திரை விலகுமா??- கருணாகரன் (கட்டுரை)

0
361

 

அரசியலமைப்பின் (வழிகாட்டற்குழுவின்) இடைக்கால அறிக்கை வெளிவந்திருப்பதையடுத்து “வடக்குக் கிழக்கு இணைப்பு”ப் பற்றிய உரையாடல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.

இடைக்கால அறிக்கையில் வடக்குக் கிழக்கு இணைப்பைக் குறித்து தெளிவான உறுதியுரைகள் இடம்பெறவில்லை.

ஆனால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் பின்னிணைப்பில் வடக்குக் கிழக்கு இணைப்பைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பின்னிணைப்புக்கு அரசியலமைப்புத் திருத்தில் எவ்வளவு வலுவிருக்கிறது என்பது கேள்வியே. ஆனாலும் இந்த விடயம் ஒரு அடையாளமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்ற வகையில் இதைநோக்கலாம்.

வடக்குக் கிழக்கு மாகாண இணைப்பு என்பதை தமிழர்கள் கடந்த எழுபது ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ் பேசும் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்ற நிலம் என்ற வகையில் இதைத் தமிழரின் பாரம்பரியப் பிரதேசம் எனவும் இது தமிழர் தாயகம் என்றும் கூறி வந்துள்ளனர்.

தமிழ்த்தரப்பினால் நடத்தப்பட்ட போராட்டமே இந்தப்பிரதேசத்தை விடுவிப்பதை இலக்காகக் கொண்டதுதான்.

புலிகள் இதனைத் “தமிழீழம்” என்று பிரகடனப்படுத்திப் போராடி வந்தனர். இந்தப் பிரதேசத்தில் அரைவாசிப் பகுதியை அவர்கள் தமது கட்டுப்பாட்டிலும் ஆட்சியிலும் சுமார் பதினைந்து ஆண்டுகளாக வைத்திருந்தனர்.

இலங்கை அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைகளிலும் இலங்கை இந்திய உடன்படிக்கையிலும் “வடக்குக் கிழக்கு இணைப்பு” என்ற இந்தக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வந்தது.

இலங்கை இந்திய உடன்படிக்கையின்போது வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டே “வடகிழக்கு மாகாணசபை” உருவாக்கப்பட்டது.

ஆனால், இதனைத் தொடர்ச்சியாகவே எதிர்த்து வந்தது சிங்களத்தரப்பு. இதற்காக அது அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் பல(வித)மான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

வடக்குக் கிழக்கைப் பிரிப்பதற்கு திட்டமிட்ட ரீதியில் குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன.

அல்லை, கந்தளாய், வெலிஓயா, பதவியா போன்றவை இதில் முக்கியமானவை. அத்துடன் இனவிகிதாசாரத்தை மாற்றியமைத்து, தமிழர் பாரம்பரியப் பிரதேசம் என்ற கோட்பாட்டைச் சிதைப்பதற்கான முறையில் திருகோணமலை, அம்பாறை, வவுனியா, முல்லைத்தீவு உள்ளடங்கலான எல்லையோர மாவட்டங்களில் சிங்களக் குடிப்பரம்பலை ஊக்குவித்தது.

மறுபக்கத்தில் வடக்குக் கிழக்கு இணைப்பை (இலங்கை இந்திய உடன்பாட்டில் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக இணைப்பை) நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து சட்ட ரீதியாகப் பிரித்தது ஜே.வி.பி.

இதனால், தற்போது உருவாக்கப்படும் புதிய அரசியலமைப்பிலும் வடக்குக் கிழக்கை இணைப்பதைப்பற்றிய தெளிவான உறுதியுரைப்புகளைச் சிங்களத் தரப்பு முன்மொழியவில்லை.

புலிகள் பலம் பொருந்திய படையணியாக இருந்து போரிட்ட காலத்திலும் கூட சிங்கள அரசு வடக்கு, கிழக்கு இணைப்பை ஒருபோதும் ஏற்றிருக்கவில்லை.

