தமிழ் மக்களுக்கான நீதியும் வித்தியா கொலைத் தீர்ப்பும்- சிவ.கிருஸ்ணா (கட்டுரை)

0
327

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் கூட்டு வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ட்ரயல் அட்பார் நீதிமன்றத்தின் மூலம் விசாரணைகள் இடம்பெற்று குற்றவாளிகள் 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், 30 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கின்றது.

மனிதநேயமிக்க ஒவ்வொரு மனிதனையும் முகம் சுழிக்க வைத்த அந்த சம்பவம் தொடர்பில் சட்டம் தனது கடமையைச் செய்துள்ளது.

வித்தியா படுகொலை செய்யப்பட்டு 29 மாதங்களின் பின் அதற்கான நீதி கிடைத்திருக்கின்றது.

இது நல்லதொரு விடயம். வரவேற்கப்பட வேண்டிய நீதித்துறையின் தீர்ப்பு. ஆனால், அரசியல் வாதிகளைப் பொறுத்தவரை இந்த தீர்ப்பை வைத்து அரசியல் செய்யும் அல்லது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகளும் இடம்பெறாமல் இல்லை.

உண்மையில், மூன்று தமிழ் நீதிபதிகள் ட்யல் அட்பார் தீர்பாயத்தில் நியமிக்கப்பட்டு குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யபபட்ட சந்தேக நபர்கள் தடுப்பு காவலில் தொடர்ச்சியாக இருந்து வந்த நிலையிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

கூட்டு பாலியல் வன்புனர்வு மற்றும் கொலை சம்பவம் ஒன்றுக்கு விரைவாக கிடைத்த தீர்ப்பாகவும் இது அமைந்திருக்கின்றது.

அந்த வகையில் இது இலங்கை வரலாற்றில் நீதிதுறையின் வளர்ச்சியையும், அதன் துரிதத்தையும் காட்டும் தீர்ப்பு என்பதில் மாற்று கருத்தில்லை.

ஆனால் இதை அடிப்படையாக வைத்து இலங்கையின் நீதித்துறை கட்டமைப்புக்கள் வலுவாக இருக்கின்றது என்றோ அல்லது இலங்கையில் வாழும் சமூகங்களுக்கிடையில் வேறுபாடு இல்லாத வகையில் சட்ட ஆட்சி தான் நடைபெறுகின்றது என்றோ கருதி விட முடியாது.

ஏனெனில், வித்தியா கொலைத் தீர்ப்பு என்பது வேறு. தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகள், மனிதவுரிமைமீறல்கள், போர்க்குற்றங்கள் என்பவற்றுக்கான தீர்ப்பு என்பது வேறு. வித்தியா கொலையுடன் சம்மந்தப்பட்டவர்கள் சாதாரண பொதுமக்கள்.

ஆனால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனிதவுரிமை மீறல்கள், போர்க்குற்றங்களுடன் சம்மந்தப்பட்டவர்கள் பாதுகாப்பு தரப்பும், உயர் அதிகாரிகளுமே. இந்த இரண்டு விடயங்களிலும் ஒரே மாதிரியான அணுகுமுறை பின்பற்றப்படவில்லை.

ஐ.நா மனிதவுரிமைகள் சபையின் 34 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் எமர்ஸன் நீத்துறை சார்ந்த நீதிபதிகள், நீதித்துறை அமைச்சர், தமிழ் அரசியல் கைதிகள், சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகள் எனப் பல்வேறு தரப்பினரையும் சந்தித்திருந்தார்.

இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதும், அவருடைய அறிக்கையிலும் இலங்கையின் நீதித்துறை கட்டமைப்பை வெகுவாக விமர்சித்து இருந்தார். நீதித்துறையின் கரங்களை சட்டமா அதிபர் கட்டி வைத்திருக்கிறார்.

இது ஜனநாயக நீதித்துறையின் அடிப்படைத் தத்துவம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு முற்றிலும் முரணானது.

