“சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017: (சிம்மம் முதல் விருச்சிகம் வரை)”

0
744

2017-ம் ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை  ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் அவர்கள் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய 4 ராசிகளுக்கான பலன்களை நமக்கு கணித்து வழங்கியுள்ளார்.

இந்த ஹேவிளம்பி ஆண்டு தட்சிணாயன புண்ணிய காலத்தில் சரத் ருது, ஐப்பசி மாதம் 9 ஆம் தேதி (26-10-2017) வியாழக்கிழமை, சுக்லபட்ச (வளர்பிறை) சப்தமி, பூராடம் நட்சத்திரம், சுக நாம யோகம், கரஜை கரணம் நேத்திரம் 1, ஜீவன் 1/2, சூரியபகவான் ஹோரையில் பிற்பகல் மணி 3.23 ஐ.எஸ்.டி. அளவில் சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

இங்கு, 23.1.2020 வரை சஞ்சரித்துவிட்டு 24-01-2020 அன்று காலை மணி 9.55 ஐ.எஸ்.டி. மணி அளவில் சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்த காலகட்டத்தில் 11-10-2018 அன்று இரவு மாலை 07.20 ஐ.எஸ்.டி. மணி அளவில் குருபகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

மேலும் 5-11-2019 அன்று காலை மணி 5.20 ஐ.எஸ்.டி மணி அளவில் குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். ராகு- கேது பகவான்கள் 23.3.2019 அன்று மாலை மணி 4.14 ஐ.எஸ்.டி. அளவில் கடக, மகர ராசிகளிலிருந்து மிதுன, தனுசு ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள். இந்த சனிப்பெயர்ச்சி பலன்கள் 11-10-2018 வரை ஒரு பகுதியாகவும் 23-01-2020 வரை மற்றொரு பகுதியாகவும் (குருபகவானின் சஞ்சாரத்தைக் கருத்தில் கொண்டு) எழுதப்பட்டுள்ளது.

***

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

26-10-2017 முதல் 11-10-2018 வரை உள்ள காலகட்டத்தில்  குடும்பத்தில் மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கும் சேவை செய்வீர்கள். பொருளாதாரம் மேன்மையடையும். உடன் இருந்த நண்பர்களால் ஏமாற்றப்பட்ட நீங்கள் அவர்களைப் புரிந்துகொண்டு விலகி விடுவீர்கள். பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடு பட்டாவது காப்பாற்றி விடுவீர்கள்.

செய்தொழிலில் புதிய நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். இல்லத்தில் தடைப்பட்டிருந்த திருமணம் கைகூடும். குழந்தை இல்லாத குடும்பத்தில் குழந்தைகள் பிறக்கும். குடும்பத் துணைவருக்கு நெடுநாளாக இருந்து வந்த உடல் உபாதைகள் மறையும்.  முன்காலத்தில் இழந்த பொருள்களும் திரும்ப கைவந்து சேரும். உடல்நலம் சிறப்பாக அமையும். தேக ஆரோக்கியம் மேம்பட தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். வழக்குகளிலும் சாதகமான திருப்பங்கள் ஏற்படும் காலகட்டமாக இது அமைகிறது.

12-10-2018 முதல் 23-01-2020 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் பூர்த்தியாகும். பொதுச்சேவையில் மனதைச் செலுத்துவீர்கள். பொருளாதார சுபிட்சம் உண்டாகும்.

குழந்தைகள் வழியில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். அவர்களின் உயர்படிப்புக்காக அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பீர்கள்.

குடும்பத்தில் குதூகலம் காணப்படும். புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். அதேநேரம் பூர்வீகச் சொத்துக்களுக்குச் சிறிது செலவு செய்வீர்கள். பெற்றோர்களுக்கும் சிறிது மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

மற்றபடி திருமணம் போன்ற சுபகாரியங்களில் இருந்து வந்த தடை விலகிவிடும். புதிய தொழில்களை வெளியூரிலும் ஆரம்பிப்பீர்கள். போட்டி பந்தயங்களிலும் வெற்றி பெறுவீர்கள். குருட்டு அதிர்ஷ்டம் என்பார்களே அது உங்களை இந்த காலகட்டத்தில் தேடிவரும் என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் அலுவலக வேலைகளில் பளு குறைந்து காணப்படும்.

