“உடம்பெல்லாம் ரணமா வலிக்கும்… அடுத்த வேளை சாப்பிடணும்னா அதைப் பொறுத்துக்கணும்!” – ஒரு திருநங்கையின் கதறல்

0
446

மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது. ‘அந்தி மழைப் பொழிகிறது’, ‘மேகம் கருக்குது மழை வரப்பாக்குது’, ‘சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்துவைப்பேனோ’ போன்ற பாடல்களோடு சமூக வலைதளங்களில் மழையை வரவேற்கிறார்கள்.

எனக்கும் மழை அழகானதாகவே இருந்துள்ளது. நேற்றைய இரவுப் பயணத்துக்கு முன்புவரை. உங்களில் மழைக் காதலர்கள் இருந்தால், மனதை உறுதியாக்கிக்கொண்டு தொடரவும்…

இரவு 12.30 மணி. ஆளரவமற்ற சாலையில் மெல்லிய மழைச் சாரல்… புகைப்படக்கார நண்பருடன் டூவீலர் பயணம். மனதுக்குள் அப்படியோர் உற்சாகம்.

திடீரென எல்லாம் மாறியது. ச்சோவென மழை பெய்ய ஆரம்பித்தபோது, அந்தச் சாலையில் மூன்று பெண்கள் தலைதெறிக்க ஓடுகிறார்கள்.

சட்டென வண்டியை நிறுத்தி உற்றுப்பார்க்க, அவர்கள் திருநங்கைகள் என்பது தெரிந்தது. தூரத்தில் வரும் போலீஸ் வாகனத்தைப் பார்த்துதான் அப்படி ஓடுகிறார்கள் என்பது புரிந்தது.

powercut(6)_16438

அவர்கள் ஓடும் திசையில் நாங்களும் வண்டியை முறுக்கிவிட்டோம். செல்லச் செல்ல அந்தச் சாலையின் ஓரத்தில் கும்பல் கும்பலாகப் பல திருநங்கைகள்.

சிலர் பட்டுப்புடவையில்… சிலர் ஜீன்ஸ் அண்டு டி-ஷர்ட்டில். முகத்தில் அப்பியிருக்கும் பவுடரும் லிப்ஸ்ட்டிக்கும் தெருவிளக்கின் ஒளியில் மின்னியது. கொட்டும் மழையில் ஒதுங்கக் கிடைத்த இடங்களில் ஒட்டிக்கொண்டிருந்தார்கள்.

மூன்று பேர் விழுந்தடித்து ஓடுவதைப் பார்த்தும் இவர்களிடம் அசைவில்லையே என்ற கேள்வி மனதுக்குள் எழுந்தது.

அதேநேரம் அந்த மூன்று பேருக்கும் என்ன ஆகியிருக்கும் என்ற பதற்றத்துடன் அவர்களைப் பின்தொடர்ந்தோம். போலீஸ் வாகனம் வேறு திசையில் திரும்பிவிட, ஓடிக்கொண்டிருந்தவர்கள் ஒரு பஸ் ஸ்டாப்பில் ஒதுங்கினார்கள்.

தெப்பலாக நனைந்து, மூச்சு வாங்கிக்கொண்டிருந்த அவர்கள் அருகே டூவீலரை நிறுத்தினோம். ஒரு நிமிடம் எங்களை உற்றுப் பார்த்தவர்கள், “ஹேய்… எவ்ளோ தர்றே. ஸ்டார்ட்டிங் 1000 ரூபா” என்றார்கள்.

“சாரி சிஸ்டர். நாங்க அதுக்காக வரலை. நாங்க ரிப்போட்டர்ஸ். நீங்க ஓடறதைப் பார்த்துட்டு என்ன ஆச்சுன்னு கேட்க வந்தோம்” என்றதும், “ஹலோ, மிஸ்டர் நாங்க ஓடிவர்றோம்; உருண்டு வர்றோம் உங்களுக்கு என்ன?

பார்த்துட்டிருந்த எங்க ஆளுங்களே சும்மாதானே இருந்தாங்க. உங்க வேலையைப் பார்த்துட்டு கௌம்புங்க” என்றார் ஒருவர் ஆவேசமாக.

91557_thumb_16143

அந்த ஆவேசம், இந்தச் சமூகம் பல்லாண்டுகளாகக் கொடுத்த வலி என்பது புரிந்ததால், நாங்கள் அமைதியாக, ”இல்லே சிஸ்டர். நாங்க வந்து…” என்றதும் குறுக்கிட்டார்.

“என்ன சிஸ்டர்னு கூப்பிட வேணாம். அந்த வார்த்தையைக் கேட்க நாங்க தயாரில்லே. இங்கே வர்றவங்க எதை எதிர்பார்த்து வருவாங்கன்னு தெரியும்.

என்ன ஆச்சுன்னு அக்கறையோடு விசாரிச்சதால், உங்கிகிட்ட பேசிட்டிருக்கோம். கிளம்புங்க கிளம்புங்க” என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ஒரு கார் வந்து நின்றது.

“ஏய் கஸ்டமர கவனி” என்று பக்கத்தில் நின்றவரிடம் சொல்ல, சாலை என்றும் பாராமல் நடனமாடியபடியே சென்று காரில் ஏறிக்கொண்டார்.

நாம் அசையாமல் நிற்பதைப் பார்த்து என்ன நினைத்தாரோ, ஒருவித நம்பிக்கையோடு நம் கண்களைப் பார்த்துப் பேச ஆரம்பித்தார், “அந்தக் கார்ல ஏறினவளுக்கு எத்தனை வயசு இருக்கும்னு நெனைக்குறே.