பல்லாயிரம் இராணுவத்தினரை இழந்து புலிகள் அமைப்பை முற்றாக அழித்து முழு நாட்டையும் தமது இறைமையினால் கட்டுப்பாட்டுக்குள் தற்போது வைத்திருக்கும் போது அவர்கள் இரண்டு சிறுபான்மை மாகாணங்களையும் இணைத்து ஒரு நிருவாக அலகாக மாற்றி சிறுபான்மையினரிடம் வழங்குவார்கள் என்பது சாத்தியமற்றது” என எழுத்தாளரும் அரசியல் நோக்கருமான மிஹாத் குறிப்பிடுவது கவனத்திற்குரியது. இதனாலேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தன்னுடைய கோரிக்கையைப் பின்னிணைப்பில் சேர்க்க வேண்டி வந்தது.

இதேவேளை சிங்களத் தரப்பின் உள்நோக்கச் செயற்பாடுகளும் தமிழ்த்தரப்பின் தவறான நடவடிக்கைகளும் வடக்குக் கிழக்கு இணைப்பிற்கு அடியாதாரமாக இருக்க வேண்டிய முஸ்லிம் தரப்பை எதிர்நிலைக்குத் தள்ளி விட்டது.

1980 கள் வரையிலும் தமிழர்களுடன் இணைந்து அரசியற் பயணத்தைச் செய்த முஸ்லிம்கள், வடக்குக் கிழக்கு இணைப்பை சேர்ந்து நின்று ஆதரித்தவர்கள் இன்று எதிர்நிலையெடுத்திருக்கிறார்கள்.

ஆகவே இப்பொழுது வடக்குக் கிழக்கு இணைப்பு என்பது சிங்களத்தரப்பையும் முஸ்லிம் தரப்பையும் வென்றெடுத்தே சாத்தியப்படுத்த வேண்டிய மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.

அப்படியென்றால், முதலில் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் – முஸ்லிம் மக்களுக்கிடையில் – தலைமைகளுக்கிடையில் உடன்பாடுகள் எட்டப்பட வேண்டும்.

நெருக்கமான நிலை உருவாக வேணும். இதற்கு அடிப்படையான புரிந்துணர்வுச் செயற்பாடுகள் அவசியம்.

ஆனால், இவை எதுவுமே செய்யப்பட்டதாகவும் இல்லை. செய்யப்படுவதாகவும் இல்லை.

புலிகளின் காலத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் புலிகளுக்குமிடையில் ஒரு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. ஹக்கீமும் பிரபாகரனும் இதில் கையெழுத்திட்டிருந்தனர்.

அதைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளுக்கும் புலிகள் மற்றும் தமிழ்ச்சமூகப் பிரதிநிதிகளுக்குமிடையில் சந்திப்புகளும் கலந்துரையாடல்களும் 2002 க்குப் பின்னான சில ஆண்டுகள் வரையில் நடந்தது.

அதற்குப் பிறகு எல்லாமே படுத்து விட்டன. இப்பொழுது எதிர்நிலைப்போக்கும் இடைவெளியும் பாரதூரமான அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது.

இதை மீள்நிலைப்படுத்தி, ஒருமித்த நிலைக்குக் கொண்டு வரவேண்டுமானால், பல்வேறு தளங்களில் வேலை செய்ய வேண்டும். விமர்சன புர்வமாகவும் அறிவு சார்ந்தும் நிதானமாக இந்த விடயத்தை அணுக வேண்டியுள்ளது.

ஏனெனில், கடந்த காலத்தில் தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலும் தமிழ் – முஸ்லிம் அரசியலுக்கிடையிலும் நிகழ்ந்த துயரமிக்க கசப்பான நிகழ்ச்சிகள் மிகத் தீவிரமான உணர்ச்சிக் கொந்தளிப்பை இரண்டு சமூகத்திலும் உருவாக்கியிருக்கின்றன.

