சனிப்பெயர்ச்சி பலன்கள்- 2017 ( மேஷம் முதல் கடகம் வரை)

0
7545

2017-ம் ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை  ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் அவர்கள் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய 4 ராசிகளுக்கான பலன்களை நமக்கு கணித்து வழங்கியுள்ளார்.

இந்த ஹேவிளம்பி ஆண்டு தட்சிணாயன புண்ணிய காலத்தில் சரத் ருது, ஐப்பசி மாதம் 9 ஆம் தேதி (26-10-2017) வியாழக்கிழமை, சுக்லபட்ச (வளர்பிறை) சப்தமி, பூராடம் நட்சத்திரம், சுக நாம யோகம், கரஜை கரணம் நேத்திரம் 1, ஜீவன் 1/2, சூரியபகவான் ஹோரையில் பிற்பகல் மணி 3.23 ஐ.எஸ்.டி. அளவில் சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

இங்கு, 23.1.2020 வரை சஞ்சரித்துவிட்டு 24-01-2020 அன்று காலை மணி 9.55 ஐ.எஸ்.டி. மணி அளவில் சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

இந்த காலகட்டத்தில் 11-10-2018 அன்று இரவு மாலை 07.20 ஐ.எஸ்.டி. மணி அளவில் குருபகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

மேலும் 5-11-2019 அன்று காலை மணி 5.20 ஐ.எஸ்.டி மணி அளவில் குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

ராகு- கேது பகவான்கள் 23.3.2019 அன்று மாலை மணி 4.14 ஐ.எஸ்.டி. அளவில் கடக, மகர ராசிகளிலிருந்து மிதுன, தனுசு ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள். இந்த சனிப்பெயர்ச்சி பலன்கள் 11-10-2018 வரை ஒரு பகுதியாகவும் 23-01-2020 வரை மற்றொரு பகுதியாகவும் (குருபகவானின் சஞ்சாரத்தைக் கருத்தில் கொண்டு) எழுதப்பட்டுள்ளது.

***

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

26-10-2017 முதல் 11-10-2018 வரை உள்ள காலகட்டத்தில் அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும்.

உங்கள் முயற்சிகளை நூதன முறையில் செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். அதாவது, “மாத்தியோசி’ என்பார்களே! அப்படி சிந்திப்பீர்கள்.

இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் தானாகவே நடந்தேறிவிடும். உங்கள் நீண்டகால எண்ணங்களும் நிறைவேறும்.

சங்கோஜங்களைத் தவிர்த்து அனைவரிடமும் சகஜமாகப் பழகுவீர்கள். இழுபறியான விஷயங்களும் முடிவுக்கு வரும்.

விலகிச் சென்ற நண்பர்களும் திரும்பி வந்து உங்களுக்கு நட்புக்கரம் நீட்டுவார்கள். செய்தொழிலில் புதிய மாற்றங்களை இயல்பாகச் சுலபமாகக் கொண்டு வருவீர்கள்.

உடன்பிறந்தோரின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவீர்கள். பொருளாதாரம் நிறைவாக இருக்கும்.

அதைரியங்கள் நீங்கி தைரியம் கூடும். குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். அவர்களை படிப்புக்காக வெளியூர், வெளிநாடுகளுக்கு அனுப்புவீர்கள். குடும்பத்துடன் சிறிய சுற்றுலா சென்று வருவீர்கள்.

 வீட்டிலும் வெளியிலும் உங்கள் கௌரவம் அந்தஸ்து இரண்டும் உயர்ந்து காணப்படும் காலகட்டமாக இது அமைகிறது.

12-10-2018 முதல் 23-01-2010 வரை உள்ள காலகட்டத்தில் சனிபகவானின் அருளால் உங்களின் விடாமுயற்சிக்குரிய பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டாகும்.

செய்தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகள் விலகி முன்னேற்றங்களைக் காண்பீர்கள். கண்ணியத்துடன் பேசுவீர்கள்.

புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொதுக்காரியங்களில் தன்னலம் பாராட்டாமல் ஈடுபடுவீர்கள்.

சிலர் விலை உயர்ந்த வீட்டுப்பிராணிகளை வாங்குவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்பட யோகா, பிராணாயாமம் செய்வீர்கள்.

அரசாங்கத்திற்கு நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை குறித்த நேரத்தில் சமர்ப்பிக்கவும். தீயவர்களை இனம் கண்டு ஒதுக்குவீர்கள்.

பிறர் தயவுடன் நீங்கள் செய்து வந்த செயல்களைத் தன்னிச்சையாக முடிக்கக்கூடிய நிலைமைகள் உருவாகும்.

எவருக்கும் வாக்குக்கொடுப்பதோ முன்ஜாமீன் போடுவதோ கூடாது. பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த வில்லங்கங்கள் விவகாரமின்றி தீர்ந்துவிடும்.

மனதை அரித்து வந்த பிரச்னைகளும் தானாகவே தீர்ந்துவிடும். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது உங்கள் பழைய அனுபவங்கள் கைகொடுக்கும்.

R1

உத்தியோகஸ்தர்கள் அலுவலக ரீதியான பயிற்சிகளை மேற்கொள்வார்கள். பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள்.

சிலருக்கு வெளியூருக்கு மாற்றல் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிட்டும். இருப்பினும் அலுவலக வேலைகளைத் திட்டமிட்டு குறித்த நேரத்திற்குள் முடிக்கவும்.

உங்களின் தன்னம்பிக்கை பளிச்சிடும் காலகட்டமாக இது அமைகிறது. வியாபாரிகளுக்கு தேவையான பணப்புழக்கம் இருந்து கொண்டிருக்கும்.

சாதுர்யமாகச் செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். போட்டிகளைத் திறம்பட சமாளிப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களும் சீராகவே முடிவடையும்.

சிறிய அளவில் முதலீடுகளைச் செய்யலாம். முக்கிய முடிவுகள் எடுக்கும் நேரத்தில் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்து எடுக்கவும்.

விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். சரியான நேரத்தில் பொருள்களைச் சந்தைக்கு எடுத்து சென்று  நல்லவிலைக்கு விற்பீர்கள்.

வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். விவசாயத் தொழிலாளர்களையும் அரவணைத்துச் செல்வீர்கள்.

அரசியல்வாதிகள் கவனமாகப் பணியாற்றுவார்கள். கட்சி மேலிடம் கடமைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவார்கள். தன்னிச்சையாக எந்த ஒரு முடிவையும் இந்த காலகட்டத்தில் எடுக்க வேண்டாம். கலைத்துறையினர் நல்ல பலன்களைக் காண்பார்கள். நிபந்தனைகளை நன்கு படித்து பரிசீலித்த பிறகே புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும்.

பெண்மணிகளுக்கு இந்த காலகட்டத்தில் கணவருடனான ஒற்றுமை சீராகவே தொடரும். உற்றார் உறவினர்களை நண்பர்களை அனுசரித்துச் செல்வீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். எனினும் எவரிடமும் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை.

மாணவமணிகள் கடுமையாக உழைத்து அதற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். ஞாபக சக்தி அதிகரிக்கும். யோகா, பிராணாயாமம் செய்வீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: ஐயப்பனை வழிபட்டு வரவும்.

***
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

26-10-2017 முதல் 11-10-2018 வரை உள்ள காலகட்டத்தில் பணவரவு நன்றாக இருக்கும்.

குடும்பத்தில் உங்கள் மதிப்பு மரியாதை சீரடையும். கடந்த கால நஷ்டங்கள் வேறு ரூபத்தில் வரவாக வரும்.

ஸ்பெகுலேஷன் துறையின் மூலம் சிறு லாபத்தைக் காண்பீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். மற்றையோருக்குத் தக்க அறிவுரைகளையும் வழங்குவீர்கள்.

ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். புனித யாத்திரை சென்று வரும் பாக்கியமும் சிலருக்கு அமையும்.

