இந்தியப் படையோடு புலிகள் யுத்தம் இங்கே!! சிகிச்சை அங்கே தமிழ் நாட்டில்!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை-120)

0
368

• கொல்லப்பட்ட தூதர்

• யுத்தம் இங்கே சிகிச்சை அங்கே.
• ஈ.என்.டி.எல்.எஃப்

இந்தியப் படையினருடன் இயக்க ரீதியாக முதலில் ஒத்துழைத்தவர்கள் ஈ.என்.டி.எல்.எஃப் குழுவினர்தான்.

ஈ.என்.டி.எல்.எஃப் தலைவரான பரந்தன்ராஜன் இந்திய உளவுப் பிரிவான “றோ”வின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தார்.

போதை மருந்துக் கடத்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பரந்தன் ராஜன் அதன் மூலம் கிடைக்கும் பணத்தின் ஒரு பகுதியை வைத்து இயக்கத்தை நடத்தி வந்தார்.

எவ்விதமான அரசியல் நிலைப்பாடும் இல்லாத ஒரு குழுவினராக அவர்கள் இருந்தமையினால் தமது விருப்பப்படி அக்குழுவினரை பயன்படுத்த முடியும் என்று “றோ” அதிகாரிகள் நம்பினார்கள்.

எனவே இந்தியப் படையினருக்கு உதவி செய்வதற்காக யாழ்ப்பாணத்திந்கு வந்தனர் ஈ.என்.டி.எல்.எஃப் குழுவினர்.

யாழ்ப்பாணத்தில் முதலில் அலுவலகம் திறந்தவர்களும் அவர்கள்தான். யாழ்ப்பாணம் குருநகரில் ஈ.என்.டி.எல்.எஃப் குழுவினர் அலுவலகம் திறந்த போது தமது ஆதரவாளர்களையும், மக்களையும் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் புலிகள் அமைப்பினர்.

அதன் பின்னர் அந்த அலுவலகம் மூடப்பட்டது.

கிளிநொச்சியிலும் ஈ.என்.டி.எல்.எஃப் முகாம் இருந்நதது. புலிகள் இயக்க ஆதரவாளர்கள் என்று கருதப்பட்ட பலர் அவர்களால் கொல்லப்பட்டனர்.

dcp557578875(பரந்தன் ராஜன்)

மாஸ்டர்

18.11.1987 அன்று கிளிநொச்சி மகா வித்தியாலய ஆசிரியரான ஆனந்த ராஜா சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஈ.என்.டி.எல்.எஃப் இயக்கத்தினரே அப் படுகொலையைச் செய்தனர்.

ஆனந்த ராஜா மாஸ்டர் புலிகள் இயக்க ஆதரவாளர். இந்திய படைக்கும், புலிகளுக்கும் இடையே மோதல் ஆரம்பமான பின்னர் அகதிகளாக இடம் பெயர்ந்து சென்றவர்கள் கிளிநொச்சி மஹா வித்தியாலயத்தில் தங்கியிருந்நதனர்.

அகதிகளாகத் தங்கியிருந்த பெண்களுடன் ஈ.என்.டி.எல்.எஃப் குழுவைச் சேர்ந்தவர்கள் வரம்பு மீறி நடந்து கொள்ள முற்பட்டனர்.

அதனையடுத்து அங்கிருந்த பெண்களை வேறு இடத்திற்கு கொண்டு சென்று பாதுகாப்பாக தங்கவைத்தார் ஆனந்தராஜா மாஸ்டர்.

அதுதான் அவர் மீது கோபம். வீட்டில் தேனீர் குடித்துக் கொண்டிருந்தவரை சுட்டுக்கொன்றனர்.

ஆனந்த ராஜா மாஸ்டர் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து மாணவர்கள் சுவரொட்டிகள் ஒட்டினார்கள்.

“எங்கள் நெஞ்சில் நிறைந்த மாஸ்டரை எங்கள் கைகளில் ஒப்படை”

“மாற்றானை மகிழ்வித்த சொந்த நாட்டானை கொல்லாதே!” என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

கண்டனக் கூட்டத்தில் உரையாற்றிய ஒரு மாணவன் கூறினான்:

“ஆனந்தராஜா மாஸ்டர் இனிமேலும் வரமாட்டார். ஆனாலும் நாம் அவருக்காக காத்திருப்போம்.”

