இந்தியாவின் நோக்கம் என்ன? புலிகள் வெளியிட்ட தகவல்களும் பிரதான குற்றச்சாட்டுக்களும்!! (அல்பிரட் துரையப்பா காமினி வரை-119)

0
404

இலங்கை – இந்திய ஒப்பந்தம் தொடர்பாக 1987 டிசம்பரில் புலிகள் அமைப்பினரால் ஒரு புத்தகம் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டு மக்களுக்கு தமது நிலைப்பாட்டை விளக்கும் வகையில் சென்னையில் இருந்தே புலிகள் அதனை வெளியிட்டனர்.

இந்தியப் படையினருக்கும் புலிகளுக்கும் இடையே மோதல்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த போதும் தமிழ் நாட்டில் புலிகள் சுதந்திரமாகச் செயற்பட்டு வந்தனர்.

தமிழ் நாட்டில் இருந்தபடியே இந்தியப் படையினரின் நடவடிக்கைகள் தொடர்பாக பிரசாரம் செய்து வந்தனர்.

தமிழக பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்பவற்றில் இந்தியப் படையினரின் நடடிவடிக்கைகள், பாலியல் பலாத்காரங்கள் தொடர்பான செய்திகள் புலிகளால் வழங்கப்பட்டு வெளியிடப்பட்டன.

தமிழ் நாட்டிலுள்ள சில பத்திரிகைகள் இந்திய படையினருக்கு எதிரான புலிகளின் செய்திகளை வெளியிட மறுத்தன.

இந்தியப் படையினரின் அத்து மீறல்களை வெளியிடுவது இந்தியாவுக்கு எதிரான செயல் என்றே அப்பத்திரிகைகள் நினைத்தன.

ஆனால் ஜுனியர் விகடன், நக்கீரன், ராணி, தேவி, போன்ற சஞ்சிகைகள் இந்தியப் படையின் அத்து மீறல்களை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன.

அதே போல இந்திய ஆங்கில ஏடுகள் பலவும் இந்தியப் படையின் செயற்பாடுகளை மூடிமறைக்காமல் பிரசுரித்தன.

தமிழ் நாட்டில் இருந்து புலிகளால் சுதந்திரமாக செயற்பட முடிந்தமையால்தான் இந்திய படையினரின் நடவடிக்கைகளை விரிவான முறையில் அம்பலப்படுத்தும் வாய்ப்புக் கிடைத்தது என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரோடு புலிகளுக்கு இருந்த நெருக்கம், தமிழகத்தில் தி.மு.க, தி.க போன்ற கட்சிகள் புலிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களை நடத்தியமை போன்ற காரணங்களால் இந்திய மத்திய அரசு தமிழ்நாட்டில் புலிகளின் செயற்பாடுகளுக்கு உடனே தடைவிதிக்கவோ, கட்டுபபடுத்தவோ முன்வரவில்லை.

Keduறோவின் தொடர்பு

அதே சமயம் இந்திய உளவுப் பிரிவான “றோ”வும் புலிகளுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பை வைத்திருக்க விரும்பியது. அதனால் சென்னையில் இருந்த கிட்டுவுடன் “றோ” அதிகாரிகள் அடிக்கடி சந்தித்து பேச்சு நடத்தினார்கள்.

பிரபாபரனுடன் தொடர்பு கொள்ள கிட்டுவை விட்டால் வேறு ஆள் கிடையாது.

இந்தியப் படைக்கும் புலிகளுக்கும் இடையே மோதல் தொடங்கிய பின்னர் புலிகளுடனான தொடர்புகளை “றோ” இழந்து விட்டது.

எனவே சென்னையில் இருந்நத கிட்டுவையும் விட்டால் புலிகளுடன் தொடர்பு கொள்ளக்கூடிய சகல வழிகளும் மூடப்பட்டது போலாகிவிடும்.

