கடைசி தேவதாசியும்.. முதல் விருதும்..

0
270

“நடன அர்ச்சனை, நாட்டிய சேவை போன்ற பெயர் களில் கலைத்தொண்டு செய்து வந்த பெண் கலைஞர்கள் தேவதாசிகள் என்று அழைக்கப்பட்டார்கள்.

ஒடிசா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் அவர்கள் சிறப்பு பெற்று விளங்கினார்கள்.

பாரம்பரிய கலைகளை அடுத்த தலைமுறைக்காக பாதுகாத்து, வளர்த்தவர் களில் தேவதாசிகளின் பங்கு மிக முக்கியமானது. அவர்கள் உன்னதமான வாழ்வியல் தத்துவங்களை நடனத்தின் மூலமாக வெளிப்படுத்தி சமூகத்திற்கு தொண்டு செய்தார்கள்.

பிற்காலத்தில் தேவதாசிகளாக தங்களை அறிவித்துக் கொள்ள பெண்கள் தயங்கினார்கள்.

முன்பு அரசர்களும், ஜமீன்தார்களும் தேவதாசிகளை அங்கீகரித்து, ஆதரவளித்து, அவர்கள் வாழவும் வழிசெய்து கொடுத்தார்கள்.

அத்தகைய ஆதரவுகளும் தற்போது இல்லாமல் போனதால், தேவதாசி சம்பிரதாயம் என்பது காலவெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு விட்டது” என்று தேவதாசிகளின் சிறப்புகளை எடுத்துரைக்கும் நாட்டிய கலைஞர் காயத்ரி சுப்பிரமணியன், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்.

இவர், ஒடிசா மாநிலத்தில் தான் சந்தித்த பூரிஜெகநாதர் ஆலயத்தின் கடைசி தேவதாசி பற்றியும் சொல்கிறார்!

“ஜெகநாதர் ஆலயத்தில் ‘நிருத்திய அர்ச்சனை’ என்ற முக்கியமான வழிபாடு நடந்துகொண்டிருந்தது.

அந்த நாட்டிய வழிபாட்டை செய்வதற்காக அங்கு ஏராளமான தேவ தாசிகள் இருந்தார்கள். அவர்களில் கடைசி தேவதாசியின் பெயர் சசிமணிதேவி. நான் நாட்டிய நிகழ்ச்சிக்காக ஒடிசா சென்றிருந்தபோது, அவரை சந்தித்து ஆசிபெற்றேன்.

அவர் 93-வது வயதில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். அதனால் அந்த கோவிலில் 800 வருடங் களாக நடந்த தேவதாசி சம்பிரதாயம் முடிவுக்கு வந்தது.

சசிமணிதேவியை கவுரவிக்கும் வகையில், அவரது பெயரில் ஒடிசா அரசு சிறந்த நாட்டிய கலைஞரை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது.

கேரளாவின் சிறந்த நடனமான கேரள நடனத்துக்கு அந்த விருதினை முதலாவதாக வழங்க முடிவு செய்திருந்தனர்.

அதில் புதுமைகளை புகுத்தி செயல்படுத்தியதால் எனக்கு அந்த விருதினை வழங்கியிருக்கிறார்கள்” என் கிறார், காயத்ரி சுப்பிரமணியன்.

‘தேவதாசி புரஸ்கார்’ என்ற அந்த விருதினை காயத்ரி கேரள நடனத்திற்காக பெற்றிருந்தாலும், அவர் பூர்வீகம் தமிழ்நாடு. விருது மூலம் ஒடிசா- கேரளா- தமிழ்நாடு ஆகிய மூன்று மாநில கலாசாரங்களை இணைக்கும் அவரோடு நமது நேர்காணல்!

கேரளாவுக்கும்-உங்களுக்கும் கலைத்தொடர்பு ஏற்பட்டது எப்படி?

