12 ராசிகளுக்கானசனிப்பெயர்ச்சி பலன்கள்- 2017

0
4839

2017-ம் ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை  ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் அவர்கள் 12 ராசிகளுக்கான பலன்களை நமக்கு கணித்து வழங்கியுள்ளார்.

இந்த ஹேவிளம்பி ஆண்டு தட்சிணாயன புண்ணிய காலத்தில் சரத் ருது, ஐப்பசி மாதம் 9 ஆம் தேதி (26-10-2017) வியாழக்கிழமை, சுக்லபட்ச (வளர்பிறை) சப்தமி, பூராடம் நட்சத்திரம், சுக நாம யோகம், கரஜை கரணம் நேத்திரம் 1, ஜீவன் 1/2, சூரியபகவான் ஹோரையில் பிற்பகல் மணி 3.23 ஐ.எஸ்.டி. அளவில் சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

இங்கு, 23.1.2020 வரை சஞ்சரித்துவிட்டு 24-01-2020 அன்று காலை மணி 9.55 ஐ.எஸ்.டி. மணி அளவில் சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

இந்த காலகட்டத்தில் 11-10-2018 அன்று இரவு மாலை 07.20 ஐ.எஸ்.டி. மணி அளவில் குருபகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

மேலும் 5-11-2019 அன்று காலை மணி 5.20 ஐ.எஸ்.டி மணி அளவில் குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

ராகு- கேது பகவான்கள் 23.3.2019 அன்று மாலை மணி 4.14 ஐ.எஸ்.டி. அளவில் கடக, மகர ராசிகளிலிருந்து மிதுன, தனுசு ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள்.

இந்த சனிப்பெயர்ச்சி பலன்கள் 11-10-2018 வரை ஒரு பகுதியாகவும் 23-01-2020 வரை மற்றொரு பகுதியாகவும் (குருபகவானின் சஞ்சாரத்தைக் கருத்தில் கொண்டு) எழுதப்பட்டுள்ளது.

***

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

26-10-2017 முதல் 11-10-2018 வரை உள்ள காலகட்டத்தில் அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும். உங்கள் முயற்சிகளை நூதன முறையில் செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள்.

அதாவது, “மாத்தியோசி’ என்பார்களே! அப்படி சிந்திப்பீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் தானாகவே நடந்தேறிவிடும். உங்கள் நீண்டகால எண்ணங்களும் நிறைவேறும்.

சங்கோஜங்களைத் தவிர்த்து அனைவரிடமும் சகஜமாகப் பழகுவீர்கள். இழுபறியான விஷயங்களும் முடிவுக்கு வரும். விலகிச் சென்ற நண்பர்களும் திரும்பி வந்து உங்களுக்கு நட்புக்கரம் நீட்டுவார்கள்.

செய்தொழிலில் புதிய மாற்றங்களை இயல்பாகச் சுலபமாகக் கொண்டு வருவீர்கள். உடன்பிறந்தோரின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவீர்கள்.

பொருளாதாரம் நிறைவாக இருக்கும். அதைரியங்கள் நீங்கி தைரியம் கூடும். குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள்.

அவர்களை படிப்புக்காக வெளியூர், வெளிநாடுகளுக்கு அனுப்புவீர்கள். குடும்பத்துடன் சிறிய சுற்றுலா சென்று வருவீர்கள். வீட்டிலும் வெளியிலும் உங்கள் கௌரவம் அந்தஸ்து இரண்டும் உயர்ந்து காணப்படும் காலகட்டமாக இது அமைகிறது.

12-10-2018 முதல் 23-01-2010 வரை உள்ள காலகட்டத்தில் சனிபகவானின் அருளால் உங்களின் விடாமுயற்சிக்குரிய பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டாகும்.

செய்தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகள் விலகி முன்னேற்றங்களைக் காண்பீர்கள். கண்ணியத்துடன் பேசுவீர்கள்.

புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொதுக்காரியங்களில் தன்னலம் பாராட்டாமல் ஈடுபடுவீர்கள். சிலர் விலை உயர்ந்த வீட்டுப்பிராணிகளை வாங்குவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்பட யோகா, பிராணாயாமம் செய்வீர்கள்.

அரசாங்கத்திற்கு நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை குறித்த நேரத்தில் சமர்ப்பிக்கவும். தீயவர்களை இனம் கண்டு ஒதுக்குவீர்கள்.

பிறர் தயவுடன் நீங்கள் செய்து வந்த செயல்களைத் தன்னிச்சையாக முடிக்கக்கூடிய நிலைமைகள் உருவாகும். எவருக்கும் வாக்குக்கொடுப்பதோ முன்ஜாமீன் போடுவதோ கூடாது.

R1பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த வில்லங்கங்கள் விவகாரமின்றி தீர்ந்துவிடும். மனதை அரித்து வந்த பிரச்னைகளும் தானாகவே தீர்ந்துவிடும். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது உங்கள் பழைய அனுபவங்கள் கைகொடுக்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக ரீதியான பயிற்சிகளை மேற்கொள்வார்கள். பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள்.

சிலருக்கு வெளியூருக்கு மாற்றல் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிட்டும். இருப்பினும் அலுவலக வேலைகளைத் திட்டமிட்டு குறித்த நேரத்திற்குள் முடிக்கவும்.

உங்களின் தன்னம்பிக்கை பளிச்சிடும் காலகட்டமாக இது அமைகிறது. வியாபாரிகளுக்கு தேவையான பணப்புழக்கம் இருந்து கொண்டிருக்கும். சாதுர்யமாகச் செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். போட்டிகளைத் திறம்பட சமாளிப்பீர்கள்.

கொடுக்கல் வாங்கல் விஷயங்களும் சீராகவே முடிவடையும். சிறிய அளவில் முதலீடுகளைச் செய்யலாம்.

முக்கிய முடிவுகள் எடுக்கும் நேரத்தில் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்து எடுக்கவும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும்.

சரியான நேரத்தில் பொருள்களைச் சந்தைக்கு எடுத்து சென்று நல்லவிலைக்கு விற்பீர்கள். வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். விவசாயத் தொழிலாளர்களையும் அரவணைத்துச் செல்வீர்கள்.

அரசியல்வாதிகள் கவனமாகப் பணியாற்றுவார்கள். கட்சி மேலிடம் கடமைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவார்கள்.

தன்னிச்சையாக எந்த ஒரு முடிவையும் இந்த காலகட்டத்தில் எடுக்க வேண்டாம். கலைத்துறையினர் நல்ல பலன்களைக் காண்பார்கள். நிபந்தனைகளை நன்கு படித்து பரிசீலித்த பிறகே புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும்.

பெண்மணிகளுக்கு இந்த காலகட்டத்தில் கணவருடனான ஒற்றுமை சீராகவே தொடரும். உற்றார் உறவினர்களை நண்பர்களை அனுசரித்துச் செல்வீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். எனினும் எவரிடமும் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை.

மாணவமணிகள் கடுமையாக உழைத்து அதற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். ஞாபக சக்தி அதிகரிக்கும். யோகா, பிராணாயாமம் செய்வீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: ஐயப்பனை வழிபட்டு வரவும்.

***

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

26-10-2017 முதல் 11-10-2018 வரை உள்ள காலகட்டத்தில் பணவரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் மதிப்பு மரியாதை சீரடையும். கடந்த கால நஷ்டங்கள் வேறு ரூபத்தில் வரவாக வரும். ஸ்பெகுலேஷன் துறையின் மூலம் சிறு லாபத்தைக் காண்பீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

மற்றையோருக்குத் தக்க அறிவுரைகளையும் வழங்குவீர்கள். ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள்.

