”அமெரிக்க பிராந்தியம் மீது ராக்கெட் வீசும் திட்டம் விரைவில் தயார்”: வடகொரியா எச்சரிக்கை

0
212

அமெரிக்காவின் பசிபிக் நிலப்பகுதியான குவாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கு பரிசீலித்து வருவதாக வட கொரியா எச்சரித்துள்ளது.

வட கொரியாவின் அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் சீற்றத்தை வெளியிட்டு சில மணி நேரங்களிலேயே வட கொரியாவின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

அமெரிக்காவின் மூலோபாயம் மிக்க போர் விமானங்கள் நிலை நிறுத்தப்பட்டிருக்கும் குவாம் மீது நடுத்தர முதல் நீண்ட தூர ரொக்கெட்டுகளை வீசுவதற்கான திட்டம் ஒன்று பற்றி ஆலோசிக்கப்படுவதாக வட கொரிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்புகள் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் போக்கை மேலும் உக்கிரமடையச் செய்துள்ளது.

வட கொரியா மீதான மேலும் புதிய பொருளாதார தடைகளுக்கு அண்மையில் ஐ.நா ஒப்புதல் வழங்கியது. அதற்கு, “எங்களுடைய இறையாண்மை மீது தீவிரமான வன்முறை மீறல்” என்று கருத்து தெரிவித்த வட கொரியா, அமெரிக்கா இதற்கான விலையை கொடுக்கும் என்றும் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

_97280761_guam.pngமுன்னதாக வட கொரியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செவ்வாய்க்கிழமை விடுத்த எச்சரிக்கையில், “வட கொரியா அமெரிக்காவை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடமால் இருப்பது அவர்களுக்கு நல்லது. இல்லை என்றால் அவர்கள் இதுவரை இந்த உலகம் காணாத விளைவை சந்திப்பார்கள்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

வட கொரியாவின் உத்தியோகபூர் செய்தி நிறுவனமான கே.சி.என்.சி நேற்று புதன்கிழமை வெளியிட்ட செய்தியில் கூறியதாவது, “குவாமை சூழவுள்ள பகுதியை நெருப்பால் மூடுவதற்கான திட்டம் பற்றி அவதானத்துடன் பரிசீலிக்கப்பட்டு வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது உள்நாட்டு தாயாரிப்பான நடுத்தரம் முதல் நீண்ட தூர ஹ்வாசொங்–12 ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தப்போவதாகவும் அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டிருந்தது.

வட கொரிய இராணுவம் செவ்வாயன்று வெளியிட்ட அறிவிப்பு ஒன்றின் அடிப்படையிலேயே இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

குவாமில் அமெரிக்காவின் இராணுவ ஒத்திகைக்கு பதில் நடவடிக்கையாகவே இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

எனினும் குவாம் தீவுக்கு தற்போதைய நிலையில் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று அதன் ஆளுநர் எட்டி பாசா கல்வோ குறிப்பிட்டார். எந்த ஒரு எதிர்பாராத நிலைகளுக்கும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

“நாங்கள் வெறும் இராணுவம் தடவாள பகுதி மட்டுமல்ல, அமெரிக்காவின் மண். குவாம் எந்த விதமான தாக்குதலையும் எதிர்கொள்ள தயராக இருக்கிறது.

நாங்கள் தொடர்ந்து வெள்ளை மாளிகையுடன் தொடர்பில் இருக்கிறோம்” என்றும் அவர் கூறினார்.

பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தையும், போர் சூழலையும் ஏற்படுத்தும் வட கொரியாவின் மற்றொரு அறிவிப்பாகவே இது அமைந்துள்ளது.

வட கொரியா இதுவரை ஐந்த தடவைகள் அணு அயுத சோதனை மேற்கொண்டிருப்பதோடு கடந்த ஜூலையில் இரு கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை சோதித்தது.

இதனை அடுத்து தமக்கு அமெரிக்க நிலத்தை தாக்கும் திறன் இருப்பதாக வட கொரியா எச்சரித்திருந்தது. இதேவேளை வட கொரியா தனது இலக்கான ஏவுகணையில் பொருத்தக் கூடிய சிறிய அணு குண்டை அடைந்து விட்டதாக அமெரிக்க ஊடகங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டிருந்தன.

வட கொரியா ஒரு முழு அணு ஆயுத நாடாவதற்கான கடைசி இலக்காக இது இருப்பதோடு, இந்த இலக்கை வட கொரியா எட்டியது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

குவாம் தீவு பசிபிக் கடலில் பிலிப்பைன்ஸ் மற்றும் ஹாவாம் இருக்கும் 541 சதுர கிலோமீற்றர்கள் கொண்ட எரிமலை மற்றும் பவள தீவாகும். இங்கு சுமார் 163,000 மக்கள் வாழ்கின்றனர்.

இந்த தீவின் கால் பகுதி இடத்தை அமெரிக்க இராணுவ முகாம் பிடித்துள்ளது. அங்கு சுமார் 6000 அமெரிக்க படையினர் நிலைகொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.