நல்லூர் துப்பாக்கிச் சூடு; எது உண்மை? – கே. சஞ்சயன் (கட்டுரை)

0
326

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தென்மேற்கு மூலையில், கடந்த சனிக்கிழமை மாலை 5.10 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இலங்கைத் தமிழர்கள் வாழுகின்ற பல்வேறு நாடுகளிலும் கூட, இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் முன்பாக இந்தச் சம்பவம் நடந்தமை;
அவரது மெய்க்காவலர்களில் ஒருவர் சூடுபட்டு இறந்தமை, மற்றொருவர் காயமடைந்தமை;

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின் பின்னணி;

இதுபோன்ற பல்வேறு காரணங்களால், இந்தச் சம்பவம், மக்கள் மத்தியில் கூடுதலான பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

துப்பாக்கிச் சூடு நடந்ததும், நீதிபதி இளஞ்செழியன் அளித்திருந்த பேட்டியில், “நன்றாகத் துப்பாக்கியைக் கையாளக் கூடிய ஒருவர்தான் இதைச் செய்திருந்தார்” என்றும், “அவர் என்னை நோக்கிச் சுட முனைந்த போது, எனது பாதுகாவலர் காருக்குள் தள்ளி விட்டுக் காப்பாற்றியிருந்தார்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், சம்பவத்தை நேரில் பார்த்த இளைஞன் ஒருவரிடம் தகவல்களைப் பெற்ற யாழ். மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், “இது, நீதிபதியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல” என்று உறுதியாகக் கூறியிருந்தார்.

அத்துடன், பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகரவும் “இது திட்டமிட்டத்தோடு தாக்குதல் அல்ல” என்று குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதி இளஞ்செழியன் வடக்கில், பல்வேறு குற்றச்செயல்களைத் தனது இறுக்கமான உத்தரவுகளின் மூலம், தடுப்பது அல்லது குறைப்பதில் முக்கிய பங்காற்றி வருபவர். அவரது தீர்ப்புகள் பலருக்கு அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன.

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு உள்ளிட்ட, பல முக்கியமான வழக்குகளை அவர் விசாரித்து வருகிறார்.

இந்தப் பின்னணியில், அவரைக் குறிவைத்தே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது, ஒரு தரப்பினரது வாதம். நீதிபதி இளஞ்செழியனின் முதற்கணிப்பும் அவ்வாறாகவே இருந்தது என்பதை, அவரது பேட்டி உணர்த்தியிருந்தது.

இது, நீதிபதியை இலக்கு வைத்த சதித்திட்டம் என்றும், இதன் பின்னணியைக் கண்டறிய வேண்டும் என்றும் அரசியல் பிரமுகர்கள், கட்சிகள் தரப்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன; கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இதற்காக போராட்டங்கள், பேரணிகள் நடத்தப்பட்டன.

இவையெல்லாம் நீதிபதி இளஞ்செழியனை நோக்கி, மக்களின் அபிமானத்தையும் அனுதாபத்தையும் ஒன்று குவிக்க உதவியிருக்கின்றன.

Judge-MIllancheliyan-Emotional-Shooting-3இன்னொரு பக்கத்தில், பொலிஸ் தரப்போ, இது தற்செயலான சம்பவம்தான், திட்டமிட்ட ஒன்று அல்ல என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறது. அந்தக் கோணத்திலேயே விசாரணைகளையும் முன்னெடுத்து வருகிறது.

முன்னரெல்லாம், வடக்கில் ஏதாவது ஒரு சம்பவம் நடந்து விட்டால், அதைப் பூதாகாரப்படுத்தி, புலிகள் வந்து விட்டார்கள் என்பது போல பிரசாரங்களைச் செய்து, இராணுவத்தையும் அதிரடிப்படையையும் களமிறக்கி, மக்களை மிரட்டும் வழக்கம் ஒன்று இருந்தது.

நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், புலிகள் இயக்கத்தில் சில ஆண்டுகள் இணைந்திருந்த ஒருவரே, துப்பாக்கிச் சூட்டை நடத்தினார் என்று கூறப்படுகின்ற நிலையிலும் கூட, பொலிஸார் இதைத் திட்டமிட்ட ஒரு சம்பவம் என்று கூற முன்வரவில்லை.

ஆனால், அமைச்சர் மனோ கணேசன்தான், வடக்கில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அவரைப்போல, அரசாங்கத்தில் உள்ள வேறெந்த அமைச்சரும் கூறவில்லை.

மஹிந்த ராஜபக்ஷ மாத்திரம், வழக்கம் போலவே, தனக்குப் புலிகளின் ஆரம்ப காலகட்டத்தைத்தான் இந்தச் சம்பவம் நினைவுபடுத்துகிறது; இதை இலகுவாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறியிருந்தார்.

நல்லூரில் நடந்த துப்பாக்கிச் சூடு, உண்மையில் நீதிபதியை இலக்கு வைத்த ஒன்றா அல்லது, தற்செயலான ஒன்று தானா என்ற சந்தேகமும் கேள்விகளும், இப்போதைக்குத் தீரப் போவதில்லை.