இவ்வாறு உணர்ச்சிக் கொந்தளிப்புகளுடன் இருக்கும் இருவேறுபட்ட சமூகங்களின் இணைப்பென்பது மிக நேர்மையாகவும் கண்ணியத்தன்மையோடும் விட்டுக்கொடுப்புகள், ஏற்றுக்கொள்ளல்கள் என்ற புரிந்துணர்வோடும் மேன்மையான எண்ணங்களோடுமே நிகழ முடியும்.

அதற்கு ஆற்றலும் சிறப்பும் ஒழுங்கும் கண்ணியமும் நிறைந்த தலைமைகள் அவசியம். இவ்வாறான குணமுடைய சமூகச் செயற்பாட்டாளுமைகள் தேவை. மிகக் கடினமான உழைப்பு வேண்டும். இதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் யாருமே இல்லை என்பதே இன்றைய யதார்த்தம்.

இந்த நிலையிலேயே வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பாகப் பேசப்படுகிறது.

இதில் ஒரு கட்டமாக முஸ்லிம் தரப்பின் முக்கிய கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் ஒரு (ரகசிய) உடன்பாட்டுக்கு கூட்டமைப்பு வந்துள்ளது என்று கூறப்படுகிறது.

இதைப் பற்றிக் கூட்டமைப்போ முஸ்லிம் காங்கிரஸோ இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. (இதை மட்டுமல்ல, எதையுமே இந்த இரண்டு தரப்பும் வெளிப்படையாகப் பேசுவதில்லையே என்பவர்கள் சற்று அமைதி கொள்க). “அதற்கான சூழல் இன்னும் கனியவில்லை என்பதே காரணம்” என்று கூட்டமைப்பின் தரப்பில் கூறப்படுகிறது. “சந்தர்ப்பம் கனிந்து வரும்போது – வேளை வரும்போது திரை அகற்றப்படும் – இதைப்பற்றிய பகிரங்க அறிவிப்பு வெளியாகும்” என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை “முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் வடக்குக் கிழக்கு இணைப்புக்கு ஒத்துக் கொண்டு விட்டது.

இதற்கான ரகசிய உடன்பாட்டில் அது இணங்கி விட்டது. இது முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி. முஸ்லிம்களின் அடிப்படை உரிமைக் கட்டமைப்பைக் மு.கா கைவிட்டு விட்டது.

கட்சி நலனையும் தன்னுடைய தனிப்பட்ட லாபங்களையும் மனங்கொண்டு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம் செயற்படுகிறார்” என ஏனைய முஸ்லிம் கட்சிகள் நேரடியாக முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தலைவர் ரவுப் ஹக்கீமையும் குற்றம் சாட்டியுள்ளன.

கட்சிகளுக்கு அப்பாலும் இத்தகைய குற்றச்சாட்டு ஹக்கீம் மீது சுமத்தப்பட்டுள்ளது. இதை முஸ்லிம் தரப்பில் நிகழ்ந்து கொண்டிருக்கும் உரையாடல்களில் அவதானிக்கலாம்.

இவ்வளவுக்கும் இது தொடர்பாக எதையுமே பேசாமல் அமைதி காத்து வருகிறார் ஹக்கீம்.

“வட – கிழக்கு இணைப்பு தொடர்பாக SLMC ஏன் மௌனம் காக்கிறது?” என்று தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கேள்வி எழுப்பப்பட்ட போது, “தமிழ் மக்களுடனான புரிந்துணர்வை உருவாக்குவதற்காகவே நாம் சில சந்தர்ப்பங்களில் மௌனம் காக்கிறோம்” எனக் ஹக்கீம் தெரிவித்துள்ளமை இங்கே கவனத்திற்குரியது.

இதைப்போன்று, “உடன்பாட்டுக்கும் புரிந்துணர்வுக்கும் இடமளிக்கும் வகையில் கிழக்கிற்கான முதலமைச்சர் பதவியை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுக்கத் தயார்” என்று சம்மந்தன் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.

