்சியதிகாரத்தை நியாயமான முறையில் பகிர்ந்துகொள்ளவும் கூடிய ஏற்பாடுகளைச் செய்யும்போது அத்தகைய நடவடிக்கைகள் தமிழ்பேசும் மக்களின் தாயகத்தின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் எதுவும் ஏற்படுத்தக்கூடாது.

5. மேற்கூறியதன் அடிப்படையில் வடக்கு-கிழக்கு மாகாணசபையில் ஏனைய தமிழ்பேசும் மக்களுக்குள்ள இன உரிமைகளையும், சலுகைகளையும், வாய்ப்பினையும், சுதந்திரத்தையும் அனுபவிப்பதற்கு வடக்கு-கிழக்கு மாகாணத்தை தமது தாயகமாகக் கொண்ட முஸ்லிம்கள் உரித்துடையவர்கள்.

6. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் 33 வீதமான தொகையினர். வடக்கு-கிழக்கு ஒனறிணைந்த மாகாணத்தில் முஸ்லிம்கள் 18வீதமான தொகையினாக உள்ளனர்.

முஸ்லிம்கள் அதிகூடிய பாதுகாப்பைப் பெற்று, ஆட்சியதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், ஒன்றிணைந்த வடக்கு-கிழக்கு தாயகத்தினுள் 33 வீதத்துக்குக் குறைவில்லாத வகையில் மாகாண சபையிலும் அமைச்சரவையிலும் பிரதிநிதித்துவம் பெறுவதற்கு உரித்துடையவர்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

7. வருங்காலத்தில் அரச காணிப்பங்கீடு முஸ்லிம்களுக்கு கிழக்கு மாகாணத்தில் 35 வீதத்துக்கு குறைவில்லாத வகையிலும், மன்னார் மாவட்டத்தில் 30 வீதத்துக்கு குறைவில்லாத வகையிலும் வடமாகாணத்தின் ஏனைய பகுதிகளில் 5 வீதத்துக்கு குறைவில்லாத வகையிலும் இருத்தல் வேண்டும்.

8. வடக்கு-கிழக்கு தாயகத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்களின் விகிதாசாரப்படி பொதுத்துறை வேலைவாய்ப்புக்கான உரிமையை முஸ்லிம்கள் கொண்டிப்பர்.

9. முஸ்லிம் மக்களது தனித்துவ உரிமைகள், அக்கறைகள் என்பவற்றை பாதிக்கக்கூடிய எதுவித சடட்டவாக்கங்களும் அவற்றிற்கு முஸ்லிம் பிதிநிதிகளின் ¾ பெரும்பான்மையினர் சார்பாக வாக்களித்தால் மட்டுமே வடக்கு-கிழக்கு மாகாணசபையால் நிறைவேற்றப்படும்.

10. வடக்கு-கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக ஒரு முஸ்லிம் முறையாக நியமிக்கப்பட்டாலன்றி அம்மாகாணசபையின் பிரதி முதமைச்சராக ஒரு முஸ்லிம் நியமிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்படுதல் வேண்டும்.

11. தமிழ்பேசும் மக்களின் தாயகத்தை அபகரிக்கும் நோக்கத்துடனும், அங்குள்ள இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையிலும், அவர்களது பொருளாதார, அரசியல் நிர்வாகப் பலத்தினை முறியடிக்கும் கொள்கையுடனும் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட அரச குடியேற்றத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களை களையும் வகையில் ஒரு குடியகல்வு கொள்கை உருவாக்கப்படுதல் வேண்டும்.

இவைதான் முக்கிய விடயங்கள். இந்தக் கூட்டறிக்கையில் புலிகள் அமைப்பின் சார்பாக சதாசிவம் கிருஷ்ணகுமார் (கிட்டு), முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி சார்பாக எம்.ஐ.எம்.மொகிதீன் ஆகியோர் கையொப்பமிட்டனர். (மொகிதீன் தற்போது முஸ்லிம் காங்கிரசின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக இருக்கிறார்)

மிரட்டல்

சென்னையில் பிரசிடென்ட் ஹோட்டலில்தான் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தங்கியிருந்தனர்.

அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பரந்தன் ராஜன் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எஃப். இயக்கத்தைச் சேர்ந்த சிலர் சென்றனர்.

அவர்களைப் புன்னகையுடன் வரவேற்ற மு.ஐ.விடுதலை முன்னணி பிரமுகர்களுக்கு மறுநொடியே அதிர்ச்சி காத்திருந்தது.

வந்தவர்கள் மிரட்டும் தொனியில் பேசினார்கள். “புலிகளுடன் மட்டும்தான் பேச்சு நடத்த வந்தீர்களா?

அப்படியானால் புலிகளிடம் மட்டும்தான் ஆயுதம் இருப்பதாக நினைப்போ? நாங்கள் நினைத்தால் எதையும் செய்வோம். எங்களிடமும் ஆயுதம் இருக்கிறது” என்று எச்சரித்தனர்.

முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஆடிப்போவார்கள் என்று நினைத்து மிரட்டிய ஈ.என்.டி.எல்.எஃப்.பினர் ஏமாந்து போயினர்.

அவர்கள் மிக நிதானமாக “தம்பிமாரே நாங்கள் மிரட்டல்களுக்குப் பயந்தவர்கள் அல்ல. நீங்கள் ஆயுதம் ஏந்தியிருக்கிறீர்கள். ஆனால் நாங்களும் ஆயுதம் ஏந்தினால் ஆயுதம் தர எத்தனை நாடுகள் இருக்கிறது தெரியுமா?” என்று கேட்டனர்.

ஈ.என்.டி.எல்.எஃப். உறுப்பினர்கள்தான் ஆடிப்போனார்கள். வந்த வழியே திரும்பிச்சென்றனர்.

27newsforceதிடீர் தாக்குதல்.

யாழ்ப்பாணம் மல்லாகத்தில் 05.02.88 இல் இந்தியப் படையினர் ரோந்து சென்று கொண்டிருந்தனர். முன்கூட்டியே அவர்களை எதிர்பார்த்துக் காத்திந்த புலிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.

20க்கு மேற்பட்ட இந்தியப் படையினர் கொல்லப்பட்டனர். புலிகள் தரப்பில் இழப்புக்கள் இல்லை.

தாக்குதல் முடித்து புலிகள் சென்ற பின்னர் இந்தியப் படை தம் கோபத்தை மக்கள் மீது திருப்பியது.

அப்பாவி மக்கள் ஏழுபேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 30 வீடுகள் எரியூட்டப்பட்டன.

09.02.88 அன்று மட்டக்களப்பு ஆயித்தியமலையில் நடைபெற்ற சம்பவம் ஒன்று:

புலிகளைத் தேடும் வேட்டையில் பதுங்கி இருந்தனர் இந்தியப் படையினர். யாரோ கொடுத்த தவறான தகவலின்படி அவர்கள் காத்திருந்தனர்.

மினிபஸ் ஒன்று தூரத்தில் வருவதைக் கண்ட இந்தியப் படையினர் புலிகள்தான் அதில் வருவதாகக் கற்பனை செய்தனர்.

மினிபஸ்ஸை நோக்கி மோட்டார் ஷெல் ஏவப்பட்டது. அதன் பின்னால்வந்து கொண்டிருந்த போக்குவரத்து சபை பஸ்சும் சேதமானது. இரண்டு பொதுமக்கள் பலியானார்கள். ஆறுபேர் படுகாயம் அடைந்தனர்.

முல்லை முற்றுகை

1988 மே மாதம் 23ம் திகதி பதினைந்தாயிரம் இந்தியப் படையினர் கனரக வாகனங்கள் சகிதம் முல்லைத்தீவில் ஒரு பாரிய நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

முல்லைத்தீவில் உள்ள அலம்பில் எனும் இடத்திலிருந்து புலிகளின் பிரதான முகாமைச் சுற்றிவளைத்துத் தாக்குவதுதான் திட்டம்.

கனரக வாகனங்களுடன் தரைப்படை நகர, விமானப் படையினரும் தாக்குதலில் ஈடுபட்டனர்.
காடுகளைத் தீயிட்டு அழைப்பதற்காக பெற்றோல் பவுசர்களும் இந்தியப் படையினால் கொண்டு செல்லப்பட்டன.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அலம்பில், நெடுங்கேணி, நாயாறு, கொக்குத் தொடுவாய், தண்ணீரூற்று, வற்றாப்பளை, பட்டிக்குடியிருப்பு, வெடிவைத்தகல், செம்மலை, ஒதியமலை, ஒட்டிசுட்டான், புளியங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புக்கள் இந்தியப் படையினரால் படு மோசமாக் பாதிக்கப்பட்டன.

முன்னேறிய படையினரை காடுகள் சார்ந்த பகுதிகளில் வைத்து புலிகள் எதிர்த்துப் போரிட்டனர்.
இரண்டு வாரங்களாக நடைபெற்ற கடும் சண்டையில் இந்தியப் படையினர் தரப்பில் 45 பேர் வரை பலியாகினர். புலிகள் தரப்பில் மூன்று பேர் மட்டுமே பலியாகினர்.

‘கத்தி எடுத்தால் இரத்தம் காணாமல் உறைக்குள் திரும்பாது’ எனப் பெயரெடுத்த கூர்க்கா படையினர் காடுகளுக்குள் திசை தெரியாமல் தடுமாறிப் புலிகளின் துப்பாக்கிகளுக்கு பலியாகிக்கொண்டிந்தனர்.

(தொடர்ந்து வரும்)

அரசியல் தொடர் எழுதுவது அற்புதன்

“சாவுகள் சரித்திரமாகும்!”

leader194-600x405போர்க்களத்திலிருந்து பிரபா கடிதம்

இந்தியப் படையினர் வன்னியில் பாரிய படையெடுப்பை மேற்கொண்டிருந்த போது காட்டுக்குள் இருந்த பிரபாகரன் தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு எழுதிய உருக்கமான கடிதம் இது.

