நடராசன் நாடகம்… சீறிய கே.கே.எஸ்.எஸ்.ஆர்… கிறுகிறுத்த தா.பாண்டியன், சசிகலா! (ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 31)

0
773

“ஒரு இலையில் ஜானகி, மறு இலையில் ஜெயலலிதா… இந்த இலை மலர்ந்தால் எம்.ஜி.ஆர் ஆட்சி மலரும் என்ற வாசகம்…”என்று போட்டு நடராசன் அடித்த போஸ்டரில் தமிழகம் குழம்பிப்போனது; இ.காங்கிரஸ் திகைத்துப்போனது.

அதோடு ஜெ.அணியோடும் கூட்டணி இல்லை… ஜா.அணியோடும் கூட்டணி இல்லை என்று இ.காங்கிரஸ் திட்டவட்டமாக அறிவித்தது.

இரண்டு அணியில் உள்ளவர்களும் சோர்ந்து போனார்கள். அந்த அறிவிப்பு வெளியானதற்கு மறுநாள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் போயஸ் கார்டன் போனார். நடராஜன் அங்கு இருந்தார்.

நடராசன் நாடகம்… சீறிய கே.கே.எஸ்.எஸ்.ஆர்!

nadarajan_kkssr_11207கே.கே.எஸ்.எஸ்.ஆரைப் பார்த்த நடராசன், “எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை; தனித்துத்தான் போட்டி என்று அறிவித்தபின்னர் கோட்டையிலிருந்து ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் எல்லாம் போன் செய்தார்கள்! அம்மாவுக்கு ஒரே பாராட்டு மழை! அதோடு இன்னொரு செய்தி… நாம் தனித்துப் போட்டியிடுவதால் பிரபல ஆங்கில நாளிதழ் நம்மை ஆதரிக்க முன்வந்துள்ளது” என்றார்.

அதுவரை பொறுமையாக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது.

நடராசனிடம், “யோவ்! காரியாப்பட்டிக்காரர்களும் சத்திரப்பட்டிகாரர்களும் இங்கிலீஷ் பேப்பர் பார்த்துத்தான் ஓட்டுப்போடப் போகிறீர்களா? என்று சீறினார்.

தொடர்ந்து… “அஞ்சு நாளைக்கு முன்னாலே நீ என்ன சொன்னே? காங்கிரஸ் கட்சியோடு உடன்பாடு ஏற்பட்டிருச்சு, அது மூப்பனாருக்கே தெரியாது.

டெல்லியிலிருந்து அம்மாகூட நேரடியா பேசிட்டாங்கன்னு சொன்னியா இல்லையா? இப்ப காங்கிரஸோடு ஆதரவு இல்ல… இங்கிலீஷ் பேப்பர் ஆதரவு குடுத்திருக்குன்னு சொல்ற…வயித்தெரிச்சலைக் கிளப்பதா…

யோவ்… இதுவரை நீ என்னென்ன சொன்னேனு யோசிச்சுப்பாரு… பிரைம் மினிஸ்டர் ஆபிஸோடு உனக்கு காண்டக்ட்னு சொன்ன… தினமும் பிரைம் மினிஸ்டர் ஆபிஸுக்குப் பேசுறதா சொன்ன…

ஒரு நாளைக்கு மூன்று முறை உன்னோட சிதம்பரம் பேசுறார்ன்னு சொன்னே! இப்பத்தான் பிரைம் மினிஸ்டரோடு போனில் பேசிவிட்டு வர்ரேன்னு சொன்ன.. அம்மாவுக்கு டெல்லியில இருந்து அழைப்பு வரப்போகுது பாருங்கன்னு சொன்ன… ஒரு நாளா… ரெண்டு நாளா… பத்து மாசமா இந்தக் கதைகளச் சொன்னே…

இப்ப என்னடான்னா கோட்டையில இருந்து பாராட்டுனாங்க…. இங்கிலீஷ் பேப்பர் ஆதரிக்கப்போகுதுன்னு சொல்ற… வயித்தெரிச்சலைக் கிளப்பாதய்யா… என்று கத்திவிட்டு, “இப்ப அம்மாவைப் பாக்கனும் முடியுமா?” என கோபத்தோடு கேட்டார். நடராஜன் விடுவாரா? ‘அம்மா ரெஸ்ட்’ என்று சொல்ல கே.கே.எஸ்.எஸ்.ஆர் வெளியேறினார்.

நடராசன் நடத்திய வசூல்!

KKSSR_new_11111
கே.கே.எஸ்.எஸ்.ஆர்ஜெயலலிதா அணியில் இப்போது நால்வர் அணி இல்லை. இ.காங்கிரஸோடு கூட்டணி இல்லை; ஜா.அணியியோடு இணைப்பு இல்லை. ஆனாலும் அந்த அணியில் போட்டியிட சீட் கேட்டு பலரும் விண்ணப்பித்தனர். அதற்கான விண்ணப்பத்தின் விலை மட்டும் ஆயிரம் ரூபாய்.

