கடன் சுமையினால் குடும்பப் பெண் தற்கொலை

0
490

நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடனை மீளச் செலுத்த முடியாத நிலையில் குடும்பப் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல நிதி நிறுவனங்களிடம் இருந்து பெற்ற கடன்களை மீளச் செலுத்தும் தவணை நாளுக்கு முந்திய தினம் இளம் குடும்பப் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் வினாசியர் வீதி, சந்திவெளியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான 26 வயதுடைய செல்வம் யோகேஸ்வரி என்பவரே இவ்வாறு தன்னைத்தானே மாய்த்தக் கொண்டுள்ளார்.

இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, கிராமங்களில் மக்களின் காலடிக்குச் சென்று நுண் கடன் நிதி வழங்கும் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து இவர் கடன் பெற்றுள்ளார்.

ஆகக் கூடுதலாக ஒரு நிறுவனத்திடமிருந்து பெற்ற 1 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவும் இந்தக் கடன் தொகையில் உள்ளடங்கும்.

இதேவேளை,கட்டார் நாட்டில் வேலைவாய்ப்புப் பெற்றிருந்த அவரது கணவன் மாதாந்தம் குடும்பச் செலவுக்காக ஒரு தொகைப் பணமும் அனுப்பிக் கொண்டிருந்துள்ளார்.

கணவன் அனுப்பும் அந்தப் பணத்திலிருந்தே இதுவரை காலமும் பல நிறுவனங்களிடமிருந்தும் தான் பெற்ற கடனுக்கான தவணைப் பணத்தைச் செலுத்தி வந்துள்ளார்.

இதனிடையே கட்டார் நாட்டுக்கு தொழில் வாய்ப்புப் பெற்றுச் சென்ற கணவன் அங்கு அவர் தொழில் புரிந்த நிறுவனம் மூடப்பட்டதன் காரணமாக நாடு திரும்பியுள்ள நிலையில் நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன் தவணைப் பணத்தைச் திருப்பிச் செலுத்த முடியாமல் மனைவி திண்டாடியுள்ளார்.

அவ்வேளையில், இப்பெண் உறவினர்கள் பலரிடம் கடன் தவணைப் பணத்தைச் திருப்பிச் செலுத்துவதற்காக கடன் கேட்டும் உறவினர்கள் எவரும் பணம் கொடுக்க முன்வரவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

அப்பெண் 3 நிறுவனங்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை சுமார் 25 ஆயிரம் ரூபாவுக்கு மேற்பட்ட தொகையை கடன் தவணைப் பணமாகத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்துள்ளது.

அதனால், மனமுடைந்து காணப்பட்ட அப்பெண் கடன் திருப்பிச் செலுத்தும் தவணைத் தினத்திற்கு முதல்நாளன்றே தற்கொலை செய்து கொண்டுள்ள விவரம் உறவினர்களால் தெரிவிக்கப்பட்டதாக அந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம சேவை உத்தியோகத்தர் தெரிவித்தார்.

இவர் இது போன்று கடன் தவணைப் பணம் திருப்பிச் செலுத்த முடியாமல் மனமுடைந்து மயானம் அமைந்துள்ள பகுதிக்கும் ஓரிருமுறை சென்று தற்கொலைக்கு முயற்சி மேற்கொண்ட விடயமும் தற்போது தெரியவந்திருப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

உடற் கூற்றுப் பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம்பற்றி ஏறாவூர் பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

22448539_918510064972820_7977220082546708580_n22449943_918510021639491_8588769775193594653_n22540077_918509988306161_5703722037602982126_n

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.