எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, எம்ஜிஆர்- 100 : எம்ஜிஆர் ஆரம்ப வாழ்க்கை (பகுதி-1)

0
332

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: எம்.ஜி.ஆர், என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன், இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார்.

எம்.ஜி.ஆருக்கு இரண்டு மூத்த சகோதரிகளும், இரண்டு மூத்த சகோதரர்களும் உண்டு. முதலாவதாக பிறந்த சகோதரி பெயர் காமாட்சி.

இரண்டாவதாகப் பிறந்த மூத்த சகோதரர் பெயர் பாலகிருஷ்ணன். மூன்றாவது சகோதரி சுமித்ரா, நான்காமவர் தன சக்ரபாணி. பாலகிருஷ்ணனும், சுமித்ராவும் இலங்கையில் இருக்கும்போதே இறந்துவிட்டார்கள்.

எம்ஜிஆரின் தந்தை மருதூர் கோபாலமேனன் வக்கீலாகக் கேரளாவில் பணிபுரிந்தார். வக்கீல் தொழிலில் அவ்வளவாகச் சோபிக்க முடியாத நிலையில், எம்.ஜி.ஆருக்கு இரண்டு வயதான போது மீண்டும் தாயகம் திரும்பினார்கள் அவருடைய பெற்றோர்.

ஆனால் தமிழகத்தில் நெருங்கிய உறவினர்கள் ஆதரிக்காத நிலையில் எம்ஜிஆரின் அப்பா கோபாலன் காலமானார். அதனால் தன் தாய்வழி உறவினர் சிலர் ஏற்கனவே குடியிருந்த கும்பகோணம் நகருக்கு எம்ஜிஆரின் தாயார் சத்யபாமா தன் குழந்தைகளோடு வந்தார்.

இப்படித்தான் தந்தையின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாகப் படிப்பைத் தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.

எம்ஜிஆருடன் அவரது அண்ணன் சக்ரபாணியும் சேர்ந்து நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் அறிமுகமாகி பல அனுபவங்களைப் பெற்ற பின்னரே திரைப்படத்துறைக்குச் சென்றார்.

திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது.

pallaiiadssகும்பகோணத்தில் உறவினர்கள் வேலு நாயரும், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் பின்பாட்டு பாடியவரான நாராயண நாயரும் சத்தியபாமா குடும்பத்துக்கு உதவியாக இருந்தார்கள்.

எம்.ஜி.ஆரும் சக்ரபாணியும் கும்பகோணத்திலுள்ள ஆனையடி பள்ளியில் சேர்க்கப்பட்டார்கள். அங்கு எம்.ஜி.ஆர். மூன்றாவது வகுப்பு வரை தான் படிக்க முடிந்தது. அதற்குமேல் படிக்க குடும்ப வறுமை இடம் கொடுக்கவில்லை.

பள்ளியில் படித்தபோது எம்.ஜி.ஆர். பள்ளியில் நடைபெற்ற ‘லவகுசா’ என்ற நாடகத்தில் லவனாக நடித்தார். இது தான் எம்.ஜி.ஆர். நடித்த முதல் நாடகமும், முதல் வேடமும் ஆகும்.

அப்போது மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நாடகக்குழு கும்பகோணத்தில் முகாமிட்டிருந்தது.

லவகுசா நாடகத்தில் எம்.ஜி.ஆரின் நடிப்பைப் பார்த்த நாராயண நாயர், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியாரிடம் எம்.ஜி.ஆரின் அழகிய தோற்றத்தையும், சுறுசுறுப்பையும் கூறி கம்பெனியில் சேர்த்துக் கொள்ள சிபாரிசு செய்தார்.

தன்னையும் சேர்த்துக் கொண்டால் தான், தம்பியை நடிக்க அனுமதிக்க முடியும் என்று சக்ரபாணி சொல்ல, இருவரும் நாடகக் குழுவில் சேர்க்கப்பட்டனர்.

படிக்க வேண்டிய வயதில் என் பிள்ளைகளை நடிக்க வைத்துப் பிழைக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டேனே! என்று எம்.ஜி.ஆரின் தாயார் கண் கலங்கினாராம்.

ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கு கும்பலில் ஒரு வேஷம். பின்னர் படிப்படியாக அவரது நடிப்புத்திறன் மற்றும் அர்ப்பணிப்புத்திறன் கண்டு கம்பெனி சிபாரிசின் பேரில் எம்.ஜி.ஆருக்கு நல்ல வேஷங்கள் கிடைக்கத் தொடங்கின.

கம்பெனியில், எம்ஜிஆர், சக்ரபாணி சகோதரர்களின் நண்பர் பி.யூ.சின்னப்பா, சின்னப்பா ராஜபார்ட் ஆனதும் அவருக்கு ஸ்திரீ பார்ட்டாக எம்.ஜி.ஆர். நடிக்கத் தொடங்கினார்.

நாடகக்குழுவில் சேர்ந்து எம்.ஜி.ஆர் நடித்த முதல் நாடகம் மகாபாரதம். நடித்த வேடம் அபிமன்யு. பதினைந்து வயதுக்குள்ளாக எம்.ஜி.ஆர், அந்தக் கம்பெனி நடத்திய 30 நாடகங்களுக்கு மேல் நடித்துப் புகழ் பெற்றார்.

