தமிழ் மக்களின் கோரிக்கையும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையும்!! – ருத்திரன் (கட்டுரை)

0
345

புலி வருகிறது, புலி வருகிறது என்பது போல் புதிய அரசியல் யாப்பிற்கான இடைக்கால அறிக்கை வருகிறது என்ற சொற்பதம் கடந்த வருடத்தின் நடுப்பகுதியில் தொடங்கி இலங்கை திருநாட்டை ஆக்கிரமித்து இருந்தது.

ஒரு வழியாக கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பின்னர் கடந்த 21 ஆம் திகதி அரசியல் நிர்ணய சபையில் அதாவது பாராளுமன்றத்தில் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஒக்ரோபர் மாதத்தில் விவாதம் நடைபெறும் என்றும் வழிநடத்தல் குழுவின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முக்கிய மூன்று விடயங்களை மையப்படுத்தியதாக புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதில், பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைப்பு மற்றும் மாகாணசபை உள்ளிட்ட தேர்தல் முறைகளுக்கான மறுசீரமைப்பு ஆகியவை நிறைவேற்றப்பட்டு விட்டது.

மூன்றாவது விடயமான இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை முன்வைப்பது மட்டுமே எஞ்சியிருந்த விடயமாக இருந்தது.

இந்த விடயத்தில் புதிய அரசியல் யாப்பு உருவாக வேண்டும் என்றும் இருக்கின்ற யாப்பில் திருத்தங்களை மேற் கொண்டால் போதுமானது என்றும் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று வந்தன.

இந்த வாதங்களை முன்வைத்தவர்கள் சிங்கள பௌத்த மேலாண்மைவாதிகளும், அவர்களின் தயவால் ஆட்சி நடத்துவபர்களும் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

ஒரு சில முஸ்லிம் அரசியல் தலைவர்களும், வடக்கு – கிழக்கை இணைக்கக் கூடாது என்றும், ஜனாதிபதியின் அதிகாரங்கள் 19 ஆவது திருத்திற்கு மேலாக குறைக்கப்படக் கூடாது என்றும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறித்து அவர்கள் பேசியிருப்பது ஒரு பெரிய விடயமல்ல. ஆனால் அவர்களது முக்கியமான கோரிக்கை என்பது வடக்கும், கிழக்கும் இணையக் கூடாது என்பதே.

ஆனால், தமிழ் தேசிய இனத்தின் இருப்பு என்பதும், அந்த தேசிய இனத்தின் அடையாளத்தை கட்டிக் காப்பதற்கும், அந்த தேசிய இனத்தின் ஆட்புலனான வடக்கும்- கிழக்கும் இணைந்து இருப்பது ஒன்றே நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்கும்.

இதனை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் தலைமைகள் காத்திரமாக எடுத்துக் கூற வேண்டிய நிலையில், அதனை இடைக்கால அறிக்கையில் வெறுமனே ஒரு பின்னினைப்பில் சேர்த்துக் கொண்டுள்ளதோடு தமது கடமைகளை சுருங்கிக் கொண்டுள்ளனர்.

வடக்கு- கிழக்கு இணைப்பு என்பது சர்வதேச ஒப்பந்தத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட விடயம்.

கிட்டத்தட்ட ஒரு தசாப்தகாலம் இணைந்த வடக்கு, கிழக்கில் ஒரு சமஸ்டி அலகை நிறுவதற்காகவும், அதற்கு வாய்ப்பு இல்லாத பட்சத்தில் சர்வதேச நியதிகளுக்குட்பட்டு தமிழ் தேசிய இனம் தமக்கென ஒரு இறைமையுள்ள அரசை நிறுவிக் கொள்வதை நோக்கமாக கொண்டும் இதுவரை காலமும் போராடியது.

இதில் இலட்சக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. பல இலட்சக்கணக்கானோர் உயிர்வாழ்வதற்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இன்றும் கூட பல இலட்சக்கணக்கானோர் தங்களது வீடுகளையும், இதர உடமைகளையும் இழந்து சொந்த நாட்டிலேயே அகதி வாழ்க்கை வாழ்கின்றனர்.

இந்த காயங்களுக்கு மருந்திடுவதற்காகவே சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தின் பேரில், இனியும் கொடுமைகள் தொடரக் கூடாது என்ற நோக்கில் புதிய அரசியல் யாப்பின் ஊடாக ஒடுக்கப்பட்ட தேசிய இனத்திற்கு தீர்வு வழங்க வேண்டிய நிர்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் இருக்கிறது.

தனிநாடு கேட்டு போராடிய ஒரு தேசிய இனம் தனது இருப்பை உறுதி செய்து கொள்ளவும், தனது உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்கும், தமது ஆட்புல ஒருமைப்பாட்டு பிரதேசத்தில் தமக்குரிய அரசியல் உரிமையுடன் வாழ்வதற்கும், தமது பிரதேச அபிவிருத்திகளை தாமே முன்னெடுத்துச் செல்வதற்கான உரிமையையும் வலியுறுத்துகிறது.

அதனை வழங்க வேண்டியதும் அதற்கு அனுசரணையாக ஏனையவர்களை இணங்கச் செய்ய வேண்டியதும் இதுவரை காலமும் தமிழ் தேசிய இனததை அடக்கி ஆண்டவர்களின் பாரிய பொறுப்பும் கடமையும் ஆகும்.

