குழப்பதற்கு காரணம் கொழும்பில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்களா…? – நரேன் (கட்டுரை)

0
439
Exif_JPEG_420

 

 

ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டு 8 வருடங்கள் கடந்த நிலையிலும் தமிழ் தேசிய இனம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.

தமிழ் தேசிய இனத்தின் பெரும்பான்மை வாக்குகளினால் ஆட்சிக்கு வந்த மைத்திரி – ரணில் அரசாங்கமும் தமிழ் மக்களின் உடைய மனநிலையை புரிந்து உளப்பூர்வமானதாக அவர்களது நாளாந்தப் பிரச்சனைகளைக் கூட தீர்க்க முன்வரவில்லை.

தமிழ் மக்கள் தமது தலைமையாக கருதுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கூட தமிழ் மக்களது அபிலாசைகளை புரிந்து அதற்கு ஏற்றவகையில் காத்திரமாக செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது.

அதன்விளைவாகவே தமிழ் மக்கள் தமது உரிமைக்காகவும், நீதிக்காகவும் தாமாகவே போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும், தமது சொந்த நிலங்களை விடுவிக்கக் கோரியும், அரசியல் கைதிகளில் விடுதலைக்காகவும் ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் இன்று பல மாதங்களைக் கடந்து சென்று கொண்டிருக்கின்றது.

அதற்கான தீர்வு என்பது கானல் நீராகவே உள்ளது. இந்த நிலையில் இத்தகைய பிரச்சனைகளைப் தீர்ப்பதற்கு காத்திரமான வகையில் அரசிற்கு அழுத்தம் கொடுப்பதை விடுத்து, அடுத்த தேர்தலை மையப்படுத்திய நகர்வுகளில் கூட்டமைப்பின் தலைமை குறிப்பாக தமிழரசுக் கட்சி ஈடுபட்டுள்ளமையானது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது.

2018 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இந்த நாடு உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகளுக்கான தேர்தல்களுக்கு முகம் கொடுக்கவுள்ளது.

அதற்கான காய்நகர்தல்களிலும், வேட்பாளர்களை தெரிவு செய்வதிலும், கட்சிகளைப் பலப்படுத்துவதிலும், மக்களின் ஆதரவுகளை அதிகரித்துக் கொள்வதிலும், அரசியல் எதிரிகளை ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி மௌனிக்கச் செய்வதிலும் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கட்சி என்று கூறப்படுகின்ற தமிழரசுக் கட்சியும் இதற்கான தயார்படுத்தல்களை அதேவழியில் தீவிரப்படுத்தியுள்ளது.

ஏனைய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளும் தத்தமது வேட்பாளர்களை தெரிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.

இருப்பினும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது குழப்பமாகவேயுள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தேர்தல்களை விடவும், அவர்களது நாளாந்தப் பிரச்சனையே முக்கியத்துவம் பெறுகிறது.

இத்தகைய பின்னனியில், வடக்கு மாகாணசபையின் ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் பத்து மாதங்கள் உள்ள நிலையில் இப்போதிருந்தே அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் குறித்து தேடுதல்களும், கருத்துக்களும் வெளியாகிவருகின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் தமிழரசுக் கட்சி தன்னிச்சையாகவும், தேர்தல் விஞ்ஞாபனத்தை மீறியும் நடந்து கொள்வதாக பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில் கூட்டமைப்பு உறுதியான கட்டமைப்புடன் இனிவரும் தேர்தல்களை சந்திக்குமா என்ற கேள்வி எழுகிறது.

இந்த நிலையிலேயே வடமாகாண சபையின் தவிசாளரும், தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினருமான சீ.வீ.கே தமிழரசுக் கட்சியினால் நியமிக்கப்படுபவர் தான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்ற தொனியில், ‘இனிவரும் காலங்களில் வடமாகாண முதலமைச்சராக இறக்குமதிகளைக் கொண்டுவரப்போவதில்லை என தமிழரசுக் கட்சி முடிவெடுத்துள்ளது.

இறக்குமதிகளின் அனுபவம் தமிழரசுக் கட்சிக்கு உண்டு. இனிவரும் காலங்களில் எந்த தேர்தலாக இருந்தாலும் தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் இந்த மண்ணிலே எங்களோடு நின்று, கட்சியோடு நின்று பாடுபட்டவர்கள் தான் தேர்தல்களில் பங்குபற்றலாம்.’ என தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

ஒட்டுமொத்த தமிழரசுக் கட்சியும் கூட்டமைப்பின் பெயரால் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதையே குறிக்கோளாக கொண்டுள்ளமை வடக்கு மாகாணசபை தவிசாளர் சீ.வீ.கே.சிவஞானத்தின் கூற்றில் இருந்து தெளிவாகிறது.