புனித யாத்திரை சென்று வரும் பாக்கியமும் சிலருக்கு அமையும். போதும் என்ற மனம் அனைத்து விஷயங்களிலும் உண்டாகும். செய்தொழிலில் அதிகாரம் கூடப் பெறுவீர்கள். உழைப்பு கூடினாலும் அதற்கேற்ற வருமானம் கிடைக்கும்.

பழைய கடன்களையும் அடைப்பீர்கள். பகைவர்களால் தொல்லைகள் எதுவும் ஏற்படாது. புதிய வழக்குளும் ஏற்படாது. ஆலயத் திருப்பணிகளுக்கும் தர்மகாரியங்களுக்கும் செலவிடுவீர்கள்.

வயிறு சம்பந்தபட்ட உபாதைகள் சிலருக்கு உண்டாகலாம். அதனால் சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ளுங்கள். கொடுத்தவாக்கை எப்பாடுபட்டாகிலும் காப்பாற்றி விடும் காலகட்டமாக இது அமைகிறது.

12-10-2018 முதல் 23-01-2010 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் எதிர்பார்த்த உயர்வைக் காண்பீர்கள். அரசாங்க வழியில் உதவிகளைப் பெறுவீர்கள்.

வாராக்கடன் என்று நினைத்திருந்த கடன் திரும்பக் கிடைத்து உங்களைத் திக்குமுக்காடச் செய்யும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும்.

புது வீடு வாங்கி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். சொந்த சம்பாத்தியம் உயரும். போட்டியாளர்களின் எதிர்ப்புகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். சமூகத்தில் உங்கள் பெயர் செல்வாக்கு உயரும். புதிய வாய்ப்புகளால் சிறப்பான வளர்ச்சியை அடைவீர்கள்.

R2சிறிது கடன் வாங்கியாவது செய்தொழிலை மேம்படுத்துவீர்கள். பெற்றோர்களின் ஆதரவும் அரவணைப்பும் கிடைக்கும். மனம் சிறிது அலைபாயும். மேலும் அவசியமேற்பட்டாலன்றி பிரயாணங்களைத் தவிர்த்து விடவும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை முழுமையாகச் செய்து முடிக்க எடுக்கும் முயற்சியில் தடங்கல்களைக் காண்பார்கள்.

சக ஊழியர்களும் மறைமுக எதிர்ப்பைக் காட்டுவார்கள். மேலதிகாரிகள் உங்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள், அதனால் அவர்களின் ஆதரவு தொடரும். மேலும் வேலைப்பளு கூடுமாகையால் வேலைகளைப் பட்டியலிட்டுச் செய்து முடிக்கவும்.

பணவரவுக்கு எந்தக் குறையும் உண்டாகாது. வியாபாரிகள் புதிய யுக்திகளைப் புகுத்தி வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள். கூட்டாளிகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் நல்ல பலனளிக்கும். புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவினால் நல்ல வருமானத்தைக் காண்பீர்கள்.

விவசாயிகளுக்கு இது சாதகமான காலகட்டமாக அமைகிறது. அமோக விளைச்சலால் லாபத்தை அள்ளுவீர்கள். கால்நடைகளை வைத்திருப்போர் அதனாலும் பயன் பெறுவார்கள். புதிய குத்தகைகளை சற்று தள்ளிப் போடவும்.

அரசியல்வாதிகள் சமூகத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். உங்களின் பணியாற்றும் திறன் கண்டு கட்சி மேலிடம் பாராட்டும்.

இதனால் கட்சியிலும் சிறப்பான பதவிகளைப் பெறுவீர்கள். தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.

எடுத்த காரியங்கள் அனைத்தையும் நல்லபடி முடிப்பீர்கள். கலைத்துறையினர் கடமைகளைச் சரிவர ஆற்றி நற்பெயர் எடுப்பார்கள். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து உதவிகள் கிடைக்கத் தாமதமாகும். புதிய ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதில் சிறு முட்டுக்கட்டைகள் உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்குமென்றாலும் சிக்கனமாக இருக்க வேண்டிய காலகட்டமாக இது அமைகிறது.

பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். கணவருடனான ஒற்றுமை நன்றாகவே இருக்கும். தெய்வபலத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். தேக ஆரோக்கியமும் சீராகவே தொடரும். உடன்பிறந்தோர் வகையில் சிறு மனக்கசப்பு ஏற்பட்டு விலகும்.

எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். மாணவமணிகள் நண்பர்களின் ஆதரவைப் பெறுவார்கள். பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் நற்பெயர் எடுப்பார்கள். கவனம் சிதறாமல் படிப்பில் நாட்டம் ஏற்படும். இறைபக்தியை வளர்த்துக்கொண்டு ஆத்ம சக்தியை மேம்படுத்திக் கொள்ளவும்.

பரிகாரம்: ஸ்ரீ ராமபிரானை வழிபட்டு வரவும்.

***

மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

26-10-2017 முதல் 11-10-2018 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பப் பொறுப்புகளை ஏற்று வெற்றிகரமாக நடத்துவீர்கள்.

வீட்டிலும் வெளியிலும் உங்கள் செல்வாக்கு உயரக்காண்பீர்கள். உங்களின் குரல் கணீரென்று ஒலிக்கும். எதிர்பாராமல் காரியங்கள் மடமடவென்று நடந்தேறும்.

திடீர் சொத்து சேர்க்கையும் உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உண்டாகும். புதிய பொறுப்புகளும் தேடிவரும். இருக்கும் வாய்ப்புகளும் கை நழுவிப் போகாமல் பார்த்துக் கொள்வீர்கள். செய்தொழிலில் குடும்பத்தில் பணப்பற்றாக்குறை வராது. குறுக்கு வழிகளிலும் பணம் கைவந்து சேரும். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.

எதிரிகள் தலைதூக்கினாலும் தலையில் தட்டி உட்கார வைத்துவிடுவீர்கள். உடல்நலமும் சிறப்பாக இருக்கும்.

அவ்வப்போது உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிடுவீர்கள். அதனால் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துப் பேசவும். அரசு விவகாரங்களில் அவசரப்படாமல் நிதானப்போக்கைக் கடைப்பிடிக்கவும். சிலர் வீடு மாற்றம் செய்வார்கள்.

மனதிற்குப்பிடித்த சந்தர்ப்பம் கிடைக்கும்வரை பொறுமை காக்கவும். உங்களுக்குக் கீழ் வேலைசெய்பவர்களின் கஷ்டங்களைப் புரிந்து கொண்டு அவர்களுக்காகச் சிறிது செலவு செய்து உதவுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளையும் இந்த காலகட்டத்தில் நிறைவேற்றுவீர்கள்.

12-10-2018 முதல் 23-01-2020 வரை உள்ள காலகட்டத்தில் நீங்கள்சற்று கூடுதலாக முயற்சித்து இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்துவீர்கள்.

உங்களுக்கு இடைஞ்சல் செய்பவர்களை சமயம் பார்த்து ஒதுக்கி விடுவீர்கள். புதிய ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். அதேநேரம் அனாவசியச் செலவு செய்யாமல் சேமிப்புகளில் கவனமாக இருக்கவும்.

பிள்ளைகளும் சிறப்பாக வெற்றி பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மன உளைச்சல்களிலிருந்தும் விடுபடுவீர்கள். திடீரென்று ஒரு புதிய நட்பு கிடைத்து அவரால் ஒரு நன்மை உண்டாகும்.

R3புதிய வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். மந்தமாக நடந்துவந்த காரியங்கள் துரிதமாக நடக்கத் தொடங்கும். தர்மகாரியங்களைச் செய்து மகிழ்ச்சியடைவீர்கள். உங்களின் தெய்வபலம் அதிகரிக்கும். பெற்றோர்களுக்கும் மருத்துவச் செலவுகள் குறையும். உடன்பிறந்தோர் அன்பு பாசத்துடன் பழகுவார்கள். மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு நடப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளைக் குறித்த காலத்திற்குள் முடித்து நற்பெயரெடுப்பீர்கள். மேலும் வேலைகளைப் புரிந்து கொண்டு அவற்றை மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும் ஆற்றலையும் பெறுவீர்கள்.