போதும் என்ற மனம் அனைத்து விஷயங்களிலும் உண்டாகும். செய்தொழிலில் அதிகாரம் கூடப் பெறுவீர்கள்.

உழைப்பு கூடினாலும் அதற்கேற்ற வருமானம் கிடைக்கும். பழைய கடன்களையும் அடைப்பீர்கள். பகைவர்களால் தொல்லைகள் எதுவும் ஏற்படாது.

புதிய வழக்குளும் ஏற்படாது. ஆலயத் திருப்பணிகளுக்கும் தர்மகாரியங்களுக்கும் செலவிடுவீர்கள்.

வயிறு சம்பந்தபட்ட உபாதைகள் சிலருக்கு உண்டாகலாம். அதனால் சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ளுங்கள். கொடுத்தவாக்கை எப்பாடுபட்டாகிலும் காப்பாற்றி விடும் காலகட்டமாக இது அமைகிறது.

12-10-2018 முதல் 23-01-2010 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் எதிர்பார்த்த உயர்வைக் காண்பீர்கள்.

அரசாங்க வழியில் உதவிகளைப் பெறுவீர்கள். வாராக்கடன் என்று நினைத்திருந்த கடன் திரும்பக் கிடைத்து உங்களைத் திக்குமுக்காடச் செய்யும்.

திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். புது வீடு வாங்கி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். சொந்த சம்பாத்தியம் உயரும்.

போட்டியாளர்களின் எதிர்ப்புகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். சமூகத்தில் உங்கள் பெயர் செல்வாக்கு உயரும். புதிய வாய்ப்புகளால் சிறப்பான வளர்ச்சியை அடைவீர்கள்.

சிறிது கடன் வாங்கியாவது செய்தொழிலை மேம்படுத்துவீர்கள். பெற்றோர்களின் ஆதரவும் அரவணைப்பும் கிடைக்கும். மனம் சிறிது அலைபாயும். மேலும்  அவசியமேற்பட்டாலன்றி பிரயாணங்களைத் தவிர்த்து விடவும்.

R2

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை முழுமையாகச் செய்து முடிக்க எடுக்கும் முயற்சியில் தடங்கல்களைக் காண்பார்கள். சக ஊழியர்களும் மறைமுக எதிர்ப்பைக் காட்டுவார்கள்.

மேலதிகாரிகள் உங்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள், அதனால் அவர்களின் ஆதரவு தொடரும். மேலும் வேலைப்பளு கூடுமாகையால் வேலைகளைப் பட்டியலிட்டுச் செய்து முடிக்கவும்.

பணவரவுக்கு எந்தக் குறையும் உண்டாகாது. வியாபாரிகள் புதிய யுக்திகளைப் புகுத்தி வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள்.

கூட்டாளிகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் நல்ல பலனளிக்கும். புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவினால் நல்ல வருமானத்தைக் காண்பீர்கள்.

விவசாயிகளுக்கு இது சாதகமான காலகட்டமாக அமைகிறது. அமோக விளைச்சலால் லாபத்தை அள்ளுவீர்கள். கால்நடைகளை வைத்திருப்போர் அதனாலும் பயன் பெறுவார்கள்.  புதிய குத்தகைகளை சற்று தள்ளிப் போடவும்.

அரசியல்வாதிகள் சமூகத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். உங்களின் பணியாற்றும் திறன் கண்டு கட்சி மேலிடம் பாராட்டும்.

இதனால் கட்சியிலும் சிறப்பான பதவிகளைப் பெறுவீர்கள். தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.

எடுத்த காரியங்கள் அனைத்தையும் நல்லபடி முடிப்பீர்கள்.  கலைத்துறையினர் கடமைகளைச் சரிவர ஆற்றி நற்பெயர் எடுப்பார்கள்.

எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து உதவிகள் கிடைக்கத் தாமதமாகும். புதிய ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதில் சிறு முட்டுக்கட்டைகள் உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்குமென்றாலும் சிக்கனமாக இருக்க வேண்டிய காலகட்டமாக இது அமைகிறது.

பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். கணவருடனான ஒற்றுமை நன்றாகவே இருக்கும்.

தெய்வபலத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். தேக ஆரோக்கியமும் சீராகவே தொடரும். உடன்பிறந்தோர் வகையில் சிறு மனக்கசப்பு ஏற்பட்டு விலகும்.

எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம்.  மாணவமணிகள் நண்பர்களின் ஆதரவைப் பெறுவார்கள். பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் நற்பெயர் எடுப்பார்கள். கவனம் சிதறாமல் படிப்பில் நாட்டம் ஏற்படும். இறைபக்தியை வளர்த்துக்கொண்டு ஆத்ம சக்தியை மேம்படுத்திக் கொள்ளவும்.

பரிகாரம்: ஸ்ரீ ராமபிரானை வழிபட்டு வரவும்.

***
மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

26-10-2017 முதல் 11-10-2018 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பப் பொறுப்புகளை ஏற்று வெற்றிகரமாக நடத்துவீர்கள்.

வீட்டிலும் வெளியிலும் உங்கள் செல்வாக்கு உயரக்காண்பீர்கள். உங்களின் குரல் கணீரென்று ஒலிக்கும். எதிர்பாராமல் காரியங்கள் மடமடவென்று நடந்தேறும்.

திடீர் சொத்து சேர்க்கையும் உண்டாகும். அதிர்ஷ்ட  வாய்ப்புகளும் உண்டாகும். புதிய பொறுப்புகளும் தேடிவரும். இருக்கும் வாய்ப்புகளும் கை நழுவிப் போகாமல் பார்த்துக் கொள்வீர்கள்.

செய்தொழிலில் குடும்பத்தில் பணப்பற்றாக்குறை வராது. குறுக்கு வழிகளிலும் பணம் கைவந்து சேரும். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.

 எதிரிகள் தலைதூக்கினாலும் தலையில் தட்டி உட்கார வைத்துவிடுவீர்கள். உடல்நலமும் சிறப்பாக இருக்கும். அவ்வப்போது உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிடுவீர்கள்.

அதனால் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துப் பேசவும். அரசு விவகாரங்களில் அவசரப்படாமல் நிதானப்போக்கைக் கடைப்பிடிக்கவும். சிலர் வீடு மாற்றம் செய்வார்கள்.

மனதிற்குப்பிடித்த சந்தர்ப்பம் கிடைக்கும்வரை பொறுமை காக்கவும். உங்களுக்குக் கீழ் வேலைசெய்பவர்களின் கஷ்டங்களைப் புரிந்து கொண்டு அவர்களுக்காகச் சிறிது செலவு செய்து உதவுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளையும் இந்த காலகட்டத்தில் நிறைவேற்றுவீர்கள்.

12-10-2018 முதல் 23-01-2020 வரை உள்ள காலகட்டத்தில் நீங்கள்சற்று கூடுதலாக முயற்சித்து இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்துவீர்கள்.

உங்களுக்கு இடைஞ்சல் செய்பவர்களை சமயம் பார்த்து ஒதுக்கி விடுவீர்கள். புதிய ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள். வருமானம் நன்றாக இருக்கும்.

அதேநேரம் அனாவசியச் செலவு செய்யாமல் சேமிப்புகளில் கவனமாக இருக்கவும். பிள்ளைகளும் சிறப்பாக வெற்றி பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மன உளைச்சல்களிலிருந்தும் விடுபடுவீர்கள். திடீரென்று ஒரு புதிய நட்பு கிடைத்து அவரால் ஒரு நன்மை உண்டாகும். புதிய வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.

மந்தமாக நடந்துவந்த காரியங்கள் துரிதமாக நடக்கத் தொடங்கும். தர்மகாரியங்களைச் செய்து மகிழ்ச்சியடைவீர்கள். உங்களின் தெய்வபலம் அதிகரிக்கும். பெற்றோர்களுக்கும் மருத்துவச் செலவுகள் குறையும். உடன்பிறந்தோர் அன்பு பாசத்துடன் பழகுவார்கள். மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு நடப்பீர்கள்.

