வித்தியா படுகொலை வழக்கு: குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரி நிசாந்த சில்வாவை கொலை செய்யசதித்திட்டம்- (வீடியோ)

0
394

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரி நிசாந்த சில்வாவை கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட பிறிதொரு வழக்கினூடாக இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வித்தியா படுகொலை, 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட பல வழக்குகளின் விசாரணை அதிகாரியாக நிசாந்த சில்வா செயற்படுகின்றார்.

இந்நிலையில் ,11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கடற்படை அதிகாரிகளால் நிசாந்த சில்வாவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கடற்படை உத்தியோகத்தர்கள் கொலை செய்வதற்கான சதித்திட்டத்தைத் தீட்டியுள்ளதாக பிறிதொரு வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

வௌ்ளவத்தை பகுதியைச் சேர்ந்த ராமையா கனகேஸ்வரன் என்பவரே இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.

விசாரணை அதிகாரியான நிசாந்த சில்வாவினால் தொந்தரவுகள் அதிகரித்துள்ளதாகவும், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் இதுவரை கைது செய்யப்படாதவர்களூடாக அவரைக் கொலை செய்வதற்கு கடற்படை உத்தியோகத்தர்கள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாகவும் அந்நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மன்றுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, 2008 ஆம் ஆண்டு வௌ்ளை வேனில் கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைப் பேச்சாளர் கொமடோர் டி.கே.பி தசநாயக்க உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன நேற்று உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படை உத்தியோகத்தர்களால் கொலை செய்ய சதித்திட்டம் தீட்ப்பட்டுள்ள விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா , மாணவி வித்தியா படுகொலை வழக்கின் 35 ஆவது சாட்சியாளராவார்.

கடந்த 2 ஆம் திகதி பதிவு செய்யப்பட்ட சாட்சியளிப்பின் பின்னர் வழக்கின் 35 ஆவது சாட்சியாளரான குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அதிகாரி நிசாந்த சில்வாவை நீதிமன்ற விசாரணைகளில் இருந்து விடுவிப்பதாக மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.