டாம்பாய், நாய்கள் பிடிக்கும், மேடைகள் என்றால் பயம்… இந்திரா காந்தி பற்றி!
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள், அவரது 33-ம் நினைவு நாளில்…
தனது ஐந்து வயதிலேயே அந்நியப் பொருள்கள் எரிப்புப் போராட்டத்தின்போது, தான் ஆசையோடு வைத்திருந்த இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட பொம்மையை எரித்தவர் இந்திரா காந்தி.
இந்திரா, தனது பன்னிரண்டாவது வயதிலேயே ‘வானர சேனை’ என்கிற பெயரில் சிறுவர்களை இணைத்து விடுதலைக்குக் குரல் கொடுத்தார்.
சிறுவயதிலிருந்தே ஒரு ‘டாம் பாய்’ மாதிரி வளர்ந்தவர் இந்திரா. சாகசங்களை மிகவும் விரும்பினார். நாய்கள் என்றால் பிரியம். ஒன்றுக்கு மேற்பட்ட நாய்களை எப்போதும் வளர்த்து வந்தார்.
மேற்கத்திய ஸ்டைலாக தலைமுடியைக் கத்தரித்தும், நமது இந்திய பாரம்பர்யமாக சேலை உடுத்தியும் ஒரு புதிய அழகிய ஸ்டைலை தோற்றத்தில் கொண்டுவந்தவர் இந்திரா. உணவு முறையிலும் இப்படி மேற்குல உணவைக் கலந்து சாப்பிடுவார்.
விடுதலைப் போராட்டக் களத்தில் சந்தித்த பார்சி சமூகத்தைச் சேர்ந்த ஃபெரோஸ் காந்தியைக் காதலித்துத் திருமணம் செய்தார். கலப்புத் திருமணங்களுக்கு சமூகத்தில் கடும் எதிர்ப்பு இருந்த காலகட்டம் அது.
இந்திராவுக்கு இரண்டு குழந்தைகள். ஆனால், மண வாழ்க்கை நினைத்ததுபோல இல்லை. குழந்தைகளோடு தன் தந்தை வீட்டில் வாழத்தொடங்கினார். இருவருக்குமான விரிசலைச் சரிசெய்யும் முன்பே மாரடைப்பினால் ஃபெரோஸ் காந்தி காலமானார்.
இந்திராவை தனக்கு அடுத்து அரசியல் வாரிசாக்குவதில் நேருவுக்கு விருப்பமில்லை. இதை, தன் நெருங்கிய தோழிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு, சீக்கிரம் அமெரிக்கா வந்து செட்டில் ஆகிறேன் என்று எழுதியிருந்தார்.
நேருவின் மறைவுக்குப் பின்னர், சாஸ்திரி பிரதமரானார். இந்திரா காந்தியை லண்டனுக்கு இந்திய தூதுவராக அனுப்பி அரசியல் வாழ்வை அஸ்தமிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், சாஸ்திரி திடீரென மரணம் அடைய, காமராஜர் மற்றும் நிஜலிங்கப்பா ஆகியோரால் பிரதமரானார் இந்திரா.
பொதுத்தளங்களில், மேடைகளில் பேசுவதென்றால் இந்திராவுக்குப் பயம். அதனால், சில நேரங்களில் வயிறு பிரச்னையே வந்திருக்கிறது என்கிறார் அவரது மருத்துவர் மாதூர். நாடாளுமன்றத்திலும் பேசுவதை வெறுத்தார். பிரதமரான ஆரம்ப நாள்களில் ‘ஊமைப் பொம்மை’ என்றெல்லாம் அழைக்கப்பட்டார்.
ஆட்சியைத் தக்கவைக்க அறிவித்த ‘அவசர நிலை’ இந்தியாவின் கறுப்புப் பக்கங்கள். தன்னை எதிர்த்தவர்களையும், ஊடகங்களையும் எல்லாம் கடுமையாக ஒடுக்கினார். மக்களைக் கட்டாயமாகக் கருத்தடை நோக்கித் தள்ளினார். 1976 ஏப்ரல் முதல் 1977 ஜனவரி வரை 7.8 மில்லியன் பேருக்குக் கருத்தடை செய்யப்பட்டது.
நேரு நாத்திகவாதியாக அறியப்பட்டாலும், இந்திரா கடவுள் நம்பிக்கை உள்ளவர். பல்வேறு மூட நம்பிக்கைகள், இந்துத்துவ ஆதரிப்பு இருந்ததாக அவரின் நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
இந்திரா காந்திக்கும் சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்திக்கும் பல்வேறு விஷயங்களில் முரண்பாடு உண்டு. சஞ்சய் விமான விபத்தில் இறந்த பிறகு, மேனகா காந்தியை வீட்டைவிட்டு வெளியேற்றினார். மேனகா காந்தி தன் மகன் வருணுடன் வெளியேறுவதை ஊடகங்கள் வெளியிட்டன.
ஏ டு இசட் என்று அட்டவணை போடும் அளவுக்கு இந்திரா பற்றி சர்ச்சைகளும் விமர்சனங்களும் உண்டு. பல அரசுகளைக் கலைத்தார்; கலைப்பதற்குக் காரணமாக இருந்தார். சர்வாதிகாரத்தின் ஒரு பெரிய ஐகானாக வரலாற்றில் நின்றார்.
அன்றைய இங்கிலாந்து பிரதமர் தாட்சருடன் நட்பில் இருந்தார். அப்போது அரசியல் தலைவர்களாக வெகு சில பெண்களே இருந்ததால், அவர்களின் நட்பு மேலும் வளர்ந்தது. பல்வேறு கொலை மிரட்டல்களுக்கு இடையில் இந்திராவின் இறுதிச் சடங்கில் பங்கேற்றார். ‘இந்த இழப்பு என் குடும்பத்தில் ஒருவரைப் பிரிந்ததுபோல’ என்று குறிப்பிட்டார் தாட்சர்.
ரமணி மோகனகிருஷ்ணன்