மகாத்மா காந்தியை சுட்டுக்கொலை செய்தவன் இந்துவா? அல்லது முஸ்லிமா?: மறைக்கப்பட்ட மர்ம பின்னணி!!

0
427

மகாத்மா காந்தி கொலை வழக்கு 1949-ம் ஆண்டே முடிக்கப்பட்டாலும், அது தொடர்பான பல சர்ச்சைகள் இன்னமும் உலவிக்கொண்டே இருக்கின்றன.

அதில் புதிதாக முளைத்திருக்கும் ஒரு சர்ச்சை, ‘காந்தியின் உடலில் பாய்ந்த நாலாவது குண்டு’.

இதை தற்போது தொடங்கி வைத்திருப்பவர் பங்கஜ் பத்னிஸ் என்ற ஆராய்ச்சியாளர். அபினவ் பாரத் அமைப்பின் டிரஸ்டியாகவும் உள்ளார்.

‘காந்தி கொலை வழக்கில் பல விஷயங்கள் இழுத்து மூடப்பட்டதாகவும், காந்தி மீது நான்கு குண்டுகள் சுடப்பட்டதாகவும், மூன்று குண்டுகள் நாதுராம் கோட்சேவின் துப்பாக்கியிலிருந்து வெளிவந்தது என்றும், ‘நான்காவது குண்டை சுட்டது யார்?’

மகாத்மா நான்கு குண்டுகள் பாய்ந்து இறந்தார்’ என்ற அன்றைய தினத்தில் பல பத்திரிகைகளில் வெளிவந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டும் இந்த வழக்கை தொடுத்திருக்கிறார் பங்கஜ் பத்னிஸ்.

அதுமட்டுமல்லாமல், காந்தி கொலையில் வேறு சதி உள்ளதா என்றும், இந்தக் கொலைக்கும் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கும் சம்பந்தம் உள்ளதா என்பதையும் விசாரிக்கும் வகையில் புதிய விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்’ என்றும் உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, வழக்கு தொடர்பாக எழும் கேள்விகளுக்கு விடை தேடுவதில், நீதிமன்றத்துக்கு உதவ முன்னால் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வழக்கறிஞருமான அமரேந்திர சரணை ‘அமிகஸ் கியூரி’யாக உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.

புதிதாக விசாரணை தொடங்கப்படுமா? என்ற கேள்விக்கு, நீதிமன்றம் அக்டோபர் 30-ம் தேதி விடை கொடுக்கும் என்று நம்புவோம்.

gandhi-54-1496069616காந்தி கொலை வழக்கில், ‘யார் தூண்டுதலின் பேரில் நாதுராம் கோட்சே, மகாத்மாவை சுட்டான்? துப்பாக்கியின் உரிமையாளர் யார்? என்ற கேள்விகளுக்கு விடை காணாமலேயே 1949-ம் ஆண்டு வழக்கு முடிக்கப்பட்டது நெருடலை ஏற்படுத்துகிறது.

ஒருவேளை பங்கஜ் பத்னிஸின் கோரிக்கை ஏற்கப்பட்டால் இதற்கும் விடை கிடைக்கும் என்று நம்புவோம்.

30 ஜனவரி, 1948 மாலை 5.12 மணிக்கு மகாத்மா சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது நமக்குத் தெரியும். ஆனால், அன்று மாலை 6.20 மணிக்கு ஆல் இந்திய ரேடியோ அதை உலகுக்கு எப்படி அறிவித்தது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

“இன்று மாலை ஐந்து மணி இருபது நிமிட அளவில், டெல்லியில் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளி இந்து மதத்தை சேர்ந்தவன்” என்று அறிவித்தது.

கொலை பற்றிய அறிவிப்பில் கொலையாளியின் மதம் குறித்த அறிவிப்பு ஏன்?

இந்து, முஸ்லிம் கருத்து வேறுபாடு உச்சகட்டத்தில் இருந்த நேரம் அது. காந்தியைக் கொன்றவன் ஒரு முஸ்லிம் என்று யாரும் அனுமானித்துவிடக்கூடாது என்பதற்காக அரசு இப்படிப்பட்ட ஒரு செய்தியை வெளியிட்டதாகச் சொல்லப்பட்டது.

இதனால், இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே சண்டை வெடிக்கவில்லை. அதே நேரத்தில், அறிவிப்பின் நோக்கம் நிறைவேறியதா என்றால் இல்லை.

அன்றைய தினமே பம்பாயில் குறிப்பிட்ட இன மக்கள் தாக்கப்பட்டார்கள். பதினைந்து பேர் கொல்லப்பட்டார்கள். ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர்.