இதனால் அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பதவி உயர்வு தேடிவரும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் லாபத்தைப் பார்ப்பார்கள். கூட்டாளிகளையும் அரவணைத்துச் செல்வீர்கள். பழைய கடன்களும் இந்த காலகட்டத்தில் வசூலாகும். மிடுக்காக காரியமாற்றுவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும்.

விவசாயப் பணிகளில் சிறு இடையூறுகள் ஏற்பட்டாலும் அவை தானாகவே விலகிவிடும். உபரி வருமானத்தைப் பெருக்க காய்கனிகளையும் பயிரிடுவீர்கள். கால்நடைகளையும் நல்ல முறையில் பராமரிப்பீர்கள். புதிய விவசாய உபகரணங்களையும் வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்திலுள்ளவர்களின் நட்பு கிடைக்கும். மாற்றுக்கட்சியினருக்கும் உதவி செய்து மகிழ்வீர்கள்.

கட்சிப்பணிகளில் தொய்வில்லாமல் செயலாற்றுவீர்கள். தொண்டர்களையும் அரவணைத்துச் செல்வீர்கள். கலைத்துறையினரின் விடாமுயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தேடித்தரும்.

உங்களின் திறமைகளை முழுமையாகச் செயல்படுத்தி மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். உங்களின் நல்ல பெயரைக் காப்பாற்றிக்கொள்ள கவனத்துடனும் திறமையுடனும் பணியாற்ற வேண்டிய காலகட்டமாக இது அமைகிறது.

பெண்மணிகள் குடும்பத்தாரிடம் அனுசரித்து நடந்துகொள்வார்கள். முக்கியமான முடிவுகள் எடுக்கும்போது அனைவரையும் ஆலோசித்து எடுக்கவும். ஆடம்பரச்செலவுகள் எதையும் செய்ய வேண்டாம். சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்தவும். பேசும்போது உஷ்ணமான வார்த்தைகளைப் பேச வேண்டாம். மாணவமணிகள் நன்றாக படித்து சிறப்பான மதிப்பெண்களை அள்ளுவார்கள். வெளியூர் சென்று கல்வி கற்க சிலருக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

***

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

26-10-2017 முதல் 11-10-2018 வரை உள்ள காலகட்டத்தில் எடுத்த காரியங்களை சிரமமின்றி முடித்துவிடுவீர்கள்.

பெரியோர்களின் நட்பும் ஆசியும் உங்களுக்கு உந்து சக்தியாக அமையும். உடலிலிருந்த நோய் நொடி உபாதைகள் ஒவ்வொன்றாத மறையும்.

குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் குறையும். உங்களின் செயல்திறன் கூடும். தன்னம்பிக்கை உயரும். உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். அனைவரும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். ஆன்மிகத்திலும் ஈடுபாடு அதிகரிக்கும். இல்லத்தில் அமைதி நிலவும். திருமணம் போன்ற சுப காரியங்களும் நடக்கக் காண்பீர்கள்.

குழந்தைகள் வழியில் சில சஞ்சலங்கள் தோன்றி மறையும். அவசர முடிவுகளால் சிறு பண விரயங்களும் உண்டாகும்.

சிலருக்கு இருக்கும் வீட்டைப் பராமரிக்கும் செலவுகளும் உண்டாகும். எவ்வளவு சிக்கலான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டாலும் பெரிய பாதிப்பு இல்லாமல் வெளியில் வந்து விடுவீர்கள்.

மேலும் எவருக்கும் இந்த காலகட்டத்தில் வாக்கு கொடுக்க வேண்டாம். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களின் தவறுகளையும் பெரிது படுத்த வேண்டாம். வெளியூர் வெளிநாட்டுத்தொடர்புகள் ஆக்கம் தரும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

12-10-2018 முதல் 23-01-2020 வரை உள்ள காலகட்டத்தில் பணப்புழக்கம் நிறைவாக இருக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள்.

திடீர் பணப்புழக்கம் நிறைவாக இருக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் தேடிவரும்.

உங்களின் முயற்சிகள் துரிதமாக வெற்றியடையும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். உற்றார் உறவினர்களுடன் சுமுகமாகப் பழகி வர, உங்கள் பழைய மனத்தாங்கல்கள் நீங்கிவிடும்.

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு புதிய இல்லங்களுக்கு மாறும் யோகம் உண்டாகும். சமூகத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள்.

பெரிய செல்வந்தர்களின் நட்பு கிடைக்கும். அவர்களின் செல்வாக்கை உங்கள் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்வீர்கள். செய்தொழில் மூலமாக சென்று வந்த பயணங்களால் லாபம் அதிகரிக்கும். பங்குவர்த்தகம் மூலமும் உபரி வருமானம் கிடைக்கும் காலகட்டமாக இகு அமைகிறது என்றால் மிகையாகாது.

N4உத்தியோகஸ்தர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் பிரச்னைகள் குறையும். உங்கள் மனதில் இருந்த குழப்பங்கள் மறைந்து தெளிவு பிறக்கும். பொருளாதாரம் முன்னேற்றமாக இருக்கும்.

உங்கள் வேலைகளை திட்டமிட்டதுபோல் சரியாக செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளும் மனக்கசப்பு நீங்கி பரிவுடன் நடந்து கொள்வார்கள். மனதில் இருந்த சலிப்புகள் நீங்கி சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள்.

வியாபாரிகள் கடுமையாக உழைத்து அதற்கேற்ற பலன்களைப் பெறுவார்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக முடியும். உங்களின் தன்னம்பிக்கை உயரும். தெளிந்த மனதுடன் உங்கள் செயல்களைச் செய்வீர்கள். கூட்டாளிகளின் சூழ்ச்சிக்கு ஆளாக நேரிடலாம்.

விவசாயிகளுக்கு விளைச்சல் சற்று மந்தமாக இருந்தாலும் வருமானத்திற்குக் குறைவு இருக்காது.

பழைய குத்தகை மூலம் வருமானம் கிடைக்கும். புதிய குத்தகைகளும் தானாகவே தேடாமலேயே கிடைக்கும். கால்நடைகள் மூலமும் எதிர்பார்த்த நன்மைகள் பெறலாம். வருங்காலக் கனவுகள் பலிப்பதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் முக்கிய பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பார்கள். அனைத்துச் செயல்களையும் ஒருமுறைக்கு இருமுறை தீர ஆலோசித்து செயல்படுத்துவீர்கள். கட்சியில் மூத்தவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பீர்கள். கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது கவனமாக இருக்கவும். எவருக்கும் அனைவசியமாக வாக்கு கொடுக்க வேண்டாம்.

கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். வருமானமும் பெருகும். சமூகத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைத்து அவர்கள் மூலம் புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள்.

பெண்மணிகள் கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டு தங்களின் காரியங்களைச் சாதித்துக்கொள்வார்கள். குடும்பத்தில் ஏற்படும் சிறிய சண்டை சச்சரவுகளை பெரிதுபடுத்த மாட்டீர்கள். குழந்தைகளின் சிறு தவறுகளையும் கண்டு கொள்ளமாட்டீர்கள். அவர்களை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். குடும்பத்தினருடன் ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள்.

மாணவமணிகள் அவசரப்படாமல் நிதானமாகப் பணியாறறுவார்கள். ஆசிரியர்களின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் கைகொடுக்கும்.

பரிகாரம்: துர்க்கையை வழிபட்டு வரவும்.