இருபது முழுசாகலை. நல்லா படிச்சுட்டிருந்த புள்ள. ஃபிரெண்ட்சுங்களும் குடும்பத்துல உள்ளவங்களும் கிண்டல் பண்ணியே சாகடிக்கப் பார்த்தாங்க. மனசு வெடிச்சுப்போயி இந்த ஊருக்கு ஓடிவந்துட்டா.

ஒருத்தனும் வேலை கொடுக்கல; மேலே கை வெச்சிருக்கானுங்க. அதான் ஆபரேசன் பண்ணிட்டு எங்களோடு சேர்ந்துட்டா. இது மழை சீசன்.

நிறைய கஸ்டமருங்க தேடிவருவாங்க. புதுசுங்கறதால அவளுக்கு கஸ்டமரை எப்படி டீல் பண்ணனும்னு சரியா தெரியாது.

பாவிப் பயலுங்க வேலை முடிஞ்சதும் காசு கொடுக்காம ஓடிடுவாங்க. அதனால்தான் எங்களோடே வெச்சிருக்கோம். கஸ்டமருங்கதான் இப்படின்னா, சில போலீஸ்காரங்களும் ரொம்ப டார்ச்சர் பண்ணுவாங்க.

சில போலீஸ்காரங்க எங்க நெலமையைப் புரிஞ்சுட்டு பேசாமல் போயிடுவாங்க. சிலருங்க லத்தியால் அடிச்சு வெரட்டுவாங்க.

போன மாசம் தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னாடி, இவளைக் கூட்டிட்டுப்போய் உரிச்சு எடுத்துட்டாங்க. கை காலெல்லாம் வீங்கி, ஒரு வாரம் படுத்த படுக்கையா இருந்தா” என்று அருகில் நின்றிருந்தவரின் கையைப் பிடித்துக் காட்டுகிறார்.

அந்தக் காயங்கள் நம் மனதை ரணமாக்கின. அவரோ எதையும் கண்டுகொள்ளாமல், ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தவாறு மெல்லிய நடனமாடினார்.

93345_thumb_16143

“என்ன டான்ஸ் ஆடிட்டே இருக்கோமேன்னு பார்க்குறியா? எனக்கு டான்சுன்னா ரொம்பப் புடிக்கும். நிறைய டான்ஸ் ஷோவுக்குப் போவேன்.

இந்த வேதனை வேணாம்னு முடிவுபண்ணி, அந்த வேலைக்குப் போனேன். ஆனா, எங்களை உடம்பாக மட்டுமே பார்க்கும் சொசைட்டி, நிம்மதியா விட்டுடுமா? கேலி பேசி அடிச்சு விரட்டினாங்க.

திரும்பவும் இதுக்கே வந்துட்டேன். ராத்திரிதான் எங்க உலகம் விடியும். பத்து மணிக்கு மேக்கப் பண்ண ஆரம்பிச்சு, பதினொரு மணிக்கு ஸ்பாட்டுக்கு வந்துடுவோம்.

காலை நாலு மணி வரை வர்றவங்களைத் திருப்திபடுத்திட்டு அஞ்சு மணிக்குள்ளே வீட்டுக்குள் அடைஞ்சிடுவோம்.

பகல் முழுக்க தூக்கம். சாயந்தரம் எந்திரிச்சு குளிச்சு சாப்பிட்டுட்டு, வீட்டு வேலைகளைப் பார்த்துட்டு திரும்பவும் மேக்கப்.

பகல்ல வெளியே வந்தாலே அக்கம்பக்கத்துல உள்ளவங்க ஒருமாதிரி பார்ப்பாங்க. கூட்டுப்புழு மாதிரி இருக்கோம். ராத்திரியில் வெறி புடிச்ச மிருகமாட்டம் எங்ககிட்ட வர்றவங்களைச் சாந்தமாக்கி அனுப்புவோம்.

சிலர், சும்மா வந்துட்டுப் போறியான்னு கேப்பானுங்க. அதுகூட பெருசா தெரியாது. சில பேர், பத்து ரூபாயைக் காட்டி கூப்புடுவானுங்க. அப்போ வரும் பாருங்க கோபம்… ஆனாலும், நாம துரத்தி, இவன் வேற எங்கேயாவது போய் கை வெச்சுடக்கூடாதேனு பொறுமையா இருந்துப்போம்.

ஏன்னா, உணர்வை அடக்க முடியாத பாவிங்க, பிளாட்பாரத்துல படுத்திருக்கிற குழந்தையை, கிழவியைக்கூட விடமாட்டாங்க” என்றார்.

“உங்ககிட்ட ஒண்ணே ஒண்ணு சொல்லட்டா. இப்போகூட உடம்பெல்லாம் ரணமா வலிக்குது. ஆனாலும், அடுத்தவேளை சாப்புடணும்னா இந்த வலியைப் பொறுத்துக்கத்தான் வேணும்.

ஏன்னா, மத்த நாள்களைவிட இப்புடி மழை பெய்யும்போதுதான் கஸ்டமருங்க அதிகம் கிடைப்பாங்க. இந்த சீசன்ல காசு பார்த்தாதான் உண்டு. காசுக்காக இப்புடியான்னு கேட்கறதுக்கு முன்னாடி, இந்த உலகம் எங்களை எப்படி  வெச்சிருக்குனு ஒருமுறை உங்களுக்குள்ளே கேட்டுக்கங்க. நீ வந்ததும் என்னை சிஸ்டர்னு கூப்பிட்டதாலே ஒண்ணு சொல்றேன்.

இதுவரை யார்கிட்டயும் சொல்லாத ஒண்ணு. சொல்லணும்னு ஏங்கிட்டு இருந்த ஒண்ணு” என்றவர், சட்டென கையைப் பிடித்து கண்களில் ஒற்றிக்கொண்டு சொன்னார்…

ஐ லவ் யூ டா தம்பி!”

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.