பதவி உயர்வு, ஊதிய உயர்வு இரண்டும் தக்க நேரத்தில் கிடைக்கும். வாகனக்கடன், வீடு வாங்கக் கடன் போன்றவைகள் கிடைக்கும். மனமகிழ்ச்சியளிக்கும் வெளியூர் பயணங்களைச் செய்வீர்கள். அலுவலகத்தில் மிடுக்காக வலம் வருவீர்கள். இந்த காலகட்டத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.

வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் உழைத்து இரண்டு மடங்கு லாபத்தைக் காண்பார்கள். வரவு செலவு கணக்குகளைச் சரியாக வைத்துக்கொண்டு அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பீர்கள்.

பல இடங்களுக்குச் சென்று வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கூட்டாளிகளுடன் சேர்ந்து புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். சிலருக்கு ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புகள் கிடைக்கும். விவசாயிகளுக்கு மகசூல் பெருகும்.

கொள்முதல் லாபம் அதிகரிக்கும். கால்நடைகளாலும் லாபங்கள் உண்டாகும்.  இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். புதிய நிலங்கள் குத்தகைக்கு வந்து சேரும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். சோதனைகள் மறையும். கட்சியில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். கட்சியின் கட்டளைகளை தீவிரமாக நிறைவேற்றி நல்ல பெயரெடுப்பீர்கள்.

எதிரிகளை சாதுர்யமாகப் பேசி எதிர்கொள்வீர்கள். புதிய பயணங்களைச் செய்து புகழும் வருமானமும் பெறும் காலகட்டமாகும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்.  செல்வமும் புகழும் சேரும். புதிய ஒப்பந்தங்களும் நாடி வந்து சேரும். கடினமாக உழைத்து உங்களின் நிலையை தக்கவைத்துக்கொள்வீர்கள்.

பெண்மணிகள் இந்த காலகட்டத்தில் ஏற்றங்களையும் மாற்றங்களையும் பார்ப்பீர்கள். வருமானம் சீராக இருக்கும்.

குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உடன்பிறந்தோரும் சாதகமாக இருப்பார்கள்.  இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களையும் வாங்குவீர்கள். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்துவர். தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். விளையாட்டுகளிலும் ஈடுபட்டு உற்சாகமடைவீர்கள்.

பரிகாரம்: அனுமனை வழிபட்டு வரவும்.

***

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

26-10-2017 முதல் 11-10-2018 வரை உள்ள காலகட்டத்தில்  அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருந்து செயலாற்றுவீர்கள்.

மனதில் இருந்த கவலைகள் குறையும். உங்கள் பேச்சில் உறுதி இருக்கும். முகத்தில் பொலிவும் வசீகரமும் கூடும். பிரிந்திருந்த உறவினர்கள் மறுபடியும் குடும்பத்தில் இணைவார்கள். பொருளாதாரமும் செழிக்கும். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

சிலருக்கு விருதுபெறும் யோகமும் உண்டாகும். வழக்கு வியாஜ்யங்கள் சாதகமாக தீர்ப்பாகும். புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள்.

சம்பந்தமில்லாத விஷயங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். மற்றபடி சோதனைகளைச் சாதனைகளாக மாற்றிக் கொள்வீர்கள். போட்டியாளர்களை கவனமாகக் கையாளவும்.

நண்பர்கள் உங்களுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற மாட்டார்கள். இருந்தாலும் “கொக்குக்கு ஒன்றே மதி’ என்கிற ரீதியில் கருத்தாகப் பணியாற்றுவீர்கள். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதைகள் குறையாது.

கடினமாக உழைத்து கனவுகளை நனவாக்கிக் கொள்வீர்கள். தத்துவத்திலும் இலக்கியத்திலும் ஈடுபாடு உண்டாகும். சிறிய தூரப்பயணங்களால் நன்மைகள் கிடைக்கும்.

12-10-2018 முதல் 23-01-2020 வரை உள்ள காலகட்டத்தில் முரண்பாடாக நடந்துகொண்டிருந்த நண்பர்கள் இணக்கமாக மாறுவார்கள்.

உங்கள் வேலைகளைத் திட்டமிட்டுச் சரியாகச் செய்து முடித்து விடுவீர்கள். புதிய நண்பர்களும் கிடைப்பார்கள். புரியாத புதிர்களுக்கு விடை கிடைக்கும். மனதில் தெம்பு கூடும்.