***

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

26-10-2017 முதல் 11-10-2018 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கும் சேவை செய்வீர்கள்.

பொருளாதாரம் மேன்மையடையும். உடன் இருந்த நண்பர்களால் ஏமாற்றப்பட்ட நீங்கள் அவர்களைப் புரிந்துகொண்டு விலகி விடுவீர்கள். பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடு பட்டாவது காப்பாற்றி விடுவீர்கள்.

செய்தொழிலில் புதிய நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். இல்லத்தில் தடைப்பட்டிருந்த திருமணம் கைகூடும். குழந்தை இல்லாத குடும்பத்தில் குழந்தைகள் பிறக்கும்.

குடும்பத் துணைவருக்கு நெடுநாளாக இருந்து வந்த உடல் உபாதைகள் மறையும். முன்காலத்தில் இழந்த பொருள்களும் திரும்ப கைவந்து சேரும். உடல்நலம் சிறப்பாக அமையும். தேக ஆரோக்கியம் மேம்பட தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். வழக்குகளிலும் சாதகமான திருப்பங்கள் ஏற்படும் காலகட்டமாக இது அமைகிறது.

N512-10-2018 முதல் 23-01-2020 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் பூர்த்தியாகும். பொதுச்சேவையில் மனதைச் செலுத்துவீர்கள். பொருளாதார சுபிட்சம் உண்டாகும்.

குழந்தைகள் வழியில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். அவர்களின் உயர்படிப்புக்காக அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள்.

அதேநேரம் பூர்வீகச் சொத்துக்களுக்குச் சிறிது செலவு செய்வீர்கள். பெற்றோர்களுக்கும் சிறிது மருத்துவச் செலவுகள் ஏற்படும். மற்றபடி திருமணம் போன்ற சுபகாரியங்களில் இருந்து வந்த தடை விலகிவிடும்.

புதிய தொழில்களை வெளியூரிலும் ஆரம்பிப்பீர்கள். போட்டி பந்தயங்களிலும் வெற்றி பெறுவீர்கள். குருட்டு அதிர்ஷ்டம் என்பார்களே அது உங்களை இந்த காலகட்டத்தில் தேடிவரும் என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் அலுவலக வேலைகளில் பளு குறைந்து காணப்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு இரண்டும் தக்க நேரத்தில் கிடைக்கும். வாகனக்கடன், வீடு வாங்கக் கடன் போன்றவைகள் கிடைக்கும்.

மனமகிழ்ச்சியளிக்கும் வெளியூர் பயணங்களைச் செய்வீர்கள். அலுவலகத்தில் மிடுக்காக வலம் வருவீர்கள். இந்த காலகட்டத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.

வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் உழைத்து இரண்டு மடங்கு லாபத்தைக் காண்பார்கள். வரவு செலவு கணக்குகளைச் சரியாக வைத்துக்கொண்டு அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பீர்கள்.

பல இடங்களுக்குச் சென்று வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கூட்டாளிகளுடன் சேர்ந்து புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். சிலருக்கு ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புகள் கிடைக்கும். விவசாயிகளுக்கு மகசூல் பெருகும்.

கொள்முதல் லாபம் அதிகரிக்கும். கால்நடைகளாலும் லாபங்கள் உண்டாகும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். புதிய நிலங்கள் குத்தகைக்கு வந்து சேரும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். சோதனைகள் மறையும். கட்சியில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். கட்சியின் கட்டளைகளை தீவிரமாக நிறைவேற்றி நல்ல பெயரெடுப்பீர்கள். எதிரிகளை சாதுர்யமாகப் பேசி எதிர்கொள்வீர்கள்.

புதிய பயணங்களைச் செய்து புகழும் வருமானமும் பெறும் காலகட்டமாகும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். செல்வமும் புகழும் சேரும். புதிய ஒப்பந்தங்களும் நாடி வந்து சேரும். கடினமாக உழைத்து உங்களின் நிலையை தக்கவைத்துக்கொள்வீர்கள்.

பெண்மணிகள் இந்த காலகட்டத்தில் ஏற்றங்களையும் மாற்றங்களையும் பார்ப்பீர்கள். வருமானம் சீராக இருக்கும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உடன்பிறந்தோரும் சாதகமாக இருப்பார்கள்.

இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களையும் வாங்குவீர்கள். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்துவர். தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். விளையாட்டுகளிலும் ஈடுபட்டு உற்சாகமடைவீர்கள்.

பரிகாரம்: அனுமனை வழிபட்டு வரவும்.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

26-10-2017 முதல் 11-10-2018 வரை உள்ள காலகட்டத்தில்  அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருந்து செயலாற்றுவீர்கள். மனதில் இருந்த கவலைகள் குறையும். உங்கள் பேச்சில் உறுதி இருக்கும். முகத்தில் பொலிவும் வசீகரமும் கூடும். பிரிந்திருந்த உறவினர்கள் மறுபடியும் குடும்பத்தில் இணைவார்கள். பொருளாதாரமும் செழிக்கும். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

சிலருக்கு விருதுபெறும் யோகமும் உண்டாகும். வழக்கு வியாஜ்யங்கள் சாதகமாக தீர்ப்பாகும். புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள்.

சம்பந்தமில்லாத விஷயங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். மற்றபடி சோதனைகளைச் சாதனைகளாக மாற்றிக் கொள்வீர்கள். போட்டியாளர்களை கவனமாகக் கையாளவும்.

நண்பர்கள் உங்களுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற மாட்டார்கள். இருந்தாலும் “கொக்குக்கு ஒன்றே மதி’ என்கிற ரீதியில் கருத்தாகப் பணியாற்றுவீர்கள்.

சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதைகள் குறையாது. கடினமாக உழைத்து கனவுகளை நனவாக்கிக் கொள்வீர்கள். தத்துவத்திலும் இலக்கியத்திலும் ஈடுபாடு உண்டாகும். சிறிய தூரப்பயணங்களால் நன்மைகள் கிடைக்கும்.

12-10-2018 முதல் 23-01-2020 வரை உள்ள காலகட்டத்தில் முரண்பாடாக நடந்துகொண்டிருந்த நண்பர்கள் இணக்கமாக மாறுவார்கள்.

உங்கள் வேலைகளைத் திட்டமிட்டுச் சரியாகச் செய்து முடித்து விடுவீர்கள். புதிய நண்பர்களும் கிடைப்பார்கள். புரியாத புதிர்களுக்கு விடை கிடைக்கும். மனதில் தெம்பு கூடும்.

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நல்லது நடக்குமா என்று ஏங்கிக்கொண்டிருந்த நீங்கள் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். குடும்பத்தில் அனாவசியச் செலவுகள் ஏற்படாமல் சிக்கனமாக இருப்பீர்கள்.

மறைமுக எதிர்ப்புகளும் குறையும். புதிய தொழில் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். தேவைக்கேற்ப வருமானம் கிடைக்கும். சரியான நேரத்தில் ஓய்வெடுப்பீர்கள். குடும்பத்துடன் வெளியூர் சென்று மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கும் காலகட்டமாக இது அமைகிறது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சிறப்பாக முடிவடையும். எதிர்பார்த்த வருமானம் உயர்வு கிட்டும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.

அவர்களின் வேலைகளிலும் நீங்கள் பங்கு கொள்வீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பார்கள்.

கூட்டாளிகளிடம் நற்பெயர் வாங்குவீர்கள். போட்டிகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகும். தானிய விற்பனை நல்ல முறையில் நடக்கும். இதனால் சிறப்பான லாபத்தைப் பார்ப்பீர்கள்.

