“துல்லியமாகக் கணிக்கப்படும் ஒருவரின் ஜாதகத்தில் ஆன்மாவைப் பற்றி தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியுமா..? -(பகுதி-2)

0
1027

பிறந்த இடம் மற்றும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு நிமிட துல்லியத்தில் கணிக்கப்படும் ஒருவரின் ஜாதகத்தில் ஆன்மாவை பற்றி தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியுமா என்ற கேள்வியுடன் முடிந்த முந்தைய அத்தியாயத்தை தொடர்வோம்.

ஜாதகத்தில் கிரகங்களும் கால நிர்ணயமும்

நாம் இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் ஜாதகம் என்பது காலத்தை அடிப்படையாகக் கொண்டது. காலத்தை தெளிவாக அறிந்துகொள்ளவும் கணிக்கவும், இறைவனின் படைப்புகளான கோள்கள், நட்சத்திரங்கள், மற்றும் பஞ்சபூதங்கள் கருவிகளாக உள்ளன.

ஒரு குழந்தை பிறந்த இடம் மற்றும் நேரத்தைக் கொண்டு, அந்த நேரத்தில் கோள்கள், விண்மீன்கள் மற்றும் பஞ்சபூதங்கள் அமைந்துள்ள விதத்தை ஒரு வரைபடமாக்கி ஜாதகக் கட்டம் உருவாக்கப்படுகிறது.

அதிலிருந்து தருவிக்கப்படும் துல்லிய கணக்கீடுகளின் அடிப்படையில், ஜாதகம் மூலம் ஒருவரின் எதிர்காலத்தை அறிந்துகொள்ள முடியும்.

நம்முடைய வாழ்நாளில் எந்தெந்த காலங்களில் நன்மை தீமைகள் நம்மை வந்தடைகின்றன என்பதை ஜாதகத்தின் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே ஒவ்வொரு மனிதனின் ஆசை. அந்த வகையில், நன்மை தீமைகளை வெளிப்படுத்தக்கூடிய சக்தியாக ஜாதகத்தில் அமைந்துள்ள கிரகங்களின் தசாபுத்தி, அந்தர காலங்கள் அமைகின்றன.

கிரகங்களின் தசாபுத்தி, அந்தர காலங்கள் என்பது சரியாகப் பகுக்கப்பட்ட கால நிர்ணயத்தை அடிப்படையாகக் கொண்டவை. அவை, வரிசைக்கிரமமாக ஒருவரின் வாழ்நாள் காலங்களை ஆளுகின்றன.

அதாவது, ஒரு தசைக்கான காலத்தை மற்ற எல்லா கிரகங்களும் வரிசைக்கிரமமாக அவற்றுக்குரிய காலஅளவுக்கு ஏற்றார்போல் பிரிக்கப்பட்டு, அந்தத் தசையின் உட்பிரிவான புத்திகளாகச் செயல்படுகிறது.

இதுபோல், புத்தியை உட்பிரிவுகளாக்கி அந்தரம் எனவும், அந்தரத்தை உட்பிரிவுகளாக்கி பிராணன் எனவும், பிராணனை உட்பிரிவாக்கி சூட்சுமம் என்றும் ஒருவரின் வாழ்நாள் கால அளவுகள் வகுக்கப்படுகின்றன.

ஒருவரின் ஜெனனத்தின்போது, அவர் பிறந்த நட்சத்திரத்தைக் கொண்டு அவருக்கான முதல் தசையின் கால அளவு கணிக்கப்படுகிறது. முதலில் ஏற்படுவதாக நிர்ணயித்த தசையின் காலத்தை அனுசரித்து, பின்வருபவை வரிசைக்கிரமமாக அமைகின்றன.

