சோமாலிய குண்டு தாக்குதலில் உயிரிழப்பு 300 ஆக அதிகரிப்பு

0
786

சோமாலிய தலைநகர் மொகடிசுவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பயங்கர குண்டு வெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டிருப்பது தற்போது உறுதியாகியுள்ளது.

ஹோட்டல் ஒன்றின் நுழைவாயிலுக்கு அருகில் மக்கள் கூடி இருந்த பரபரப்பான வீதியில் குண்டு நிரப்பிய லொர்ரி வண்டி ஒன்றை வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

இஸ்லாமியவாத அல் ஷபாப் குழு 2007இல் சோமாலியாவில் கிளர்ச்சியை ஆரம்பித்தது தொடக்கம் அந்த நாட்டில் இடம்பெற்ற அதிக உயிரிழப்பு கொண்ட தாக்குதலாக இது மாறியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் மீது குற்றம்சாட்டிய ஜனாதிபதி முஹமது அப்துல்லாஹி, இது ஒரு கொடிய செயல் என்று வர்ணித்துள்ளார். எனினும் இந்த குண்டு தாக்குதலுக்கு எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையாகும்போது தனது காணாமல்போன உறவினர்களை தேடி நூற்றுக்கணக்கானோர் கூட ஆரம்பித்ததாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குண்டு வெடிப்பால் அந்த பகுதி பெரும் அழிவுக்கு உள்ளாகியுள்ளது.

குண்டு வெடிப்பால் இடிந்த கட்டடத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் அவசர சேவை பிரிவுகள் ஈடுபட்டுள்ளன. தாக்குதலுக்கு இலக்கான சபாரி ஹோட்டல் முழுமையாக இடிந்து தரைமட்டமாகிவிட்டதாகவும், இடிபாடுகளுக்கு இடையே மக்கள் சிக்கியிருக்கலாம் என எண்ணுவதாகவும் அங்கிருக்கும் செய்தியாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

மொகடிசுவில் வசிக்கும் முஹதி என் அலி, ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “இதுவரை நான் பார்த்ததிலேயே இதுதான் மிகப்பெரிய குண்டு வெடிப்பு, அந்த பகுதியையே அது முழுமையாக அழித்துவிட்டது” என்றார்.

தாக்குதலில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சோமாலியாவில் 3 நாள் துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.