“புடவைத் தடுக்கி தீயில் விழுந்த பெண்: தீமிதித் திருவிழாவின் போது நடந்த சோகம் (விடியோ)

0
1031

பெங்களூரில் கோயில் ஒன்றில் நடைபெற்ற தீமிதித் திருவிழாவின் போது அக்னிக் குண்டத்தில் இறங்கி நடந்த பெண், புடவைத் தடுக்கி தீயில் விழுந்த காட்சி விடியோவில் பதிவாகியுள்ளது.

இந்தியாவில் பல்வேறு கலாசாரங்களும், மத நடைமுறைகளும் உள்ளன. இந்தியாவின் ஒவ்வொருப் பகுதி மக்களும், தங்களுக்கென்று பிரத்யேக வழிபாட்டு முறைகளைக் கையாளுகிறார்கள். இதில் சில வழிபாட்டு முறைகள் பார்ப்போரை பதற வைப்பதாகவும் இருக்கும்.

பொதுவாகவே தீமிதித் திருவிழா என்பது நாட்டின் பல மாநிலங்களிலும் நடத்தப்படும் நிகழ்ச்சிதான். அதில் இறங்கி நடப்பவர்களை பார்க்கும் போது நமக்குள்ளும் சற்று பதற்றம் தொற்றிக் கொள்வது இயற்கையே.

நமக்கு இருக்கும் பதற்றத்துக்குக் காரணம், அவர்கள் தவறி விழுந்து விட்டால்.. என்பதே.

அப்படி தீமிதித் திருவிழாவில் யாருமே தவறி விழாமல் இருப்பதும் இல்லை. சில சமயம் ஓடுவதால், கால் இடறி கீழே விழும் பக்தர்களை அருகில் இருப்போர் ஓடிச் சென்று தூக்கிப் பாதுகாப்பதும் நடக்கும்.

அந்த வகையில், பெங்களூருவில் நடந்த தீமிதித் திருவிழாவின் போது சேலை கட்டிக் கொண்டு நடந்த பெண் பக்தை ஒருவர், தடுக்கி கீழே விழுவதும், அவரை அருகில் இருந்தோர் தூக்கிக் காப்பாற்றுவதும் விடியோவில் பதிவாகியுள்ளது.

அந்த விடியோவில், தலையில் கரகத்தை சுமந்தபடி ஒரு பக்தர் தீயில் இறங்கி நடக்க அவரைத் தொடர்ந்து சேலை கட்டிய பெண் தீயில் இறங்கியதும் வேகமாக நடக்க, திடீரென யாரும் எதிர்பாராத வகையில் தீக்குண்டத்தில் தடுக்கி விழுகிறார்.

விழுந்த அந்த நொடி அவரது உடலில் எந்த அசைவுமில்லை. அருகில் நின்றிருந்த நபர், அவரை அப்படியே பிடித்து வெளியே இழுத்துக் காப்பாற்றுகிறார். இதனைப் பார்க்கும் அனைவரது நெஞ்சும் பதறுகிறது.

உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கூறுகையில், இதே தீமிதித் திருவிழாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்பெண் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்றார். தற்போது மீண்டும் தீயில் விழுந்து படுகாயமடைந்துள்ளது வேதனை அளிக்கிறது என்கிறார்கள்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.