ஒரு இலை ஜா… மறு இலை ஜெ… நடராசனின் போஸ்டர்! – சசிகலா ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 30

0
510

ராஜீவ்காந்தி அனுப்பிய பூட்டாசிங்!

எம்.ஜி.ஆர் உருவாக்கிய அ.தி.மு.க என்ற அரசியல் கட்சி ஜா.அணி-ஜெ. அணி என ஏற்கெனவே இரண்டாக உடைந்துகிடந்தது. அதுபோதாது என்று சசிகலா, நடராஜன், திவாகரன், தினகரன் அட்ராசிட்டியில், ஜெ.அணியில் இருந்து நால்வர் அணி என மற்றொரு அணியும் பிய்த்துக்கொண்டு போனது.

இவற்றில் எந்த அணியோடும் கூட்டணி வைப்பது லாபமல்ல என்று இ.காங்கிரஸ் முடிவு செய்துவிட்டது. “ஒருவேளை இந்த அணிகளில் எந்த அணியுடன் கூட்டணி வைத்தாலும் முதலமைச்சர் பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்குத்தான்.

அதற்கேற்ப மூன்றில் இரண்டு பங்கு இடங்களை விட்டுத்தரும் அணியோடு மட்டுமே கூட்டணி” என்று இறுதி முடிவை எடுத்து வைத்திருந்தது காங்கிரஸ் கட்சி.

rajiv_and_buta_singh1_19499

தமிழகத்தில் பறிபோன ஆட்சி அதிகாரத்தை இந்தமுறை எப்படியாவது மீண்டும் கைப்பற்றிவிட வேண்டுமென துடித்தது அந்தக் கட்சி. இரவில் டெல்லி செல்லும் பிரதமர் ராஜீவ் காந்தி, காலையில் தமிழகத்தில்தான் கண் விழித்தார்.

அந்தளவுக்கு அவர் அடிக்கடி தமிழகத்தில் சோனியா காந்தியோடு சேர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்கிடையில் ஜெயலலிதா பிரதமர் ராஜீவ் காந்தியைச் சந்திக்க பலவழிகளில் முயன்றார்.

ஆனால், முடியவில்லை. முன்னாள் அமைச்சர் ஹண்டேவே டெல்லிக்கு அனுப்பிப்பார்த்தார். டெல்லிபோன ஹண்டே பிரதமரைப் பார்க்காமல் வெறும் கையோடு திரும்பினார்.

கடைசியில் ராஜீவ் காந்தியே ஒரு முடிவுக்கு வந்தார். காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் அமைவதற்கு ஏற்ப உடன்பாட்டுக்கு அ.தி.மு.கவில் எந்த அணியாவது ஒத்துக்கொள்கிறதா எனப் பார்த்துக் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த, அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் பூட்டாசிங்கை தமிழகம் அனுப்பிவைத்தார்.

திரிபுராவில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்திய பூட்டாசிங் தமிழகம் வந்தார்.

நடராசனிடம் பூட்டாசிங் போட்ட சவால்!

ஒருநாள் ஜானகி அணியோடு பேச்சுவார்த்தை நடத்தினார், மறுநாள் நால்வர் அணியில் நெடுஞ்செழியனைப் பார்த்தார், கடைசியில் ஜெ.அணி சார்பாக நடராஜனைப் பார்த்தார்.

“50 சீட்களை எடுத்துக் கொள்ளுங்கள் மற்றவற்றை எங்களிடம் விட்டுவிடுங்கள்… அல்லது 85 சீட்களை காங்கிரஸ் கட்சிக்குக் கொடுங்கள்எ” எனக் கேட்டார் பூட்டாசிங்.

நடராஜன் சிரித்துக்கொண்டே, “காங்கிரஸுக்கு 85 சீட்களைக் கொடுப்பதற்கு பதில், அவற்றை ஜானகி அணிக்கே கொடுத்து அ.தி.மு.க ஆட்சியை அமைத்துவிடுவோம்” என்றார்.