இன்றைய முதலமைச்சர், தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதாக இருந்தால் அங்கத்துவ கட்சிகள் அனைவரும் தன்னைக் கேட்டுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அனைவரின் ஒப்புலையும் தான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பியிருந்தார்.

அதனடிப்படையிலேயே அன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 5 அங்கத்துவ கட்சிகளும் நேரில் சென்று முன்னாள் நீதியாரசர் சி.வி. விக்கினேஸ்வரனை சந்தித்து தமது விருப்பத்தினை வெளிப்படுத்தினர்.

அதன் பின்னரே அவரும் வேட்பாளராக சம்மதித்தார்.

கொழும்பில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவராக இருந்தாலும் சி.வி கூட்டமைப்பின் ஒற்றுமையை பலப்படுத்துவராகவே இருந்தார்.

தேர்தல் வெற்றிக்கு பின்னர் அவரை தமிழரசுக் கட்சிக்குள் இணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
CM-Large

ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சிக்கு சார்பாக இருந்த போதிலும், அந்தக் கட்சியின் தவறான கொள்ளை முடிவுகளை சுட்டிக் காட்டி தன்னை ஒரு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியாகவே தொடர்ந்தும் முன்னிலைப்படுத்தி வந்தார். கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைவாக பாதிக்கப்பட்ட தமிழ் தேசிய இனத்தின் குரலாக தொடர்ந்தும் செயற்பட்டும் வருகின்றார்.

தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான போக்கிற்கு ஒத்து வரவில்லை என்ற காரணத்திற்காக முதலமைச்சரை பதவியில் இருந்து இறக்குவதற்கு தமிழரசுக் கட்சி இப்பொழுதும் கூட தக்க தருணத்தை எதிர்பார்த்து இருக்கிறது.

தலைவர்கள் போராட்ட களத்தில் இருந்தே உருவாவார்கள், உருவாக வேண்டும் என்பது தான் சரியான நிலைப்பாடு.

எத்தகைய போராட்டங்களையும் நடத்த வேண்டாம் என்று சொல்லும் தமிழரசுக் கட்சி மக்களோடு நிற்கின்ற தலைவர்கள் என்று யாரை இனங்காட்ட முற்படுகிறது.

கூட்டமைப்பினுடைய வேட்பாளராக வரவேண்டிய ஒருவரை தமிழரசுக் கட்சி தனித்து எப்படி தானாகவே தீர்மானிக்க முடியும்…?.

ஒரு நீதியரசருக்கு போட்டியாக ஒய்வு பெற்ற தலைமை நீதிபதியை நிறுத்துவதால் தமிழ் மக்களுடைய பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விடுமா…?,

ஒரு சட்டத்தரணியாகவும், ஓய்வு பெற்ற நீதியரசராகவும், மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று முதலமைச்சராகவும் திகழ்கின்றவர், தான் பிரதிநித்துவப்படுத்தக் கூடிய தேசிய இனத்தின் நலன்சார்ந்து முன் வைத்த கோரிக்கைகளையும், கருத்துக்களையும் தமிழரசுக் கட்சி எந்தளவிற்கு செவி மடுத்தது…?

sivagnanamசீ.வி.கே
இறக்குமதி செய்யப்பட்டவர்களினால் பட்ட துன்பம் போதும். இனியும் அப்படி ஒரு தவறை செய்வதற்கு தமிழரசுக் கட்சி இடமளிக்காது என்று தமிழரசுக் கட்சியின் முடிவை தன்னிச்சையாக சீ.வி.கே அறிவித்தாரா அல்லது கட்சியுடன் பேசி எடுக்கப்பட்ட முடிவா என்று தெரியவில்லை.

தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும், வெளியுறவுச் செயலாளருமான எம்.ஏ.சுமந்திரனும் கொழும்பில் இருந்து இறக்குதி செய்யப்பட்டவரே.

திரு. சிவஞானத்தின் உடைய மேற்படி கருத்து அவரை மையப்படுத்தி சொல்லப்பட்டதா என்ற கேள்வியும் எழுகிறது…?

முன்னாள் தலைமை நீதியரசரை முதலமைச்சர் வேட்பாளராக நியமிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதாமே என்று ஒரு ஊகத்தின் அடிப்படையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இறக்குமதி செய்யப்பட்டவர்கள் தேவையில்லை என்று சொல்லியிருப்பதன் மூலம் அவர் தலைமை நீதிபதியை மையப்படுத்தி சொல்லியதாக தெரியவில்லை.

