“பிரபாகரன் என் காலில் வந்து விழுந்தால்தான் போர் நிறுத்தம் செய்வேன்!”- ராஜீவ் காந்தி!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை -121)

0
1209


புலிகள் இயக்கத்தினர் நடமாட்டம் இருப்பதாகத் தகவல் கிடைத்ததும் இந்தியப் படை அணியொன்று விரைந்தது.

அவர்கள் தேடிச்சென்ற பகுதியில் புலிகள் யாரும் இல்லை. தவறான தகவல் கிடைத்த ஏமாற்றத்துடன் திரும்பிக் கொண்டிருந்த போது புலிகள் திடீரென்று தாக்கினார்கள்.

இந்தியப் படையினருக்கு தவறான தகவல் கிடைக்கச் செய்துவிட்டு. அவர்கள் எதிர்பாராத இடத்தில் புலிகள் தாக்குதல் நடத்தினார்கள்.

இந்தியப் படை தரப்பில் பத்துக்கு மேற்பட்ட படையினர் பலியானார்கள். மானிப்பாய் பகுதியில் அச்சம்பவம் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மற்றொரு மோதல் புலிகள் தரப்பில் காயமடைந்தவர்களில் ஒருவர் நடேசன்.

காயமடைந்த நடேசன் இந்தியப் படையினரால் தூக்கிச் செல்லப்பட்டார். மயக்கத்தில் கிடந்த நடேசன் கண்திறந்து பார்த்த போது இந்தியப் படையின் மருத்துவமனையில் இருந்தார். தற்போது தமிழீழக் காவல் துறையைத் தலைவராக இருப்பவர் அவர்தான்.

நடேசன் வடமராட்சியைச் சேர்ந்தவர். பிரபாகரனின் இளம்பிராய நண்பர்களில் ஒருவர்.

நடேசனின் தந்தை பாலசிங்கம், சமசமாஜக் கட்சியின் முக்கிய பிரமுகராக இருந்தவர். இலங்கைப் பொலிஸில் கடமையாற்றிய நடேசன், தன்னுடன் கடமையாற்றிய சிங்களப் பெண் ஒருவரை காதலித்து மணந்துகொண்டார்.

ஜனாதிபதி ஜெயில்சிங்

04-1391503610-rajiv-zail-singh2-6001987ம் ஆண்டின் இறுதியில் இந்திய ஜனாதிபதி ஜெயில் சிங்கை திராவிடக் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணியும், தமிழ் தேசிய கட்சித் தலைவர் பழ.நெடுமாறனும் சந்தித்தனர்.

இலங்கையில் இந்தியப் படை நடவடிக்கைள் தொடர்பாகவே அச்சந்திப்பு இடம்பெற்றது.

இந்திய ஜனாதிபதி ஜெயில் சிங்கும், இந்தியப் பிரதமர் லாஜீவ் காந்தியும் அப்போது பனிப்போரில் ஈடுபட்டிருந்தனர்.

ஜனாதிபதி ஜெயில் சிங்கை ராஜிவ் காந்தி மதிப்பதில்லை என்பதுதான் பனிப்போருக்குக் காரணம் என்ற கூறப்பட்டது.

அச் சமயத்தில் ஜெயில்;சிங்கை சந்தித்து தம் உள்ளக்கொதிப்பைக் கொட்டினார்கள். வீரமணியும், நெடுமாறனும்

“பிரதமர் இந்திரா காலத்தில் புலிகளுக்கு இந்தியா பயிற்சி அளி;த்தது, ஆயுதங்கள் கொடுத்தது. இப்போது ராஜிவ் காந்தி இந்திய இராணுவத்தை அனுப்பி ஆயுதங்களைப் பறிக்க நினைப்பது நியாயாமா?” என்று கேட்டனர்.

அதற்கு அன்றைய இந்திய ஜனாதிபதி ஜெயில் சிங் சொன்ன பதில் இது தான்:

“போராளிகளுக்கு பயிற்சி அளிப்பது என்று இந்திரா முடிவு செய்த போது, நான் உள்துறை அமைச்சராக இருந்தேன். என்னிடமே அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார் இந்திரா.

பயிற்சிக்கான இடம், பயிற்சி கொடுப்பவர்கள் ஆகியோரை நானே என்னுடைய நேரடிக் கண்கானிப்பில் தேர்ந்தெடுத்தேன்.