அவற்றின் கால அளவுகள் மாறுதலுக்கு உட்படாதவை. இவற்றைக்கொண்டு, ஒரு நாளின் சில மணி நேரங்களில் உள்ள நிகழ்வுகளின் பலன்களைக்கூட அறிந்துகொள்ள முடியும் என்ற அளவுக்கு, ஒருவரின் வாழ்வுக்கான காலம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஜனன கால கிரக அமைப்பும், தற்கால கிரக அமைப்பும்

எதிர்காலப் பலன்களை அறிந்துகொள்ள, ஜாதகம் பார்க்கும்போது இரண்டு முறைகள் பயன்படுத்தப்படுகிறது. ஒன்று, பிறந்த நேரத்தின்போது அமைந்துள்ள கிரக நிலை அமைப்பு; மற்றொன்று, தற்போதைய கிரக அமைப்பு. இதையே கோட்சாரம் என்கிறோம்.

ஒருவரது பிறந்த நேரத்தில் அமைந்துள்ள கிரக நிலைகளைப் பொருத்தே அவரின் வாழ்நாள் முழுதும் நடக்கும் நிகழ்வுகளின் பலன்கள் அமைகின்றன.

இதுவே, ஒருவரது எதிர்காலத்தை அறிந்துகொள்வதற்கு அடிப்படையானது; முக்கியமானது. இருப்பினும், தற்கால கிரக அமைப்பைத்தான் கோட்சாரம் என்கிறோம்.

தற்கால கிரக அமைப்புகளின் பலம் மற்றும் பலஹீனங்களால், ஒருவரது பிறந்த ஜாதகத்தின் மூலம் ஏற்படக்கூடிய நற்பலன் மற்றும் தீயபலன்களில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

எனினும், பிறந்த ஜாதகத்தின் பலத்தை அனுசரித்தே தற்கால கிரக அமைப்புகளில் மாற்றங்கள் சாத்தியமாகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அதாவது, ஜாதகம் பார்க்கப்படும் காலத்தில் நடைபெறும் தசா புத்திகளும், அதற்குரிய கிரகங்களும் ஒருவரின் ஜாதகத்தில் நற்பலன்களையே தருவதாக அமைந்திருந்து, கோட்சாரத்தில் கிரக அமைப்புகள் கெடுதலான பலன்களை தரும் நிலையில் இருந்தாலும், அந்தக் கெடுதலான பலன்களை ஜாதகர் பெரிதளவு அனுபவிக்க நேரிடாது.

ஒன்றை முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். பிறந்த ஜாதகத்தின் வாயிலாக ஏற்படும் கிரகப் பலன்களை அனுசரித்தே கோட்சாரப் பலன்கள் நடைமுறைக்கு வருகின்றன.

ஆனால், இவ்விரண்டும் வெவ்வேறு வழிமுறைகள் என்ற எண்ணத்தில், இவ்விரண்டு வழிமுறைகளையும் தனித்தனியாகப் பார்த்து பலன்களைத் தெரிந்துகொள்வது என்ற அளவிலேயே பெரும்பாலானவர்களின் புரிதல் உள்ளது என்பது வேதனைக்குரியது.

ஜோதிடராக, வாழ்வியல் வழிகாட்டியாக, என்னைப் பொறுத்தவரை இது தவறான அணுகுமுறை. ஜாதகத்தில் எதிர்காலப் பலன்களை நிர்ணயம் செய்யும்போது, இவ்விரண்டையும் சேர்த்து கணக்கில் எடுத்துக்கொண்டுதான் பார்க்க வேண்டும். அதுதான் சரி.

கோட்சாரம் – ஒரு பொதுவான அணுகுமுறை

கோட்சாரத்தை மட்டும் கருத்தில் கொண்டு பலன்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இன்று பரவலாக்கப்பட்டு வருவது என்பது ஜோதிட சாஸ்திரத்துக்கான மிகப்பெரிய பின்னடைவு.

ஜாதகக் கட்டத்தில் உள்ள 12 ராசிகளில் ஒருவர் எந்த ராசியில் பிறந்துள்ளார் என்பதை மட்டும் கொண்டு பலன்களைத் தெரிந்துகொள்வதுதான் கோட்சாரம்.