அவரை மையப்படுத்தி சொல்வதாக இருந்தால் இது வெறும் ஊகத்தின் அடிப்படையிலான கேள்வி.

அதற்கான நேரம் வரும்போது அதைப் பற்றி சிந்திப்போம் என்று சொல்லியிருக்கலாம். அல்லது கட்சி உரிய நேரத்தில் சரியான முடிவெடுக்கும் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் அவ்வாறு கூறாமையானது மேற்படி சந்தேகத்தை வலுப்படுத்தியிருக்கிறது.

எந்த முதலமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முனைப்பு காட்டுகின்றனரோ, அந்த முதலமைச்சரால் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் பலவற்றை ஏகமனதாக வட மகாணசபை நிறைவேற்றியிருந்தது.

புதிய அரசியல் யாப்பிற்கான திட்ட முன்மொழிவு உட்பட இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகையில் சீ.வீ.கே தவிசாளராக செயற்பட்டு இருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதனை பார்க்கின்ற போது முதல்வரின் அரசியல் செயல்பாடு சரியான பாதையில் செல்வதாகவே அவதானிக்க முடிகிறது.

indexபாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் அரசியல்பிரவேசத்தின் பின்னர் இன்று வரையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நகர்வுகள் அனைத்திற்கும் அவரே முன்னின்று செயற்பட்டு வருகிறார்.

குறிப்பாக ஐ.நா விவகாரம் முதல் புதிய அரசியல் யாப்பிற்கான இடைக்கால அறிக்கை தயார் செய்தல் வரை கூட்டமைப்பின் பிரதிநிதியாக இவரே முன்னின்று செயற்பட்டுள்ளார்.

அது இப்போது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையும் கேள்விக்குள்ளாகியுள்ளது. இவைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு தான் சீ.வீ.கே மேற்சொன்ன கருத்தை கூறினாரோ என்றும் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.

முன்னாள் தலைமை நீதியரசரை அடுத்த வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக பரிந்துரை செய்தது பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

ஆக, தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டைக் கூட இறக்குமதி செய்யப்பட்ட ஒருவரே கையாள்வதாக தெரிகிறது. இதற்காகத்தான் அவர் இவ்வாறு சொன்னாரா எனபதும் தெரியவில்லை.

ஒட்டுமொதத்தில் பார்க்கின்ற போது தமிழரசுக் கட்சி தன்னையே ஒரு கட்டுக் கோப்பில் வைத்திருக்க முடியாத நிலையில் தனது கட்சியைப் போன்றே, அனைத்தும் கட்டுப்பாடற்ற வகையில் தன்னிச்சையாக செயற்பட வேண்டும் என்று விரும்புவதாகவே தெரிகிறது.

இதன்மூலம் தன்னுடைய கையறு நிலையை பொதுமையாக்கி ஒட்டுமொத்த தமிழ் தேசிய இனத்தின் அரசியல் நடவடிக்கைகளையும் சீர்குலைத்து இருக்கிறது.

இதன் காரணமாகவே நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து எட்டு மாதங்களுக்கும் மேலாக வீதிகளில் இறங்கிப் போராடும் மக்களின் பிரச்சளைக்கு தீர்வு காணாப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அரசியல் கைதிகள் தங்களுடைய உரிமைகளை முன்வைத்து நீதி வேண்டும் எனக் கோரி உயிருக்கு ஆப்பதான நிலையில் நான்கு வாரங்களாக உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுடைய பிரச்சனையை உரிய வழியில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எதனையும் காத்திரமாகவும், ஈடுபாட்டுடனும் மேற்கொள்ளாமல் பாராளுமன்றத்தில் ஒரு ஒத்தி வைப்பு பிரரேரணை மூலமும், ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுவதன் மூலமும் தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட தலைவரும், கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித்தலைவருமான இரா.சம்மந்தன் அணுகுயிருக்கிறார்.

மறுபுறத்தில், சில அரசியல் கட்சிகளும், பொது அமைப்புக்களும், பல்கலைக்கழக மாணவர்களும் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று நிறைவேற்றும் படி அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

அதனடிப்படையிலேயே ஜனாதிபதியும் உண்ணாவிரதம் இருந்த பல்கலைக்கழக மாணவர் பிரததிநிதிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இனிவரும் காலங்களில் போராட்ட களத்தில் இருந்து தலைவர்கள் உருவாவார்கள். இறக்குமதி செய்வதற்கு அவசியம் இல்லாத நிலை ஏற்படும்.

– நரேன்-

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.