கட்டுப்பாடற்ற உறுப்பினர்களும், கெட்டுப்போன இயக்கங்களும்!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை- 128)

0
1824

• புலி வேட்டை என்ற பெயரில் மான் வேட்டை

• கைவிடப்பட்ட கோட்பாடுகள்.

யாழ்ப்பாணத்திற்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினர் இந்தியப் படையினருடன் சென்ற போது ஆட்பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கமே முன் நின்றது. அதனால் தவறான நபர்களுக்கும் முக்கியத்துவம் ஏற்பட்டது என்று கூறியிருந்தேன் அல்லவா.

உதாரணத்திற்கு ஒரு சம்பவம்: யாழ்ப்பாணம் சுதுமலையைச் சேர்ந்தவர் பொன்னுத்துரை தங்கராசா. சுதாகர் என்பது இயற்பெயர். தங்கன் என்றும் அழைக்கப்பட்டார்.

இவர் முதலில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். ஆதரவாளராக இருந்தவர்.

இந்த இடத்தில் ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். ஆதரவாளர் என்றால் என்ன? உறுப்பினர் என்றால் என்ன? என்னும் வேறுபாடு 1983க்குப் பின்னர் இல்லாமல் போயிருந்தது.

அதனால் இயக்க உறுப்பினர்களை விட ஆதரவாளர்களே முக்கியஸ்தர்களாக மாறிய சம்பவங்களும் உண்டு.

உறுப்பினர் என்பவர் இயக்கத்தின் வளர்ச்சிக்காக தன் நலன்களை கீழ்ப்படுத்தி உழைப்பவர். இயக்கத்தின் கட்டளைகளுக்கு எந்நேரமும் கீழ்ப்படிய வேண்டியவர்.

ஆதரவாளர் என்பவர் அப்படியல்ல. அவர் இயக்கத்திற்கு வெளியே இருந்து ஆதரவு வழங்குபவர். இயக்க நலனுக்கு தன் சொந்த நலன்களை கீழ்ப்படுத்தும் தேவை ஆதரவாளருக்கு கிடையாது.

இயக்க ஆதரவாளர் என்பவர் இயக்க உறுப்பினருக்கு மேற்பட்டவரல்ல. தன் நலன்களை இயக்க கொள்கைக்காக அர்ப்பணிக்க முன்வந்த உறுப்பினருடன் ஒப்பிடும் போது இயக்க ஆதரவாளருக்கு உள்ள முக்கியத்துவம் இரண்டாம் பட்சமானதே.

தற்போதும் புலிகள் இயக்கத்தின் சில அஞ்சலிப் பிரசுரங்களில் உறுப்பினர்களுடன் இணைந்து ஆதரவாளர் ஒருவர் பலியானால் உறுப்பினருக்கு முதல் மரியாதை கொடுத்துவிட்டே இயக்க ஆதரவாளருக்கும் மரியாதை வழங்கப்பட்டிருப்பதை கவனிக்கலாம்.

அன்று முதல் இன்று வரை இயக்க கட்டமைப்பு தொடர்பான அடிப்படை விடயங்களில் பிரபாகரன் உறுதியாக இருப்பதும் அந்த இயக்கத்தின் ஆச்சரியகரமான சாதனைகளுக்கு ஒரு பிரதான காரணம் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப்பில் 1983க்கு முன்பாக அவ்வாறான அடிப்படைக் கோட்பாடுகள் இருந்த போதும் பின்னர் கைவிடப்பட்டன.

அதனால் தமது சொந்த நலன்களுக்காக இயக்கங்களை ஆதரித்தவர்கள் கூட இயக்கத் தலைமைகளை துதிபாடிக்கொண்டு தங்களை முக்கிய நபர்களாக மாற்றிக் கொண்டனர்.

இயக்க உறுப்பினர்களைக் கூட அந்த ஆதரவாளர்கள் மேய்க்கத் தொடங்கினர். சுயமரியாதை உள்ள உறுப்பினர்கள் அதனை விரும்பாத போது அவர்களுக்கு இயக்கம்மீதான பற்றுக் குறைந்தது. அது இலட்சியம் மீதான நம்பிக்கையீனமாக மாறியது. அதனால் போர்க்குணமிக்க பலநூறு உறுப்பினர்களை ஏனைய இயக்கங்கள் இழந்தன.

