தந்தையின் உடலை இலங்கைக்கு கொண்டுவர உதவுமாறு கோரும் பிள்ளைகள்
சுவிட்ஸர்லாந்தின் பிரிசாகோ நகரில் உள்ள அகதிகள் நிலையம் ஒன்றில் நேற்று முன்தினம் அதிகாலையில் சுவிஸ்
பொலிஸாரினால் இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அகதிகள் நிலையத்தில் தங்கியிருந்தவர்கள் மத்தியில் மோதல்கள் இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து நேற்றுமுன்தினம் அதிகாலை 2 மணியளவில் சுவிஸ் பொலிஸ் அதிகாரிகள் இரண்டு அகதிகளை அழைத்துக் கொண்டு அங்கு சென்றனர்.
அப்போது அகதிகள் நிலையத்தில் இருந்த 38 வயதுடைய இலங்கைத் தமிழ் அகதி ஒருவர், இரண்டு கத்திகளுடன், காவல்துறையினர் கூட்டிச் சென்ற இரண்டு அகதிகளையும் தாக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது உடனடியாக காவல்துறை அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில், கத்தியுடன் இருந்த இலங்கைத் தமிழ் அகதி மரணமானார் ரிசினோ மாகாணத்தில் உள்ள பிரிசாகோ நகரில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, சுவிஸ் சட்டமா அதிபர் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே,துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு 6ஆம் வட்டாரம் ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த சுப்ரமணியம் கரன்(வயது 38) எனப்படும் இரண்டு பிள்ளைகளின் தந்தையாகிய குடும்பஸ்தர் ஆவார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு தஞ்சம்கோரி சுவிஸ் நாட்டுக்கு சென்ற சுப்ரமணியம் கரன் கடந்த 2வருடங்களாக சுவிஸ் நாட்டின் டிசினோ மாகாணத்தில் உள்ள அகதிகளுக்கான இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
போரால் மிகவும் கடுமையான பாதிப்புக்களை சந்தித்த இவர் புதுக்குடியிருப்பில் ஆனந்தபுரம் என்னும் கிராமத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர்.
இறுதிப்போரில் அனைத்து உடமைகளையும் இழந்து உறவுகளையும் இழந்து வாழ்ந்த இவர் 2015ஆம் ஆண்டு சுவிஸ் நாட்டுக்கு பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தஞ்சம்கோரி சென்றார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சக அகதிகளுடன் ஏற்பட்ட மோதல் முற்றியநிலையில் அங்கு வந்த சுவிஸ் நாட்டு பொலிஸாரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
இதேவேளை தமது தந்தை இங்கு இருக்கும்போதும் பாரதூரமான எந்தவிதமான குற்றங்களிலும் ஈடுபடாதவர் என கூறும் இவரது பிள்ளைகள் சுட்டுக்கொல்லும் அளவுக்கு எமது தந்தை எந்த தவறும் செய்திருக்கமாட்டார் என தெரிவித்துள்ளனர்.
தமது தந்தையின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு இலங்கை அரசும் சுவிஸ் நாட்டு அரசும் உதவி புரியவேண்டும் என மன்றாட்டமாக கேட்பதாகவும் தமது தந்தைமீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் குறித்து சுவிஸ் நாட்டு அரசால் நீதியான விசாரணைகள் நடாத்தப்பட்டு தமக்குரிய பதில் வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.