அரசியல்வாதிகளின் முயற்சிகள் சிறப்பாக வெற்றியடையும். மேலும் உங்கள் கடமைகளில் சிரத்தையாக இருப்பீர்கள். கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது கவனமாக இருப்பீர்கள். எதிர்கட்சியினரும் உங்களுக்குச் தேவையான ஒத்துழைப்பை நல்குவார்கள். தொலைதூரத்திலிருந்து  சாதகமான செய்தி ஒன்று வந்து சேரும் காலகட்டமாக இது அமைகிறது.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் முயற்சிகள் அனைத்தும் உங்களை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும்.

நண்பர்கள் உங்களுக்கு புதிய வாய்ப்புகளைத் தேடித்தருவார்கள். உங்கள் உழைப்பைக் கூட்டிக்கொண்டு அனைத்து வேலைகளையும் திறம்படச் செய்து முடிப்பீர்கள். சிறப்பு விருந்தினர் என்கிற அந்தஸ்து கிடைத்து உங்கள் கௌரவம் உயரும்.

பெண்மணிகள் ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள். பேச்சில் பொறுப்புடனும் நிதானத்துடனும் இருப்பீர்கள். பொருளாதார நிலை மேம்படும்.

கணவருடனும் விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். புத்திர பாக்கியம் இல்லாதோருக்கு இந்த காலகட்டத்தில் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

மாணவமணிகளின் புத்தி கூர்மை பளிச்சிடும். நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்களும் பெற்றோரும் உங்களிடம் இணக்கமாக இருப்பார்கள். யோகா பிராணாயாமம் போன்றவற்றைச் செய்து உடல் நலம் மனவளம் இரண்டையும் மேம்படுத்திக் கொள்வீர்கள்.

பரிகாரம்: அம்பாள் தரிசனம் உகந்தது.

***
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

26-10-2017 முதல் 11-10-2018 வரை உள்ள காலகட்டத்தில்  வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். கடினமாக உழைத்து ஆதாயங்களைப் பெறுவீர்கள். பழைய கடன்களையும் திருப்பி அடைத்து விடுவீர்கள்.

ஆன்மிகத்தில் தெய்வ வழிபாட்டிலும் நாட்டம் செலுத்துவீர்கள். உயர்ந்தோர்களின் நட்பு கிடைத்து சமுதாயத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும்.

தன்னம்பிக்கையுடன் உலா வருவீர்கள். உங்களுக்கு எதிராகப் போடப்பட்டிருந்த வழக்குகளும் தோற்றுவிடும். அரசு அதிகாரிகளிடமும் உங்களின் தொடர்பு நல்ல முறையில் இருக்கும்.

 குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். மேலும் குடும்பத்தில் மழலைப் பாக்கியங்கள் உண்டாகும். உங்களிடமிருந்து விலகிய முன்னாள் நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். அதிக  ஆசைப்பட்டு ஸ்பெகுலேஷன் துறைகளில் அகலக்கால் வைக்க வேண்டாம்.  தேவைகள் நல்லபடியாக பூர்த்தியாகும்.

12-10-2018 முதல் 23-01-2020 வரை உள்ள காலகட்டத்தில் நீங்கள் நினைத்த காரியங்களை சாதித்து விடுவீர்கள். உங்கள் கையில் எக்கச்சக்கமாகப் பணம் புரளும். செய்தொழிலில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.

குடும்பத்துடன் விருந்து கேளிக்கைகளுக்குச் சென்று வருவீர்கள். புதிய ஆலயங்களுக்கும் சென்று வழிபாடு நடத்துவீர்கள். உடன்பிறந்தோரும் அனுசரணையாக இருப்பார்கள்.

சிலருக்கு வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.  புதிய முயற்சிகளில் இறங்கும் முன் ஆராய்ந்து ஈடுபடுவீர்கள். முன்வைத்த காலை பின் வைக்கமாட்டீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் புகழ் செல்வாக்கு உயரும்.

உடல் ஆரோக்கியமும் சிறப்பாக அமையும். யோகா பிராணாயாமம் கற்பீர்கள்.  உங்களின் சாந்தகுணம் உங்களைப் பெருமைப் படுத்தும். அமைதியாகவும் டென்ஷன் இல்லாமலும் இருக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றத் தொடங்குவார்கள்.

அலுவலகத்தில் சகஜமான சூழ்நிலையை காண்பீர்கள். தலைநிமிர்ந்து நடந்து தன்னம்பிக்கையுடன் உலாவரும் காலகட்டமிது என்றால் மிகையாகாது. வியாபாரிகள் புதிய ரகசியங்களைக் கற்றுக்கொள்வார்கள். புதிதாக வேறு தொழில் தொடங்குவீர்கள். கூட்டாளிகளுடன் இணக்கமாக நடந்து கொள்வீர்கள். வீண் ஆசாபாசங்களை வளர்த்துக்கொள்ள வேண்டாம். கூடுமானவரை பொருள்களை ரொக்கத்திற்கே விற்பீர்கள்.

விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பார்கள். கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை செலுத்துவார்கள். வங்கியில் கடன் வாங்கி புதிய பயிர்களையும் பயிரிடுவீர்கள். எதிர்பார்த்த வருமானத்தையும் காண்பீர்கள். பயிர்களில் பூச்சிகள் பாதிப்பு ஏற்படாததால் இந்த வகையில் எந்த செயலும் ஏற்படாது காக்கப்படுவீர்கள்.

அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பார்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவார்கள்.

இதனால் புதிய பதவிகள் உங்களைத் தேடிவரும். எதிரிகளும் உங்களிடம் அடங்கி நடப்பார்கள், மக்களின் ஆதரவு உங்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். உங்களின் முகத்தில் மலர்ச்சியும் பொலிவும் காணப்படும். சில குறிப்பிடத்தக்க சாதனைகளையும் செய்வீர்கள். சிறிய வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேறுவீர்கள்.

பெண்மணிகளுக்கு கணவருடன் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். பொறுப்புகளைச் சரியான முறையில் நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தோருக்கு இடையே  நிலவி வந்த பிணக்குகளும் நீங்கும். தெய்வ வழிபாட்டைக் கூட்டிக் கொள்வீர்கள். மாணவமணிகள் கல்வி  உயர்வுக்குக்காக எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும். சிலருக்கு கல்வி கற்பதற்கான இடமாற்றமும் ஏற்படும். பெற்றோரிடம் கிடைக்கும் ஆதரவு உங்களை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்லும்.

பரிகாரம்: மஹாலட்சுமியை வழிபட்டு வரவும்.

***

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

26-10-2017 முதல் 11-10-2018 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். எதிர்பாராத அளவுக்கு அபிவிருத்தியைக் காண்பீர்கள், முக்கியமான வழக்குகளில் சாதகமான தீர்ப்பு  கிடைக்கும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் செல்வாக்கு படிப்படியாக உயரும். திருமணமாகி புத்திரபாக்கியத்திற்கு ஏங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும்.

உணவையும் உடற்பயிற்சியையும் சரியாக எடுத்தும் செய்தும் வருவீர்கள். மனக் கவலைகளிலிருந்து மீள, தியானம், பிராணாயாமம் செய்து உற்சாகமாக இருப்பீர்கள்.

குலதெய்வ பூஜையும் செய்து குலதெய்வத்தின் அனுக்கிரகத்தையும் தேடிக்கொள்வீர்கள். பெரியோர்களின் நட்பு தேடாமலேயே கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி ஒன்று உங்களைத் தேடி வந்து உங்களை திக்குமுக்காடச் செய்யும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். அசையாச் சொத்துக்கள் வாங்க, கடன் வாங்க நேரிடும். மறைமுக எதிரிகளையும் புறம்பேசுபவர்களையும் இனம் கண்டு ஒதுக்கி விடுவீர்கள்.

12-10-2018 முதல் 23-01-2020 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தினரிடமிருந்த வெறுப்புகள் மறைந்து மகிழ்ச்சியாக உறவாடுவீர்கள்.

