பாலம் இல்லாததனால் பெரு வெள்ளத்தில் இறந்தவரின் உடலை சுமக்கும் மக்கள்…..

0
389

மயிலாடுதுறை அருகே பாலம் இல்லாததால் கிராம மக்கள் மூதாட்டி உடலை பாடையுடன் வாய்க்காலில் இழுத்து சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதுபோன்ற நேரங்களில் பாடையின் அடியில் கார் டயர் டியூப்களில் காற்றை நிரப்பி கட்டியும் அல்லது வாழைமரங்களை தெப்பம்போல் கட்டியும், அதில் கயிறு இணைத்து தண்ணீரில் இறங்கி கயிறு மூலம் உடலை இழுத்து கொண்டு கரை சேர்ப்பது வழக்கம்.

இது பல ஆண்டுகளாக மழைக்காலங்களில் இப்பகுதியில் நடந்து வரும் அவலநிலையாகும்.

இந்நிலையில் நேற்று முன்தினம் குமாரமங்கலம் கீழத்தெருவை சேர்ந்த ராஜப்பன்(80) என்பவர் இறந்து விட்டார். இவரின் உடலை கிராமமக்கள் எடுத்து வந்தனர்.

அப்போது ராஜன் வாய்க்காலில் சாகுபடிக்காக திறக்கப்பட்ட தண்ணீருடன் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுவது கண்டு கிராமமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சுமார் 8 அடி உயரத்திற்கு வாய்க்காலில் தண்ணீர் அதிவேகத்துடன் பெருக்கெடுத்து ஓடியது. குறைந்தளவு தண்ணீர் சென்றாலே இறந்தவர் உடலை எடுத்து செல்வதில் சிரமம் ஏற்படும்.

அதிகளவு செல்லும் தண்ணீரில் உடலை பாதுகாப்பாக அக்கரைக்கு கொண்டு செல்ல என்ன செய்வது என்று செய்வதறியாமல் திகைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இதுகுறித்து பொதுப் பணித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரின் அளவை குறைத்தனர்.

இதனால் நீரோட்டம் குறைந்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு உடலை ராஜன் வாய்க்கால் வழியாக கயிறுகட்டி இழுத்து சென்றனர்.

அதேபோல் மயிலாடுதுறை அருகே உள்ள கொற்றவநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஆச்சியம்மாள் (70) என்பவரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். இவரின் உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு எடுத்து சென்றனர்.

இங்கு வழியில் அய்யாவையாறு வடிகால் வாய்க்கால் ஓடுகிறது. இங்கும் பாலம் இல்லாததால் உறவினர்கள் ஒன்று சேர்ந்து பாடையுடன் வாய்க்காலில் இறங்கினர்.

பின்னர் கழுத்தளவு தண்ணீரில் நீந்தி பாதுகாப்பாக ஆச்சியம்மாள் உடலுடன் கரை சேர்ந்தனர். அங்கிருந்து பின்னர் மயானத்திற்கு உடலை கொண்டு சென்றனர்.

இதுகுறித்து குமாரமங்கலம் மற்றும் கொற்றவநல்லூர் கிராம மக்கள் கூறியிருப்பதாவது:

ஒவ்வொரு ஆண்டும் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும்போதும், மழைக்காலங்களிலும் இந்த வாய்க்கால்களை கடக்க பாலம் இல்லாததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம்.

இப்பகுதிகளில் பாலம் அமைத்து தரவேண்டும் என இரு கிராம மக்களும் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுநாள்வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, இனியாவது அப்பகுதிகளில் பாலம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் ஒரே குரலில் வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.