தென்னிலங்கையில் பீதிகிளப்பிய பச்சைப் புலிகள்!: வன்னிக் காட்டுக்குள் சென்ற பிரபாகரனின் குடும்பத்தினர்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை-123)

0
3012

இந்தியப் படையினர் யாழ் குடாநாட்டை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பின்னர் பிரபாகரனும், புலிகள் இயக்க முக்கிய தளபதிகளும் வன்னிக் காட்டுக்கு சென்றனர்.

யாழ் குடாநாட்டில் இருந்த வாழ்க்கை முறைக்கும் பின்னர் காட்டுக்குள் ஏற்படுத்திக் கொண்ட வாழ்க்கை முறைக்கும் இடையே வித்தியாசம் இருந்தது.

ஆரம்பத்தில் புலிகள் இயக்க உறுப்பினர்கள் பலருக்கு காட்டு வாழ்க்கைக்கு பழக்கப்படுவது சிரமமாக இருந்தது. நகரப் பகுதியிலும், மக்கள் மத்தியிலும் இயங்கிப் பழக்கப்பட்ட உறுப்பினர்கள் புதிய சூழலுக்கு படிப்படியாக பழக்கப்படுத்தப்பட்டனர்.

இந்தியப் படை வடக்கு-கிழக்கு முழுவதையும் கைப்பற்றி நிலை கொண்டுவிட்டது. படைபலமும் பயங்கரமாக இருக்கிறது.

இனிமேல் போரிடுவது முடியாத காரியம் என்று நம்பிக்கையிழந்து இயக்கதில் இருந்து வெளியேறியவர்களும் இல்லாமல் இல்லை.

முக்கிய உறுப்பினர்கள் சிலரே இந்தியப் படையினரிடம் சரணடையத் தொடங்கியதால் புலிகள் இயக்க கீழ்மட்ட உறுப்பினர்கள் பலருக்கு குழப்பமான நிலை ஏற்பட்டது.

சூழல் மாற்றத்தின் போது ஏற்படக்கூடிய நெருக்கடிகளையும், நம்பிக்கையீனங்களையும் புலிகள் அமைப்பினரும் இப்போது சந்தித்து கொண்டிருந்தனர்.

புலிகள் இயக்கத்தின் கதை இத்தோடு முடிந்தது. இந்தியப் படையினர் எப்பாடுபட்டாவது புலிகளை ஒழித்துக்கட்டியே தீருவர் என்றுதான் பெரும்பாலான மக்களும் நினைத்தனர்.

இச் சூழ்நிலையில் பிரபாகனுக்கும் புலிகள் இயக்கத் தலைமைக்கும் பலவேறு சவால்கள் இருந்தன.

முதலில் இயக்கத் தலைமையை பாதுகாத்து தமது புதிய தளப்பகுதியை கெட்டிப்படுத்துவது. அடுத்ததாக மக்களுக்கும், இயக்க உறுப்பினர்களுக்கும் நம்பிக்கையூட்டக் கூடிய வகையில் தாக்குதல்களை நடத்தவேண்டும்.

தொடர்பற்றுப்போன இயக்க அணிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவது, புத்துணர்ச்சி ஊட்டுவது போன்ற பணிகளும் இருந்தன.

காட்டுக்குள் இருந்த உறுப்பினர்களுக்கு உணவுப் பற்றாக்குறையும் ஆரம்பத்தில் இருந்தது. குடி தண்ணீருக்காக காட்டுப் பகுதியில் கிணறுகள் தோண்ட வேண்டியிருந்தது. இருப்பிடங்களையும் அமைக்க வேண்டியிருந்தது.

வன்னி காட்டுப் பகுதிகள் மாத்தையாவுக்கு நன்கு பரிச்சயமானவை. அப்போது பிரபாகரனுக்கும், மாத்தையாவுக்கும் இடையே விரிசலுக்குமான அறிகுறியே தோன்றாத காலம்.

thalaivarmadhivathanichiz7பிரபாகரனின் குடும்பம்

இந்தியப் படையோடு மோதல் தொடங்கி பிரபாகரன் வன்னிக் காட்டுப் பகுதிக்கு சென்ற போது பிரபாகரனின் குடும்பத்தினர் என்ன ஆகினர்?