தெய்வ வழிபாட்டையும் நம்பிக்கையுடன் மேற்கொள்வீர்கள். பழைய நண்பர்களையும் சந்திப்பீர்கள். அவர்களால் செய்தொழிலில் புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள். உங்களின் தனிப்பட்ட ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். தன்னடக்கத்துடன் போதுமென்ற மனதுடன் இருப்பீர்கள்.

சாதக பாதகங்களை ஆராய்ந்து உங்களின் நுண்ணறிவினால் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். பிறரைப் பற்றிய  முக்கிய ரகசியங்களையும் அறிய முற்படுவீர்கள். எதிரிகளிடம் வெளிப்படையாக எதிர்ப்பைக் காட்ட  வேண்டாம்.

எதிர்காலத்தைப் பற்றி நினைக்காமல் இன்று எது முக்கியமோ அதைச் செய்வீர்கள். இக்கட்டான தருணங்களில் உங்களின்சமயோசித புத்தி கைகொடுக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளிடம் கொண்டுள்ள நட்புறவு படிப்படியாக வளரும். வருமானமும் கூடத் தொடங்கும். நெடுநாள்களாக எதிர்பார்த்திருந்த இடமாற்றம் கிடைக்கும்.

சக ஊழியர்களும் உங்களுக்கு தங்களாலான உதவிகளைச் செய்வார்கள். அதிகம் உழைக்க நேரிடும். வியாபாரிகளின் யுக்திகளை கூட்டாளிகள் பாராட்டுவார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

கொடுக்கல் வாங்கலில் இந்த தொய்வுகள் நீங்கி வருமானம் உயரும். வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். கூட்டாளிகள் நேசக்கரம் நீட்டுவர். வியாபாரத்தைப் பெருக்குவீர்கள்.

விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். பயிர்களில் பாதிப்புகள் குறையும். உங்களுக்குக்கீழ் பணிபுரிபவர்களிடம் அக்கறையாக நடந்துகொள்வீர்கள். பழைய கடன்கள் வசூலாகும். புதிய விவசாய உபகரணங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். தொண்டர்களின் அதிருப்திகளைச் சந்திக்க நேரிடும். அதனால் பொறுமையுடன் நடந்துகொள்ளவும்.

பெயரும் புகழும் உயரும். எதிரிகளின் பலம் குறையும். எதிர்பார்த்த பதவிகள் உங்களைத் தேடிவரும். கலைத்துறையினருக்கு திருப்திகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெறும்.

வருமானம் எதிர்பார்த்த அளவில் இருக்கும். கடுமையாக உழைப்பீர்கள், புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். கச கலைஞர்களின்ஆதரவுடன் கலைப்பயணங்களைச் செய்வீர்கள்.

பெண்மணிகளுக்கு தன்னம்பிக்கை கூடும். உடன்பிறப்புகளும் ஏற்றம் காண்பார்கள். திடீர் பயணங்களும் அதிர்ஷ்டவாய்ப்புகளைப் பெற்றுத் தரும் புதிய வீட்டிற்கு மாற்றம் செய்யும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

மாணவமணிகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். அதிக மதிப்பெண்களைப் பெற்று முதல் மாணவராக வருவீர்கள். உடற்பயிற்சிகளை மேற்கொண்டு மனப்புழுக்கத்திலிருந்து விடுபடுவீர்கள். பெற்றோர்களின் ஆதரவு குறைவாக இருப்பதால் அவர்களிடம் பெரிய கோரிக்கைகளை கொண்டு செல்ல வேண்டாம்.

பரிகாரம்: திருவேங்கடநாதரை வழிபட்டு வரவும்.

***

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய) 

26-10-2017 முதல் 11-10-2018 வரை உள்ள காலகட்டத்தில் ஒளிவு மறைவு இன்றி பேசும் நீங்கள் அடுத்தவர்களின் எண்ணங்களை அறிந்து சமயோஜிதமாக பேசத் தொடங்குவீர்கள்.

செய்தொழிலிலும் புத்திசாலித்தனமான முடிவுகளையும் எடுக்கத் தொடங்குவீர்கள். சமூகத்தில் உயர்ந்தவர்களிடம் நட்பு கிடைக்கும். பொருளாதாரம் மேன்மையாக இருக்கும். புதிய வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

உடன்பிறந்தோரும் உங்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வார்கள். அன்னை வழியில் சில அனுகூலங்களும் உண்டாகும். மனதில் நம்பிக்கை வளரும். எவருடனும் வெளிப்படையாகப் பேச வேண்டாம்.

அலைபாயும் மனதையும் கட்டுப்படுத்தவும். நீங்கள் செய்யும் வீண் யோசனைகள் உங்கள் வலிமையைக் குறைக்கும். மற்றபடி முதுகுக்குப் பின்னால் குறை சொல்பவர்களைக் கண்டுகொள்ள வேண்டாம். மற்றபடி பங்கு வர்த்தகம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும்  காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

12-10-2018 முதல் 23-01-2020 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் மனதில் ஆனந்தம் குடிகொள்ளும். மனதில் நெருடிக்கொண்டிருந்த பழைய தவறு ஒன்று இந்த காலகட்டத்தில் வெளியில் வர முடியாத அளவுக்கு மறைந்து விடும்.

மனதை  ஒரு நிலைப்படுத்த தியானம், பிராணயாமம் போன்றவற்றைச் செய்யவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உங்களின் அவநம்பிக்கை மறைந்து தன்னம்பிக்கை உயரத் தொடங்கும். வருமானம் எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

பூர்வீகச்சொத்துகளில் இருந்து வந்த சிக்கல்கள் மறைந்து நன்மைகள் வரத் தொடங்கும். திருமண வயதில் உள்ள யுவ யுவதிகளுக்கு திருமண பாக்கியம் உண்டாகும்.

குழந்தை இல்லாதவர்களுக்கு மழலைச் செல்வம் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் அதிர்ஷ்ட தேவதையின் அருட்பார்வை உங்களுக்குக் கிடைக்கும் காலகட்டம் இது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகளின் சுமை சிறிது அதிகரித்தாலும் எதிர்பார்த்த ஊதிய உயர்வைப் பெறுவீர்கள். அதேநேரத்தில் பணியிட மாற்றம்  உண்டாகும். உங்களின் வேலைகளை சக ஊழியர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம்.

உங்கள் மேலதிகாரிகளின் எண்ணங்களை புரிந்துகொண்டு செயல்படுங்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் அனைத்தும் சீராக இருக்கும். அதேநேரம்  அனைத்து  விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

கூட்டாளிகளிடம் முக்கிய ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். விவசாயிகளுக்கு நீர்வரத்து  அதிகமாக காணப்படுவதால் தகுந்த நேரத்தில் விதைத்து விளைச்சலைக் கூட்டிக்கொள்ள முற்படுவார்கள்.

இதனால் விற்பனையும் ஓரளவுக்கு நன்றாகவே இருக்கும்.  அதேநேரம் கால்நடைகளால் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகலாம். விவசாயத் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

அரசியல்வாதிகள் தங்கள் செயல்களில் வெற்றி காண்பார்கள். நண்பர்களால் உங்கள் வாழ்க்கையில் திருப்பங்கள் ஏற்படும். இந்த காலகட்டத்தில் உடற்சோர்வைப் பொருட்படுத்தாமல் கட்சிப் பணிகளில் ஈடுபடுவீர்கள். தகுதிக்கேற்ற பொறுப்புகளையும் பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு புகழ் கூடும். செல்வாக்கு அதிகரிக்கும். அதேசமயம் திட்டமிட்ட காரியங்கள் சிறிய தடங்கலுடன்தான் நிறைவேறும். புதிய வாய்ப்புகளைப் பெற சில தியாகங்களைச் செய்ய வேண்டி வரும். அதோடு  பயணங்களிலும் சிறிது செலவுகள் ஏற்படும். பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பார்கள்.