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நல்லது நடக்குமா என்று ஏங்கிக்கொண்டிருந்த நீங்கள் தலை நிமிர்ந்து நடப்பீர்கள்.

குடும்பத்தில் அனாவசியச் செலவுகள் ஏற்படாமல் சிக்கனமாக இருப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகளும் குறையும்.

புதிய தொழில் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். தேவைக்கேற்ப வருமானம் கிடைக்கும். சரியான நேரத்தில் ஓய்வெடுப்பீர்கள். குடும்பத்துடன் வெளியூர் சென்று மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கும் காலகட்டமாக இது அமைகிறது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சிறப்பாக முடிவடையும். எதிர்பார்த்த வருமானம் உயர்வு கிட்டும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும்.

சக ஊழியர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். அவர்களின் வேலைகளிலும் நீங்கள் பங்கு கொள்வீர்கள்.

வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பார்கள். கூட்டாளிகளிடம் நற்பெயர் வாங்குவீர்கள். போட்டிகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகும். தானிய விற்பனை நல்ல முறையில் நடக்கும். இதனால் சிறப்பான லாபத்தைப் பார்ப்பீர்கள்.

அரசியல்வாதிகளின் முயற்சிகள் சிறப்பாக வெற்றியடையும். மேலும் உங்கள் கடமைகளில் சிரத்தையாக இருப்பீர்கள்.

கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது கவனமாக இருப்பீர்கள். எதிர்கட்சியினரும் உங்களுக்குச் தேவையான ஒத்துழைப்பை நல்குவார்கள். தொலைதூரத்திலிருந்து  சாதகமான செய்தி ஒன்று வந்து சேரும் காலகட்டமாக இது அமைகிறது.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் முயற்சிகள் அனைத்தும் உங்களை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும்.

நண்பர்கள் உங்களுக்கு புதிய வாய்ப்புகளைத் தேடித்தருவார்கள். உங்கள் உழைப்பைக் கூட்டிக்கொண்டு அனைத்து வேலைகளையும் திறம்படச் செய்து முடிப்பீர்கள். சிறப்பு விருந்தினர் என்கிற அந்தஸ்து கிடைத்து உங்கள் கௌரவம் உயரும்.

பெண்மணிகள் ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள். பேச்சில் பொறுப்புடனும் நிதானத்துடனும் இருப்பீர்கள்.

பொருளாதார நிலை மேம்படும். கணவருடனும் விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

புத்திர பாக்கியம் இல்லாதோருக்கு இந்த காலகட்டத்தில் புத்திர பாக்கியம் கிடைக்கும்.  மாணவமணிகளின் புத்தி கூர்மை பளிச்சிடும். நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்களும் பெற்றோரும் உங்களிடம் இணக்கமாக இருப்பார்கள். யோகா பிராணாயாமம் போன்றவற்றைச் செய்து உடல் நலம் மனவளம் இரண்டையும் மேம்படுத்திக் கொள்வீர்கள்.

பரிகாரம்: அம்பாள் தரிசனம் உகந்தது.

***
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

26-10-2017 முதல் 11-10-2018 வரை உள்ள காலகட்டத்தில்  வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். கடினமாக உழைத்து ஆதாயங்களைப் பெறுவீர்கள். பழைய கடன்களையும் திருப்பி அடைத்து விடுவீர்கள்.

ஆன்மிகத்தில் தெய்வ வழிபாட்டிலும் நாட்டம் செலுத்துவீர்கள். உயர்ந்தோர்களின் நட்பு கிடைத்து சமுதாயத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும்.

தன்னம்பிக்கையுடன் உலா வருவீர்கள். உங்களுக்கு எதிராகப் போடப்பட்டிருந்த வழக்குகளும் தோற்றுவிடும். அரசு அதிகாரிகளிடமும் உங்களின் தொடர்பு நல்ல முறையில் இருக்கும்.

குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். மேலும் குடும்பத்தில் மழலைப் பாக்கியங்கள் உண்டாகும். உங்களிடமிருந்து விலகிய முன்னாள் நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். அதிக  ஆசைப்பட்டு ஸ்பெகுலேஷன் துறைகளில் அகலக்கால் வைக்க வேண்டாம்.  தேவைகள் நல்லபடியாக பூர்த்தியாகும்.