இருப்பதே 234 தொகுதிகள். ஆனால், தேர்தலில் போட்யிட சீட் கேட்டு ஜெ.அணியில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியது. “நீங்கள் போய்விட்டால், நான் அரசியலைவிட்டே போய்விடுவேன்” என்று ஜெயலலிதா, நடராசனுக்கு எழுதிய கடிதத்தை அவர் கட்சிக்காரர்களிடம் வலியப்போய் காட்டிக்கொண்டிருந்தார்.

அதனால், நடராசனை நம்பினால்தான் அம்மாவை அணுகமுடியும் என நினைத்தவர்கள் நடராசனை கொத்துக் கொத்தாய் நாடிவந்தனர். அவர்களிடம் நடராசனும், எஸ்.டி.எஸ்ஸும் நேர்காணல் நடத்தினார்.

“உங்கள் தொகுதிக்கு மட்டும் 5 லட்சம் செலவு செய்ய வேண்டும்; முடியுமா?

அதுபோக தனியாக கட்சி நிதி கொடுக்க வேண்டும்; முடியுமா?

இப்போது உடனடியாக 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்; முடியுமா?

அதை ஒருவாரத்தில் தலைமைக்கழகத்தில் கொண்டுவந்து கொடுக்க வேண்டும்; முடியுமா? என்ற ரீதியில் நடந்தது அந்த நேர்காணல்.

இப்படி நடந்தது அந்த நேர்காணல். இந்தக் கோரிக்கைகளை ஒத்துக்கொள்ள உண்மையான தொண்டனால் முடியுமா? நிச்சயம் முடியவில்லை. மாறாக, சாராய ஆலை அதிபர்கள், கந்துவட்டிக்காரர்கள், பிராந்திக்கடை முதலாளிகள், வியாபாரிகள் வரிசைகட்டி நின்றனர். அவர்கள் மூலம் நடராசன், சசிகலாவின் கல்லா நிறைந்தது.

தா.பாண்டியனுடன் நடராசன் போட்ட ‘டீல்’!

tha_pandiyan_11382தா.பாண்டியன்ஜெ.அணியோடு எந்தக் கட்சியும் கூட்டணி இல்லை என்று முடிவானலும், காங்கிரஸ் கட்சியோடு எப்படியாவது கூட்டணி வைத்துவிட வேண்டும் என்று ஜெயலலிதா முயன்றார். அதற்கு உதவிட சரியான நபர் யார் என்று தேடியபோது, தா.பாண்டியன் பெயர் அடிபட்டது. எங்கெங்கோ தேடி தா.பாண்டியனைப் பிடித்தார் நடராசன். அப்போதுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்ற புதிய கட்சி உருவாகி இருந்தது.

தா.பாண்டியன் ஜெயலலிதாவைச் சந்திக்க, மூப்பனாரிடம் அனுமதிபெற்று போயஸ் தோட்டத்துக்கு வந்தார்.

அங்கு ஜெயலலிதாவைச் சந்தித்த அவர் “முதலில் சீட்களைப் பிரித்துக் கொள்வோம்; முதலமைச்சர் யார் என்பதெல்லாம் பிறகு பேசிக்கொள்ளலாம்; நான் காங்கிரஸோடு கூட்டணிக்கு ஏற்பாடு செய்கிறேன்” என்றார்.

அப்போது அங்கிருந்த ஜெயலலிதா, “யார் முதலமைச்சர் என்பதை பிறகு பேசுவதா? நான்தான் முதலமைச்சர். அதில் எந்த மாற்றமும் இல்லையே” என்றார்.

அதோடு தா.பாண்டியன் திகைத்துப் போனார். அவர் நடத்திய கூட்டணிப்பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. ஜெயலலிதாவைச் சந்தித்துவிட்டு வெளியில் வந்த தா.பாண்டியனை நடராசன் தனியாக அழைத்து ஒரு ‘டீல்’ போட்டார்.

“உங்களுக்கு 25 சீட்களை ஒதுக்கித்தர நான் ஏற்பாடு செய்கிறேன்; உங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் தேர்தல் செலவுக்கு நாங்கள் பணம் கேட்கமாட்டோம்; நீங்கள் எங்கள் அணிக்கு வந்துவிடுங்கள்” என்றார்.

தா.பாண்டியனுக்கு அப்போது ஏற்பட்ட தலைசுற்றல் பல நாள்களுக்கு நிற்கவே இல்லை. “உங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் தேர்தல் செலவுக்கு நாங்கள் பணம் கேட்கமாட்டோம்” என்று நடராசன் சொன்னதற்கு என்ன அர்த்தம் என்பதை இன்றுவரை தா.பாண்டியனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

கதை தொடரும்…

ஒரு இலை ஜா… மறு இலை ஜெ… நடராசனின் போஸ்டர்! – சசிகலா ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 30

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.