R3

உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளைக் குறித்த காலத்திற்குள் முடித்து நற்பெயரெடுப்பீர்கள்.

மேலும் வேலைகளைப் புரிந்து கொண்டு அவற்றை மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும் ஆற்றலையும் பெறுவீர்கள்.

இதனால் அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பதவி உயர்வு தேடிவரும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் லாபத்தைப் பார்ப்பார்கள். கூட்டாளிகளையும் அரவணைத்துச் செல்வீர்கள். பழைய கடன்களும் இந்த காலகட்டத்தில் வசூலாகும். மிடுக்காக காரியமாற்றுவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும்.

விவசாயப் பணிகளில் சிறு இடையூறுகள் ஏற்பட்டாலும் அவை தானாகவே விலகிவிடும். உபரி வருமானத்தைப் பெருக்க காய்கனிகளையும் பயிரிடுவீர்கள். கால்நடைகளையும் நல்ல முறையில் பராமரிப்பீர்கள். புதிய விவசாய உபகரணங்களையும் வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்திலுள்ளவர்களின் நட்பு கிடைக்கும். மாற்றுக்கட்சியினருக்கும் உதவி செய்து மகிழ்வீர்கள். கட்சிப்பணிகளில் தொய்வில்லாமல் செயலாற்றுவீர்கள்.

தொண்டர்களையும் அரவணைத்துச் செல்வீர்கள். கலைத்துறையினரின் விடாமுயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தேடித்தரும்.

உங்களின் திறமைகளை முழுமையாகச் செயல்படுத்தி மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். உங்களின் நல்ல பெயரைக் காப்பாற்றிக்கொள்ள கவனத்துடனும் திறமையுடனும் பணியாற்ற வேண்டிய காலகட்டமாக இது அமைகிறது.

பெண்மணிகள் குடும்பத்தாரிடம் அனுசரித்து நடந்துகொள்வார்கள். முக்கியமான முடிவுகள் எடுக்கும்போது அனைவரையும் ஆலோசித்து எடுக்கவும்.

ஆடம்பரச்செலவுகள் எதையும் செய்ய வேண்டாம். சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்தவும். பேசும்போது உஷ்ணமான வார்த்தைகளைப் பேச வேண்டாம். மாணவமணிகள் நன்றாக படித்து சிறப்பான மதிப்பெண்களை அள்ளுவார்கள். வெளியூர் சென்று கல்வி கற்க சிலருக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

***
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

26-10-2017 முதல் 11-10-2018 வரை உள்ள காலகட்டத்தில் எடுத்த காரியங்களை சிரமமின்றி முடித்துவிடுவீர்கள்.

பெரியோர்களின் நட்பும் ஆசியும் உங்களுக்கு உந்து சக்தியாக அமையும். உடலிலிருந்த நோய் நொடி உபாதைகள் ஒவ்வொன்றாத மறையும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் குறையும்.

உங்களின் செயல்திறன் கூடும். தன்னம்பிக்கை உயரும். உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். அனைவரும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். ஆன்மிகத்திலும் ஈடுபாடு அதிகரிக்கும்.

இல்லத்தில் அமைதி நிலவும். திருமணம் போன்ற சுப காரியங்களும் நடக்கக் காண்பீர்கள். குழந்தைகள் வழியில் சில சஞ்சலங்கள் தோன்றி மறையும். அவசர முடிவுகளால் சிறு பண விரயங்களும் உண்டாகும். சிலருக்கு இருக்கும் வீட்டைப் பராமரிக்கும் செலவுகளும் உண்டாகும்.

எவ்வளவு சிக்கலான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டாலும் பெரிய பாதிப்பு இல்லாமல் வெளியில் வந்து விடுவீர்கள்.