எனக்கும் இந்திராவுக்கும் தவிர வேறு யாருக்கும் இந்த இரகசியம் தெரியாமல் பாதுகாக்கபட்டது.

என்ன நோக்கத்திற்காக தமிழ் இளைஞர்களுக்கு இந்தப் பயிற்சியை அளித்து ஆயுதம் கொடுத்தோம் என்பது இன்றையப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு தெரியாது.

இந்திரா எத்தகைய தொலைநோக்குப் பார்வையோடு இதைச் செய்தார் என்பதை அறிந்து கொள்ளும் சக்தி துரதிஷ்டவசமாக ராஜீவுக்குக் கடையாது. என்னிடமும் இது குறித்து ஆலோசனை கேட்பதில்லை.

அறிவு முதிர்ச்சியும், அனுபவ முதிர்ச்சியும் இல்லாதவர்களையும் ராஜீவின் ஆலோசகர்களாக இருக்கின்றனர். அதனால்தான் இந்த மோசமான நிலை ஏற்பட்டுள்ளது”

இதுதான் தம்மிடம் ஜெயில்சிங் வருத்ததோடு தெரிவித்த கருத்து என்று திரு.நெடுமாறன் தனது நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ் சொன்னது

திரு.நெடுமாறான் இன்னொரு விடயத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரான கலைஞர் கருனாநிதியும் நெடுமாறனும் 1987களில் நெருக்கமாக இருந்தவர்கள். இலங்கைத் தமிழர் பிரச்சனைகளில் கூட்டாக நடவடிக்;கைகளில் ஈடுபட்டவர்கள்.

இந்தியப் படைக்கும் புலிகளுக்கும் இடையே மோதல் நடந்து கொண்டிருந்த போது கலைஞர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தாராம் நெடுமாறான்.

“இந்தியப் படையுடன் புலிகள் சண்டையிட முடியுமா? எப்படித் துணிந்தார்கள்? என்று ஆச்சரியமாகக் கேட்டாரரம் கலைஞர் கருணாநிதி.
அப்போது கலைஞர் கருணாநிதியுடன் முரசொலிமாறனும் இருந்தார்.

“போர் நிறுத்தம் செய்வது பற்றி ராஜீவ் காந்தியுடன் பேசினேன். பிரபாகரன் என் காலடியில் விழுந்து கெஞ்சினால்தான் போரை நிறுத்தச் சொல்லுவேன்” என்று ராஜீவ் காந்தி தன்னிடம் கூறியதாக நெடுமாறனிடம் சொன்னாராம் முரசொலிமாறன்

எம்.ஜி.ஆர். வேண்டுகோள்

MGR-Tamil-Eelam-6சென்னையில் இருந்த கிட்டுவை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து கொண்டிருந்தன. ஆனாலும் எம்.ஜி.ஆர் அசைந்து கொடுக்கவில்லை. கிட்டுவை வீட்டுக்காவலில் வைத்தால் போதும் என்று கூறிவிட்டார்.

09.11.87ல் தமிழக சட்ட மன்றம் கூடும்போது இந்தியப் படை போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை கொண்டு வருமாறு கி.வீரமணி, பழ.நெடுமாறான் உட்பட பல கட்சிகள் வேண்டுகோள் விடுத்தன.

இந்த அறிக்கைகள் வெளியான சூட்டோடு அன்றைய வெளிநாட்டு அமைச்சர் நட்வர்சிங்கை எம்.ஜி.ஆரிடம் அனுப்பி வைத்தார் ராஜீவ் காந்தி.

தமிழக சட்டமொன்றில் தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படாமல் தடுப்பதற்காக எம்.ஜி.ஆருடன் பேசவே தனது வெளிநாட்டமைச்சரை அனுப்பினார் ராஜீவ்.

imagesபிரதமர் ராஜீவின் வேண்டுகோளை எம்.ஜி.ஆர் ஏற்றுக்கொண்டார். ஆயினும், போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்று நட்வர்சிங் எம்.ஜி.ஆர் வேண்டுகோள் விடுத்திருப்பார் என்று கருதப்பட்டது.