12-10-2018 முதல் 23-01-2020 வரை உள்ள காலகட்டத்தில் நீங்கள் நினைத்த காரியங்களை சாதித்து விடுவீர்கள். உங்கள் கையில் எக்கச்சக்கமாகப் பணம் புரளும்.

செய்தொழிலில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். குடும்பத்துடன் விருந்து கேளிக்கைகளுக்குச் சென்று வருவீர்கள்.

புதிய ஆலயங்களுக்கும் சென்று வழிபாடு நடத்துவீர்கள். உடன்பிறந்தோரும் அனுசரணையாக இருப்பார்கள்.  சிலருக்கு வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

 புதிய முயற்சிகளில் இறங்கும் முன் ஆராய்ந்து ஈடுபடுவீர்கள். முன்வைத்த காலை பின் வைக்கமாட்டீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் புகழ் செல்வாக்கு உயரும்.

உடல் ஆரோக்கியமும் சிறப்பாக அமையும். யோகா பிராணாயாமம் கற்பீர்கள்.  உங்களின் சாந்தகுணம் உங்களைப் பெருமைப் படுத்தும். அமைதியாகவும் டென்ஷன் இல்லாமலும் இருக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும்.

மேலதிகாரிகள் உங்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றத் தொடங்குவார்கள். அலுவலகத்தில் சகஜமான சூழ்நிலையை காண்பீர்கள். தலைநிமிர்ந்து நடந்து தன்னம்பிக்கையுடன் உலாவரும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

வியாபாரிகள் புதிய ரகசியங்களைக் கற்றுக்கொள்வார்கள். புதிதாக வேறு தொழில் தொடங்குவீர்கள். கூட்டாளிகளுடன் இணக்கமாக நடந்து கொள்வீர்கள். வீண் ஆசாபாசங்களை வளர்த்துக்கொள்ள வேண்டாம். கூடுமானவரை பொருள்களை ரொக்கத்திற்கே விற்பீர்கள்.

விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பார்கள். கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை செலுத்துவார்கள்.

வங்கியில் கடன் வாங்கி புதிய பயிர்களையும் பயிரிடுவீர்கள். எதிர்பார்த்த வருமானத்தையும் காண்பீர்கள். பயிர்களில் பூச்சிகள் பாதிப்பு ஏற்படாததால் இந்த வகையில் எந்த செயலும் ஏற்படாது காக்கப்படுவீர்கள்.

அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பார்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவார்கள்.

இதனால் புதிய பதவிகள் உங்களைத் தேடிவரும். எதிரிகளும் உங்களிடம் அடங்கி நடப்பார்கள், மக்களின் ஆதரவு உங்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். உங்களின் முகத்தில் மலர்ச்சியும் பொலிவும் காணப்படும். சில குறிப்பிடத்தக்க சாதனைகளையும் செய்வீர்கள். சிறிய வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேறுவீர்கள்.

பெண்மணிகளுக்கு கணவருடன் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். பொறுப்புகளைச் சரியான முறையில் நிறைவேற்றுவீர்கள்.

உடன்பிறந்தோருக்கு இடையே  நிலவி வந்த பிணக்குகளும் நீங்கும். தெய்வ வழிபாட்டைக் கூட்டிக் கொள்வீர்கள். மாணவமணிகள் கல்வி  உயர்வுக்குக்காக எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும். சிலருக்கு கல்வி கற்பதற்கான இடமாற்றமும் ஏற்படும். பெற்றோரிடம் கிடைக்கும் ஆதரவு உங்களை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்லும்.

பரிகாரம்: மஹாலட்சுமியை வழிபட்டு வரவும்.

***

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

26-10-2017 முதல் 11-10-2018 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். எதிர்பாராத அளவுக்கு அபிவிருத்தியைக் காண்பீர்கள், முக்கியமான வழக்குகளில் சாதகமான தீர்ப்பு  கிடைக்கும்.

வீட்டிலும் வெளியிலும் உங்கள் செல்வாக்கு படிப்படியாக உயரும். திருமணமாகி புத்திரபாக்கியத்திற்கு ஏங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும்.

உணவையும் உடற்பயிற்சியையும் சரியாக எடுத்தும் செய்தும் வருவீர்கள். மனக் கவலைகளிலிருந்து மீள, தியானம், பிராணாயாமம் செய்து உற்சாகமாக இருப்பீர்கள். குலதெய்வ பூஜையும் செய்து குலதெய்வத்தின் அனுக்கிரகத்தையும் தேடிக்கொள்வீர்கள்.