இத்தோடு இந்தப் பிரச்னை நின்றுவிடவில்லை. இன்றுவரை ஒரு குறிப்பிட்ட இனத்தவர்கள், ‘காந்தியைக் கொன்றவர்கள்’ என்று அடையாளம் காட்டப்படுகிறார்கள். கலவரத்தில் யார் பாதிக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும்விதமாக அந்த அறிவிப்பு அமைந்தது.

காந்தி கொலை பற்றிய செய்தியை ரேடியோவில் வெளியிடும்போது, ‘காந்தியைக் கொன்றவன் ஒரு இந்து என்ற வார்த்தைகளை சொல்லச் சொன்னவர் மௌண்பேட்டன் பிரபு’ என்ற ஒரு கூடுதல் தகவலும் உலவுகிறது. இந்தச் செய்தி நம்மில் பலருக்குத் தெரியாது.

ஒரு தீவிரவாதச் செயல் நடைபெற்றால், அதில் ஈடுபட்ட தீவிரவாதி எந்த மதத்தைச் சேர்ந்தவன், எந்த உட்பிரிவைச் சார்ந்தவன் என்று குறிப்பிடப்படுவதில்லை.

பாகிஸ்தானில் பயிற்சிபெற்ற தீவிரவாதி, இந்தியன் முஜாகிதீன், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி என்று அவர்கள் சார்ந்த தீவிரவாத இயக்கத்தின் பெயரால் மட்டுமே அவர்கள் அடையாளம் காட்டப்படுவார்கள்.

ஆனால், காந்தியைக் கொலை செய்தவன் “ஒரு இந்து” என்று செய்தியை வெளியிட்டது மிகவும் துரதிருஷ்டவசமானது.

கையில் வைத்திருக்கும் கத்தியை வைக்க இடம் இல்லாததால், பக்கத்தில் நிற்பவனின் முதுகில் குத்தி வைக்கப்பட்டது போன்ற ஒரு செயலை அன்றைய ஆட்சியாளர்கள் செய்தனர்.

சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் மட்டுமே தொடர்ந்து பல காலம் ஆட்சி செய்தது. அதனால் இந்த விஷயத்தில் யாரும் அக்கறை காட்டவில்லை. ஆனால், தற்போதைய பிஜேபி அரசும் இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடுவது சரியல்ல.

“மகாத்மா காந்தியைக் கொன்றவன் இந்து மதத்தை சேர்ந்தவன்” என்ற செய்தியை வானொலியில் வெளியிட்டதன் பின்னணியை அரசு ஆராய வேண்டும். அறிவிப்பின் உண்மையான நோக்கத்தைக் கண்டறிய வேண்டும்.

மகாத்மா காந்தியின் கொலை இந்துக்களுக்குப் பெரிய அவப்பெயரைத் தந்தது. கொலையாளி, தான் சார்ந்த இனத்திடம் சொல்லிவிட்டு கொலைக்குச் செல்லவில்லை.

கொலையாளியை யாரும் ஏவிவிட்டதாக கொலை வழக்கில் சொல்லப்படவில்லை. ஆனால், களங்கத்தை இந்து அமைப்புகள் இன்றளவும் சுமக்கின்றன.

இந்து அமைப்புகளின் வளர்ச்சி இதனால் மிகவும் பாதிக்கப்பட்டது. இந்து அமைப்புகளை வெளிப்படையாக ஆதரிப்பது தடைபட்டுப்போனது. சுருக்கமாகச் சொன்னால், இந்து அமைப்புகளின் வளர்ச்சி படுகுழியில் தள்ளி மூடப்பட்டது.

ஒரு குட்டிக்கதையை படிப்போம். இந்தக் கதையை நேர்மையாகப் புரிந்துகொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. வார்த்தைகளுக்கிடையே அர்த்தங்களைத் தேடாதீர்கள்.

ஒரு நாடு. அந்த நாட்டு அரசன் யாரையும் நம்பமாட்டான். தனக்கு மட்டும் முக்கியத்துவம், மரியாதை கிடைக்க வேண்டும் என்று நினைப்பவன்.

அந்த நாட்டில் போர் யானை ஒன்று இறந்துபோனது. அது நாட்டுக்காகப் பல போர்க்களங்களைக் கண்டது. மக்கள் அதன் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தனர். அதன் குட்டி அநாதையானது.

நாடே சோகத்தில் மூழ்கியது. தாயிடம் காட்டியதைப் போலவே குட்டியிடமும் மக்கள் அன்பு காட்டத் தொடங்கினர். அரசனுக்கு அது எரிச்சலூட்டியது. தன் நிழலைக் கண்டே பயப்படும் மாவீரனின் மூளை சிந்திக்கத் தொடங்கியது. அடுத்த நாள் ஒரு கூட்டத்தைக் கூட்டினான்.