பதவிகளும் – பாய்ச்சலும்

அவ்வாறு இழந்தபோது வெற்றிடங்களை நிரப்ப தகுதியில்லாத நபர்கள் கொண்டுவரப்பட்டனர்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப்பிலும் அதுதான் நடந்தது. இயக்க ஆதரவாளராக இருந்து கொண்டே இயக்கத்தின் பெயரைப் பயன்படுத்தி சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர் தங்கன். அதனால் தண்டிக்கப்பட்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத் தொடர்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அதன் பின்னர் புளொட் இயக்கத்தின் ஆதரவாளராக மாறினார். அங்கும் சரிப்பட்டு வரவில்லை. கொழும்பில் நின்ற வரதராஜப்பெருமாளை சந்தித்து உணர்ச்சிப்பிழம்பாக நடித்தார் தங்கன்.

நம்பிவிட்டார் வரதராஜப்பெருமாள். ஈ.பி.ஆர்.எல்.எஃப். இந்தியப் படையோடு யாழ் சென்ற போது தங்கன் எனப்படும் சுதாகரும் ஒரு முக்கியப் புள்ளி.

யாழ்மாவட்டத்தின் அரசியல் பொறுப்பாளர்களில் ஒருவராக சுதாகருக்கும் பதவி வழங்;கப்பட்டது.

மானிப்பாய் பகுதிக்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப். இராணுவப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் நிசாம். அவரது சொந்தப் பெயர் பிரபாகரன். இணுவிலைச் சேர்ந்தவர்.

நிசாமுக்கும் – சுதாகருக்கும் இடையே தங்களில் யார் பெரியவர் என்று போட்டி இருந்தாலும் படுபாதகச் செயல்களிலும் இருவரும் சளைத்தவர்களல்ல.

படுபாதகச் செயல் என்றதும் வீரமான செயல்கள் என்று நினைத்துவிடக்கூடாது. அப்பாவிகளைக் கொல்லுவதில் காட்டிய வீரம் என்தே அர்த்தம்.

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைக்கு புலிகள் இயக்கப் பொறுப்பாளராக இருந்தவர் பாரத்.

சுதாகர் கோஷ்டி பாரத்தைத் தேடிச் சென்றது. பாரத் வீட்டுக்குள் புகுந்தது. அங்கு பாரத் இல்லை. பாரத் இல்லாவிட்டால் என்ன? பாரத்தின் தங்கை அழகாக இருந்தாள்.

அந்தப் பெண்மீது பாய்ந்தான் சுதாகர். அழுதாள். துடித்தாள். மன்றாடினாள். பாய்ந்தவர்களுக்கு மனம் இரங்கவில்லை. பாலியல் வல்லுறவுக்கு உள்ளானாள்.

அத்தோடு விட்டார்களா? பாலியல் வல்லுறவுகொண்டுவிட்டு அப்பெண்ணின் உடலை துப்பாக்கிக் குண்டுகளால் சல்லடையாக்கிச் சென்றார்கள். அப்பெண்ணின் பெயர் ரஞ்சி.

சுதாகர் குழுவில் இருந்த உறுப்பினர்களில் ஒருவர் ராஜா. அவருக்கு ஒரு பெண்மீது காதலுக்கு வீட்டார் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஆயுதம் ஏந்தி களம் புகுந்தார் சுதாகர். சாதாரண களமல்ல. ஒரு முகாமைத் தாக்கும் தீவிரத்துடன் குறிப்பிட்ட பெண்ணின் வீட்டை நோக்கி மோட்டார் ஷெல்கள் ஏவப்பட்டன.

துப்பாக்கி வேட்டுக்கள் பொழியப்பட்டன. கதவை உடைத்து உட்பிவேசித்து வெற்றிகரமாக பெண்ணைக் கைப்பற்றிச் சென்றனர்.

புலிகள் ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்படுவோர் வீடுகளில் கொள்ளையடிப்பது, பணம் கறப்பது போன்ற நடவடிக்கைகளால் தனக்குச் சொந்தமாகவே பணம் திரட்டிக்கொள்ளவும் சுதாகர் மறக்கவில்லை.

Kedu-03
கிட்டு மன்னிப்பு

ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தின் கொள்கைரீதியாக உறுதிவாய்ந்த உறுப்பினர் ஒருவர் புலிகள் மீது கோபப்பட்டிருந்தால் அதனைப் புரிந்துகொள்ள முடியும்.

தமது இயக்கத்தை புலிகள் ஏன் தடைசெய்ய வேண்டும். தமது தோழர்களை புலிகள் ஏன் கொல்லவேண்டும் என்ற கோபத்தில் புலிகள்மீது ஆத்திரப்பட்டார்கள் என்று சொல்லலாம்.