அது பற்றி பிரபாகரனே ஒரு முறை பின்வருமாறு கூறினார். “இந்திய இராணுவம் எங்களை தீவிரமாக வேட்டயாடிய போது என் மனைவி மதிவதனியையும், குழந்தைகளையும் உறவினர் வீடுகளில் இருக்கும்படி எவ்வளவோ கூறினேன்.

ஆனால் அவள் கேட்டவில்லை. என்னுடனே இருப்பேன் என பிடிவாதம் பிடித்தாள். பின்னர் குழந்தைகளை மட்டும் இயக்க ஆதரவாளர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்தோம்.

ஒரே இடத்தில் இரு குழந்தைகளையும் வைத்திருக்க விரும்பவில்லை. ஒன்றுக்கு ஏதேனும் நடந்தால் மற்றொன்றாவது பிழைத்திருக்கட்டும் என எண்ணி மூத்தவனான சார்ள்ஸை ஒரு இடத்திலும். இளையவனான துவாரகாவை வேறு இடத்திலும் வளர்க்க ஏற்பாடு செய்தோம்.

முதலில் அதற்கு ஒப்புக்கொண்டு என்னுடன் வந்த மதிவதனி நாட்கள் செல்லச்செல்ல குழந்தைகளை எண்ணி புலம்பத் தொடங்கினாள்.

ஆயிரக்கணக்கான தமிழீக் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகுமோ என்று தெரியாத நிலையில் உள்ளது. அவர்களுக்கு நடப்பதே நம் குழந்தைகளுக்கும் நடக்கட்டும் என்று கூறினேன். ஆனாலும் சில வேளைகளில் இரவு நேரங்களில் திடீர் என்று எழுந்து குழந்தைகளை நினைத்து கதறி அழுவாள்.

என்னைப் பிடிக்க முடியாத இந்திய இராணுவம் மதிவதனியையும், குழந்தைகளையும் எப்படியாவது கைது செய்ய வேண்டும் எனப் பெரும் முயற்சி செய்தது” எனக் கூறியிருக்கிறார் பிரபாகரன்.

பிரபாகரனின் இரண்டாவது குழந்தையான துவாரகா வயிற்றுப் போக்கு நோயினால் மரணமானதாகக் கதைகள் பரவியிருந்தன. அவை தவறான செய்திகளாகும்.

பொறுப்பாளரின் சரணடைவு

கிட்டுவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்தவர்களில் ஒருவர் அரியாலை, பாஷையூர் போன்ற பகுதிகளுக்கு பொறுப்பாக இருந்த மலரவன்.

இவர்தான் முன்னர் கிறிஸ்தவ மதகுரு ஒருவர் மூலம் தன்னிடம் சரணடைந்த எட்வேர்ட் என்பவரை சித்திரவதை செய்து கொலை செய்தவர். அச்சம்பவம் தொடர்பாக முன்னர் குறிப்பிட்டிருக்கிறேன்.

இந்தியப் படையினர் யாழ்நகரைக் கைப்பற்றியவுடன மலரவன் தன் குடும்பத்தினருடன் போய் சேர்ந்து கொண்டார்.

இந்திய இராணுவத்தினர் முன்னேறிகொண்டிருந்த போது நல்லூர் கந்தசாமி கோவில் அருகே தனது குடும்பத்தாருடன் ஒரு காருக்கு பின்னால் மக்களோடு மக்களாக மலரவன் ஒளிந்து கொண்டிருந்தார்.

பின்னர் வெளிநாடொன்றுக்கு தப்பிச் செல்வதற்காக தனது குடும்பத்தினருடன் புறப்பட்டார் மலரவன். மலரவனை இனம்கண்ட சிலர் இந்தியப் படையினருக்கு தகவல் கொடுத்தனர். மலரவன் கைது செய்யப்பட்டு இந்தியப் படையினரின் சிறையில் வைக்கப்பட்டார்.

