புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு: மாவை சேனாதிராஜா – சிறிதரனிடம் வாக்குமூலம்!

0
733

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் சூத்திரதாரியான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமாரை காவல்தடுப்பிலிருந்து விடுவித்து உதவிய முன்னாள் சிரேஸ்ட பிரதிப் காவல்துறைமா அதிபர் லலித் ஜெயசிங்கவுக்கு எதிரான வழக்கு தொடர்பில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

மாவிட்டபுரத்திலுள்ள அவரது வீட்டுக்குச் சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர், தற்போது அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடமும் வாக்குமூலமும் பெறப்படவுள்ளது.

அதற்கு அவரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியின் செய்தியாளரிடமும் நேற்றுமாலை வாக்குமூலம் பெறப்பட்டது.

அவரால் எடுக்கப்பட்ட காணொலி ஒன்று தொடரபாகவே அது பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரனிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாக்குமூலம் பெறப்பட்டது.

வாக்குமூலம் பெறப்படும் அனைவரும் வழக்கில் சாட்சிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வரும் இந்த வழக்கில் முன்னாள் சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபர் லலித் ஜெயசிங்க மற்றும் யாழ்பாணம் காவல் நிலையத்தில் பணியாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் ஆகியோர் சந்தேகநபர்களாக உள்ளனர்.

லலித் ஜெயசிங்க இரண்டு மாதங்களின் பின் பிணையில் விடுவிக்கப்பட்டார். எனினும் சிறிகஜன் கைது செய்யப்படவில்லை.

அவர் தலைமறைவாகிவிட்டார் என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.

அதனால் சிறிகஜனுக்கு பகிரங்கப் பிடியாணை நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.