இதற்கெல்லாம் எதற்கு தடை: ‘மெர்சல்’ மனுதாரரை கண்டித்த நீதிபதிகள்

0
173

மெர்சல் படத்தில் இந்தியாவின் வரி விதிப்பு முறை குறித்து பல தவறான தகவல்கள் இருப்பதால் அந்தப் படத்திற்கு அளிக்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை தள்ளுபடி செய்ய வேண்டுமெனக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படத்தில் டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்து தவறான தகவல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அந்தப் படத்திற்கு ஒரே நாளில் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறி, அந்தத் தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்ய வேண்டுமென சென்னையைச் சேர்ந்த அஸ்வத்தாமன் என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள், எம்.எம். சுந்தரேஷ், எம். சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கு குறித்து நீதிபதிகள் மனுதாரரிடம் பல கேள்விகளை எழுப்பினர்.

மெர்சல் திரைப்படத்திற்கு எதிராக எத்தனை வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன, இந்தப் படத்தில் என்ன தவறு என்று மனுதாரரிடம் நீதிபதிகள் கேட்டனர்.

இதற்குப் பதிலளித்த மனுதாரர், “‘டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்தும் இந்தியாவின் புதிய வரிவிதிப்பு முறை குறித்தும் மருத்துவ அமைப்பு குறித்தும் பல தவறான தகவல்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன” என்று கூறினார்.

“இந்தப் படத்தின் கதைக்கும் இந்த வசனங்களுக்கும் சம்பந்தமில்லை. போலித்தனமான நடிகர்களின் பிரச்சாரங்களுக்கு இளம் வயதினர் பலியாகாமல் காக்கும் பொறுப்பு தணிக்கை வாரியத்திற்கு இருக்கிறது” என்றும் அஸ்வத்தாமன் வாதிட்டார்.

ஆனால், “சமூக அக்கறை இருந்தால், குடிப்பது போன்ற காட்சிகளுக்கும் புகைபிடிப்பது போன்ற காட்சிகளுக்கும் தடை கோரலாம்.

இதற்கெல்லாம் எதற்கு தடை கோருகிறீர்கள்? ஒருவருக்குப் படம் பிடிக்காமல் இருந்தால் அதைப் பார்க்காமல் இருக்கலாம்.
தணிக்கை வாரியம் ஒரு படத்தைப் பார்த்து தணிக்கை செய்வதற்கு உரிய அமைப்பு. அதன் முடிவில் தலையிட வேண்டியதில்லை” என்று கூறிய நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.