வவுனியாவில்

இக்கால கட்டத்தில் வவுனியாவில் புளொட் இயக்கத்தினர் ஆயுதங்களுடன் முகாம்கள் அமைத்திருந்தனர். புளொட் இயக்கத்தினர் இந்தியப் படையினருடன் நெருக்கமாகவில்லை.

அப்போது தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த அத்துலத் முதலியுடன் புளொட் இயக்கத் தலைவராக இருந்த உமா மகாஷ்வரன் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டார்.

ஆயதமேந்திப் போராடிய அமைப்புக்களில் இலங்கை அரசுடன் முதன் முதலில் உறவை ஏற்படுத்தி கொண்டவர்கள் புளொட் இயக்கத்தினர்.

கொழும்பில் புளொட் இயக்கத்தினர் ஆயுதங்களுடன் நடமாடவும் அனுமதியிருந்நது.

வவுனியா நகரில் செயற்பட்ட புளொட் இயக்கத்தினர் லொறிகளிலும், போக்குவரத்து பஸ் உரிமையாளர் களிடமும் நிதி திரட்டலிலும் ஈடுபட்டனர்.

வவுனியா ஊடாக யாழ் நகர் செல்லும் பஸ்கள் மறிக்கப்பட்டு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

புலிகள் என்று சந்தேகிக்கப்படுவோர் புளொட் இயக்கத்தினரால் பிடித்து செல்லப்பட்டனர். புலிகள் இயக்கத்தினர் என்று கருதப்பட்டோர் பின்னர் மாயமாய் மறைந்தனர்.

அதன் பின்னர் செட்டி என்பவரது தலைமையில் ரெலோ இயக்கத்தினரும் வவுனியா நகரில் முகாம் அமைத்தனர்.

ரெலோ வவுனியாவில் முகாம் அமைப்பதை முதலில் புளொட் இயக்கத்தினர் விரும்பவில்லை. எனினும் செட்டி புளொட் அமைப்பினர் அச்சுறுத்தலையும் மீறி அங்கு முகாம் அமைத்தனர்.

இலங்கைப் படையினருடனும் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர்.

அதன் பின்னர் ரெலோ இயக்கத்தினரும் வவுனியாவில் நிதி திரட்டல், புலிகள் இயக்கத்தினர் என்ற சந்தேகிக்கப்படுவோரை பிடிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

புலிகளால் பாதிக்கப்பட்ட ஏனைய இயக்கங்களின் உறுப்பினர்கள் பலர் செட்டியுடன் சேர்ந்து நின்று கொண்டு புலிகள் இயக்கத்தினரை பழிவாங்கும் உணர்ச்சியுடன் செயற்பட்டனர்.

குறிப்பாக ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கம் அப்போது தீவிரமாக செயற்படத் தொடங்கியமையால் அந்த இயக்க உறுப்பினர்கள் பலரும் செட்டியுடன் போய் சேர்ந்து கொண்டனர்.

Varatharaja_perumal(வரதராஜப்பெருமாள்)

கொழும்பில் பெருமாள்

இக்கால கட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்க வேலைகளை வரதராஜப்பெருமாள், சேகர்(பாஸ்கரன்), சாந்தன் ஆகியோர் கொழும்பில் மேற்கொண்டனர்.

1983க்குப் பின்னர்தான் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தில் சேர்ந்தவர் வரதராஜப் பெருமாள். ஆயினும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கம் உடைவு கண்டு இரண்டான பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்க மத்தியில் கமிட்டியின் உறுப்பினருமாவார்.

கொழும்பு வந்த வரதராஜப் பெருமாள் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் தலைவரே அவர்தான் என்று கருதப்படுமளவுக்கு தன்வாய் வீச்சுக்களால் பிரபலமாகத் தொடங்கினார்.

வரதராஜப் பெருமாள், சேகர், சாந்தன் மூவரும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் மத்திய கமிட்டி உறுப்பினர்கள். இவர்களில் சேகர், சாந்தன் ஆகியோர் வரதனுக்கு மூத்த உறுப்பினர்கள்.