எந்தவொரு பிணை மனுவையும் நிராகரிக்கும் அதிகாரம் பெற்றவராக சட்டமா அதிபர் இருக்கிறார். இந்த நடைமுறை இன்னமும் சிறிலங்காவில் உள்ளது என எமர்ஸன் விமர்சித்து இருந்தார்.

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற போது இராணுவத்தாலும், பொலிசாராலும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதும், சந்தேகத்தின் அடிப்படையிலும் பலர் கைது செய்யப்பட்டு தமிழ் அரசியல் கைதிகளாக 10, 15 வருடங்களுக்கு மேலாக எந்தவித விசாரணைகளும் இன்றி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

யுத்தம் முடிவடைந்து 8 வருடங்கள் கடந்துள்ள நிலையில் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வின் பின் சமூகமயமாக்கப்பட்டுள்ள நிலையிலும் அவர்கள் தம்மையும் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அல்லது தம்மீதான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் பல முறை சிறைச்சாலைகளில் போராட்டங்களை முன்னெடுத்துகின்றனர்.

தற்போது கூட மூன்று தமிழ் அரசியல் கைதிகள் தமது வழங்கினை வவுனியா நீதிமன்றில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டாம் எனக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் இலங்கையின் நீதித்துறையோ அல்லது அரசாங்கமோ தமது அதிகார நிலையில் இருந்து கீழ் இறங்கவில்லை. அவர்களுடைய வழக்குகளை துரிதப்படுத்தி முடிப்பதாக தெரியவில்லை.

மறுபுறம், யுத்தம் நடைபெற்ற போதும் அதனை அண்டிய காலப்பகுதிகளிலும் பல பெண்காள் காணமல் போயிருந்தனர்.

21-isaipriya34-600-jpgவிடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த இசைப்பிரியா போன்ற பலர் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான ஒளிப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.

இதில் உள்ள உண்மைததன்மை மற்றும் இது தொடர்பில் நீதியான விசாரணையை நடத்துவதற்கு அரசாங்கம் தயார் இல்லாத நிலையே காணப்படுகின்றது. இத்தகைய பின்னனியிலேயே வித்தியாவின் கொலைக்கு நீதியான தீர்ப்பு கிடைத்திருக்கின்றது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஐ.நா மனிதவுரிமை பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் இணை அணுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்ட விடயங்களில் ஒன்றாக நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுதல் தொடர்பில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் சட்ட ஆட்சியை அமுல்படுத்தி இலங்கையில் நீதி துறை மீது மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புதல் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது.

அவை முழுமையாக நடைமுறைக்கு வராத நிலையில், 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கின்றது.

ஆனால், தமிழ் தேசிய இனத்தைப் பொறுத்தவரை நாட்டில் இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள், காணாமல் ஆக்கப்பட்டமை, போர்க்குற்றங்கள் என்பவற்றுக்கு சர்வதேச விசாரணையை கோரி நிற்கின்றனர்.

அவர்கள் அதன் மூலம் மட்டுமே நீதியைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற குமாரபுரம் படுகொலை போன்றவற்றுக்கான நீதிகள் அவர்களுக்கு முன் படிப்பினையாகவுள்ளது. அதனாலேயே சர்வதேச விசாரணை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்கையதொரு சூழலில் வித்தியா கொலை வழக்குத் தீர்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமன்றி சர்வதேச சமூகம் மத்தியிலும் நன்மதிப்பை பெற்றிருக்கிறது. இதனை அடிப்படையாக வைத்து இலங்கையின் நீத்துறைக் கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக ஒரு தோற்றப்பட்டை உருவாக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்கிறது.

