மகிந்த கொலை சூழ்ச்சி : முன்னாள் சட்டமா அதிபருக்கு எதிராக முறைப்பாடு

0
632

முன்னாள் சட்ட மா அதிபரும், பிரதம நீதியரசருமான மொஹான் பீரிஸிற்கு எதிராக உயர் நீதிமன்றில் பதிவாளரிடம் முறைப்பாடு செய்ய சிலர் தயாராகி வருகின்றனர்.

இலங்கையிலுள்ள பிரசித்திபெற்ற சட்டத்தரணிகள் குழுவொன்று இந்த முறைப்பாட்டை பதிவு செய்யவுள்ளதாக தெரியவருகிறது.

மொஹான் பீரிஸ் தனது பதவியை துஸ்பிரயோகம் செய்து, சந்தேக நபர்களுக்கு சில சலுகைகளை வழங்கியுள்ளமை குறித்தே இந்த முறைப்பாடு செய்யப்படவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலை செய்ய, விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து சூழ்ச்சி செய்ததாக குற்றஞ்சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ வலுவான ஆதாரங்கள் இருந்தும், அந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இதுவே குறித்த முறைப்பாட்டிற்கு அடிப்படைக் காரணமாகும்.

மகிந்த ராஜபக்சவை கொலை செய்ய முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் சூழ்ச்சி செய்தார் என்ற வழக்கு விசாரணையில், சந்தேக நபர்கள் மூவர் வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் குரல் பதிவொன்றையும் நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தன.

இந்த உறுதியான ஆதாரங்கள் இருந்த போதிலும், போதுமான சாட்சிகள் இல்லையெனக் கூறி சட்டமா அதிபராக பதவி வகித்த மொஹான் பீரிஸ், ஜொன்ஸ்டனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதை அலட்சியம் செய்தார்.

குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமளவிற்கு ஆதாரங்கள் வலுவாக இருந்தபோதிலும், ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யாது மொஹான் பீரிஸ், அவரை அந்த வழக்கில் இருந்து தப்பிக்க உதவி செய்திருந்தார்.

வலுவான ஆதாரங்கள் இருந்த அந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட வேண்டுமாயின், முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிசிற்கு எதிராக முறையிடப்பட வேண்டும். அதற்காகவே சட்டத்தரணிகள் சிலர் தற்போது முறைப்பாடு செய்ய தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை, 2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த மொஹான் பீரிஸ், தொடர்ந்தும் பிரதம நீதியரசராக பதவி வகிக்க இடமளிக்க வேண்டுமெனக் கோரியுள்ளார்.

இந்த வாய்ப்பு வழங்கப்படுமாயின், ஜனாதிபதிக்குத் தேவையான விதத்தில் தீர்ப்புக்களை வழங்கத் தான் தயார் எனக் கூறியிருந்தார். இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே சாட்சியாக இருக்கிறார்.

எனினும், மொஹான் பீரிசின் கோரிக்கையை ஜனாதிபதி எள்ளவும் கணக்கில் எடுக்கவில்லை.

மொஹான் பீரிசின் இந்த அறிக்கை குறித்து ஜனாதிபதியின் சத்தியப்பிரமாணம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளவும் சட்டத்தரணிகள் சிலர் தயாராகி வருகின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.