இந்தியாவுக்கு எதிராக போராட்டம் – நாமல் ராஜபக்ச இரவோடு இரவாக சிறையில் அடைப்பு

0
260

நீதிமன்ற தடை உத்தரவை மீறி அம்பாந்தோட்டையில் உள்ள இந்திய துணைத் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாமல் ராஜபக்ச உள்ளிட்ட கூட்டு எதிரணியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்குக் குத்தகைக்கு வழங்குவதற்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை கூட்டு எதிரணியினர் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அம்பாந்தோட்டை நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 28 பேர், அன்றையதினமே கைது செய்யப்பட்டனர்.

கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றிருந்த போதும் அவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று மாலை அம்பாந்தோட்டை காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ச, பிரசன்ன ரணவீர, டி.வி.சானக மற்றும் கூட்டு எதிரணியின் மாகாணசபை உறுப்பினர்களான உபாலி கொடிக்கார, சம்பத் அத்துகோரள, மேஜர் அஜித் பிரசன்ன ஆகியோர் நேற்று இரவு 7.30 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ஆறு பேரும் அம்பாந்தோட்டை நீதிவான் முன்பாக நிறுத்தப்பட்டதையடுத்து. அவர்களை எதிர்வரும் 16ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து. இரவோடு இரவாக அவர்கள் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.