குறிப்பாக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஜெனீவா கூட்டத் தொடருக்கு முன்னதாகவே கலப்பு நீதிப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்பது மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் உட்சேர்க்கப்பட்ட போது சிறிலங்காவின் நீதிச் சேவை மீது அனைத்துலக சமூகம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறிலங்கா அரசாங்கமானது நாட்டின் நீதிச்சேவையை சுயாதீனமானதாக ஆக்கியுள்ளது. ஆகவே கலப்பு நீதிமன்றம் என்கின்ற கோரிக்கை தற்போது தேவையற்றதாகும் என இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும் வித்தியா படுகொலைக்கு துரித கதியில் நீதி வழங்கப்படும் என்று வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கின்றார். இதன் மூலம் நீதித்துறையில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.

தமிழ் தேசிய இனம் நம்பிக்கை கொள்ளும் வகையில் நீதித்துறை செயற்படுகின்றது என்ற ஒரு மனநிலையை உருவாக்கும் செயற்பாடுகள் ஏற்படுத்தப்படுகின்றது. இது சர்வதேச அல்லது கலப்பு நீதிபொறிமுறையை வலுவிழக்கச் செய்து உள்நாட்டு நீதிபொறிமுறையை ஏற்கச் செய்வதற்கான ஒரு செயற்பாடு.

ஆனால், உண்மையில் வித்தியாவிற்கான நீதி என்பது வேறு. தமிழ் மக்களின் முன்னுள்ள மேற்சொன்ன பிரசசனைகளுக்கான நீதி என்பது வேறு.

இவ்விரு விடயங்களையும் இலங்கை அரசாங்கமும், நீதிதுறையும் கையாண்ட மற்றும் கையாண்டு வரும் விதம் வேறு. இதனாலேயே மக்கள் தற்போதும் நீதிதுறையில் நம்பிக்கையிழந்திருக்கிறார்கள்.

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், போர்குற்றம், மனிதவுரிமை மீறல் என்பவற்றில் அரசாங்கம் கரிசனை காட்ட வேண்டும். அது தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்தி அதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பக்கச்சார்பற்ற முறையில் நீதியைப் பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டும்.

அதனூடாகவே இலங்கையின் உள்நாட்டு நீதிபொறிமுறை மீது தமிழ் தேசிய இனத்தை முழுமையாக நம்பிக்கை கொள்ள வைக்க முடியும். இலங்கையில் அவ்வாறானதொரு நீதி கிடைப்பதென்றால், இலங்கைத்தீவின் நீதிபரிபாலனக் கட்டமைப்பின் அடிச்சட்டமாக இருக்கும் சிங்கள பௌத்த கூட்டு மனோ நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

அரசறிவியலின் ஆரம்பப் பாடங்களின் படி ஒர் அரசை சட்டவாக்க சபை அதாவது மக்கள் பிரதிநிதிகளின் சபை, பாதுகாப்புக் கட்டமைப்பு, நீதிபரிபாலனக் கட்டமைப்பு என்ற மூன்று அலகுகள் கட்டமைக்கின்றன. ஓர் அரசை உருவாக்கும் இவ் மூன்று மூலக்கூறுகளும் அவ்வரசின் கொள்கைகளைப் பாதுகாப்பவை.

இலங்கைத் தீவின் அரசு எனப்படுவது அதன் இயல்பில் ஒரு சிங்கள பௌத்த அரசு. எனவே சிங்கள பௌத்த கூட்டு உளவியலை பாதுகாப்பதே அதன் நீதிபரிபாலனக் கட்டமைப்பின் பணியாகும்.

அதில் மாற்றம் ஏற்படும் பொழுதே தமிழ் மக்களது ஏனைய பிரச்சனைகளுக்கும் நீதியை எதிர்பார்க்க முடியும். வித்தியா தீர்ப்பு போன்று இலங்கை நீதித்துறையின் தீர்ப்புக்களை தமிழ் தேசிய இனம் வரவேற்க கூடிய ஒரு களச்சூழல் உருவாகும்.

அதற்கமைய இலங்கை சட்டவாக்கத்திலும், இலங்கை அரசாங்கத்தின் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். அதுவே எல்லா இனங்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலான சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கான ஒரு அடிப்படையாக அமையும்.

-சிவ.கிருஸ்ணா –

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.