தமிழக அரசு ஊழியர்களின் ஊதியம் இரண்டரை மடங்கு உயர்வு

0
458

தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை இரண்டரை மடங்கு உயர்த்துவது என இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், கிராமப் பஞ்சாயத்துச் செயலர் ஆகியோரின் ஊதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு ஊழியர்களின் ஊதியம் 2.57 மடங்கு உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறைந்தபட்ச ஊதியம் 6,100 ரூபாயிலிருந்து உயர்த்தப்பட்டு 15,700 ரூபாயாகவும் அதிகபட்ச ஊதியம் 77 ஆயிரம் ரூபாயிலிருந்து இரண்டேகால் லட்ச ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியவையும் 2.57 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன.

ஓய்வுபெறும்போது வழங்கப்படும் அதிகபட்ச பணத்தின் மதிப்பு 10 லட்ச ரூபாயிலிருந்து 20 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், கிராமப் பஞ்சாயத்துச் செயலாளர் ஆகியோரது ஊதியமும் இதேபோல இரண்டரை மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் தொகுப்பூதியம், மதிப்பூதியம், நிலையான ஊதியத்தை பெற்றுவருவோரின் ஊதியமும் 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊதிய உயர்வின் காரணமாக தமிழக அரசுக்கு 14,719 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.

கண்டனம்

ஆனால், இந்த ஊதிய உயர்வுக்கு சட்டப் பஞ்சாயத்து இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மாநில அரசின் வரி வருவாயில் 67 சதவீதம் அளவுக்கு ஊழியர்களின் ஊதியத்திற்கே சென்றுவிடுவதால், வளர்ச்சித் திட்டங்களுக்குச் செலவழிக்க முடியவில்லையென இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சம்பள உயர்வு என்பது மாநில அரசின் நிதிநிலையைப் பொறுத்து எடுக்கப்படும் முடிவு என்பதால், இதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை மாநில அரசு ஊழியர்களுக்குத் தர வேண்டியதில்லையென்றும் இந்த அமைப்பு கூறியிருக்கிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.