கணவரைப் புரிந்துகொண்டு நடப்பீர்கள். உற்றார் உறவினர்களின் நன்மதிப்புக்குப் பாத்திரமாவீர்கள். குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். புனிதத் தலங்களுக்கும் சென்று வருவீர்கள்.

சிலருக்கு திடீரென்று திருமண வாய்ப்புகள் கை கூடும்.  மாணவமணிகள் படிப்பில் ஓரளவு நல்ல மதிப்பெண்களைப் பெற்றாலும் ஆசிரியர்களின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும். மற்றபடி பெற்றோரின் ஆதரவுடன் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். அதேநேரம் விளையாடும் நேரத்தில் கவனமாக இருக்கவும்.

பரிகாரம்: பைரவர் வழிபாடு உகந்தது.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

26-10-2017 முதல் 11-10-2018 வரை உள்ள காலகட்டத்தில் குடும்ப ஒற்றுமையைப் பேணிக் காப்பீர்கள். இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு உழைப்பீர்கள்.

எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். குடும்பத்தாருடன் புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பூர்விகச் சொத்துகளிலிருந்தும் வருமானம் வரத் தொடங்கும். வருமானத்தைப் பெருக்க இரட்டிப்பாக உழைப்பீர்கள். நடக்காது என்று நினைத்திருந்த காரியங்கள் திடீரென்று நடக்கத் தொடங்கிவிடும்.

உடலில் இருந்த நோய்கள் மறைந்து பீடு நடை போடுவீர்கள். உணவு விஷயங்களில் சரியாக இருப்பீர்கள். போட்டி பொறாமைகளை சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். உங்கள் கௌரவத்திற்கு எந்தப் பங்கமும் வராது. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்பதுபோல் உங்கள் கஷ்டங்கள் விலகி ஓடும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

12-10-2018 முதல் 23-01-2020 வரை உள்ள காலகட்டத்தில் நேர்மறையான நல்லெண்ணங்களை மனதில் கொண்டு  சமூகத்திற்கு நன்மை செய்ய விழைவீர்கள். உங்களை நம்பி வருபவர்களை அன்புடன் ஆதரிப்பீர்கள்.

முடிவுகளை அடைவதற்கு ஏற்ற வழிமுறைகளைச் சிந்தித்துச் செயல்படுவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு மாறுவார்கள். மூத்த சகோதர சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். அதேநேரம் எவரையும் நம்பாமல் தனித்துச் செயல்படவும்.

 பங்கு வர்த்தகம் மூலமாகவும் மிதமான லாபமிருக்கும். வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்காததால் மேல் முறையீடு செய்வீர்கள். அதேநேரம் சமரசமாகச் செல்வது நன்மை பயக்கும். ஆதலால் அவர்களைக் கண்டும் காணாமல் இருந்து கண்காணிக்கவும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு இரண்டும் கிட்டும். மேலதிகாரிகள் உங்கள் செயல்களைப் பாராட்டுவார்கள்.

தைரியத்துடன் உங்கள் வேலைகளில் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். வெளிநாட்டில் வேலைக்குச் செல்ல விரும்புவோர் அத்தகைய வாய்ப்புகளைப் பெறும் காலகட்டமாக இது அமைகிறது.  வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சீராக இருக்கும்.

வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் படிப்படியாக நீங்கி விடும். அதனால் நஷ்டங்களை ஈடு செய்ய கடுமையாக உழைப்பீர்கள். அதேநேரம் கூட்டாளிகளைக் கலந்தாலோசிக்காமல் எதையும் செய்ய வேண்டாம்.

தொழிலில் சிறிது தடைகள் ஏற்பட்டாலும் எப்படியும் இலக்குகளை எட்டி விடுவீர்கள். விவசாயிகளுக்கு வர வேண்டிய குத்தகை பாக்கிகள் கிடைக்கும். வருமானம் உயரத் தொடங்கும். புதிய நிலங்களை வாங்க முயற்சி செய்வீர்கள்.

பூச்சிக்கொல்லி மருந்துக்குப் பெரிதாகச் செலவு எதுவும் ஏற்படாது. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். மாற்றுப் பயிர் பயிர் செய்வதன் மூலம் மேலும் லாபத்தை அள்ளுவீர்கள்.

அரசியல்வாதிகள் மீது எதிர்க்கட்சியினர் வீண் அவதூறுகளைச் சுமத்த நினைப்பார்கள். அதனால் இந்த காலகட்டத்தில் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். மற்றபடி உங்கள் பெயரும் புகழும் உயரும்.

கலைத்துறையினருக்கு எதிர்பாராத வகையில் வெற்றிகள் கிடைக்கும். உங்களின் புதிய எண்ணங்கள் மக்களிடம் நல்ல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும். உங்களின் முனைப்பான செயல்பாட்டால் உயர்ந்த நிலைக்குச் செல்வீர்கள். அதேநேரம் புதிய நண்பர்களிடம் கவனமாக இருக்கவும்.

பெண்மணிகளுக்கு இந்த காலகட்டத்தில் கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களிடமிருந்து உங்களுக்கு நல்ல செய்தி வரும். அதேநேரம் மற்றவர்களின் ஆசை வார்த்தைகளில் மயங்க வேண்டாம். மற்றபடி பணவரவுடன் விரும்பிய இடமாற்றங்களை வேலைக்குச் செல்லும்

பெண்மணிகள் பெறுவார்கள் என்றால் மிகையாகாது. மாணவமணிகள் கல்வியில் சிறப்பாகத்  தேர்ச்சி அடைவார்கள். நல்ல மதிப்பெண்களையும் அள்ளுவார்கள். சிலருக்கு அரசாங்க உதவி போன்றவை கிடைக்கும். வெளியூர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பும் உண்டாகும். விளையாட்டில் சாதனை
செய்வீர்கள்.

பரிகாரம்: ராதா கிருஷ்ணரை வழிபட்டு வரவும்.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

26-10-2017 முதல் 11-10-2018 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். காரியங்கள் மடமடவென்று நடக்கும். எதிர்ப்புகளை சமயோசிதப் புத்தியால் தகர்த்தெறிவீர்கள்.

தொழில் ரீதியான பயணங்களால் நன்மைகளை அடைவீர்கள். நெடுநாளாக வாட்டிக் கொண்டிருந்த உடல் உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

புதிய முதலீடுகளை நண்பர்களுடன் சேர்ந்து செய்வீர்கள். சமூகத்தில் உங்கள் பெயர், புகழ், செல்வாக்கு கூடும். புதிய பொறுப்புகளும் தேடி வரும். உங்கள் திறமைகள் பளிச்சிடும். தன்னம்பிக்கையுடனும் முக மலர்ச்சியுடனும் வலம் வருவீர்கள்.

குடும்பத்திலும் உங்கள் செல்வாக்கு உயரும். பூர்வீகச் சொத்துகளை அனுபவிக்கத்தக்க வகையில் உங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.

ஆணவத்தையும், எதிர்பார்ப்பையும் விட்டொழித்து கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் செயல்படும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

12-10-2018 முதல் 23-01-2020 வரை உள்ள காலகட்டத்தில் பெரிய அளவில் திட்டங்களைப் போட்டு பெரும் புகழை அடைந்து விடுவீர்கள்.

செய்தொழிலை விரிவுபடுத்த வங்கிகளிடமிருந்து கடன்கள் கிடைக்கும். தொல்லை கொடுத்து வந்த நண்பர்கள் தாங்களாகவே விலகி விடுவார்கள். குடும்பத்திலிருந்த சண்டை சச்சரவுகளும் தீர்ந்து விடும்.