பெரியோர்களின் நட்பு தேடாமலேயே கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி ஒன்று உங்களைத் தேடி வந்து உங்களை திக்குமுக்காடச் செய்யும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். அசையாச் சொத்துக்கள் வாங்க, கடன் வாங்க நேரிடும். மறைமுக எதிரிகளையும் புறம்பேசுபவர்களையும் இனம் கண்டு ஒதுக்கி விடுவீர்கள்.

12-10-2018 முதல் 23-01-2020 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தினரிடமிருந்த வெறுப்புகள் மறைந்து மகிழ்ச்சியாக உறவாடுவீர்கள்.

தெய்வ வழிபாட்டையும் நம்பிக்கையுடன் மேற்கொள்வீர்கள். பழைய நண்பர்களையும் சந்திப்பீர்கள். அவர்களால் செய்தொழிலில் புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள். உங்களின் தனிப்பட்ட ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். தன்னடக்கத்துடன் போதுமென்ற மனதுடன் இருப்பீர்கள்.

சாதக பாதகங்களை ஆராய்ந்து உங்களின் நுண்ணறிவினால் சரியான முடிவுகளை எடுப்பீர்கள்.

பிறரைப் பற்றிய  முக்கிய ரகசியங்களையும் அறிய முற்படுவீர்கள். எதிரிகளிடம் வெளிப்படையாக எதிர்ப்பைக் காட்ட  வேண்டாம். எதிர்காலத்தைப் பற்றி நினைக்காமல் இன்று எது முக்கியமோ அதைச் செய்வீர்கள். இக்கட்டான தருணங்களில் உங்களின்சமயோசித புத்தி கைகொடுக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளிடம் கொண்டுள்ள நட்புறவு படிப்படியாக வளரும்.

வருமானமும் கூடத் தொடங்கும். நெடுநாள்களாக எதிர்பார்த்திருந்த இடமாற்றம் கிடைக்கும். சக ஊழியர்களும் உங்களுக்கு தங்களாலான உதவிகளைச் செய்வார்கள். அதிகம் உழைக்க நேரிடும்.

வியாபாரிகளின் யுக்திகளை கூட்டாளிகள் பாராட்டுவார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். கொடுக்கல் வாங்கலில் இந்த தொய்வுகள் நீங்கி வருமானம் உயரும்.

வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். கூட்டாளிகள் நேசக்கரம் நீட்டுவர். வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். பயிர்களில் பாதிப்புகள் குறையும். உங்களுக்குக்கீழ் பணிபுரிபவர்களிடம் அக்கறையாக நடந்துகொள்வீர்கள். பழைய கடன்கள் வசூலாகும். புதிய விவசாய உபகரணங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். தொண்டர்களின் அதிருப்திகளைச் சந்திக்க நேரிடும். அதனால் பொறுமையுடன் நடந்துகொள்ளவும். பெயரும் புகழும் உயரும். எதிரிகளின் பலம் குறையும்.

எதிர்பார்த்த பதவிகள் உங்களைத் தேடிவரும். கலைத்துறையினருக்கு திருப்திகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெறும். வருமானம் எதிர்பார்த்த அளவில் இருக்கும். கடுமையாக உழைப்பீர்கள், புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். கச கலைஞர்களின்ஆதரவுடன் கலைப்பயணங்களைச் செய்வீர்கள்.

பெண்மணிகளுக்கு தன்னம்பிக்கை கூடும். உடன்பிறப்புகளும் ஏற்றம் காண்பார்கள். திடீர் பயணங்களும் அதிர்ஷ்டவாய்ப்புகளைப் பெற்றுத் தரும் புதிய வீட்டிற்கு மாற்றம் செய்யும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

 மாணவமணிகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். அதிக மதிப்பெண்களைப் பெற்று முதல் மாணவராக வருவீர்கள். உடற்பயிற்சிகளை மேற்கொண்டு மனப்புழுக்கத்திலிருந்து விடுபடுவீர்கள். பெற்றோர்களின் ஆதரவு குறைவாக இருப்பதால் அவர்களிடம் பெரிய கோரிக்கைகளை கொண்டு செல்ல வேண்டாம்.

பரிகாரம்: திருவேங்கடநாதரை வழிபட்டு வரவும்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.