ஆனால் சுதாகர் போன்ற சமூகவிரோதச் சக்திகளுக்கு புலிகள் மீது ஏன் அத்தனை ஆத்திரம்?

அதற்குக் காரணம் இருக்கிறது.

சுதாகர் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவதாக மானிப்பாய் மக்கள் பலர் கிட்டுவிடம் முறையிட்டனர்.

50 பேர் கையொப்பமிட்டு கிட்டுவிடம் மனுக் கொடுத்தனர். சுதாகரை பிடிப்பதற்காக கிட்டு சென்றார்.

சுதாகரின் மனைவி அப்போது கர்ப்பிணியாக இருந்தார். தன் கணவரைத் தண்டித்தால் தனக்கும் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் யாருமில்லாமல் போய்விடுவார்கள் என்று மன்றாடினார். கிட்டுவின் வாகனம் முன்பாக றோட்டில் படுத்துவிட்டார்.

அதனால் சுதாகரை மண்டையில் போடும் எண்ணத்தை கைவிட்டு திருப்பிச் சென்றார் கிட்டு. இது நடந்தது கிட்டு யாழ் மாவட்ட புலிகளின் தளபதியாக இருந்த காலத்தில்.

கிட்டு மட்டும் அன்று மனமிறங்காமல் இருந்திருந்தால் சுதாகர் என்ற சமூகவிரோதியால் 1987க்கு பின்னர் அப்பாவிகள் பலர் படுகொலையாகியிருக்க மாட்டார்கள்.

ranuvammasசாதனை

மானிப்பாய் பகுதிக்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப். இராணுவப் பொறுப்பாளராக இருந்த நிசாம் படுகொலைகளில் தனிச் சாதனையாக 87 பேரை கொலை செய்தவர்.

மண்வெட்டியால் தலையை வெட்ட, வெட்டப்பட்ட தலை எப்படித்துடித்தது என்பதை விபரிப்பதில் இவர் கோஷ்டியில் இருந்த சிலருக்கு அலாதிக்குஷி.

நிசாமால் கொல்லப்பட்டவர்களில் சுன்னாகத்தைச் சேர்ந்த கஜன் போன்ற சிலர்தான் புலிகள் இயக்கத்தினர். ஏனையோர் பெரும்பாலும் அப்பாவிகள்.

தனது சகோதரியின் கணவரையும் புலிகள் இயக்க ஆதரவாளர் என்று குற்றம் சாட்டிச் சுட்டுக் கொன்றார் நிசாம்.

சகோதரியின் கணவரை நிசாமுக்கு சிறுவயதில் இருந்தே பிடிக்காது. நிசாமின் போக்கையும் அவர் கண்டித்துவந்தார். அதனால்தான் அதிகாரமும் துப்பாக்கியும் கைக்கு வந்ததும் சுட்டுத்தள்ளினான்.

நிசாமுக்கும் – சுதாகருக்கும் இடையே நிலவிய பூசல் பெரிதாகியது. அதற்குக் கொள்கை முரண்பாடு என்று பெயர் சூட்டமுடியாது. ‘கொள்ளை முரண்பாடு’ என்பதே பொருத்தமான பெயர்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். யாழ் மாவட்ட இராணுவப் பொறுப்பாளராக இரு;நதவர் ரவீந்திரன். இயக்கப் பெயர் ராபீக்.

ராபீக் முதலில் சிறந்த உறுப்பினர்களில் ஒருவராகவே இருந்தார். ஈ.பி.ஆர்.எல்.எஃப். உளவுப்பிரிவிலும் இருந்தவர்.

பின்னர் இயக்க உட்பிரச்சனைகளின் போது பத்மநாபா இவரை நேரடியாக வழிநடத்தத் தொடங்கினார்.

பத்மநாபா மற்றும் இயக்கத்தலைமையின் பலவீனங்கள் தடுமாற்றங்கள் என்பவற்றை புரிந்துகொண்ட ராபீக் தனது பங்குக்கு தானும் பணம், நகை சேர்த்து வைப்பதில் தவறில்லை என்ற முடிவுக்கு வந்தார்.

தவறான சக்திகளை உள்வாங்கி ஊக்குவிக்கும் போதும், குறைந்த பட்சமாக சில அடிப்படை நியதிகளைக் கூட இயக்கத்தலைமை கைவிடும்போதும் ஏற்கனவே இருந்து போர்க்குணமிக்க உறுப்பினர்கள் ஒன்றில் அந்த அலைக்குள் சிக்கி கெட்டுப் போகிறார்கள்.