ஆயுத போராட்ட காலத்தில் இணைந்த வடக்கு – கிழக்கில் ஒரு சமஸ்டி அலகை வழங்க தயாராக இருந்தவர்கள் இன்று அதிலிருந்து விலகிச் செல்வது என்பது பலரையும் முகம் சுழிக்கச் செய்திருக்கிறது.

தமிழ் மக்களின் வீரம் செறிந்த போராட்டத்திற்கு, சாத்வீக வடிவில் அழுத்தமாக செயல் வடிவம் கொடுக்க வேண்டிய தமிழ் தலைமை குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இந்த விடயத்தில் செயல் திறனற்றவாராகவே தென்படுகிறார்.

தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டத்தில் ஒரு மிதவாத அரசியல் தலைவராக நெல்சன் மண்டேலா எவ்வாறு உறுதியுடன் இருந்து, தனது கொள்கையில் சமரசம் இன்றி ஆயுதப் போராட்டத்தையும் பக்கபலமாக இணைத்துக் கொண்டு வெற்றி பெற்றாரோ அதைப் போன்று தனக்கு பின்னால் அணிதிரண்டு இருந்த மக்கள் பலத்தைக் கொண்டு அரசாங்கத்துடன் பேரம் பேசும் சக்தியை கூட்டமைப்பின் தலைவர் உருவாக்கியிருக்க வேண்டும். இந்த இடத்தில் அவரது செயற்பாடு திருப்திகரமாக இல்லை.

இத்தகைய பின்புலத்திலேயே அரசியல் தீர்வை மட்டுமே மையமாகக் கொண்ட புதிய அரசியல் யாப்பிற்கான இடைக்கால அறிக்கை வந்திருக்கின்றது.

இது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுமா..?, அந்த விவாதங்கள் இதயபூர்வமாக நடைபெறுமா..?, பரஸபர சகிப்புத்தன்மை- விட்டுக் கொடுப்பு- உண்மையான தேசபக்தி- பாதிக்கப்பட்ட மக்கள் அமைதியான வாழ்வதற்கான உறுதி மொழி ஆகியவற்றைக் கொண்டதாக அமையுமா..? என பல கேள்விகள் எழுகின்றன.

இந்தக் கேள்விகளுக்கு காரணமாக அண்மையில் ஜனாதிபதி ஐ.நா பொதுச்சபையில் ஆற்றிய உரையும் அமைகிறது.

எல்லாவற்றையும் பொருளாதார அபிவிருத்தி ஊடாகவும், மேம்போக்கான ஜனநாயகத்தின் ஊடாகவும் மாற்றி விடலாம் என்று நினைப்பது ஒரு போதும் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையாது.

பல்லின கலாசார மக்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் மதச்சார்பின்மைக் கொள்கையும், பல்லின கலாசாரங்களையும் சமத்துவமாக பார்க்கின்ற ஒரு பார்வையுமே அனைவரையும் அந்த நாட்டு குடிமக்களாக உணர வைக்கும்.

அந்த வகையில் இந்த நாட்டில் வாழும் அனைவரும் இலங்கையர் என்ற செருக்குடனும், பெருமையுடனும் வாழ்வதற்கு இந்த இலங்கைத் தீவும் மதசார்ப்பு இன்மையையும், பல்லின காலாசாரத்தை பேணும் முறைமையையும் வளர்த்துக் கொள்வது அவசியம்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் அதில் இந்த விடயங்கள் உத்தரவாதப்படுத்தப்படல் வேண்டும். ஆனால், புதிய அரசியலமைப்பின் மத விவகாரத்தில் பௌத்ததிற்கு முன்னுரிமை அளிப்பது என்பது இந்த உத்தரவாதத்தை கேள்விக்குட்படுத்தியுள்ளது.

புதிய அரசியல் யாப்போ அல்லது யாப்பு திருத்தமோ எதுவென்றாலும் கடந்த ஒரு தசாப்த காலமாக நீடித்து வருகின்ற தமிழ் தேசிய இனத்தின் உரிமைப் போராட்டத்திற்கான தீர்வாக அமையவேண்டுமே தவிர, மீண்டும் மீண்டும் பிரச்சனைகளை கிழப்பக் கூடிய, விவாதத்தைத் தூண்டக் கூடிய விடயங்களை முன்வைப்பதால் எந்தப் பயனும் யாருக்கும் ஏற்படப் போவதில்லை.

கிடைத்திருக்கின்ற இந்த வாய்ப்பு சகல தரப்பினருக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு. அடிமைப்படுத்தியவர்களுக்கும், அடிமை வாழ்வை வாழ்பவர்களுக்கும் இடையில் ஒரு பரஸ்பர நல்லிணக்கத்தையும், சகோதரத்தையும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பு.

இதனை நழுவ விடாமலும், வழுவிச் சென்று விடாமலும் காப்பாற்ற வேண்டியது இன்றைய ஆட்சியாளர்களின் கடமை.

இதற்கு தனது கொள்கைகளிலும், விட்டுக் கொடுப்பின்றி இருக்கின்ற தமிழ் சந்ததியும், எதிக்கால சந்ததியும் இந்த நாட்டை தமது தாய் நாடாக போற்றி வாழ்வதற்கு உகந்த வழியை காண வேண்டியது தமிழ் தலைமைகளின் கடமை.

-ருத்திரன்-

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.