எம்ஜிஆர் 100!! “எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்புத் தொடர்,

0
527

அறிமுகம்..

உலகிலேயே திரைப்படத்தின் மூலமாக மக்களிடையே செல்வாக்கைப் பெற்று, அதை அரசியல் சக்தியாக மாற்றி ஆட்சி புரிந்தவர்… எம்.ஜி.ஆரைப் போல எவரும் இருக்க முடியாது.

திரைப்படத் துறையில் அவரை ஒரு சகாப்தம்! என்று சொல்லும் அதே நேரத்தில்; அரசியலிலும் அவர்… யாராலும் யூகிக்க முடியாத அதிசய மனிதராகவே விளங்கினார்.

சினிமா மூலம் மக்களுக்கு அறிமுகமான நாளிலிருந்து இன்று வரை எம்.ஜி.ஆரின் வாழ்க்கைக் கட்டங்கள் ஒரு சரித்திரமாகவே அமைந்து விட்டிருக்கின்றன.

எம்.ஜி.ஆருடன் கருத்து மாறுபட்டவர்கள் கூட அவரது நல்லியல்புகளை உணர்வு வயத்துடன் நினைவு கூர்கிறார்கள்.

மொத்தத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே மூன்றெழுத்தில் மூச்சிருக்கும்; அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் என்று ‘தெய்வத்தாய்’ படத்தில் எம்.ஜி.ஆர் பாடி நடித்ததை நிரூபிப்பதைப் போலத்தான் அவரது வாழ்க்கையும் அமைந்துவிட்டது.

இத்தனை சாதனை மனிதராக விளங்கிய எம்.ஜி.ஆர். பிறந்தது 1917- ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி… ஆக, இந்த ஆண்டு 2017, ஜனவரி 17 ஆம் தேதியோடு அவருக்கு 100 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.

எம்ஜிஆரின் வாழ்நாள் சாதனைகளைப் போற்றும் வகையில், தமிழக அரசு, இந்த வருடம் முழுவதையும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்துக்கான ஆண்டாக அறிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் அவரது நினைவுகளைப் போற்றி பல்வேறு இடங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழகமே எம்ஜிஆர் நினைவுகளில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில்; இன்றைய இளையதலைமுறையினரும் கூட மறைந்த முதல்வரும், மக்கள் மனம் கவர்ந்த நடிகருமான எம்ஜிஆரைப் பற்றி அறிந்து கொள்ளும் பொருட்டு; எம்ஜிஆரின் ஆரம்பகால சினிமா மற்றும் அரசியல் பிரவேஷம், அதில் அவரடைந்த வெற்றிகள், எம்ஜிஆரின் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள், அவரது அரிய புகைப்படங்கள், அவர் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்திய நாடு போற்றும் திட்டங்கள், தங்கள் மொத்த வாழ்க்கையையும் எம்ஜிஆரை ரசிப்பதற்காகவே அர்ப்பணித்துக் கொண்டவர்களான அவரது அதி தீவிர ரசிகர்களைப் பற்றிய சுவாரஸ்யமான செய்திகள் உள்ளிட்ட பல விஷயங்களை எம்ஜிஆர் 100 எனும் தலைப்பில் தொடராக வெளியிடவிருக்கிறது.

வேடிக்கையாக ஒரு விஷயம் சொல்வார்கள்,

இந்தியாவில் தவழும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளின் பார்வையில் படுமாறு இந்தியப்பிரபலங்கள் சிலரது புகைப்படங்களைப் பரப்பி சில விஞ்ஞானிகள் ஒரு புது விதமான ஆராய்ச்சியில் இறங்கினார்களாம்.

அந்த ஆராய்ச்சியின் நோக்கம் எந்த பிரபலம் அறியாக் குழந்தைகளைக் கூட கவர்ந்திழுக்கும் சக்தி கொண்டவர் என்பதை அறிவது தான்.

ஏசு  கிறிஸ்து, மகாத்மா காந்தி, எம்ஜிஆர், அண்ணாதுரை, இப்படி நீண்ட அந்த பிரபலங்கள் லிஸ்டில் அத்தனை குழந்தைகளும் சொல்லி வைத்தது போல் ஆசையாய் எடுத்துப் பார்த்தது யாருடைய புகைப்படத்தை தெரியுமா?

பொன்மனச்செம்மல் எம்ஜிஆரின் புகைப்படத்தைத்  தான்.

எப்போதும் வசீகரப் புன்னகை மாறாத அந்த முகத்தை குழந்தைகளால் மட்டுமல்ல எம்ஜிஆரை வெறுப்பவர்களாலும் கூட ரசிக்காமல் இருக்க முடிந்ததில்லை என்பதற்கு அவரது வாழ்க்கையும், வாழ்நாள் முழுக்க அவருக்கு கூடிய கூட்டமுமே சாட்சி. அவையெல்லாம் அப்போது அந்த மாமனிதருக்காக ‘தானாய் சேர்ந்த கூட்டம்’!

வாசகர்களிலும், அப்படித் தானாய் சேர்ந்த கூட்டத்து ரசிகர்கள் பலர் இருக்கலாம். இந்தத் தொடர் நிச்சயம் அவர்களை ஏமாற்றாது. ஆம்…  எம்ஜிஆர் 100 ஐ வாசித்து மகிழுங்கள்!

LEAVE A REPLY

*