அல்லது இயக்கத்தைவிட்டு வெளியேறுகிறார்கள்.

ராபீக் வெளியேறவில்லை. சுதாகர் போன்றவர்கள் எத்தனை மோசமானவர்கள் என்று தெரிந்தும்கூட அவர்களுடன் இணைந்து செல்லத் தீர்மானித்தார்.

பத்மநாபாவின் கட்டளைகளை மறுபேச்சின்றி நிறைவேற்றும் ஒருவராக இருந்தமையால் யாழ் மாவட்ட இராணுவப் பொறுப்பு ராபீக்குக்கு தரப்பட்டது.

varatharamerumal
ராபீக்குடன் சுதாகருக்கு நெக்கம் அதிகமானது. அடித்த கொள்ளையில் ஒரு பகுதியில் ராபீக்குக்குக் கொடுத்துக் கொண்டார்.

சுதாகர் ஒரு அருமையான தோழர் என்று பதமநாபாவிடம் அடிக்கடி பரிந்துரை செய்தார் ராபீக்.

சுதாகருக்கும் நிசாமுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் ராபீக் சுதாகர் பக்கம் நின்றதால், நிசாம் இயக்கத்தை விட்டு வெளியேறினார்.

வெளியேறியவர் வெறுங்கையுடன் செல்லவில்லை. திரட்டிய பணம், சுருட்டிய நகை சில ஆயுதங்கள் என்பவற்றுடன் வெளியேறினார்.

கொழும்புக்கு ஓடிய நிசாம் அங்கு அட்டகாசம் செய்தார். கொழும்பு தங்குவிடுதி ஒன்றில் ஏ.கே.47 துப்பாக்கிகள் இரண்டு, பிஸ்டல் இரண்டு என்பவற்றுடன் கைது செய்யப்பட்டார். தற்போது இந்த சமூக விரோதி மட்டக்களப்பில் குடும்பஸ்தராக இருக்கிறார்.

அதன் பின்னர் மானிப்பாய் தொகுதியில் சுதாகர்தான் தனிக்காட்டு ராஜா.

இப்படிப் பல சுதாகர்கள் இயக்கங்களில் இருந்தனர். பின்னர் ஆடி முடிந்ததும் விலகிப் போய் சுருட்டியதை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியப் படை காலத்தில் இயக்கப்பெயரில் சமூகவிரோதச் செயல்களுக்கு தலமைதாங்கிய அல்லது பொறுப்பாக இருந்த பலர் தற்போது ஈ.பி.ஆர்.எல்.எஃப்புக்குள் இல்லை என்பதையும் குறிப்பிட்டேயாக வேண்டும்.

patmanapa-680x365இப்போது ஈ.பி.ஆர்.எல்.எஃப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு இந்தியப்படை காலகட்டத்தில் முடிவுகளை எடுக்கும் அதிகாரங்களும் இருந்ததாகத் தெரியவில்லை. வரதராஜப் பெருமாள் மட்டுமே விதிவிலக்கு.

மறைந்த பத்மநாபாவை விட பல படிகள் உயர்ந்த அதிகாரம் கொண்டவராக வரதராஜப் பெருமாள் விளங்கிய சந்தர்ப்பங்களும் உண்டு.

திருமலையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கப் பொறுப்பாளராக இருந்தவர் ஜோச். புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளிலும் ஜோச் முன்னணியில் நின்றவர்.

ஜோச்சின் துணிச்சலையும், துடிப்பையும் பார்த்த வரதராஜப் பெருமாள் அவரை தன் கைக்குள் போட்டுக் கொண்டார்.

02-varatharaja-perumal345-600aaவரதராஜப் பெருமாளைவிட ஈ.பி.ஆர்.எல்.எஃப்பின் மூத்த உறுப்பினர் ஜோச் தான். ஆனாலும் வரதன் கிழித்த கோட்டைத் தாண்டாத ஒருவராகவே ஜோச் மாறினார்.

பதமநாபா திருமலை சென்றால் வரதராஜப் பெருமாள், ஜோச் இருவரும் தான் அவர் யார் யாரைச் சந்திக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்யக்கூடியவர்களாக இருந்தனர்.

அதிகாரி சொன்னது

கட்டாய ஆட்சேர்ப்பில் ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈ.என்.டி.எல்.எஃப் ஆகிய இரண்டும்தான் இந்தியப் படை காலத்தில் முன்னணியில் நின்றனர்.