குருப் பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, ராகு-கேதுப் பெயர்ச்சி, தினப் பலன், மாதப் பலன் என பொதுவான அணுகுமுறைகளைக் கொண்டு பலன்களைத் தெரிந்துகொள்வது என்பது இன்று நடைமுறையில் மக்களிடையே பிரபலமாகி வருகிறது.

இதுவும் ஜோதிட சாஸ்திரத்துக்கான பின்னடைவாகவே கருதவேண்டி உள்ளது. ஜோதிட சாஸ்திரம் தன் அடிப்படைச் சாரங்களை இழந்து பலவீனமாகிவிட்டது என்பதையே இது காட்டுகிறது.

பிறந்த நேரமும் ஜாதகத்தின் எல்லைகளும்

ஓரிரு நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டைக் குழந்தைகளின் ஜாதகக் கட்டத்தைப் பார்த்துவிட்டு, ஒரே மாதிரியான பலன்களைத்தான் ஒரு ஜோதிடரால் கூறமுடியும்.

இருப்பினும், நடைமுறையில் அவர்களின் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகள் போன்றவை முற்றிலும் வேறுபடுவதைப் பார்க்கமுடிகிறது.

பிறந்த நேரத்தைக் கொண்டு நிமிட துல்லியமாக ஜாதகம் கணிக்கமுடிகிறது. எனினும், விநாடி நேர வித்தியாசத்தில் பிறந்த குழந்தைகளின் வாழ்வில்கூட பெரிய மாற்றங்களை காணமுடிகிறது.

ஒத்த கட்டைவிரல் ரேகை அமைப்பு உள்ளவர்களை உலகில் காணமுடியாது என்பதுதான் உண்மை.

இவை எல்லாம் நமக்குத் தெளிவுபடுத்துவது ஒன்றே ஒன்றுதான். பிறந்த நேரம் மட்டும் ஒருவரின் வாழ்க்கை முறையைத் தீர்மானிக்கிற சக்தி ஆகாது; இந்த வாழ்க்கை முறை வேறுபாடுகளுக்குக் காரணம், ஒத்த விநாடியில் பிறந்திருந்தாலும், அவர்களின் ஆன்மாக்கள் வெவ்வேறானவை. மிக முக்கியமான இதை நாம் உணரத் தவறிவிட்டோம்.

மனித வாழ்வில் ஆன்மா தவிர்க்கமுடியாத ஒன்று

ஒருவரது ஆன்மாவின் தன்மை என்பது அவரது பூர்வஜென்ம பாவ புண்ணியங்களுக்கு ஏற்றார்போல் அமைகிறது. ஆன்மாவின் பலம் மற்றும் பலவீனங்களின் அடிப்படையிலேயே ஒருவரது சக்தி மையம் செயல்படுகிறது.

சக்தி மையத்தின் அதிர்வுகளின் அடிப்படையில் எண்ணங்கள் தோன்றி, அதற்கேற்ப அவர்களின் வாழ்க்கை முறை அமைகிறது. ஆக, வாழ்வின் நிகழ்வுகள், காரணிகள், அனுபவங்கள் எல்லாம் அவரவருடைய ஆன்மாவின் ஸ்திரத்தன்மையைப் பொருத்ததாகவே இருக்கிறது.

ஒரே நேரத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும், பூர்வஜென்ம பாவ புண்ணியப் பலன்களுக்கு ஏற்ப ஆன்மாவின் தன்மை வேறுபடுவதால், ஒவ்வொருவருடைய வாழ்க்கை முறை என்பது கட்டாயம் வேறுபாடு உடையதாகத்தான் இருக்கும். இதை ஜாதகம் கொண்டு நிச்சயம் அறிய முடியாது.

மேலும், ஒருவர் ஜெனித்தபோது அவருடைய ஆன்மா பெற்றிருந்த பலம் மற்றும் பிறந்ததில் இருந்து இதுவரை எதிர்கொண்ட நிகழ்வுகளில் இருந்து பெற்ற அனுபவங்கள் மற்றும் ஆன்மாவின் தற்போதைய நிலைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் போன்ற தரம் சார்ந்த காரணிகளையும் ஜாதகத்தை மட்டும் வைத்து அணுக முடியாது.