அதனால்தான் சென்னையில் இருந்த கிட்டுவுக்கும் புலிகளுக்கோ அதிக நெருக்கடி கொடுக்காமல் அவர்களுடன் உறவை வைத்துக்ககொண்டது “றோ”.

போர் நிறுத்தம் ஒன்றுக்குப் புலிகளை இணங்கச் செய்யவும் “றோ” அதிகாரிகள் கிட்டுவுடன் பேசிக்கொண்டிருந்தனர்.

“இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. பிரபாகரன் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு போர் நிறுத்த்திற்கு முன்வரட்டும்.

வடக்கு – கிழக்கு மாகாண நிர்வாகத்தை பெற்றுக்கொள்ளலாம். தேவையான நிதி உதவியும் செய்யலாம்!” என்று “றோ” அதிகாரிகள் கிட்டுவிடம் கூறிக்கொண்டிருந்தனர்.

“றோ” அதிகாரிகளின் கருத்துக்களால் கிட்டுவின் மனதிலும் சற்றுக் குழப்பம் ஏற்பட்டது.

“பணம் தருவதாகச் சொல்கிறார்கள். மாகாண நிர்வாகமும் எம்மிடம் இருக்கும்.

இலங்கை அரசுடன் மீண்டும் சண்டையிட வேண்டிய நிலை ஏற்பட்டால் இந்தியா இப்போது தரப் போகும் பணத்தை வைத்து ஆயுதம் வாங்கிக் கொள்ளலாம், எனவே தற்போது சண்டையை நிறுத்தினால் என்ன?” என்ற போக்கில் கிட்டுவும் யோசித்தார்.

“றோ” அதிகாரிகள் தெரிவித்த செய்திகளை கிட்டு பிரபாகரனுக்கு கிடைக்கக் கூடியதாக அனுப்பிக் கொண்டிருந்தார். ஆனாலும் பிரபாகரனிடம் இருந்து சாதகமான பதில் எதுவும் சென்னையில் இருந்த கிட்டுவுக்கு எட்டவில்லை.

“றோ”வை நம்புவதற்கு பிரபாகரன் தயாராக இல்லை.

ராஜீவைச் சந்திப்பதற்காக என்று அழைத்துச்சென்று, புதுடில்லியில் கறுப்பு பூனைகளின் பாதுகாப்பில் தன்னை வைத்திருந்ததையோ, ஒப்பந்தத்தில் கையொப்பம் போடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டதையோ பிரபாகரன் மறக்கத் தயாராக இல்லை.

அதிர்ச்சியான தகவல்கள்

தமிழ் நாட்டின் புலிகள் அமைப்பினரின் பிரசாரங்கள் தீவிரமானதால் கிட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

இந்திய மத்திய அரசை திருப்திப்படுத்த எம்.ஜி.ஆர் மேற்கொண்ட நடவடிக்கையே அதுவாகும்.

அதேசமயம் கிட்டு வீட்டில் இருந்த படியே சந்திக்க வேண்டியவர்களைச் சந்திக்கத் தடையிருக்கவில்லை. சென்னையில் இருந்த புலிகள் இயக்க அலுவலகமும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.

“விடுதலைப் புலிகள்” பத்திரிகையும் அங்கிருந்து வெளியாகிக் கொண்டிருந்தது.

இந்தியப்படைக்கும், இந்திய- இலங்கை ஒப்பந்ததுக்கும் எதிரான பிரசுரங்களும் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு நேர்த்தியாக வெளியிடப்பட்டுக் கொண்டிருந்தன.

1987 டிசம்பர் மாதம் சென்னையில் வெளியான புத்தகம் பற்றி மேலே குறிப்பிட்டிருக்கிறேன் அல்லவா? “இந்தியாவும் ஈழத்தமிழர் பிரச்சனையும்” என்ற பெயரில் அப்புத்தகம் வெளியானது.

அப்பத்தகத்தில் அதிர்ச்சி தரக்கூடிய சில தகவல்களை புலிகள் வெளியிட்டிருந்தனர். அவை சர்ச்சைக்குரியனவாக இருந்தன.