இந்தியப் படையினர் மலரவனை விடுதலை செய்த பின்னர் தனது உயிருக்கு புலிகளால் ஆபத்து ஏற்படும் என்று பயந்து அவர் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார்.

alpiratthuraiyapasபச்சை புலிகள்

1988ன் ஆரம்பத்தில் ஜே.வி.பி இயக்கத்தினரின் நடவடிக்கைகள் தென்பகுதியில் தீவிரமாகின.
இராணுவத்தினரையும், பொலிசாரையும் மட்டுமல்லாமல், தங்கள் இயக்கத்தினருக்கு எதிரான அரசியல்வாதிகளையும் ஒழித்துக்கட்டத் தொடங்கியது ஜே.வி.பி.

இதேவேளையில் மற்றொரு திகில் செய்தியும் வெளியாகிக்கொண்டிருந்தது. ஜே.வி.பி உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட இளைஞர்களும், யுவதிகளும் ஒரு குழுவினரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். வீதிகளில் பிணமாக வீசப்பட்டுக் கொண்டிருந்தனர்.

ஜே.வி.பி யினரை வேட்டையாடுவோராக தம்மை கூறிக்கொண்ட அக்குழுவினர் தமது இயக்கத்தின் பெயர் “பச்சைப்புலிகள்” என்று அறிவித்தனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் நிறம் பச்சை. எனவே பச்சைப் புலிகளுக்கும் ஆளும் கட்சிக்கும் இடையே நிச்சயம் தொடர்பிருக்க வேண்டும் என்று சந்தேகம் எழுந்தது.

ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவரத்தனவின் மகனான ரவி ஜெயவர்ததனாதான் விஷேட அதிரடிப் படைக்கு பொறுப்பாக இருந்தார்.

அதனால் விஷேட அதிரடிப்படையினர்தான் “பச்சைப்புலிகள்” என்ற பெயரில் செயற்பட்டு சந்தேகிக்கப்படும் நபர்களை தீர்த்துக் கட்டுகிறார்கள் என்றும் கட்டுக் கதைகள் உலாவத் தொடங்கின.

ஜே.வி.பியினரால் இடது சாரிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கொலை செய்யப்பட்டனர். ஆதனால் இடதுசாரிக்கட்சிகளைச் சேர்ந்த ஒரு பிரிவினர் இணைந்து மக்கள் புரட்சிகர செம்படை என்ற அமைப்பை உருவாக்கினார்கள். அந்த அமைப்பே “பரா” என்று சுருக்கமாக அழைக்கப்பட்;டது.

சுதந்திர மாணவர் இயக்கம் என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்களே “பராவின்” முக்கிய உறுப்பினர்களாகவும் இருந்தனர். ஜே.வி.பிக்கு பதிலடி கொடுக்கும் புரட்சிகர இராணுவ அமைப்பு தாங்கள்தான் என்ற “பரா” கூறிக் கொண்டது.

vaikuntha-vasannasஐ.நா சபையில் அதிரடிப் பாய்ச்சல்

இம்முறை பிரிட்டிஸ் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட இலங்கைத் தமிழர் கிருஷ்னா வைகுந்தவாசன்.

இந்த வைகுந்தவாசன் பற்றி அன்றொரு நாள் உலகமே பேசிக் கொண்டது. இலங்கைத் தமிழர்களும் வியந்து நின்றனர்.

அந்தநாள் 5.10.1978

அன்றுதான் ஐக்கிய நாடுகள் சபைக்குள் அதிரடியாகப் புகுந்து தமிழீழப் பிரகடனம் செய்தார் வைகுந்தவாசன்.

ஐக்கிய நாடுகள் சபைக்குள் செல்வது சாதாராண காரியமல்ல. உலக தலைவர்களும், அமைச்சர்களும் உள்ளே செல்லலாம். வைகுந்நதவாசன் ஒரு சாதாரண மனிதர், ஐநா சபைக் காவலர்களின் கண்களிலேயே மண்ணைத் தூவி விட்டு உள்ளே புகுந்தார் என்றால் நம்பவே முடியாத சாதனை அல்லவா?