எம்.ஜி.ஆர் மரணமாவதற்கு முதல்நாள் புலிகளுக்கு ஒரு செய்தி அனுப்பினார். தன்னை வந்து உடன் சந்திக்குமாறு கூறியிருந்தார்.

வழக்கமாக பிரபாகரனின் பிரதிநிதியாக எம்.ஜி.ஆரைச் சந்திப்பவர் அன்று சென்னையி;ல் இருக்கவில்லை. அதனால் வேறு ஒருவர் இருந்தார்.

அவரை எம்.ஜி.ஆர் சந்திக்கவில்லை. வழக்கமாக சந்திப்பவரையே அனுப்பும்படி கூறிவிட்டார் எம்.ஜி.ஆர்

பெருந்தொகை ஒன்றை புலிகளுக்கு வழங்குவதற்காகாவே அழைப்பு விடுத்திருந்தார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் மறைவுச் செய்தி புலிகளுக்கும் பலத்த அதிர்ச்சியாக அமைந்தது.

அஞ்சலி தெரிவித்து அறிக்கை விட்டிருந்தனர் புலிகள்.

மாற்றுக் கருத்து

pirapakaranaaaaasஇந்தியப் படையினருக்கும் புலிகளுக்கும் இடையே மோதல் ஆரம்பமான பின்னர் இந்தியப் படையினருடன் நட்பாக பழகும் ஆட்களை எச்சரிக்க தொடங்கியிருந்தனர் புலிகள் என்று கூறியிருந்தேன் அல்லவா?

எச்சரிக்கையை மீறியவர்களில் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். வேறு சிலர் நேரடியாக மிரட்டப்பட்டனர்.

இந்தியப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியகளில் புலிகள் இயக்கத்தினர் பல்வேறு ரூபங்களில் நடமாடினார்கள்.

இந்தியப் படையினர் இரவு நேரமாகியதும் காவலரண்களைவிட்டு முகாம்களுக்குச் சென்றுவிடுவர். மீண்டும் மறுநாள் காலையில்தான் காவரலண்களுக்கு வருவார்கள்.

அவ்வாறு இந்தியப் படையினர் சென்ற பின்னர் அப்பகுதிகளில் புலிகள் தங்கியிருப்பார்கள். சுதங்திரமாக திரிவார்கள்.

“பகலில் இந்தியப் படை இரவில் புலிகள்” என்ற மக்கள் கூறிக் கொள்வார்கள்.

இக்கட்டத்தில் தான் 1988 இன் ஆரம்பத்தில் ஈழநாட்டு பத்திரிகையில் ஒரு ஆசிரியர் தலையங்கம் வெளியானது.

இந்தியப் படையோடு புலிகளின் யுத்தத்தை மறைமுகமாக குறைகூறுவது போல அத்தலையங்கம் தீட்டப்பட்டிருந்தது.

“மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா?” என்று அந்த ஆசிரியரின் தலையங்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்தில் பாரம்பரியங்களுடன் கலந்த பத்திரிகை ஈழநாடு. அதன் நிர்வாக ஆசிரியராக அப்போது இருந்தவர் நவச்சிவாயம் சபாரத்தினம். அவர் முன்னால் யாழ் இந்துக் கல்லூரி அதிபராக இருந்தவர்;.

அமரர் சபாரத்திரனத்தால் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கங்கள் தனித்துவமானவை. யாரையும் நேரடியாக குறிப்பிட்டு புண்படுத்தாமல் நாசுக்களாக எழுதப்படுபவை.

இலங்கை அரசு, இலங்கை அரச படைகளை கண்டித்தெல்லாம் மிக நுட்பமான தலையங்கங்களை தீட்டியிருந்தவர் அமரர் சபாரத்தினம்.
அதனால் தான் 1982ல் யாழ் நூல் நிலையத்துடன் சேர்த்து ஈழநாட்டு காரியாலயமும் தீக்கரையாக்கப்பட்டது.

அப்போது யாழ் அரசாங்க அதிபராக இருந்த திருலயனல் பெர்னாண்டோவின் முயற்சியின் பயனாக ஈழநாடு நஷ்டஈடு பெற்றது. அதன் காரணமாக புது அச்சியந்திரத்துடன் மறுபடி ஈழநாடு வெளியாகிக் கொண்டிருந்நதது.