புலிகள் தெரிவித்த தகவல்களும் குற்றச்சாட்டுக்களும் இவைதான்.

“1987 ஜனவரியில் சிங்கள இனவாத அரசு யாழ் குடா நாட்டில் பொருளாதார முற்றுகையை ஏற்படுத்தியதுடன், வடக்கிலும், கிழக்கிலும் பெரியளவான இராணுவப் படையெடுப்பையும் மேற்கொண்டது.

வடக்கில் மட்டும் 20 ஆயிரம் துருப்புக்கள் வரை யுத்தத்தில் குதித்தன.

எமது கெரில்லா அணிகள் பல்வேறு அரங்குகளில் அரச படையினரை எதிர்த்து வீரவேசத்துடன் போர் புரிந்து வந்தன. ஆயுதங்கள் வெடி மருந்துகள் பற்றாக் குறையுடன் நாம் எதிரியைச் சமாளித்துக் கொண்டிருந்தோம்.

இந்தியா மறுப்பு

இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் இந்திய அரசிடம் ஆயுத உதவி கோரினோம்.

எமது மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகி வருகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி, எமது மக்களைப் பாதுகாக்க உதவிசெய்யுமாறு நாம் பாரதத்திடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்தோம்.

எமது கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாகக் கூறிக்கொண்ட பாரதம் மௌனமாக இருந்தது.

நாம் கோரிய ஆயுதப்பட்டியல் விபரங்கள், எமது வெடிமருந்துப் பற்றாக்குறைகள் போன்றவற்றை சேகரித்தத “றோ” அதிகாரி உன்னி கிருஷ்னன் இலங்கை அரசுக்கு சமர்பித்தார்.

இந்தத் தகவலின் அடிப்படையில் சிறீலங்கா ராணுவம் தனது போர்; உபாயங்களை வகுத்தது. யுத்தத்தை தீவிரபடுத்தியது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், களத்தில் நின்று போராடிய எமது இயக்கத்திற்கு ஆயுத உதவியளித்து, எமது மக்களைப் பாதுகாக்கத் தயங்கிய இந்தியா, தமிழ் நாட்டில் செயல் இழந்து கிடந்த இயக்கங்களுக்கு பயிற்சியும், ஆயுதங்களும் வழங்க முன் வந்தது.

இந்த நடவடிக்கையானது எமக்கு இந்தியா மீதிருந்த நம்பிக்கையை தகர்த்தது. இதன் மூலம் இந்திய அரசின் நோக்கம் எமக்குத் தெளிவாகியது.

விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பலம்வாய்ந்த இராணுவ சக்தியாக உருவெடுத்தது சிறீலங்கா ஆயுதப் படையினரைத் தோற்கடிப்பதைக் இந்தியா விரும்பவில்லை.

“சிறீலங்காப் படையினர் புலிகளை அழித்து இராணுவ ரீதியாக பலவீனப்படுத்த வேண்டும்.

புலிகளால் மக்களைப் பாதுகாக்க முடியாத சூழ்நிலை உருவாக வேண்டும். மக்கள் மத்தியில் புலிகள் மீதிருந்த நம்பிக்கை தளர வேண்டும், அந்தச் சூழ்நிலையல் தமிழர்களின் இரட்சகர் என்ற போர்வையில் நேரடியாக இராணுவ ரீதியில் தலையிட வேண்டும்” இப்படித்தான் இந்திய அரசு திட்டமிட்டது.

அதே சமயம் இந்திய அரசு ஜயவர்த்தனாவை மிரட்டியது. “ஏவுகணைகள் உட்பட நவீன ஆயுதங்கள் புலிகளுக்கு வழங்கி சிறீலங்கா படைகளை முறியடிப்போம்.