அண்ணா!

இரத்தமும் கண்ணீரும் படிந்த எமது மக்களின் சோக வரலாறு இன்னும் முடிவின்றித் தொடர்கிறது. சமாதானத்தின் முகமூடியுடன் தமிழீழத்தில் சாவு நர்த்தனமாடுகிறது.

இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு பதிலாக இனப்படுகொலை நடக்கிறது. எமது மக்கள் நெருப்பின் மத்தியில் துவண்டு வாழ்கிறார்கள். நாம் மரணத்தின் விளிம்பில் நின்று எமது இலட்சியப் போரைத் தொடர்ந்து நடத்துகிறோம்.

இந்தப் பெரிய அக்கிரமத்தை முழு நாகரீக உலகமுமே கைகட்டிப் பார்த்து நிற்க – ஈழத்தமிழினத்துக்காக போர்க் கொடி உயர்த்தி நிற்கும் உங்களையும், உங்கள் கழகத்தின் கண்மணிகளையும் உங்கள் பின்னால் மலைபோல அணிதிரண்டு நிற்கும் தமிழக மக்களையும் நாம் உளப்பூர்வமாகப் பாராட்டுகிறோம்.

தமிழனின் வீரமரபுக்கு இலக்கணமாக, தமிழனின் வீரவரலாற்றுச் சின்னத்துடன் எமது இயக்கம் உதித்தது.

இரத்தமும், வியர்வையும் சிந்தி ஒரு கட்டுப்பாடான விடுதலை இயக்கத்தைக் கட்டி எழுப்பி கடந்த பன்னிரண்டு ஆண்டாக நாம் ஆயுதமேந்திப் போராடி வந்தோம்.

இன்று ஆட் தொகையிலும் ஆயத பலத்திலும் எம்மைவிட பலநூறுமடங்கு வல்லமையுடைய மிகப்பெரிய இராணுவ அழுத்தத்தை நாட் ஈழத்தில் எதிர்கொண்டு நிற்கிறோம்.

ஒரு புறம் இந்தியப் படை, மறுபுறம் சிறிலங்கா படை, இன்னொரு புறத்தில் சகோதர கூலிப்படைகள் என்று நாலா புறத்தில் இருந்தும் நாம் வேட்டையாடப்படுகின்றோம்.

நாம் இந்தியாவின் எதிரிகளல்லர். இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைகளுக்கு எதிரானவர்களும் அல்ல.

இனப்படுகொலைக்கு ஆளான ஈழத் தமிழ் மக்களைப் பாதுகாத்து, அவர்களின் விடிவுக்காக உயிரைப் பணயம் வைத்துப் போராடி வந்ததைத் தவிர நாம் இந்தியாவுக்கு எந்தத் துரோகத்தையும் செய்து விடவில்லை.

விடுதலைப் புலிகளை அழித்துவிடுவதால் தமிழ் மக்களின் நலன்கள் எந்தவகையிலும் பேணப்படப்போவதில்லை.

ஒரு மக்கள் சமுதாயத்தின் சுதந்திர தாகத்தை , அவர்களது ஆன்ம எழுச்சியை ஆயுதப் படைகளைக் கொண்டு அடக்கி விட முடியாது. இது மனித வரலாறு காட்டும் உண்மை.

எமது சாவுகள் புதிய சரித்திரமாய் புதிய வேகத்துடன் புத்துயிர்பெறும். புதிய புலிகள் பிறந்து தமிழீழ தாயகத்தின் சுதந்திர தீபத்தை ஏற்றிவைப்பர்.

தமிழீழ மக்களின் ஒரே பாதுகாப்பு அரணான எம்மை ஒழித்துக் கட்டுவதால் எமது மக்களின் எதிர்காலம் பெரும் ஆபத்துக்கே உள்ளாகும்.

ஈழத்தமிழர்களின் பாதுகாப்புக் கவசத்தைக் உடைத்தெறிந்து, அவர்களை நிராயுதபாணிகளாக்கி, இனவாத அரக்கன் முன்பாக பலிக்கடாவாக நிறுத்திவைப்பதுதான் இந்திய அரசின் கொள்கையா? அப்படி என்றால் அது தமிழ் மக்களுக்குச் செய்யப்படும் துரோகம் ஆகாதா?

நீங்கள் மேற்கொள்ளும் போராட்டங்கள் ஈழத்தமிழரின் உரிமைக்குரலாக, சத்தியத்தின் சாட்சியாக அமையட்டும். தமிழ்நாட்டின் எழுச்சி டில்லி ஆட்சியாளர்களின் மனச்சாட்சியை உறுத்தும்”

பிரபாவின் கண்கட்டிவித்தை! : தேடியவர்களும் – தேடப்பட்டவரும்! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை -129)

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.