ரெலோ இயக்கத்தினர் அத்தனை தீவிரம் காட்டவில்லை. புளொட் இயக்கம் இந்தியப் படையுடன் இணைந்து செயற்பட ஆர்வம் காட்டவில்லை.

கொழும்பிலிருந்து புளொட் இயக்கத்தினர் வெளியிட்ட அவர்களது கட்சிப் பத்திரிகையில் இந்தியப் படைக்கு எதிராக புலிகள் போரிடுவதை பாராட்டியும் இருந்தனர்.

ஆனால் அதே பத்திரிகையில் புலிகளை பாசிஸ்டுக்கள் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இது அவர்களுக்குள் நிலவிய குழப்பத்தையே காட்டியது. ஆனாலும் புளொட் இறுதிவரை இந்தியப் படையுடன் இணைந்து புலிவேட்டைக்கு செல்லவேயில்லை.

புலிகள் தம்முடன் போரிட்டபோதும் இந்தியப் படையினரும், குறிப்பாக உயர் மட்ட அதிகாரிகளும் புலிகள்மீது மதிப்பு வைத்திருந்தனர்.
தம்முடன் இணைந்து செயற்பட்ட இயக்கங்களை விட புலிகளையே அவர்கள் பெரிதும் மதித்தனர்.

யாழ்பல்கலைக்கழக தூதுக் கோஷ்டி ஒன்று இந்தியப் படை உயரதிகாரி ஒருவரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியது.

அப்போது இயக்கங்களின் அத்துமீறல்கள் , புலிவேட்டை என்ற பெயரில் நடைபெறும் படுகொலைகள் பற்றியும் அந்தத்தூதுக்குழுவினர் எடுத்துக் கூறினார்கள்.

அனைத்தையும் பொறுமையாகச் செவிமடுத்த அதிகாரி இறுதியில் சொன்ன கருத்து தூதுக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அந்த அதிகாரி சொன்னது இதுதான்.

“புலிகளை எதிர்த்துப் போரிட இவர்களின் உதவி தேவையாக இருக்கிறது. இந்த ராஸ்கல்களை உபயோகப்படுத்திவிட்டு பின்னர் இவர்களிடம் உள்ள ஆயுதங்களைப் பறித்துவிடுவோம்”

(தொடர்ந்து வரும்)

அரசியல் தொடர் அற்புதன் எழுதுவது…
தொகுப்பு-கி.பாஸ்கரன்-சுவிஸ்)


காட்டுக்குள் பெண்புலிகள்

pulikallaaa
கொசு வேட்டையில் புலிகள்

வன்னிக் காட்டுக்குள் புலிகள் இருந்த நேரம் அது. காட்டுக்கு வெளியே தரைப்பாதையெங்கும் இந்தியப் படை முற்றுகை. மறுபுறம் இந்திய விமானங்களின் குண்டுகள் காட்டுக்குள் மழை பொழிந்தன.

இத்தனையையும் பற்றிக் கவலைப்படாமல் காட்டுக்குள் இருந்த புலிகள் உறுப்பினர்களுக்கு ஒரு பிரச்சனை. கொசுக்கள் படைபடையாகச் சென்று தூங்கவும் விடாமல், இருக்கவும் விடாமல் தாக்கிக் கொண்டிருந்தன.

முகாம் பொறுப்பாளர்கள் பேச்சோடு பேச்சாக பிரபாகரனிடம் அதனைக் கூறினார்களாம். இதை வந்து என்னிடம் சொல்கிறீர்களே என்று கோபிக்கவில்லை பிரபாகரன்.

“இரண்டே நாட்களில் ஒழித்துக்காட்டுகிறேன்” என்று கூறினார். பொறுப்பாளர்களுக்கு சந்தேகம்.

மறுநாள் முகாம்களில் உள்ள உறுப்பினர்களுக்கு கையகலமுள்ள இரு அட்டைகள் கொடுக்கப்படடன. ஆளுக்கு இருநூறு கொசு அடித்துவரவேண்டும் என்று கூறப்பட்டது. பிரபாகரனும் கொசு வேட்டையில் இறங்கினார்.

கொசுத் தொல்லை குறைந்தது. சூழ்நிலைகளுக்கு பணியாமல், சூழ்நிலைகளை மாற்றும் உறுதியே தேவை என்று தன் உறுப்பினர்களுக்கு விளக்க கொசு வேட்டையும் உதாரணமாகக் காட்டினாராம் பிரபாகரன்.

எத்தனை மோசமானவர்களாக இருந்தாலும் பாபவிமோசனம் அளித்த பத்மநாபா!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை- 127)

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.