“முதலமைச்சர் பதவியைக் கொடுத்து, வடக்குக் கிழக்கு இணைப்பைச் சாதுரியமாக (தந்திரோபாயமாக) நிறைவேற்றுவதற்கு முயற்சிக்கிறார் சம்மந்தன். இதை முஸ்லிம்கள் அனுமதிக்க முடியாது” என்று முஸ்லிம்களின் தரப்பிலிருந்து எச்சரிக்கைக் குரல்கள் ஒலிக்கின்றன.

இப்படி முஸ்லிம்களின் பெரும்பரப்பும் வடக்குக் கிழக்கு இணைப்புக்கு எதிரானதாகவே உள்ளது.

முஸ்லிம்கள் மட்டுமல்ல, கிழக்கிலுள்ள தமிழர்களில் ஒரு தொகுதியினரும் வடக்குடன் கிழக்கு இணைக்கப்படுவதை எதிர்க்கின்றனர்.

வரலாற்று ரீதியாகக் கிழக்கு மாகாணம் வடக்குடன் இணைந்திருக்கவில்லை என்று வாதிடும் இவர்கள், பிற்காலத்தில் வடக்கின் விருப்பங்களை நிறைவேற்றும்பொருட்டு மேற்கொள்ளப்பட்ட அரசியலின் விளைவுகளால் கிழக்குத் தமிழர்கள் இழந்தது அதிகம் என்று கூறுகிறார்கள்.

“வடக்கின் அரசியல் தலைமைத்துவத்திற்கும் அதனுடைய நலன்களுக்கும் அந்த நலன்களை எட்டுவதற்கான அபிலாசைகளுக்குமாக கிழக்குத் தொடர்ந்தும் பலியாக முடியாது” என்று உறுதியுரைக்கின்றனர்.

இது தொடர்பாக எழுத்து மூலமான பிரசுரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. “கிழக்கின் சுயநிர்ணயம்” என்ற ஆவணம் இதில் முக்கியமான ஒன்றாகும். அது வரலாற்று ரீதியான ஆதாரங்களை முன்னிறுத்திப் பேச முயற்சிக்கிறது.

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கை அரசியலில், வடக்குத் தலைமைகள் மேற்கொண்ட ஏகப்பிரதிநிதித்துவக் கோட்பாட்டிற்காக கிழக்கின் பங்களிப்பையும் அந்தப் பங்களிப்பு எவ்வாறு பலியிடப்பட்டது என்பதையும் இந்த ஆவணம் குறிப்பிடுகிறது. ஆகவே இனியும் வடக்கின் ஆதிக்க நோக்கத்திற்குக் கிழக்குப் பலியாகி விடக்கூடாது என மேலும் அது வாதிடுகிறது.

இதை நேரடியாக மறுக்காது விட்டாலும் வடக்குக் கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்று பேசி வருவதன் மூலமாக இந்த வாதத்தை ஓரங்கட்டுவதற்கு முயற்சிக்கிறார் சம்மந்தன்.

இதற்கு அவர் பலமான முறையில் வெளிப்படுத்துவதற்குப் பயன்படுத்தும் ஓரடையாளம், தான் கிழக்கை – திருகோணமலையை – ச் சேர்ந்தவன் என்பதாகும். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் வடக்குக் கிழக்கு இணைப்பை வலியுறுத்துகிறார் என்று கூறுவது, வடக்கும் கிழக்கும் இணைந்திருப்பதற்குச் சம்மதம் என்பதாகும் என்று சொல்லாமல் சொல்லும் சேதியாகும்.

வடக்குக் கிழக்கு இணைப்பைப் பொதுவாகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்துகின்றன.

கூட்டமைப்பு மட்டுமல்ல, டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி, முருகேசு சந்திரகுமாரின் சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு, சுகு ஸ்ரீதரனின் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி உள்ளடங்கலான தமிழ்க்கட்சிகள் அனைத்தும் வடக்குக் கிழக்கு இணைப்பைக் கோருகின்றன.