‘மக்களே! நீங்கள் நினைப்பதுபோல் இது குட்டியானை அல்ல; இது பன்றி. ஆகையால், இன்று முதல் இதை யாரும் குட்டி யானை என்று அழைக்கக்கூடாது’ என்றான்.

‘இல்லை அரசே! இது பன்றியல்ல. இதற்கு துதிக்கை இருக்கிறது பாருங்கள். இது யானை’ என்றனர் மக்கள்.

அரசனுக்குக் கோபம் வந்தது.

‘தவறு. இதன் நிறத்தைப் பாருங்கள். இதன் வாலைப் பாருங்கள். இது பன்றிதான். துதிக்கையுள்ள பன்றி’ என்று கோபத்தோடு சொன்னான்.

அரசனை எதிர்த்துப் பேச யாருக்கும் தைரியமில்லை.

அரசன் அதோடு நிற்கவில்லை. ‘வீட்டுக்கு ஒருவர் தினமும் வந்து இந்தக் குட்டியைப் பார்த்து ‘நீ ஒரு பன்றி’ என்று சொல்ல வேண்டும்’ என்று ஆணையைப் பிறப்பித்தான்.

வேறுவழியில்லாமல், மக்கள் தினமும் காலையில் குட்டியானையிடம் சென்று ‘நீ ஒரு பன்றி’ என்று சொல்லிவிட்டு தங்களின் அன்றாட பணியைத் துவக்கினர். நாளாக நாளாக, அந்தக் குட்டியானை தன்னை பன்றி என்றே நினைக்கத் தொடங்கியது.

மனத்தால் பன்றியாக இருந்தாலும், உடலால் யானை அல்லவா! அது வளரத் தொடங்கியது. விஷயம் அரசனின் காதுகளை எட்டியது. யானைக்கு அளிக்கப்படும் உணவின் அளவை குறைக்கச் சொன்னான். ஆனாலும் யானையின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. காவலர்களை அழைத்தான்.

‘காவலர்களே! ஒரு குழியை வெட்டுங்கள். அதனுள் இந்தப் பன்றியை இறக்கிவிடுங்கள். பன்றியின் முதுகு, தலை மட்டுமே வெளியே தெரிய வேண்டும். மற்றவர்கள் அதை பார்க்கும்போது அதன் வளர்ச்சி யாருக்கும் தெரியக்கூடாது. அதுமட்டுமல்ல, அது வளர வளர குழியின் ஆழத்தை அதிகப்படுத்துங்கள்’ என்றான் அரசன்.

குழி வெட்டப்பட்டது. யானை அதனுள் இறக்கிவிடப்பட்டது. இனி யானை வளர்ந்தாலும் அதன் வளர்ச்சி யாருக்கும் தெரியாது.

ஒரு நாள், யானையைப் பார்க்க ஒரு சாது வந்தார். உடன் அரசனும் வந்தான். சாதுவை வணங்கியது யானை.

சாது அதனிடம் ஏதோ சொன்னார். அவ்வளவுதான், உடலை சிலிர்த்துக்கொண்டு குழியை விட்டு வெளியே வந்தது. அரசனை துரத்தத் தொடங்கியது.

‘சாதுவே! அதனிடம் என்ன சொன்னீர்கள்? அதற்கு மதம் பிடித்துவிட்டதா? அரசனை துரத்துகிறதே?’ என்று மக்கள் கேட்டனர்.

சாது பேசினார்.

‘என்னது மதமா?’ மக்களே! யானையிடம் பன்றியைக் கண்டான் அரசன். நான் பன்றியிடம் யானையைக் கண்டேன். இதை அதனிடம் சொன்னேன்.

அவ்வளவுதான். நீங்கள் பார்ப்பது அடக்கிவைக்கப்பட்ட ஒருவரின் எழுச்சி, வளர்ச்சி. உங்கள் வசதிக்காக ‘மதத்தை’ அதன் மீது திணிக்காதீர்கள்’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.

யானையின் ஓட்டம் நின்றதா? அரசன் சிக்கினானா? என்பது நமக்குத் தேவையில்லை. நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை மூன்று. ஒன்று, அது பன்றியல்ல என்பது. இரண்டு, அதன் வளர்ச்சி, மூன்று, அதன் மீது ‘மதம்’ திணிக்கப்படக்கூடாது. அவ்வளவுதான்.

இது வெளிப்படையான கதை. இதற்கு சாயம் பூச நினைக்காதீர்கள். ஏனென்றால், அது உங்கள் மனத்தில் இருக்கும் சாயத்தை வெளிக்கொணர்ந்துவிட்டது என்று அர்த்தம்.

– அன்புடன் சாது ஸ்ரீராம்

timthumb (1)

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.