ஆனாலும் வரதன்தான் இந்திய தூதரகத்துடன் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார். தனியான சந்திப்புகளையும் நடத்தினார். சந்திப்புகளுக்கு செல்லும் போது மற்றொரு மத்திய கமிட்டி உறுப்பினரான சேகரை அழைத்துச் செல்வதையும் தவிர்த்தார்.

அதனால் மணமுடைந்த சேகர் படிப்படியாக இயக்கத்தைவிட்டு ஒதுங்கத் தொடங்கினார். தமிழ் நாட்டுக்கு சென்றார்.

கொழும்பில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் முற்போக்கு சக்திகள் என்று கருதப்பட்ட வட்டாரங்களுடனும் வரதன் பரிச்சயத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பிரமுகராக இருந்த அபுயூசுப் பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் உடன் சேர்ந்ததுக்கும் வரதன்தான் காரணம்.

தேர்தல் யோசனை

pulikalasஇந்திய அரசுக்கு நம்பிக்கையாக செயற்படுவதுடன், வடக்கு- கிழக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தையும் நிரப்பிக்காட்ட தன்னால் முடியும் என்று இந்திய தூதர் திக்ஷித்தை நம்பச் செய்து விட்டார் வரதன்.

வடக்கு-கிழக்கு மாகாண சபைக்கு தேர்தல் நடத்தும் திட்டமும் இந்திய அரசுக்கு இருந்தது.

இந்தியப் படையை இலங்கைக்கு அனுப்பியது மூலம் சாதிக்கப்பட்டது என்ன? என்ற கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

இலங்கையின் வடக்கு-கிழக்கில் தமிழ் மக்களுக்கு நிம்மதியான வாழ்கையை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறோம் என்று உதாரணம் காட்ட வேண்டும்.

இதெல்லாம் இந்திய மத்திய அரசுக்கும், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இருந்த அரசியல் நிர்ப்பந்தங்கள்.

வடக்கு-கிழக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதுதான் ஒரே வழி என்று தீர்மானித்தது இந்திய அரசு.

தமிழர் விடுதலைக்கூட்டணி உட்பட ஏனைய தமிழ் கட்சிகளின் நாடி பிடித்துப் பார்த்தது இந்திய தரப்பு.

தேர்தலில் போட்டியிட அக் கட்சிகள் தயாராக இல்லை என்று தெரிந்து விட்டது.

தேர்தலில் போட்டியிட ஈ.பி.ஆர்.எல்.எஃபும், ஈ.என்.டி.எல்.எஃப்பும் முன் வந்தன.

தேர்தல் நடத்துவது, ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்துக்கு முன்னுரிமை, வரதன்தான் முதலமைச்சர் என்ற இரகசிய உடன்பாடு தேர்தல் அறிவிக்கப்பட முன்னரே செய்யப்பட்டுவிட்டது.

இத்தகைய திட்டங்கள் ஒரு புறம் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கும் போதும், இந்திய படையினரின் நடவடிக்கைகளும் தொடர்ந்த வண்ணம் இருந்தன.

தமிழ்நாட்டில் சிகிச்சை

இந்தியப் படையும்-புலிகளும் யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தமிழ்நாட்டில் புலிகளின் அலுவலகம் இயங்கிக் கொண்டிருந்தது என்பதை முன்னர் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா

இன்னொரு விடயமும் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்.

இந்தியப் படையுடன் நடைபெற்ற மோதலில் காயமடைந்த புலிகள் இயக்க உறுப்பினர்கள் பலர் இந்தியாவுக்கு படகுகளில் கொண்டு செல்லப்பட்டனர். தமி;ழ்நாட்டில் அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

வடக்கு-கிழக்கில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் இந்தியப் படையினர் கைது செய்து விடுவார்கள். அதனால் தமிழ் நாட்டில் சிகிச்சை பெறச் சென்றார்கள்.