இதேவேளை “வடக்கும் கிழக்கும் இணைந்திருப்பதே பலமாகும். அதுவே தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பாதுகாப்பானது, பலமானது. கிழக்குத் தனியாகப் பிரிவடையும் என்றால், அது சிங்கள ஆக்கிரமிப்பிற்கு எளிதில் உட்பட்டு விடும்.

தற்போது திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் எவ்வாறு சிங்கள மேலாதிக்கம் வலுப்பெற்றுள்ளதோ அத்தகைய ஒரு நிலை விரைவில் முழுக் கிழக்கு மாகாணத்திற்கும் ஏற்படும். அது முஸ்லிம்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று எச்சரிக்கிறார் வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்.

இதற்கு ஆதாரமாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மட்டக்களப்பில் ஒரு பௌத்த பிக்கு காணி விவகாரத்தில் நடந்து கொண்டமை உள்பட பல்வேறு இடங்களிலும் நடந்து கொண்டிருக்கும் நில ஆக்கிரமிப்பு மற்றும் நிர்வாக அதிகாரம் வரையிலான பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டுகின்றனர் வடக்குக் கிழக்கு இணைப்பை வலியுறுத்துகின்ற தமிழ்த்தரப்பினரில் சிலர்.

பொதுவாகவே வடக்குத் தமிழர்களில் பெரும்பாலானவர்களும் கிழக்கை வடக்குடன் இணைத்துக் கொள்ளவே விரும்புகின்றனர்.

இனரீதியான பாதுகாப்பு, தொடர்பாடல், பண்பாட்டு வளர்ச்சி, அரசியற் பலம், நிலப்பேணுகை எனப் பலவகையிலும் இது கூடுதலான சாத்தியங்களை வழங்கும் என்று கூறுகின்றனர்.

அத்துடன், சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை எதிர்கொள்வதற்கு தமிழ் மொழிச் சமூகங்கள் தங்களுக்கிடையில் மொழி ரீதியாகவும் பாரம்பரிய வாழிட நிலத் தொடர்ச்சியின் அடிப்படையிலும் ஒன்றிணைந்திருப்பதே பலமானதாக இருக்கும் என்பது இவர்களுடைய வாதம்.

“தமிழர்களுடைய எழுபது ஆண்டுகால அரசியற் கோரிக்கையும் போராட்டமும் “வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகம்” என்பதாகவே இருந்துள்ளது.

1980 களின் நடுப்பகுதி வரையிலும் முஸ்லிம்களும் இதற்குடன்பட்டிருந்தனர். இடையில் தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நடந்த கசப்பான நிகழ்ச்சிகள் இந்த ஓருணர்வைச் சிதைத்து, பிரிவை முன்னிறுத்திவிட்டன.

ஆனாலும் இதை மீளவும் திருத்திக் கொண்டு ஒன்றுபட்டு, ஓருணர்வின் அடிப்படையில், உத்தரவாதங்களின் கீழ் செயற்பட வேண்டும் என்பதே இன்றைய தேவையாகவுள்ளது. இதுவே எதிர்காலத்தின் பாதுகாப்புக்கும் நன்மையளிக்கும்” என இவர்கள் கூறுகின்றனர்.

7880_content_sampanthanஇதற்கிடையில் முஸ்லிம் தரப்பிலிருந்து இன்னொரு விதமான குரலும் ஒலிக்கிறது. அதுவும் கவனத்திற்குரிய ஒன்று. கடந்த காலக் கசப்பான அனுபங்களை மட்டும் வைத்துக் கொண்டு தொடர்ச்சியாகவே அதே புரிதலோடும் தவறான அணுமுறைகளோடும் செயற்பட வேண்டியதில்லை என இது வாதிடுகிறது. “ஜனநாயக விரோத தமிழ் ஆயுததாரிகள் வடக்கு கிழக்கில் ஆதிக்கம் செலுத்திய காலத்தின் அனுபவமூடாகவே நாம் இன்றும் சிந்தித்து வருகிறோம்.