உடல், மனம் சம்பந்தப்பட்ட அளவில் வரும் பிரச்னைகளுக்கு ஜாதகத்தைக் கொண்டு தீர்வுகளைப் பெற்றுவிட முடியும். ஆனால், ஆன்மாவின் கர்மவினைகளின் வலுவான தாக்கத்தால் பிரச்னைகள் ஏற்பட்டால், அவற்றை ஜாதகம் மட்டும் கொண்டு அணுகும்போது, தீர்வுகளைப் பெறுவது சிக்கலாகிறது. இப்படி சொல்லப்படும் பலன்கள் நடைமுறைக்கு ஒத்துவருவதில்லை.

ஜோதிடத்தை அணுகுவதில் இன்றைய நம் மனோ நிலை

ஆன்மாவைப் புரிந்து உணர்தல் என்பதுதான் முக்கியமானது. இதை உணராது, ஜாதகத்தின் ஆதாரமே கிரகங்கள்தான் என்று நினைக்கத் தொடங்கிவிட்டோம். கிரகங்கள் என்பவை கண்ணுக்குத் தெரியும் காலத்தின் அங்கம் என்பதாலும், கோள்களைப் பற்றிய மிகத் தெளிவான விளக்கங்களை விஞ்ஞானம் சொல்லியிருப்பதாலும், பக்தி மார்க்கத்தில் கிரகங்களின் தன்மை மற்றும் அவை வழங்கும் பலன்களைப் பற்றிய அறிவு வலிமையாக உணர்த்தப்பட்டிருப்பதாலும், கிரகங்களை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு ஒருவரது வாழ்க்கை அமைகிறது என்ற அணுகுமுறையால், ஜோதிடத்தில் உள்ள விஞ்ஞானத்தை (ஜாதகம்) மட்டும் கையில் எடுத்துக்கொண்டு நமக்கான தீர்வுகளைப் பெற முயற்சிக்கிறோம்.

இந்த முயற்சிகள் வெற்றி அடையாதபோது, எனக்கு மட்டும் ஏன் இப்படி நடந்தது / நடக்கிறது எனப் பதறுகிறோம், புலம்புகிறோம். எதிர்காலம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் எனக் கனவு காண்கிறோம், கற்பனை செய்கிறோம்.

ஆன்மாவை தவிர்த்துவிட்டு நம் முயற்சிகள் தான் என்ன?

நம் முயற்சிகள் என்பது ஆலய வழிபாடுகள், பூஜைகள், பரிகாரங்கள், விரதங்கள் போன்ற ஆன்மிக வழிகளிலும், நாள், வார, மாத, ஆண்டு ராசிபலன்கள், கிரகங்களின் பெயர்ச்சிப் பலன்கள், எண் கணிதம், வாஸ்து சாஸ்திரம் மற்றும் நவரத்தினக் கற்கள் என ஜோதிடம் சார்ந்த விஞ்ஞான முறையிலும், இன்னும் சிலர் உடல் சார்ந்த உணவுப் பழக்கவழக்கங்கள், எந்திரங்கள், சக்கரங்கள் மற்றும் யோகா போன்றவற்றின் அடிப்படையிலும், மனம் சார்ந்த தியானத்தின் மூலமும், மாந்திரீகம் போன்ற எதிர்மறை சக்தி கொண்டும் முயற்சிக்கின்றனர்.

poojas

இந்த உலகில், நாம் விரும்பியபடி வாழ்க்கையை மாற்றி வாழ விரும்புகிறோம், முயற்சிக்கிறோம். ஆனால், நம்மில் எத்தனை பேரால் அதில் வெற்றிபெற முடிகிறது? உண்மையைச் சொல்வதென்றால், வெற்றிபெறாமல் போனவர்கள்தான் அதிகம்.