இலங்கையில் புலிகளைத் தேடி இந்தியப் படை வேட்டையாடிக் கொண்டிருந்த போது இந்தியாவின் மாநிலமான தமிழ்நாட்டுக்கு சென்று புலிகள் சிகிச்சை பெற்றனர் என்பது ஆச்சரியமான விடயம்தான்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மோதலில் படுகாயமடைந்த புலிகள் இயக்க உறுப்பினரான ஜொனி தமிழ்நாட்டில் மதுரையில் நெடுமாறன் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று உயிர் தப்பினார்.

நெற்றியின் மையத்தில் ஜொனிக்கு குண்டு பாய்ந்திருந்தது. நெற்றியில் உலோக தகடு பொருத்தி தமிழ்நாட்டில் சிகிச்சை செய்தனர். தமிழ் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டதால்தான் ஜொனி உயிர் தப்பினார்.

ஜொனி கிட்டுவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தவர். கிட்டு யாழ் மாவட்ட தளபதியாக இருந்த போது யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதிக்கு ஜொனி பொறுப்பாகவும் இருந்தவர்.
jeniia
மதுரையில் சிகிச்சை பெற்ற ஜொனியை கிட்டு சென்னைக்கு அழைத்தார்.

அப்படி அழைத்தது ஒரு முக்கியான காரணத்திற்காக.

இந்திய “றோ” அதிகாரிகளுடன் கிட்டு நடத்திய பேச்சுவார்த்தையை வன்னியில் இருந்த பிரபாகரனிடம் தெரிவிக்க இரு நம்பிக்கையான தூதர்கள் தேவை.

ஜொனிதான் அந்தப் பணியை செய்யக் கூடியவர் என்று நம்பிய கிட்டு, ஜொனியிடம் தகவல்களை தெரிவித்து பிரபாகரனிடம் அனுப்பினார்.

சண்டை ஒரு புறம் நடந்து கொண்டிருந்நதது. இந்திய இராணுவ விமானத்தில் யாழ்ப்பானம் வந்து சேர்ந்த ஜொனி வன்னிக்குச் சென்று பிரபாகரனைச் சந்தித்தார்.

பிரபாகரனை சந்தித்துவிட்டு திரும்பிய ஜொனியை இந்தியப் படையினர் வன்னியில் வைத்து சுற்றிவளைத்தனர்.

பிரபாகரன் எங்கே இருக்கிறார்? என்று ஜொனியிடம் விசாரணை செய்தனர். ஜொனி சொல்ல மறுத்த போது, சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜொனியின் நினைவாகவே தம்மால் தயாரிக்கப்பட்ட கண்ணிவெடிகளுக்கு “ஜொனி மைன்ஸ்” என்று புலிகள் பெயரிட்டுள்ளனர்.

எம்.ஜி.ஆர் உத்தரவு

இந்தியப் படையோடு யுத்தம் நடைபெற்ற காலத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற மற்றுமொரு சம்பவம் இது.

சோதனை அரண் ஒன்றில் வேன் ஒன்றை மறித்து சோதனையிட்டனர் தமிழக பொலிசார்.

வேனுக்குள் ஆயுதங்கள் இருந்தன. புலிகள் இயக்க உறுப்பினர்களும் இருந்தனர். வேனையும், அதில் இருந்தவர்களையும் கைது செய்தனர் தமிழக பொலிஸார்.

பொலிஸ் மேலிடத்துக்கு தகவல் பறந்தது. முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் செய்தி தெரிவிக்கப்பட்டது.

ஆயுதங்களை வைத்துக் கொண்டு வேனையும், ஆட்களையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு உத்தரவு வந்தது.

இந்தியப் படையுடன் புலிகளுக்கு மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலும் எம்.ஜி.ஆரை பிரபாகரனின் பிரதிநிதி ஒருவர் தொடர்ந்து சந்தித்து கொண்டிருந்தார்.

சில தொழிலதிபர்கள் மூலமாக புலிகளுக்கு தேவையான நிதி உதவிகளையும் எம்.ஜி.ஆர் ஏற்பாடு செய்து கொடுத்து வந்தார்.

தமிழ் நாட்டில் புலிகளுக்கு தேவையான ஆயுத உபகரணங்கள், கைக்குண்டுகள் போன்றவற்றை தயாரிக்கும் பட்டறைகளும் இருந்தன.