ஏனென்றால், எல்லோருமே தமக்குள் ஒரு முடிவை எடுத்துக் கொண்டுதான், இந்த விடயத்தை அணுகுவதாகத் தெரிகிறது.

ஒருவேளை, இது தற்செயலான சம்பவமாகவே இருந்தால் கூட, அவ்வாறில்லை, சதித்திட்டமே என்று முடிவெடுக்கப்பட வேண்டும் என்பதில், ஒரு தரப்பு உறுதியாக இருக்கிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் புலன் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார், ‘இது திட்டமிட்ட ஒன்று அல்ல’ என்ற முடிவுக்கு வந்தால் கூட, பெரும்பாலான மக்கள் அதை நம்பப் போவதில்லை.

ஏனென்றால், அவர்கள், இதற்குப் பின்னால் ஏதோ ஒரு சதி இருக்கிறது என்று வலுவாக நம்புகிறார்கள்.

அத்தகைய நிலைப்பாட்டில் உள்ளவர்கள், பொலிஸார் உண்மையைக் கண்டு பிடித்துக் கூறினாலும் அதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

நாய்க்கு எங்கே கல்லால் அடித்தாலும் அது, காலில் அடிபட்டது போல, காலைத் தூக்கிக் கொண்டே ஓடும். அது போலத்தான், இங்கேயும், எதற்கெடுத்தாலும் புலிகளுடன் முடிச்சுப் போட்டு, பயங்கரவாதம் தலையெடுக்கிறது என்பதும், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் சதியே என்று புலம்புகின்றதும் ஒரு வழக்கமாகவே இருக்கிறது.

இந்தக் கணிப்பு நிலை, பல வேளைகளில் உண்மைகளை ஏற்றுக் கொள்ள முடியாத, ஜீரணித்துக் கொள்ளும் பக்குவத்தை இரண்டு தரப்பினருக்குமே அளிப்பதில்லை.

நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையும் இந்த விடயங்களின் ஊடாகவும் பார்க்க வேண்டியுள்ளது.

தமிழ் அமைச்சரான மனோ கணேசன், வடக்கில் நிலைமைகள் மோசமடைந்து விட்டன என்கிறார்.

வடக்கிலுள்ள பெரும்பாலான மக்களோ, நீதிபதியை இலக்கு வைக்கும் அளவுக்கு, இதற்குப் பின்னால் ஏதோ சதித்திட்டம் இருக்கிறது என்று வலுவாக நம்புகிறார்கள்.

இது ஆபத்தான ஒரு நிலையாகவே தோன்றுகிறது. அதாவது, வடக்கின் இயல்புநிலையைத் தமிழர்களே நிராகரிக்கின்ற நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

வடக்கில் உள்ளவர்களிடம், வன்முறை மனோபாவம் மேலோங்கியுள்ளது என்று ஒத்துக்கொள்கின்ற நிலை இதனால் உருவாகும். இந்த நிலையானது, வடக்கில் இன்னும் இராணுவ நெருக்குவாரங்கள் அதிகரிக்கவே வழிகோலும்.

சதித்திட்டம் தீட்டி, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா என்ற சந்தேகங்கள் இருக்கின்றதைப் போலவே, தற்செயலானதே என்பதிலும் சந்தேகங்கள் இருக்கின்றன.

இந்தச் சந்தேகங்களை விசாரணை வளையத்துக்கு அப்பால் கொண்டு சென்று, முடிவுகளை எடுக்கின்ற நிலைக்குக் கொண்டு செல்வதும், தாம் எடுத்த முடிவை நோக்கியே விசாரணைகள் அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தான் சிக்கலானது.

போருக்குப் பின்னர் நீண்டகாலம் அமைதியாக இருக்கும் வடக்கில், அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழும் சில சம்பவங்களை, பூதாகாரப்படுத்தி தமிழர்களை நிரந்தரமாக இராணுவ சூழலுக்குள் வைத்திருப்பதற்கான எத்தனங்கள், திரைமறைவில் நடந்து கொண்டிருப்பதை மறுப்பதற்கில்லை.

இந்த விடயத்தில் கூட அத்தகைய எண்ணப்பாடுகள் இருக்கிறதா என்று தெரியவில்லை. இப்படியான சூழலில், நடக்கின்ற சம்பவங்களை வடக்கில் வன்முறைகள் தலைவிரித்தாடுகின்றன என்பது போன்ற பிரமைகளை ஏற்படுத்தாத வகையில், கையாளுவது முக்கியம்.

இந்த விடயத்தில் அரசியல்வாதிகள், அமைப்புகள், பொலிஸார் ஊடகங்களின் பொறுப்புணர்வு முக்கியமானது.

அற்பமான பரபரப்புக்காகவும் அரசியல் ஆதாயத்துக்காகவும் இதுபோன்ற விடயங்களைப் பயன்படுத்திக் கொள்ள முனைவது ஆபத்தானது.

இந்த விடயத்தில் சறுக்கல்கள் ஏற்படுமானால், அதன் விளைவுகளை, வடக்கில் உள்ள தமிழ் மக்களே அனுபவிக்கின்ற நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

-கே. சஞ்சயன்-

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.