“எனது பூர்வீகம் தஞ்சாவூர். பெற்றோர் விஸ்வநாதராவ்- ராதா. அண்ணன் பெயர் ராஜகோபால். தந்தையின் வேலை காரணமாக சிறுவயதிலே திருவனந்தபுரம் வந்துவிட்டேன். எனது கணவர் சுப்பிரமணியன். எங்கள் மகள் சுப்புலட்சுமி 9-ம் வகுப்பு படிக்கிறாள். கேரள மாநிலத்தில், கேரள நடனம் புகழ்பெற்றது. அது என்னை மிகவும் கவர்ந்ததால், அதனை முறைப்படி கற்றுத் தேர்ந்தேன். இந்தியாவின் பல பகுதிகளில் நடனமாடியிருக்கிறேன். வெளிநாடுகளிலும் நிகழ்ச்சி நடத்தி யிருக்கிறேன்”

கேரள நடனத்தின் சிறப்பு என்ன? அது மற்ற நடனங் களில் இருந்து எப்படி மாறுபடுகிறது?

“கேரளாவின் பாரம்பரிய கலையான கதகளியில் இருந்து கேரள நடனம் உருவானது. பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினியாட்டம் போன்றவைகளிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது.

மேற்கண்ட நடனங்களை ஆடும்போது அந்தந்த மொழி மற்றும் சமஸ்கிருத பாடல்கள்தான் பாடப்படும்.

ஆனால் எல்லா மொழி பாடல்களையும், கவிதைகளையும், கீர்த்தனைகளையும் உருவகப்படுத்தி கேரள நடனத்தை ஆடலாம்.

இதை அவ்வளவு எளிதாக கற்றுக்கொள்ள முடியாது. குரு கோபிநாத் என்பவர் இந்த நடனத்தை வடிவமைத்து உருவாக்கினார்.

அவரிடம் முதன் முதலில் பயிற்சி பெற்ற பவானி செல்லப்பனிடம் நான் இந்த கலையை கற்றுக்கொண்டேன். கே.சிவானந்தன், லேகா தங்கச்சி போன்றவர்களும் என் குருக்கள்..”

கேரள நடனம் தவிர உங்களுக்கு வேறு என்ன கலைகள் எல்லாம் தெரியும்?

“பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிப்புடி, கதகளி, திருவாதிரைகளி, களரி போன்றவைகளை நான் கற்று தேர்ச்சிபெற்றிருக்கிறேன்.

இத்தனை கலைகளை கற்றிருப்பதால் என் மனம் விரும்புவதுபோல் எல்லாம் உடலை வளைத்து வசப்படுத்த முடியும்.

என்னால் எப்போதும் புத்துணர்ச்சியாகவும் இருக்க முடிகிறது. என் மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க கலை உதவுகிறது”

201707231212376924_2_CNIDTU230717-8._L_styvpfவெளிநாட்டில் உங்களுக்கு கிடைத்த பெரும் மரியாதையாக எதை கருதுகிறீர்கள்?

“நான் கலை நிகழ்ச்சி நடத்த ஐந்து முறை தைவான் நாட்டிற்கு சென்றிருக்கிறேன். ரஷியா, இலங்கை உள்பட பல்வேறு நாடுகளுக்கும் சென்று கேரள நடனம் ஆடியிருக்கிறேன்.

எல்லா நாடுகளிலும் கலைக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கிறது. நான் கேரள நடனம் ஆடும் போட்டோவை தைவானில் உள்ள இந்திய தூதரகத்தில் வைத்திருக் கிறார்கள். அதை என் கலை சேவைக்கு கிடைத்த பெரும் மரியாதையாக கருதுகிறேன்.

நாட்டியத்தின் மூலம் மக்களிடம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதை என் லட்சியமாக கொண்டிருக்கிறேன்.

மகாபாரத காந்தாரியை மையமாகவைத்து ஒரு நடனத்தை வடிவமைத்து அரங்கேற்றினேன்.

‘இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு’ என்ற அந்த நாட்டிய நிகழ்ச்சியின் இறுதியில், பார்வையாளர்கள் மத்தியில் கண்தானத்தின் சிறப்பினை எடுத்துச்சொன்னேன்.