பாலஸ்தீன வீடுதலை இயக்கம் கூட பல்லாண்டு காலமாக படாதபாடுபட்டு, பல நாடுகளின் கோரிக்கையின் பயனாகத்தான் ஐ.நா சபைக்கு செல்ல முடிந்தது. யாசீர் அரபாத் அங்கு பேச முடிந்தது.

ஆனால் யாருடைய சிபாரிசும் இல்லாமல் ஐ.நா மேடையில் ஏறிப் பேசிவிட்டு இறங்கினார் வைகுந்தவாசன் என்றால் மனிதர் கில்லாடிதானே. இந்த அரசியல் தொடரில் நான் தவறவிட்ட அந்த அபூர்வ நிகழ்வை இப்போது தருகிறேன்.

அமேரிக்காவில் நியூயோர்கில் இருக்கிறது ஐக்கிய நாடுகள் சபை.

நீதிபதியாக இருந்து பின்னர் ஓய்வு பெற்று இலண்டனில் வழக்கறிஞராக பணியாற்றியவர் வைகுந்தவாசன்.

தன்னுடைய தெடர்புகள் மூலமாக ஐ.நா சபையின் பார்வையாளர் பகுதிக்கு சென்று சபை நிகழ்ச்சிகளை பார்வையிடும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டார்.

அப்போதுதான் அந்த வாய்ப்பை பயன்படுத்தி சபைக்குள் புகழ்ந்து பேசினால் என்ன என்ற யோசனை அவருக்குள் உதித்தது.

அதனைச் செயலாக்க படிப்படியாக முன்னேறினார். பல நாட்கள் சென்று பார்வையாளர் பகுதியில் இருந்தார். பின்னர் மெல்ல மெல்ல காவலர்களுக்கு பரிச்சயமான முகமாகிவிட்டதால் சபைக்கு வரும் உலகத் தலைவர்கள் அமரும் மண்டபத்திற்குள்ளும் தடை இன்றி செல்ல முடிந்தது.

இனி சபைக்குள் புகுந்து கொள்வது தான் பாக்கி. அதற்குரிய நாளும் வந்தது.

5.10.1978 அன்று ஐ.நா நிகழ்ச்சிகள் கொலம்பியா நாட்டுப் பிரதிநிதி தலைமையில் நடந்து கொண்டிருந்தன.

அமேரிக்கா, சோவியத் யூனியன் (அன்று) பிரிட்டன் உட்பட 150 நாடுகளின் தலைவர்கள் அமர்ந்திருந்தனர். பார்வையாளர் பகுதியில் சுமார் இரண்டாயிரம் பேர் அமர்ந்திருந்தனர்.

காலை நிகழ்ச்சியில் சைப்பிரஸ் நாட்டு தலைவரும், சூரிணம் நாட்டுத் தலைவரும் பேசி முடித்திருந்தனர். நண்பகல் இடைவேளைக்குப் பின்னர் ஒரே நாட்டுப் பிரதிநிதிதான்; பேசுவதாக இருந்தது.

அவர்தான் இலங்கைப் பிரதிநிதி. அன்று இலங்கைப் பிரதிநிதியாக கலந்து கொண்டவர் வெளிநாட்டு அமைச்சர் ஹமீட்.

இப்போது இலங்கைப் பிரதிநிதி பேசுவார் என அறிவிக்கப்பட்டது.

சபையில் இருந்து எழுந்தார் சைகுந்தவாசன், மிடுக்காகப நடந்து போய் மேடையில் ஏறினார். வணக்கம் சொன்னார். இலங்கைப் பிரதிநிதி என்ன பேசப் போகிறார் என்று ஆவலாயிருந்தனர் பிரதிநிதிகள்.

எடுத்த வீச்சிலேயே இலங்கை அரசின் அடக்குமுறைகளைப் பற்றி சுருக்கமாக கூறிமுடித்தார். இது என்ன இலங்கை அரசின் பிரதிநிதியே தங்கள் அரசை சாடுகிறாரே! என்று பிரதிநிதிகளுக்கு ஆச்சரியம்.

