கடனைத் திருப்பிக் கொடுத்தால் உறவுக்கு சம்மதிப்பதாக கூறிய கள்ளக்காதலியை கொலை செய்த கள்ளக்காதலன்

0
437

‘வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்தால், தான் பாலியல் உறவுக்கு சம்மதிப்பதாக கூறிய கள்ளக் காதலியை கல்லால் அடித்து பின்னர் தலையில் கால் வைத்து சேற்றில் அமிழ்த்தி கொலை செய்தேன்’ என கள்ளக்காதலி கொலை வழக்கில் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த நபரொருவர் பொலிஸில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இது குறித்து விழுப்புர மாவட்ட பொலிஸார் தெரிவித்துள்ளதாவது, விழுப்புர மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள வடமாமாந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்.

இவரது மனைவி சுசீலா (வயது 55). இவர் கடந்த வாரம் தனது கரும்பு தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்துள்ளார்.

இது குறித்த தகவலின் பேரில், மூங்கில் துறைப்பட்டு பொலிஸார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியுள்ளனர். நிலத்தகராறு காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் முதலில் சந்தேகமடைந்தனர்.

தொடர்ந்து நடத்திய தீவிர விசாரணையில், அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ஏழுமலை (வயது 39) என்பவர், கள்ளக்காதல் தொடர்பாக சுசீலாவை கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது. அவரை பொலிஸார் தேடியுள்ளனர். பொலிஸார் தன்னை தேடுவதை அறிந்ததும் ஏழுமலை, வடமாமாந்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் சரணடைந்துள்ளார்.

இதையடுத்து ஏழுமலை விழுப்புர மாவட்ட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரை பொலிஸார் கைது செய்து கொலை தொடர்பாக விசாரிக்கையில், சுசீலாவை கொலை செய்தமை குறித்து ஏழுமலை பொலிஸில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, “நான் வடமாமாந்தூர் கிராமத்தில் தெற்கு தெருவில் எனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறேன். சுசீலா, அவரது நிலத்தில் கரும்பு பயிர் செய்து வந்தார்.
அவரது கணவர் வெங்கடேசன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

சுசீலாவின் இரண்டு மகன்கள் வெளியூர் சென்று விட்டனர். நான் அவ்வப்போது, சுசீலாவின் வயலுக்கு சென்று அவருக்கு உதவி செய்து வந்தேன்.

அப்போது எனக்கும், சுசீலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து தினமும் உல்லாசம் அனுபவித்து வந்தோம்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு சுசீலாவிடம் இரண்டு இலட்சம் ரூபா கடன் வாங்கினேன். சில நாட்களாக அந்த பணத்தை அடிக்கடி கேட்டு சசீலா தொந்தரவு செய்து வந்தார்.

அத்துடன் நான் பல முறை பாலியல் உறவுக்கு வலியுறுத்தியும் அவர் மறுத்து வந்தார். இதனால் எனக்கு சுசீலா மீது ஆத்திரம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த வாரம் சம்பவத்தன்று சுசீலா வீட்டிலிருந்து வயலுக்கு சென்றதை அறிந்த நான் அவரை பின் தொடர்ந்து சென்றேன்.

கரும்பு தோட்டத்துக்கு சென்றதும், அவரை உறவுக்கு அழைத்தேன். ஆனால், உறவுக்கு மறுத்துவிட்டார். மேலும் கடன் கொடுத்த பணத்தை கொடுத்தால், தான் உறவுக்கு சம்மதிப்பதாக அவமானப்படுத்தினார்.

இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நான், அருகிலிருந்த கல்லை எடுத்து சுசீலாவின் முகத்தில் ஓங்கி அடித்தேன். பின்னர் அவரை கீழே தள்ளி தலையில் கால் வைத்து சேற்றில் அமிழ்த்தினேன்.

இதில் சுசீலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சுசீலா வைத்திருந்த தொலைபேசியையும், அவரை அடித்த கல்லையும் கரும்பு தோட்டத்தில் தூக்கிப்போட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டேன்.

பின்னர் பொலிஸார் என்னை தேடியதை அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தேன் என அவர் தனது வாக்குமூலத்தில் கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதான ஏழுமலையை பொலிஸார் சங்கராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.

அவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, தற்போது ஏழுமலை கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.