பவுலர் மண்டையை தாக்கிய பந்து; அதிர்ச்சியில் உறைந்த வீரர்கள்

0
224

இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 பிளாஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன் அடித்த பந்து பவுலரின் மண்டையை பலமாக தாக்கியது. இதனால் வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேல் விளையாட்டு என்ற எல்லோராலும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வி்ளையாட்டிலும் ஆபத்து இருக்கத்தான் செய்கிறது.

வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் புயல்வேக பவுன்சர் பந்துகள் பேட்ஸ்மேன்கள் தலையை தாக்கும். இதனால் பேட்ஸ்மேன்கள் ஹெல்மெட் அணிந்து விளையாடி வருகிறார்கள்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஹியூக்ஸ் பவுன்சர் பந்து தாக்கி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அதன்பிறகு வீரர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஹெல்மெட் அணிந்து பேட்டிங் செய்ய வேண்டும். சில்லி பாயிண்ட், சில்லி மிட்விக்கெட்டாக பேட்ஸ்மேன்கள் அருகில் பீல்டிங் செய்யும் வீரர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தங்களை பாதுகாத்துக் கொள்ள மைதான நடுவர்களே கைக்கவசம் அணிந்து பணியாற்றுகிறார்கள். ஆனால் ஒரு பந்து வீச்சாளர் ஹெல்மெட் அணிந்து பந்து வீசமுடியாது.

பெரும்பாலும் தனக்கு நேராக பந்து வந்தால் அதை தடுத்து விடுவார்கள். அல்லது விலகி விடுவார்கள்.

ஆனால் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டி20 பிளாஸ்ட் தொடரில் பவுலரின் மண்டையை பந்து பலமாக தாக்கிய சம்பவம் அனைவரையும் உறைய வைத்துள்ளது.

டி20 பிளாஸ்ட் தொடரில் நாட்டிங்காம்ஷைர் – பர்மிங்காம் அணிகள் மோதிய போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.

அப்போது பர்மிங்காம் அணியின் சாம் ஹெய்ன் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். 28 வயதான லுக் பிளெட்சர் பந்து வீசினார்.

வேகப்பந்து வீச்சாளரான பிளெட்சர் வீசிய பந்தை சாம் ஹெய்ன் சற்று முன்னால் இறங்கி வந்து ஸ்ட்ரைட் ஷாட் அடித்தார்.

இந்த பந்து பிளெட்சரை நோக்கி வந்தது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பந்து பிளெட்சரின் மண்டையை தாக்கிவிட்டு பலூன் போன்று பறந்தது.

பந்து பட்டதும் பிளெட்சர் சுருண்டு விழுந்தார். மற்ற வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக பிசியோ மைதானத்திற்குள் விரைந்தார். சிறிது நேரம் அவருக்கு முதலுதவி செய்த பின்னர், வெளியே அழைத்துச் சென்றார்.

அதன்பின் பிளெட்சர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிளெட்சர், அதிர்ச்சியில் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பிளெட்சருக்கு அடிபட்டதும் அரைமணி நேரம் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.