அதேவேகத்தில் தன்னை தமிழீழப் பிரதிநிதியாகவும் தன் பெயர் கிருஷ்ன வைகுந்த வாசன் என்றும் சொன்னவர் தமிழீழப் பிரகடணம் செய்வதாகவும் முழங்கினார். தமிழீழம் எங்கே இருக்கிறது என்றும் விளக்கினார்.

அப்போதுதான் விஷயம் புரிந்தது. சட்டென்று மைக்கை செயல் இழக்கச் செய்தனர். சபையெங்கும் ஒரே பரபரப்பு. சபைக் காவலர்கள் பாய்ந்து சென்று வைகுந்தவாசனை குண்டுகட்டாகத் தூக்கிக்கொண்டு போனார்கள்.

வைகுந்தவாசன் முகத்தில் மட்டும்தான் நினைத்ததை சாதித்தவிட்ட திருப்தி குடி கொண்டிருந்தது.

பாதுகாப்பு

தென்னிலங்கை இடதுசாரி கட்சிகளுக்கு இயக்கங்களில் இருந்து வெளியேறிய தமிழ் இளைஞர்களும் பாதுகாப்பாளர்களாக செயற்பட்டனர்.

சுவரொட்டிகள் ஒட்டுவது போன்ற பணிகளில் இடது சாரிக்கட்சியினர் ஈடுபடும் போது பாதுகாப்பளிப்பதும் இந்த இளைஞர்கள்தான்.

அரசியல் கட்சிகளின் பாதுகாப்புக்காக அரசாங்கம் கொடுத்த ஆயுதங்களை பயன்படுத்துமளவுக்கு தேர்ச்சி பெற்றவர்கள் இடது சாரிக்கட்சியில் இருக்கவில்லை. அதனால் இயக்கங்களில் இருந்து வெளியேறி உதிரிகளாக கொழும்பில் நின்ற இளைஞர்களை அக்கட்சிகள் பயன்படுத்திக் கொண்டன.

ஜே.வி.பியினரும் தமிழ் இளைஞர்கள் சென்று இடது சாரிக் கட்சிகளுக்காக சுவரொட்டிகள் ஒட்டியபோது தாக்குதல்களில் ஈடுபாடாமல் தவிர்த்துக் கொண்டனர்.

அப்போதெல்லாம் கொழும்பில் சோதனைச் சாவடிகளில் சிங்கள இளைஞர்கள், யுவதிகளுக்குத்தான் கெடுபிடி.

அடையாள அட்டையில் தமிழர் என்று இருந்தால் சோதனையே கிடையாது.

rokaviviraகாட்டுக்குள் ஜே.வி.பி

வடக்கு-கிழக்கில் புலிகள் எப்படிக் காட்டுப் பகுதிகளை நோக்கி பின்வாங்கினார்களோ, அதே போல ஜே.வி.பியினரும் தென்னிலங்கைக் காட்டுப்பகுதிக்குள் பதுங்கியிருந்தனர்.

ஜே.வி.பி இயக்கத் தலைவரான ரோகன விஜய வீர தாடி மீசை எல்லாவற்றையும் மழித்துக் கொண்டு காட்டுப் பகுதிக்குள் தலைமறைவாக இருந்தார்.

அப்போது புலிகளுக்கும், ஜே.வி.பிக்கும் இடையே ஒரு ஒற்றுமை இருந்தது. இரண்டு இயக்கங்களுமே இந்தியப் படையை வெளியேறுமாறு கோரிக் கொண்டிருந்தன.

(தொடர்ந்து வரும்)

அரசியல் தொடர் எழுதுவது அற்புதன்
தொகுப்பு: கி.பாஸ்கரன்-சுவிஸ்

“பிரபாகரன் என் காலில் வந்து விழுந்தால்தான் போர் நிறுத்தம் செய்வேன்!”- ராஜீவ் காந்தி!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை -121)

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.