தமிழக அரசுக்கும் அத்தகவல்கள் ஜாடைமாடையாகத் தெரியும். என்றாலும் கூட கண்டும் கானாமல் இருந்து விட்டது.

27newsforceநவம்பரில் தாக்குதல்

யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் இந்திய படைக்கு பொறுப்பாக இருந்தவர் மேஜர் பரமேஸ்வரஐயர். அப்பகுதி மக்களிடம் நல்ல அபிமானம் பெற்றிருந்தவர்.

நவம்பர் 25ம் திகதி உடுவில் டச்சு வீதியில் தேடுதல் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டனர் இந்தியப் படையினர்.

பதுங்கியிருந்த புலிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். மேஜர் பரமேஸ்வரஐயர் மீது துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன.

உடலில் குண்டு துளைத்த போதும் தம்மீது தாக்குதல் நடத்திய புலிகள் இயக்க கெரில்லாக்களை நோக்கி சுட்டுக் கொண்ட இருந்தார் பரமெஸ்வரஐயர். புலிகள் தரப்பிலும் சிலர் கொல்லப்பட்டனர்.

பரமேஸ்வர ஐயரும் மூன்று படையினரும் பலியானார்கள்.

பரமேஸ்வர ஐயர் இருக்கும் வரை உடுவில் பகுதி மக்களுடன் பண்பாகவே நடந்து கொண்டார். படையினர் அத்துமீறல்களில் ஈடுபடாமலும் பார்த்துக் கொண்டார்.

பரமேஸ்வர ஐயர் பலியானதும் நடந்த சம்பவங்கள் நேர் எதிராக இருந்தன.

உடுவில் குடியிருப்புக்கள் நோக்கி ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது. வீதியில் சென்று கொண்டிருந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஷெல் தாக்குதலால் காயமடைந்த தாயாரை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சிகிச்சைக்காக சென்று கொண்டிருந்தார் மகன். உடுவில் சந்தியில் வைத்து இந்தியப் படையினரின் துப்பாக்கிகள் அவர்களை சீறத் தொடங்கின. மகன் ஓடித் தப்ப தாயார் சுட்டுக் கொல்லப்பட்டார். அன்றுமட்டும் உடுவிலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

நவம்பரில் நடைபெற்ற மற்றுமொரு கொடிய சம்பவம் இது.

அச்சுவேலியில் ரோந்து சென்றனர் இந்திய படையினர். பதுங்கியிருந்த புலிகள் கைக்குண்டுகளை வீசினார்கள்.

கைக்குண்டுகள் வீசப்பட்டபோது இந்தியப் படையினர் தரையில் விழுந்து படுத்து விட்டனர். அப்படியிருந்;தும் இரண்டு படையினர் பலியானார்கள்.

தரையில் படுத்திருந்தபடியே புலிகள் எவ்வழியால் தப்பிச் செல்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

புலிகள் பாலசிங்கம் என்பவரது வீட்டு வளவு வழியாகத் தப்பிச் சென்றனர்.

புலிகள் தப்பிச் சென்ற பின்னர் அந்த வீட்டுக்குள் புகுந்தனர் இந்தியப் படையினர்.

“உள்ளே யார்? வெளியே வா!” என்று அழைத்தனர்.

வீட்டுக்குள் இருந்து கணவனும், மனைவியும், இன்னொருவரும் நடுங்கியபடியே வெளியே வந்தனர். மூவரையும் சுட்டு தள்ளிவிட்டுப் போய்விட்டனர்.

நவம்பர் 28ம் திகதி யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயில் ஓரிடத்தில் புலிகள் பதுங்கியிருப்பதாக இந்தியப் படையினருக்கு தகவல் கிடைத்தது.
விரைந்து சென்றது இந்தியப் படை. காத்திருந்தனர் புலிகள் இயக்கத்தினர்.

(தொடர்ந்து வரும்)

(அரசியல் தொடர் எழுதுவது அற்புதன்-
தொகுப்பு : கி.பாஸ்கரன்-சுவிஸ்)

இந்தியாவின் நோக்கம் என்ன? புலிகள் வெளியிட்ட தகவல்களும் பிரதான குற்றச்சாட்டுக்களும்!! (அல்பிரட் துரையப்பா காமினி வரை-119)

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.