காரணம், மேற்சொன்ன எல்லா வழிமுறைகளும் உடல் மற்றும் மனரீதியிலான அணுகுமுறைகளே. ஆன்மாவைப் பற்றிய தொடர்பு இங்கு இல்லை. கணிதம் கொண்டு துல்லியமாகக் கணிக்கும் ஜாதகமும் விஞ்ஞானமே என்றாலும், அதில் ஆன்மாவைப் பற்றிய விஷயங்கள் மிகவும் மேலோட்டமானவை.

ஆன்மாவைப் புரிந்து உணர்ந்தால் ஜாதகப் பலன்களே பொய்த்துப்போகும் என்பதற்கு மார்க்கண்டேயனின் வாழ்வு சரியான எடுத்துக்காட்டு.

மார்க்கண்டேயனின் பெற்றோர் நீண்ட நாள்கள் குழந்தை இல்லாமல் தவித்தனர். அவர்களது தீவிர பக்தியில் மனமகிழ்ந்த இறைவன் அவர்கள் முன் தோன்றி, உலகப்புகழ் பெறும் ஆனால் 16 வயது வரை மட்டுமே வாழ்க்கூடிய குழந்தை வேண்டுமா அல்லது ஆயுள் பலம் பெற்று 100 வயது வரை வாழக்கூடிய சாதாரண குழந்தை வேண்டுமா எனக் கேட்க, 16 வயது வரை வாழ்ந்தாலும் அறிவும் ஆற்றலும் கூடிய திறமையான குழந்தை வேண்டும் என அவர்கள் கேட்க, இறைவனும் அவ்வாறே அருளினார்.

16 வயது வரைதான் ஆயுள் என்பது மார்க்கண்டேயனின் ஜாதகக் கட்டமைப்பு. ஆனால், தன் சிறந்த குணத்தால் இறைவன் மேல் கொண்ட அதீத பக்தியால், தவ வலிமையால் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தான்.

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவெனில், ஜாதகத்தில் உள்ள பலன்கள் மாறுதலுக்கு உட்பட்டது. ஒருவரின் நற்செயல்களால் ஆயுள் பலனிலேயே மாற்றங்களை நிகழச் செய்ய முடியும் என்றபோது, பிற மாற்றங்கள் பெறுவது என்பது சாதாரணமே.

ஆக, ஜாதகமே ஜோதிடம் அல்ல; ஜோதிடத்தில் ஒரு பகுதியே ஜாதகம் என்ற உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

முழுமையான ஜோதிடம் என்பது ஆன்மாவைப் பற்றி முழுவதும் தெரிந்துகொள்வதாகும். ஆன்மாவைத் தெரிந்துகொள்வது என்பது நாம் யார், நம் பிறப்பின் நோக்கம் என்ன என்பதுதான்.

இதைப் புரிந்து உணர்ந்து எதிர்காலப் பலன்களில் நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும்போது, முழுமையான வாழ்வியல் வெற்றி ஒவ்வொருவருக்கும் சாத்தியமாகிறது. ப்ரச்னம், கணிதம், கோளம், நிமித்தம், முகூர்த்தம் என மற்ற ஐந்து பகுதிகளையும் ஜாதகத்துடன் ஒருங்கிணைத்துப் பார்ப்பதன் மூலம் இது மேலும் சாத்தியமாகிறது.

இவற்றைப் பற்றிய விஷயங்களில் நமக்கு ஒரு முழுத்தெளிவு ஏற்படும்போதுதான், ஜோதிட சாஸ்திரமும் அதில் நமக்கான பயன்பாடுகளும் புரியவரும்.

இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? எந்த அடிப்படைகளையும் அறியாது, தீர்வுகளை மட்டுமே பதில்களாகப் பெறும் ஆர்வக்கோளாறில் இருந்து விலகி, ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படை ஆதாரமான இந்த ஆறு பிரிவுகளின் அடிப்படை உண்மைகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். அதற்கு, இனி வரும் அத்தியாயங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

படிக்கக் காத்திருங்கள்.

“துல்லியமாகக் கணிக்கப்படும் ஒருவரின் ஜாதகத்தில் ஆன்மாவைப் பற்றி தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியுமா..?” பகுதி-1

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.