பெரிய அழிவுகளை உண்டு பண்ணுவோம். எந்த ஒரு ஏகாபத்திய சக்தியிடம் உதவி பெற்றாலும் யுத்தத்தில் வெல்ல முடியாமல் செய்வோம்” என்று மிரட்டியது.

தமிழரின் நலனில் இந்தியா அக்கறை கொண்டிருந்தால் விடுதலைப் புலிகளுக்கு ஆயுத உதவி வழங்கித் தமிழ் மக்களின் அழிவைத் தடுக்க முடியும். ஆனால் இந்தியா அதனை விரும்பவில்லை.

புலிகளின் வெற்றிக்கு வழிவகுத்துக் கொடுத்தால் தனது தலையீட்டுக்கு வாய்ப்பு இலாமல் போய்விடும் என்று இந்தியா கருதியது.

ஒரு அப்பட்டமான இனப்படுகொலையைத் தடுக்கவேண்டும் என்ற மனிதாபிமான நிலைப்பாட்டை கைவிட்டு, பூகோள நலன்களி;ல் மட்டுமே இந்திய அரசு அக்கறை காட்டியது.

pirapaasaஒப்பந்தம்

இலங்கை – இந்திய ஒப்பந்தமானது தமிழீழ மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கவில்லை. இலங்கையில் வாழும் பல்லின மக்களின் ஒரு சமூகக் குழவாகவே தமிழீழ மக்களைக் குறிப்பிடுகிறது.

இந்த ஒப்பந்மானது தமிழர் தாயகத்தையும், அந்தத் தாயகத்தில் தமிழரின் ஒருமைப்பாட்டு உரிமையையும் அங்கீகரிக்கவில்லை.

தற்காலிகமான வடக்கு-கிழக்கு இணைப்புப் பற்றி குறிப்பிட்ட போதும் கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பில் தமிழர் மாநிலத்தை பிரிவுபடுத்ததும் ஆபத்தான விதிகளையும் கொண்டிருக்கிறது.

கூட்டணியின் காவடி

மாகாணசபை திட்டத்தில் ஜனாதிபதிக்கு அளவு மீறிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பதையும், அவசர காலச் சட்டத்தை பிறப்பித்து மாகாண சபைகளைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் கொடுக்கப்பட்டிருப்பதையும் ஒரு முக்கிய குறைபாடாக நாம் சுட்டிக்காட்டியுள்ளோம்.

அதிமுக்கியமான காணி உரிமை, குடியேற்றம் சம்பந்தப்பட்ட மட்டில் தமிழரின் நில உரிமை பேணப்படவில்லை என்பதையும், அத்து மீறிய சட்டரீதியற்ற சிங்களக் குடியேற்றங்களை அகற்றும் வழிமுறைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதையும் எடுத்துரைத்தோம்.

ஒட்டுமொத்தத்தில் மாகாணசபைத்திட்டம் தமிழரின் உரிமைகளையும், நலன்களையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி இந்த திட்டத்தை ஏற்கனவே நாம் நிராகரித்துள்ளோம்.

கடந்த சில வருடங்களாக கொழும்புக்கும், டில்லிக்கும் காவடி எடுத்து, இந்த மாகாண சபைத் திட்டம் பற்றி பேச்சு நடத்தி, அத்திட்டத்திற்கு சட்ட வடிவம் கொடுக்க உதவியவர்கள் கூட்டனியினரே.

இதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் கூட்டணித் தலைவர்கள் கொழும்பில் பேச்சுக்கள் நடத்தி இருக்கிறார்கள்.

அப்படியிருந்தும் அதே கூட்டணியினர் மாகாணசபைத் திட்டத்தில் எவ்வித அதிகாரமும் இல்லை, என்று தற்போது கண்டித்திருக்கிறார்கள்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக ஆதரித்துக் கொண்டு, இந்த ஒப்பந்தத்தின் மூலம் முக்கிய அம்சமான மாகாண சபைத் திட்டத்தைக் கண்டிக்கும் கூட்டணி தலைமையில் துரோகத்தனமான அரசியலை எமது மக்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.