இன்று சற்று தளர்ச்சியான அரசியல் சூழல் உள்ள நிலையில் மாற்றி சிந்திக்க வேண்டிய தேவையுள்ளது. முறையாக அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமாக இருந்தால் மாகாண இணைப்புக்கான கண்ணோட்டத்தில் புதிய உரையாடல்களை ஆரம்பிப்பது தவறில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் இந்த வழிமுறைகளின் மேல் ஒரு தந்திரோபாய வேகத்தடை போல உருவெடுக்கும் தனியலகு கோரிக்கையும் கவனமாகப் பரீட்சிக்க வேண்டியதே” என்று இதைக் குறித்து எழுதியிருக்கிறார் மிஹாத்.

இவ்வாறு பலவிதமான நிலைப்பாட்டுத் தொகுதிகளாகப் பிளவுண்டிருக்கும் வடக்குக் கிழக்கின் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பாக ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டும். இணைவு அல்லது பிரிவு என.

இதில் மூன்று நடைமுறைத் தெரிவுகள் உள்ளன.

1. வடக்கும் கிழக்கும் தனித்தனியான மாகாணங்களாகவே பிரிந்திருப்பது.

2. வடக்கும் கிழக்கும் இணைந்து தமிழ் பேசும் மக்களின் மாநிலமாக அல்லது மாகாணமாக இருப்பது.

3. வடக்கும் கிழக்கும் தனித்தனியான மாகாணங்களாக நிர்வாக ரீதியில் செயற்படுவது. அதேவேளை இரண்டு மாகாணங்களுக்குமிடையிலும் பிற அம்சங்களிலும் நிர்வாக ரீதியாகவும் முடிந்த புள்ளிகளில் இணக்கம் கண்டு ஒருங்கிணைந்து செயற்படுவது. இதன்மூலம் காலப்போக்கில் பெறப்படுகின்ற அனுபவங்கள், நம்பிக்கை, புரிந்துணர்வின் அடிப்படையில் இரண்டும் இணைவதற்கோ தொடர்ந்தும் அதே நிலைமையில் இருப்பதற்கோ தீர்மானித்துக் கொள்ளலாம்.

இதை விட இன்னொரு சவாலும் உண்டு. இன்றைய வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சிங்கள மக்களும் ஒரு சக்தியாக மாறிவருகின்றனர். இவர்களுடைய பிரச்சினையும் இங்கே ஒரு விவகாரமாக முன்னெழப்போகிறது.

ஆனால், உண்மையில் இவையெல்லாவற்றுக்கும் அப்பால் ஒரு அடிப்படையான விடயம் உண்டு. அது இன்றைய உலக ஒழுங்கு மற்றும் முறைமையில் தனி அடையாளங்களோடு எந்தப் பிரதேசமும் எந்த நாடும் எந்தச் சூழலும் இருக்க முடியாது என்பது. இதையே இன்றைய பின்நவீனத்துவம் வலியுறுத்துகிறது. இது சமூக வளர்ச்சியின் விளைவாகும்.

இதன்படி உறுதியுரைக்கப்படும் சட்டவலுவின்படி பல்லினச் சமூகங்களுடைய வாழ்க்கையை உத்தரவாதப்படுத்தக்கூடிய அரசியற் சாசனமும் அதற்கான நடைமுறைகளுமே அவசியமானவை.

இலங்கையின் புதிய அரசியலமைப்பில் இந்த விடயம் சரியாக உள்வாங்கப்படுமாக இருந்தால் வடக்குக் கிழக்கு இணைப்பு என்ற எண்ணத்திற்கே இடமற்றுப்போய் விடும்.

இன மேலாதிக்கச் சிந்தனையை நீக்காத வரையில் பிரச்சினைகள் எதுவும் தீரப்போவதில்லை. காலவிரயமும் கலக்கமும் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

-கருணாகரன்-

LEAVE A REPLY

*