இந்நிலையில்தான் “ஈழநாடு” வெளியிட்ட ஆசிரியர் தலையங்கம் புலிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

“ஈழநாடு” அலுவலகம் யாழ்ப்பாணம் சிவன் பண்ணை வீதியில் அமைந்திருந்தது. இந்தியப் படை வருவதற்கு முன்னர் இலங்கை விமானப் படையினர் குண்டு போட்டதில் ஈழநாடு அலுவலகம் அருகே உள்ள வீடொன்று நொருங்கியது.

அதிஷ்டவசமாக ஈழநாடு காரியாலயமும், உள்ளிருந்தவர்களம் தப்பிக் கொண்டனர்.

அப்போது தப்பிக் கொண்ட ஈழநாட்டுக்கு இப்போது ஆபத்து வந்தது.

மதியம் 2 மணியளவில் மூன்று இளைஞர்கள் “ஈழநாடு” அலுவலகத்துக்குள் புகுந்தனர். செய்தி ஆசிரியர் மகாதேவாவுக்கு இளைஞர்களைக் கண்டதும் யார் என்பது புரிந்து விட்டது. ஏன் வந்திருக்கிறார்கள்? என்பது தான் தெரியாது.

“என்ன தம்பியவை, என்ன சொல்லுங்கோ?” என்றார் மகாதேவா.

வந்தவர்களில் ஒருவர் நகைச்சுவை உணர்வுடன் பதில் சொன்னார்:

“ஒன்றுமில்லையண்ணே, குண்டு வைக்கப் போகிறோம். சாக விருப்பமில்லையெண்டால் நீங்கள் ஓடித் தப்புங்கோ!”

அச்சியந்திரப் பகுதியில் இருந்தவர்கள் உட்பட அனைவரையும் வெளியே ஓடுமாறு கூறினார்கள் வந்த இளைஞர்கள்.

அச்சியந்திரப் பகுதியில் வேலை செய்தவர்களில் பிராமணரான இளைஞர் அழத்தொடங்கிவிட்டார். வந்தவர்களில் ஒருவரது காலைப்பிடித்துக் கெஞ்சினார்.

“உன்னை ஒன்றும் செய்யமாட்டோம். அழாதேடா ஓடு…” என்று கன்னத்தில் அறை போட்டு துரத்திவிட்டார்கள்.
புது அச்சு இயந்திரத்தின் கீழே குண்டு வைக்கப்பட்டது.

குண்டு வெடித்ததில் அச்சியந்திரமும், காரியாலயத்தின் ஒரு பகுதியும் நாசமாகின.

akathiass“ஈழநாடு”ம் குண்டுவெடிப்பும்: பின்னணியில்

“ஈழநாடு” மீது புலிகள் தாக்கியதற்கு பின்னணியில் இருந்தவர்கள் இரண்டு பேர்;. ஒருவர் “முரசொலி” ஆசிரியர் திருச்செல்வம். மற்றவர் யாழ் மாநகரசபை முன்னாள் ஆணையாளர் சிவஞானம்.

இந்தியப் படையினர் “முரசொலி”, “ஈழமுரசு” பத்திரிகைகளை தகர்த்து விட்டனர். ஈழநாடு மட்டும் வெளியாகிக் கொண்டிருந்தது. அந்தப் பொறாமை காரணமாக குறிப்பிட்ட ஆசிரியர் தலையங்கத்தை காட்டி கோள் மூட்டிவிட்டார்கள்.

புலிகளுக்கு சாதகமான செய்திகளை வெளியிடுவதும், புலிகள் தரப்பில் உள்ள தவறுகளை வெளியிடாமல் இருப்பதுமே “நடுநிலை” என்று கருதப்பட்டதுதான் மிகப்பெரிய சோகம்.

தற்போதும் தமிழ் விமர்சகர்கள் பலருக்கு “நடுநிலை” என்பதன் அர்த்தம் அதுதான்.

உண்மையில் “நடுநிலை” என்ற கருத்தே ஒரு ஏமாற்றுத்தான்.

சரியான நிலை நிற்றல் என்பதும் நடுநிலை என்பதும் ஒன்றல்ல. புலிகளுக்கும் ஆமாம் போட்டிருந்தால் அதுதான் நடுநிலை.

இரு தரப்பிலும் யார் தவறு செய்தாலும் சுட்டிக்காட்டுவது சரியான நிலை. ஈழநாடு ஓரளவு அப் பணியைச் செய்தது எனலாம்.