கூட்டணித் தலைமையின் தூரநோக்கற்ற சந்தர்ப்பவாத, சுயநல அரசியல் கொள்கைதான் இன்று எமது மக்களின் துர்ப்பாக்கிய நிலைக்கு காரணம்.

arms_handingover_ltte_001ஆயுத ஒப்படைப்பு

இந்திய அரசானது எம்மை ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணாகதி அடையச் சொல்கிறது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நிபந்தனை அற்ற முறையில் ஆதரிக்கச் சொல்கிறது.

நாம் ஆயுதத்தில் காதல் கொண்ட அராஜகவாதிகள் அல்லர். நாம் பலாத்காரத்தை வழிபடும் பயங்கரவாதிகள் அல்லர். நாம் வெறி கொண்ட, இரத்தவெறி கொண்ட வன்முறையாளர்கள் அல்லர்.

நாம் சமாதானத்தை விரும்புகிறோம். எமது மக்கள் சமாதானமாக, நிம்மதியாக, சுயகௌரவத்ததுடன் சுதந்திரமாக வாழ்வதையே விரும்புகிறார்கள்.

ஒடுக்கப்பட்ட எமது மக்களின் உரிமையை மீட்டெடுப்பதற்காகவே நாம் ஆயுதங்களை ஏந்தினோம்.

இந்த இலட்சியத்துக்காகவே நாம் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வருகிறோம். அந்த இலட்சியத்துக்காக இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர்கள் உயிரை அரப்பணித்துள்ளனர்.

எமது வீர வரலாற்றுக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்து விட்டு எம்மை சரணாகதி அடையச் சொல்கிறது இந்திய அரசு.

நாம் பாரத நாட்டுடன் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. போர் புரிய விரும்பவில்லை.

நாம் ஆயுதங்களை கீழே போட தயாராக இருக்கிறோம். ஆனால் நாம் ஆயதங்களை கையளித்து விடுவதால் எமது மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு தரப்பட்டு விடுமா? எமது மக்கள் நிம்மதியாக, கௌரமாக, பாதுகாப்பாக வாழ வழி பிறக்குமா?

நாம் ஆயுதங்களை கீழே போட தயாராக இருக்கிறோம். ஆனால் எமது மக்களின் பாதுகாப்புக்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.

இந்திய அரசு தனது இராணுவ நடவடிக்கையைக் கைவிட்டு எமது மக்களுக்கு சுபிட்சமான வாழ்வை, ஒரு நிரந்தரமான தீர்வைக்காண முயற்சி எடுக்க வேண்டும்.. அப்பொழுது நாம் ஆயுதங்களை கீழே போடுவோம்.

book1_080114114410அடிபணிவோம்

இந்திய இராணுவத்தின் அடாவடித்தனங்களைக் கண்டு நாம் அஞ்சி அடி பணிந்து போனால் நாம் ஜயவர்த்தனா அரசுக்கு அடிமைகளாகப் போக நேரிடும்.

இத்தனை காலமாக நாம் இரத்தம் சிந்திப் போராடியதற்கு அர்தமில்லாமல் போய்விடும். நாம் அடி பணிந்து போனால் அடுத்த பரம்பரை எம்மை மன்னிக்கபோவதில்லை.

நாம் இந்திய இராணுவத்துக்கு அஞ்சவும் கூடாது. எந்த வகையிலும் ஒத்துழைக்கவும் கூடாது.

இந்தியா ஒரு அந்நிய நாடு. இங்கு வந்து எமது மண்ணை ஆக்கிரமித்துக் கொண்டு இந்திய இராணுவம் எம்மை அடிமைப்படுத்துவதை நாம் அனுமதிக்க முடியாது.

எமது மக்களுக்கு எதிராகத் தான் செய்யும் அட்டூழியங்களையும், அநியாயங்களையும் இந்திய அரசு உலகின் முன்பாக இருட்டடிப்புச் செய்கிறது. அபாண்டமான பொய்களைக் கூறி வருகிறது.

