அரசு ஆஸ்பத்திரியில் இறந்த தாயின் உடலை தோளில் சுமந்து சென்ற தொழிலாளி

0
336

பல்லாரி அருகே அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ஆஸ்பத்திரியின் முன்புள்ள சாலை வரை இறந்த தாயின் உடலை தொழிலாளி தனது தோளில் சுமந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.

பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டே தாலுகா காலேம்மாகுடி கிராமத்தை சேர்ந்தவர் மாரப்பா (வயது 76). இவருடைய மனைவி திம்மம்மா (70). இந்த தம்பதிக்கு திருப்பதி மற்றும் ரவி என்று 2 மகன்கள் உள்ளனர்.

இவர்கள் 2 பேரும் கூலி தொழிலாளிகள் ஆவார்கள். இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக மாரப்பா-திம்மம்மா ஆகியோர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர்.

அவர்கள் 2 பேரும் ஒசப்பேட்டே அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 8-ந் தேதி அனுமதிக்கப்பட்டனர். அங்கு, அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்கவில்லை என தெரிகிறது.

இதனால், அன்று மாலை மாரப்பா இறந்தார். இதைத்தொடர்ந்து, அவருடைய உடல் ஆஸ்பத்திரியில் இருந்து கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அன்று இரவு திம்மம்மாவும் இறந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த தம்பதியின் குடும்பத்தினர் டாக்டர்கள் அலட்சியமாக செயல்பட்டதால் தான் மாரப்பா-திம்மம்மா இறந்ததாக குற்றம்சாட்டினார்கள்.

மேலும், திம்மம்மாவின் உடலை அவருடைய மகன் ரவி தோளில் சுமந்து ஆஸ்பத்திரியில் இருந்து ஆஸ்பத்திரி முன்பு செல்லும் சாலை வரை எடுத்து சென்றுள்ளார்.

அங்கிருந்து சரக்கு ஆட்டோவில் திம்மம்மாவின் உடல் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த நிலையில், ரவி தனது தாயின் உடலை தோளில் சுமந்து செல்லும் வீடியோ தனியார் தொலைக்காட்சிகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பல்லாரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ரமேஷ் பாபு கூறுகையில், ‘முதற்கட்ட விசாரணைப்படி, மாரப்பா-திம்மம்மா தம்பதி கடந்த 8-ந் தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அன்று மாலை 4.30 மணிக்கு மாரப்பா இறந்தார். அவருடைய உடல் ஆம்புலன்ஸ் மூலம் கிராமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திம்மம்மா இரவு 7.45 மணிக்கு இறந்தார்.

நோயாளிகளுக்கான தள்ளுவண்டி (வீல்சேர்) ஆஸ்பத்திரியில் இருந்தது. இருப்பினும், எதற்காக திம்மம்மாவின் உடலை அவருடைய மகன் தோளில் தூக்கி சென்றார் என்பது தெரியவில்லை.

இதுகுறித்து விசாரணை நடத்தப்படுகிறது. இந்த விஷயத்தில் அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார்.

201710111301506826_The-dead-mother-body-The-worker-carrying-the-shoulder_SECVPF.gif

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.