மேலும் எவருக்கும் இந்த காலகட்டத்தில் வாக்கு கொடுக்க வேண்டாம். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களின் தவறுகளையும் பெரிது படுத்த வேண்டாம். வெளியூர் வெளிநாட்டுத்தொடர்புகள் ஆக்கம் தரும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

12-10-2018 முதல் 23-01-2020 வரை உள்ள காலகட்டத்தில் பணப்புழக்கம் நிறைவாக இருக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள்.

திடீர் பணப்புழக்கம் நிறைவாக இருக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் தேடிவரும்.

உங்களின் முயற்சிகள் துரிதமாக வெற்றியடையும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். உற்றார் உறவினர்களுடன் சுமுகமாகப் பழகி வர, உங்கள் பழைய மனத்தாங்கல்கள் நீங்கிவிடும்.

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு புதிய இல்லங்களுக்கு மாறும் யோகம் உண்டாகும். சமூகத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். பெரிய செல்வந்தர்களின் நட்பு கிடைக்கும்.

அவர்களின் செல்வாக்கை உங்கள் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்வீர்கள். செய்தொழில் மூலமாக சென்று வந்த பயணங்களால் லாபம் அதிகரிக்கும். பங்குவர்த்தகம் மூலமும் உபரி வருமானம் கிடைக்கும் காலகட்டமாக இகு அமைகிறது என்றால் மிகையாகாது.

N4

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் பிரச்னைகள் குறையும். உங்கள் மனதில் இருந்த குழப்பங்கள் மறைந்து தெளிவு பிறக்கும். பொருளாதாரம் முன்னேற்றமாக இருக்கும்.

உங்கள் வேலைகளை திட்டமிட்டதுபோல் சரியாக செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளும் மனக்கசப்பு நீங்கி பரிவுடன் நடந்து கொள்வார்கள். மனதில் இருந்த சலிப்புகள் நீங்கி சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள்.

வியாபாரிகள் கடுமையாக உழைத்து அதற்கேற்ற பலன்களைப் பெறுவார்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக முடியும். உங்களின் தன்னம்பிக்கை உயரும். தெளிந்த மனதுடன் உங்கள் செயல்களைச் செய்வீர்கள். கூட்டாளிகளின் சூழ்ச்சிக்கு ஆளாக நேரிடலாம்.

விவசாயிகளுக்கு விளைச்சல் சற்று மந்தமாக இருந்தாலும் வருமானத்திற்குக் குறைவு இருக்காது. பழைய குத்தகை மூலம் வருமானம் கிடைக்கும்.

புதிய குத்தகைகளும் தானாகவே தேடாமலேயே கிடைக்கும். கால்நடைகள் மூலமும் எதிர்பார்த்த நன்மைகள் பெறலாம். வருங்காலக் கனவுகள் பலிப்பதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் முக்கிய பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பார்கள். அனைத்துச் செயல்களையும் ஒருமுறைக்கு இருமுறை தீர ஆலோசித்து செயல்படுத்துவீர்கள்.

கட்சியில் மூத்தவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பீர்கள். கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது கவனமாக இருக்கவும். எவருக்கும் அனைவசியமாக வாக்கு கொடுக்க வேண்டாம்.

கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். வருமானமும் பெருகும். சமூகத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைத்து அவர்கள் மூலம் புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள்.

பெண்மணிகள் கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டு தங்களின் காரியங்களைச் சாதித்துக்கொள்வார்கள். குடும்பத்தில் ஏற்படும் சிறிய சண்டை சச்சரவுகளை பெரிதுபடுத்த மாட்டீர்கள்.

குழந்தைகளின் சிறு தவறுகளையும் கண்டு கொள்ளமாட்டீர்கள். அவர்களை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். குடும்பத்தினருடன் ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள்.

மாணவமணிகள் அவசரப்படாமல் நிதானமாகப் பணியாறறுவார்கள். ஆசிரியர்களின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் கைகொடுக்கும்.

பரிகாரம்: துர்க்கையை வழிபட்டு வரவும்.

-ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர்-

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.