இதற்கிடையே கும்பகோணத்தில் இருந்த அவருடைய குடும்பம் சென்னைக்கு வர நேர்ந்தது. சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் எம்.ஜி.ஆர். தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். அங்கு இருக்கும் போதுதான் எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரி காமாட்சி தனது பதினாறாம் வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்.

சகோதரியின் மறைவு எம்.ஜி.ஆரை மிகவும் பாதித்தது. அதுமட்டுமல்ல, ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியார் நாடகங்களை சரிவர நடத்த முடியாத நிலையில் தத்தளித்ததால் எம்.ஜி.ஆர் வருமானமின்றி அவதிப்பட்டார்.

எம்.ஜி.ஆருக்கு சினிமா வாய்ப்புகள் அதிகம் இல்லாமல் இருந்த காலகட்டத்தில் நாடக மன்றம் துவக்கினார்.

முதல் நாடகமாக ‘இடிந்த கோவில்’ திருச்சியில் துவங்கியது. அதில் ரத்னமாலா, கதாநாயகியாக நடித்தார். எம்.ஜி.ஆருக்கு ‘இடிந்த கோவில்’ என்ற பெயர் அபசகுனமாகப்பட்டது. அதனால் ‘இன்பக்கனவு’ என்று மாற்றினார். நாயகியாக ரத்னமாலாவுக்கு பதில் ஜி.சகுந்தலா நடித்தார்.

ஒவ்வொரு மாதமும் நாடக மன்றம் 1-ந் தேதி சென்னையை விட்டுக் கிளம்பினால் 20-ந் தேதி வரை வெளியூர்களில் நாடகம் நடக்கும். எப்போதும் இரவு 10-00 மணிக்கு மேல் நாடகம் துவங்கி நள்ளிரவு 2-00 மணிக்கு. சில சமயங்களில் அதிகாலை 4 -00 மணிக்கும் முடிவடையும். அதற்கு பின் உணவுண்டு. உடனே அடுத்த ஊருக்கு பயணம் துவங்கும்.

ஓவ்வொரு ஊரிலும்… நாடகம் முடிந்து எம்.ஜி.ஆர். சிறிது நேரம் மக்கள் முன் உரை நிகழ்த்துவார்.

அப்போது தி.மு.க.வின் கொள்கைகளைப் பற்றிச் சொல்வார். நாடகத்துடன் கட்சிப் பிரச்சாரமும் சேர்ந்தே நடந்து வந்தது. நாடகத்தில் எம்.ஜி.ஆருக்குப் மேக்கப் என்பதே கிடையாது. எம்.ஜி.ஆர் ஒரு சட்டையும், ஒரு பேண்டும் அணிந்து கொள்வார்.

கனவுக் கட்சியின் போது மட்டும் (சுமார் பத்து நிமிடங்கள் வரை இடம்பெறும்) விதம் விதமான வண்ண உடைகள் அணிவார்.

அந்தக் காட்சியின் போது அவர் ஒரு சில நொடிகளுக்குள் உடை மாற்றம் செய்து வருவது ரசிகர்களுக்கே பிரமிப்பூட்டும்.

எம்.ஜி.ஆர். எந்த ஊரில் நாடகம் நடத்துகிறாரோ அங்கு தனி பங்களாக்கள், வீடுகளை வாடகைக்குப் பிடித்து இருப்பார்கள்.

பெண்களுக்கும், ஆண்களுக்கும் தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருக்கும். அனாவசியமாக எந்த ஒரு நடிகரும், ஒரு நடிகையைப் பார்த்து பேசி விட முடியாது. ராணுவ கட்டுப்பாடுகள் போலிருக்கும்.

அது மட்டுமல்லாமல், இரவு நேரங்களில் வெளியாட்களால் தொந்தரவு நேரக்கூடாது என்று. எம்.ஜி.ஆர். தூங்காமல் டார்ச் லைட்டுடன் தங்கும் இடத்தைச் சுற்றிக் கொண்டு இருப்பார். வீட்டிற்குள்ளும் சில சமயம் வெளிச்சம் வந்து விழும்.

எம்.ஜி.ஆர். நாடக மன்றம் நடத்திய நாடகங்கள் ‘இன்பக்கனவு, அட்வகேட் அமரன், சுமைதாங்கி இது பின்னர் நல்லவன் வாழ்வான் என்ற பெயரில் படமாகிறது, பகைவனின் காதலி’ ஆகியவை. புஷ்பலதா, ஜி.சகுந்தலா, தங்கவேலு ஆகியோர் எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தின் மூலமாகத் தான் சினிமாவுக்கு வந்தார்கள்.

சீர்காழியில் ‘இன்பக்கனவு’ நாடகம் நடத்திய போது, அதில் சண்டைக்காட்சியில் எம்.ஜி.ஆர் நடிக்கையில் குண்டுமணியை தூக்கிப்போடும் போது, அவர் வழுக்கி எம்.ஜி.ஆர். காலில் விழ, அதனால் எம்.ஜி.ஆரின் இடது கால் ஒடிந்து போனது. சென்னை வந்து சிகிச்சை பெற்ற எம்.ஜி.ஆர், ஆறே மாதங்களில் குணமாகி, சினிமாவில் மீண்டும் சண்டைக்காட்சிகளில் முன்னிலும் வேகமாக நடித்தார்.

தொடரும்…

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.