பொய்மையின் திரைகளைக் கிழித்துக் கொண்டு உண்மை ஒருநாள் வெளிவரத்தான் செய்யும்.

அப்பொழுது பாரதம் உலக மனச்சாட்சி முன் தலை குனிந்து நிற்கும். அப்போது வரலாறு எம் பக்கம் திரும்பும். அன்று தான் எமது மக்களுக்கு விடிவு பிறக்கும். அன்றுவரை நாம் உண்மைக்காக, நீதிக்காக தொடர்ந்து போராடுவோம்.

அவ்வாறுதான் புலிகள் அமைப்பினர் தமது நூலில் கூறியிருந்தனர். புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவினரால் அந்த நூல் வெளியிடப்பட்டது.

இயக்கங்களின் உதவி

பொதுமக்களின் நலனில் தமக்கு அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்ள இந்திப் படை அதிகாரிகள் முயற்சி செய்தனர்.

எனினும் எங்காவது ஒரு தாக்குதல் சம்பவம் நடைபெற்றால், அந்த முயற்சிகள் பலன் இல்லாமல் போயின.

பதிலடியாக பொதுமக்களை சுட்டுதள்ளும் தமது படை வீரர்களை வைத்துக் கொண்டு மக்களுடன் சுமுக உறவை ஏற்படுத்துவது எவ்வாறு? அதுதான் இந்தியப் படை அதிகாரிகளின் குழப்பம்.

அது மட்டுமல்லாமல், இந்தியப் படைக்கு எதிரான பிரசாரங்களை முறியடிக்க, வடக்கு-கிழக்கில் தமிழ் மக்கள் தங்கள் பக்கம் இருப்பதாக காட்டும் தேவையும் இந்திய அரசுக்கு இருந்தது.

இந்தியப் படை இலங்கை சென்றது தமிழர்களுக்காகத்தான் என்பதை தமிழ் நாட்டில் இந்திய உள்ள மக்களுக்கும் சொல்லியாக வேண்டும்.

இல்லாவிட்டால் தமிழ் நாட்டில் இந்திய மத்திய அரசின் ஆளும் கட்சியான காங்கிரசுக்கு தேர்தலில் பாதகம் ஏற்படும்.

எனவே- இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்பியமை, ஒப்பந்தம் செயப்பட்டமை போன்றவற்றை மிகச் சரியான நடவடிக்கை, பலன் தரும் நடவடிக்கை என்று காட்ட வடக்கு-கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தத் திட்டமிட்டது இந்திய அரசு.

அதற்கு முன்னோடியாக புலிகளுக்கு எதிரான இயக்கங்களில் தனக்கு மிக விசுவாசமான ஓர் இயக்கத்துக்கு முன்னுரிமை கொடுக்க முன்வந்தது.

தன்னை ஒரு இந்திய வம்சாவளித் தமிழர் என்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தில் அறிமுகம் செய்து கொண்டவர் வரதராஜப் பெருமாள்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப், இயக்கத்துக்குள் சாதாரணப் பிரமுராகப் புகுந்த வரதராஜப் பெருமாள், ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக மாறுவதற்கு வாய்ப்பாக அமைந்ததும், பெருமாள், இந்திய தூதரகம் மூலமாக ஏற்புடுத்திக் கொண்ட உறவுகள்தான்.

இவற்றின் பின்னணியில் நடந்த இரகசிய குழிபறிப்புக்கள் பற்றிய சுவாரஷ்யமான சங்கதிகள் பற்றி அடுத்தவாரம் பார்க்காம்.

(தொடர்ந்து வரும்)

-அரசியல் தொடர்..எழுதுவது அற்புதன்-

குவியலாய் தங்க நகைகள் – சாக்குகளில் பணம்!! இந்தியப் படையினரிடம் சரணடைந்த புலிகளின் பொறுப்பாளர்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – 118)

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.