தலைமறைவான நடிகர் சந்தானம் முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனுத் தாக்கல்!

0
515

சென்னை: ஒப்பந்ததாரரை தாக்கிய வழக்கில் முன் ஜாமீன் கோரி நடிகர் சந்தானம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார்.

கொடுக்கல் வாங்கல் தககறாரில் போலீஸார் வழக்கு பதிந்ததால் நடிகர் சந்தானம் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

அவர் தரப்பில் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வாங்க முயற்சிக்கலாம் எனவும் கூறப்படுகிறது

பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் பில்டிங் கான்ட்ராக்டருடன் நடிகர் சந்தானம் மோதிக்கொண்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நகைச்சுவை நடிகர் சந்தானம் கடந்த 2015-ம் ஆண்டு வளசரவாக்கத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரும் பில்டிங் கான்ட்ராக்டருமான சண்முகசுந்தரம் (54) என்பவரிடம் கல்யாண மண்டபத்துடன் கூடிய அடுக்குமாடி கட்டிடம் கட்ட கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், உறுதி அளித்தபடி சண்முகசுந்தரம் நடந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் கட்டிடம் கட்டாவிட்டால் தொகையை திருப்பி கொடுத்து விடுங்கள் என்று சந்தானம் கேட்டுள்ளார்.

ஒரு குறிப்பிட்ட தொகையை சண்முக சுந்தரம் திருப்பி கொடுத்துள்ளார். ஆனால், மீதி பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், மீதம் உள்ள பணத்தை திரும்பக் கேட்டு நடிகர் சந்தானம் வளசரவாக்கம் சௌத்ரி நகரில் உள்ள சண்முகசுந்தரத்தின் அலுவலகத்துக்கு நேற்று மாலை சென்றுள்ளார். அவருடன் அவரது உதவியாளர் ரமேஷ் என்பவரும் சென்றுள்ளார்.

பணத்தை திரும்ப கேட்ட போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது கைகலப்பாக மாறி ஒருவர் மீது மற்றொருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது சண்முகசுந்தரத்துக்கு ஆதரவளித்த அவரது நண்பர் வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து வளசரவாக்கம் சட்டம் ஒழுங்கு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். இதற்கிடையில் காயம் அடைந்த பிரேம் ஆனந்த் வளசரவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக வடபழனியில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். நடிகர் சந்தானமும் காயம் அடைந்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவர் மீது மற்றொருவர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து புகாரை பெற்ற போலீஸார் இரண்டு தரப்பினர் மீதும் 506(1) கொலை மிரட்டல் விடுத்தல், 294(பி) அவதூறான வார்த்தைகளில் பேசுதல், காயம் விலைவித்தல் தாக்குதல் 324 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.