அதில் நெகிழ்ந்துபோன பார்வையாளர்களில் பலர் அப்போதே கண்தான பத்திரத்தில் கையொப்பமிட்டார்கள்.

இப்படிப்பட்ட சமூக விழிப்புணர்வை தொடர்ந்து செய்ய விரும்பு கிறேன். என்னிடம் மாணவிகளும், அம்மாக்களும் நாட்டிய பயிற்சி பெறுகிறார்கள். அவர்களும் சமூக அக்கறை கொண்டவர்களாக திகழ்கிறார்கள்.

எனது நாட்டிய அனுபவங்களையும், ஆராய்ச்சிகளையும் அடிப்படையாக வைத்து ‘சாஸ்திர நிருத்தியம்’ என்ற புதிய நடனம் ஒன்றை உருவாக்கியிருக்கிறேன்.

அதையும் கற்றுக்கொடுக்கிறேன். பெண்களிடம் நாட்டிய பயிற்சி பெறும் ஆர்வம் சமீப காலங்களில் அதிகரித்துவருகிறது..”

பெண்களிடம் நாட்டியப் பயிற்சி ஆர்வம் அதிகரிக்க என்ன காரணம்?

“தாய்மார்கள் தங்கள் மகள்களை சிறுவயதிலே நாட்டிய பயிற்சிக்கு அனுப்ப விரும்புகிறார்கள். நாட்டியம் கற்றுக்கொள்ளும் குழந்தைகள் மேடை பயம் இல்லாதவர் களாகவும், தேவையற்ற தயக்கங் களில் இருந்து விலகியவர்களாகவும் இருக்கிறார்கள்.

நேர மேலாண்மை, ஒழுக்கம், சுறுசுறுப்பு, நினைவுத் திறன் போன்றவைகளும் அவர்களிடம் வளர் கிறது. நாட்டியத்தோடு கல்வியிலும் அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.

என்ஜினீயரிங்- மருத்துவ கல்லூரி மாணவிகள் அதிக நேரம் படிக்கவேண்டியதிருப்பதால் மனஅழுத்தம் கொள் கிறார்கள். மனஅழுத்தத்தை போக்க அவர்களும் நடன பயிற்சியை நாடுகிறார்கள்.

வீட்டிலே இருக்கும் குடும்பத்தலைவிகளும் ஆரோக்கியத்தை காக்கவும், மகிழ்ச்சியாக பொழுதைபோக்கவும் இப்போது நடனப்பயிற்சிக்கு வருகிறார்கள்.

இளம் பெண்களோடு அவர்களும் சேர்ந்து நடனம் ஆடி பயிற்சி பெறுவது அவர்களுக்கு புதுமை நிறைந்த அனுபவமாக இருக்கிறது” என்கிறார்.

காயத்ரி சுப்பிரமணியன், ‘புனர்நவா’ என்ற கின்னஸ் சாதனை மோகினிஆட்ட நிகழ்ச்சியில் இடம் பிடித்தவர்.

திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவிடமிருந்து ‘நாட்டியரத்னா’ விருது பெற்றவர்.

தைவான் நாட்டு கலாசார துறையும் சிறந்த நாட்டிய கலைஞருக்கான விருதினை இவருக்கு வழங்கியுள்ளது. குளோபல் அமெரிக்கன் பல்கலைக்கழகம் இவ ருக்கு டாக்டர் பட்டம் வழங்கி, கவுரவித்திருக்கிறது.

இந்த கலைக்காக நீங்கள் செய்துகொள்ளும் அலங்காரம் உச்சி முதல் பாதம் வரை வித்தியாசமாக இருக்கிறதே?

‘‘ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களில் உள்ள பெண்களின் ஆடை, அலங்காரங்களை அடிப்படையாகவைத்து கேரள நடனத்துக்கான ‘காஸ்ட்யூம்’ வடிவமைக் கப்படுகிறது.

கூந்தல் அலங்காரமும், ஆடை அலங்காரமும் பார்வையாளர்களை கவரும்விதத்தில் இருக்கும். இதற்கான விசே‌ஷ உடைகள் திருவனந்தபுரத்திலே தயாராகின்றன’’

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.