“ஈழநாடு” குண்டு வைத்துத் தகர்க்ப்பட்டதும் இந்தியப் படை உயரதிகாரிகள் அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர்.

“பார்த்தீர்களா புலிகளின் செயலை? அவர்களின் சுயரூபம் இதுதான். உங்களுக்கு என்ன உதவி தேவை? சொல்லுங்கள் செய்கிறோம்.

உடனடியாக இந்தியாவில் இருந்து அச்சியந்திரம் கொண்டு வந்து தருகிறோம். பத்திரிகையை வெளிடலாம்!” என்றார் ஓர் உயர் அதிகாரி.
அதனை நாகரிகத்தோடு மறுத்துவிட்டனர் ஈழநாடு நிர்வாகத்தினர்.

இந்தியப் படையினரிடம் உதவியாக அச்சியந்திரம் பெற்று பத்திரிகை வெளியிட்டால் சுதந்திரமான பத்திரிகையாக செயற்பட முடியாமல் போகலாம்.

புலிகளின் விரோதத்தையும் தொடர்ந்து சம்பாதிக்க வேண்டி இருக்கலாம் என்னும் காரணங்களால் மறுப்புத் தெரிவித்து விட்டனர்.

இலங்கைப் படைகளுடன் புலிகள் யுத்தம் நடத்திய போது யாழ் கோட்டையில் இருந்து ஏவப்படும் ஷெல்கள் ஈழநாடு காரியாலயம் முன்பாகவும் வந்து விழுவதுண்டு.

அவ்வாறான காலங்களிலும் தம் உயிரைப் பணயம் வைத்து செயற்பட்டவர்கள் ஈழநாடு பத்திரிகையாளர்கள் என்பதை மறந்துவிடலாகாது.

ஒரு போராட்டம் என்பது பல்வேறு பகுதிகளைக் கொண்டது. பல்வேறு உட்கூறுகளைக் கொண்டது.

ஆயுதம் ஏந்துவோர் மட்டும்தான் போராளிகள் அல்ல: ஷெல் வீச்சுக்கள், விமான குண்டு வீச்சுக்கள் மத்தியில் மக்களுக்கான அத்தியவசிய சேவைகளை வழங்கிக் கொண்டிருப்போரும் போராளிகள்தான். “ஈழநாடு” பத்திரிகையாளர்களும் அதில் அடங்குவர்.

எனினும் அரச படைகளால் “ஈழநாடு” எரியூட்டப்பட்ட போது கண்டித்த “நடுநிலையாளர்கள்” புலிகளால் ஈழநாடு தகர்கப்பட்ட போது மூச்சுவிடவில்லை.

சக தமிழர் பத்திரிகைகள் சில கூட வாயே திறக்கவில்லை என்பதும் அவற்றின் “நடுநிலை”க்கு நல்ல உதாரணம்?!

இன்னொரு விடயத்தையும் நினைவு கூர்ந்தாக வேண்டும்.

இலங்கை அரசு மற்றும் அரச படைகள் தொடர்ச்சியாக விமர்சிக்கத் தயங்காத தமிழ் விமர்சகர்கள் இந்தியப் படையின் அத்துமீறல்களை கண்டும் காணாமல் இருந்தனர்.

தென்னிங்கை ஆங்கிலப் பத்திரிகைகள் வெளியிட்டளவு கூட சில தமிழ் பத்திரிகைகளில் இந்தியப் படையின் கொடுமைகள் வெளிக்கொண்டு வரப்படவில்லை.

இந்திய தூதரகத்துடனான உறவு, இந்திய விசாக்கள், இந்தியாவிடம் எதிர்பார்த்த நலன்கள் போன்றன அவர்கள் கையைக் கட்டிப் போட்டன என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு.

“நடுநிலை” என்று கூறிக் கொண்டே தமக்குப் பாதகம் ஏற்படாது என்று உத்தரவாதமான பக்கத்தை மட்டுமே வாசகர்களுக்கு தெரிவித்து வந்தன.

அதனால்தான் இந்தியப் படை கால அத்துமீறல்கள் பல மறைக்கப்பட்டன.

1988ம் ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை வரும் வாரம் பார்க்கலாம்.

(தொடர்ந்து வரும்)

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.