உற்றார், உறவினர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். அதேநேரம் வருமானத்திற்குத் தகுந்தாற்போல் புதுப் புதுச் செலவுகளும் உங்கள் முன் வந்து நிற்கும். சேவை மனப்பான்மையுடன் ஆன்மிக தர்ம பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

கடல் கடந்து சென்று வசிக்கும் வாய்ப்புகளும் சிலருக்கு ஏற்படும். தனித்து முடிவெடுக்க விரும்பும் நீங்கள் மற்றவர்களையும் கலந்தாலோசித்து நல்ல முடிவுகளை எடுக்கும் காலகட்டமாக இது அமைகிறது.

உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் இந்த காலகட்டத்தில் கிடைக்கும். அதோடு சக ஊழியர்களின் ஆதரவும் தொடர்ந்து கிடைப்பதால் அந்த காரியங்கள் அனைத்தும் பிரச்னையின்றி நிறைவேறும்.

தெளிவான மனத்துடன் பணியாற்றுவீர்கள். அலுவலக ரீதியான பயணங்களாலும் நன்மைகள் கிடைக்கும். வியாபாரிகள் வளர்ச்சியைக் காண்பார்கள். தொடர்ந்து வந்த தடைகள் நீங்கி வெற்றிகள் சூழும். அனைவரும் உங்களிடம் நட்பு பாராட்டுவார்கள். கூட்டு முயற்சிகள் பலன் தரும்.

புதிய வியாபாரம், புதிய சந்தைகளை நாடும் எண்ணங்கள் மேலோங்கும். அதோடு கொடுக்கல் வாங்கல் விஷயங்களும் லாபகரமாகவே இருக்கும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும்.

ஆனாலும் பயிர்களில் புழுபூச்சிகளின் பாதிப்பு தெரியவந்தால் உடனே பூச்சிக்கொல்லி மருந்தை உபயோகிக்கவும்.  மற்றபடி புதிய விவசாய உபகரணங்களை வாங்கி மேலும் முன்னேற்றமடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

அரசியல்வாதிகளின் கனவுகள் நனவாகும். உங்கள் செயல்களுக்கு எந்த நாளும் இல்லாத அளவுக்குப் புதிய அங்கீகாரம் கிடைத்து அதிர்ஷ்டசாலியாக வலம் வருவீர்கள். சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைத்து மகிழ்ச்சியுடன் செயலாற்றுவீர்கள்.

எதிரிகளும் விலகி விடுவார்கள். கலைத்துறையினர் இந்த காலகட்டத்தில் சிறிது ஏற்ற இறக்கங்கள் காண்பார்கள். துறையில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டாலும் ஓரளவு புகழ் பெறுவீர்கள். மற்றபடி வருமானத்திற்குக் குறைவு ஏற்படாது.  சக கலைஞர்களின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும்.

பெண்மணிகள் கடமை உணர்ச்சியுடன் இருந்து இல்லத்தின் பொறுப்புகளை நடத்திச் செல்வார்கள்.

திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெற இருந்த தடைகள் விலகும். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். இருப்பினும் குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் தோன்றி மன அமைதியைக் குறைக்கும். யோகா, பிராணயாமம் போன்றவற்றைச் செய்து மனப்புழுக்கத்திலிருந்து விடுபடுவீர்கள்.

மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள். அதனால் நண்பர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுங்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும்.

பரிகாரம்:  முருகப் பெருமானை வழிபட்டு வரவும்.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

26-10-2017 முதல் 11-10-2018 வரை உள்ள காலகட்டத்தில் மனதில் இருந்த சஞ்சலங்களும், விரக்தியும் நீங்கும். குடும்பத்தில் குதூகலம் தாண்டவமாடும். தொடர்ந்து வந்த பிரச்னைகள் நீங்கும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். செய்தொழிலில் புதிய மாற்றங்கள் உண்டாகும். சமுதாயத்தில் புதிய அந்தஸ்தைப் பெறுவீர்கள். வருமானம் சீராக உயரத் தொடங்கும். உங்களின் சேமிப்பும் உயரத் தொடங்கும்.

அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். இழந்த பொருள், செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பெரியோர்களின் ஆசியும், தெய்வ தரிசனமும் கிடைக்கும். தேகத்தில் பொலிவு உண்டாகும்.

நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு மறையும். உங்களுக்குத் தேவையான உதவிகளைத் தக்க சமயத்தில் செய்வார்கள். உங்களை ஏளனமாகப் பார்த்தவர்கள் ஆச்சரியப்படும் விதத்தில் பெருமையுடன் பார்க்கும் காலகட்டம் இது என்றால் மிகையாகாது.

12-10-2018 முதல் 23-01-2020 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் செயல்களில் சிறு இடையூறுகள் குறுக்கிட்டாலும் சிறிய தாமதத்திற்குப் பிறகு வெற்றியடைந்து விடுவீர்கள். எதிர்பார்த்த வருமானம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி வரும்.

உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். மற்றபடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்களின் மீது குற்றம் சாட்டிய உறவினர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து இன்முகத்துடன் பழகுவார்கள்.

குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். ஆலய விஷயங்களில் ஈடுபட்டு உங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்வீர்கள்.

அதேநேரம் எவரிடமும் வீண் வாக்குவாதம் வேண்டாம். எவருக்கும் உங்கள் பெயரில் பணம் வாங்கித் தர வேண்டாம். பெற்றோர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். அவர்களுக்காக சிறிது மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடும். மற்றபடி பதற்றப்படாமல் நிதானமாகத் தெளிவுடன் சிந்தித்து உங்கள் செயல்களைத் திறம்படச் செய்து முடிக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் திருப்திகரமாக முடிப்பீர்கள். அதேநேரம் கொடுத்த வேலைகளை நிதானமாகச் செய்யவும்.

உங்களின் உழைப்பு வீண் போகாது. சிலருக்கு நிம்மதி தரும் இடமாற்றங்களும் உண்டாகும். மேலதிகாரிகளிடம் சலுகைகளைப் பெற்று கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

வியாபாரிகள் தங்களுடைய வியாபாரத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள். அதேநேரம் கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சுமுகமாக நடந்தாலும் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். அதோடு தன்னிச்சையாகச் செயல்படாமல் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே உங்களின் எண்ணங்களை நிறைவேற்றவும்.

விவசாயிகள் தங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றுவார்கள். கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை செலுத்துவார்கள்.

போட்டிக்குத் தகுந்தாற்போல் செயல்பட்டு விளைபொருள்களின் விற்பனையை லாபகரமாக முடிப்பார்கள். நீர்ப்பாசன வசதிகளுக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பலன் தரும். புதிய கால்நடைகளையும் வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு நினைத்த காரியங்கள் அனைத்தும் படிப்படியாக வெற்றியைத் தேடித் தரும். இதனால் பெயரும் புகழும் கூடத் தொடங்கும். அதேநேரம் கட்சி மேலிடத்திடம் சுமுகமான உறவை வைத்துக்கொள்வது அவசியம். தொண்டர்களை அரவணைத்துச் செல்லவும். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த சிறப்பான சந்தர்ப்பங்கள் கிடைக்கும். சக கலைஞர்கள் மத்தியில் நல்ல பெயர் எடுப்பீர்கள்.

பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையாக இருக்கவும். மனதில்பட்டதை உடனுக்குடன் பேசுவதைத் தவிர்க்கவும். மற்றபடி குடும்பத்தில் தாமதமாகி வந்த சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.

மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோரின் அன்பு ஆதரவைப் பெறுவீர்கள். கல்வியில் பெரிய வளர்ச்சி அடைவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டிய காலகட்டம் இது.  உங்கள் நண்பர்களும் உங்களுக்கு உதவுவார்கள்.

பரிகாரம்:  விநாயகப்பெருமானை வழிபட்டு வரவும்.

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.