எரிச்சலான பூட்டாசிங், “முடியுமா உங்களால்? நீங்கள் இரண்டு அணியும் சேரவே முடியாது. நீங்களே சேர நினைத்தாலும் நாங்கள் விடமாட்டேம்” என்றார்.

அதற்கும் அலட்டிக்கொள்ளாத நடராஜன், “ஜா.அணி எப்போதும் எங்களுடன் இணையத் தயாராகத்தான் இருக்கிறார்கள். நாங்கள்தான் பிடிகொடுக்காமல் இருக்கிறோம்” என்றார்.

நீங்கள் அதை நிரூபித்துவிட்டால், உங்களுடைய நிபந்தனைகளுக்கு நான் டெல்லியைச் சம்மதிக்கவைக்கிறேன் என்றார். பூட்டாசிங்குக்கு என்ன திட்டம் என்றால், ஒன்றுபட்ட அ.தி.மு.க என்றால் எந்த நிபந்தனைக்கும் நான் சம்மதிக்கலாம் என்று ராஜீவ் காந்தி சொல்லியிருந்தார்.

அதனால், இரண்டு அணிகளும் இணையட்டும். இல்லையென்றால், நாம் கேட்கும் சீட்டைக் கொடுக்கட்டும் என்பது பூட்டாசிங்கின் எண்ணம்.

அதைக்கேட்ட நடராஜன், இப்போதே பாருங்கள் என்று சொல்லிவிட்டு, அங்கிருந்தே தொலைபேசியைச் சுழற்றி மதுசூதனனைப் பிடித்தார்.

அவரிடம் இரட்டை இலையைப்போட்டு போஸ்டர் அடிக்க உத்தரவிட்டார். இரட்டை இலைகளில் ஒரு இலையில் ஜானகி படம், மற்றொரு இலையில் ஜெயலலிதா படத்தைப்போட்டு, இந்த இலையில் வாக்களித்தால் எம்.ஜி.ஆர் ஆட்சி மலரும் என்ற வாசகங்களையும் போடச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

நடராஜன் சொன்னதுபோல் மதுசூதனன் போஸ்டர்களை ரெடிசெய்து சென்னையிலும், தமிழகத்தில் முக்கியமான பகுதிகளிலும் ஒட்டினார். போஸ்டர் உபயம் : உக்கம்சந்த், போஸ்டர்களை சென்னையில் ஒட்டியவர் : பல்லாவரம் அடைக்கலம், போஸ்டர் ஐடியா : ம.நடராசன்.

ஒரு இலையில் ஜானகி… மறு இலையில் ஜெயலலிதா!

jaya_old_19190

1988 நவம்பர் 28-ம் தேதி. சென்னையில் காங்கிரஸ் கட்சியின் பிரமாண்ட பேரணி ஏற்பாடாகி இருந்தது. பேரணியைக் காண எழுந்த மக்களுக்கு அதைவிடப் பெரிய ஆச்சர்யமாக அமைந்தது நடராசன் திட்டமிட்ட இரட்டை இலைப் போஸ்டர்தான்.

ஒரு இலையில் ஜானகி… ஒரு இலையில் ஜெயலலிதா சிரித்துக்கொண்டிருந்தனர். தமிழகம் முழுவதும் அந்த விஷயம் பரபரப்பானது. அதையொட்டி, ஜ.-ஜெ.அணி இணைப்புக்கான வேலைகளே தொடங்கின.

நடராஜன் கே.கே.எஸ்.எஸ்.ஆரிடம் சில விஷயங்களைச் சொன்னார். கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஜா. அணியில் முத்துச்சாமியைப் பிடித்து சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

முத்துச்சாமி ஜானகியின் காதுகளுக்கு இந்த விஷயங்களைக் கொண்டுபோனார். சேலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஜானகி, உடல்நலக்குறைவு என்று காரணம் சொல்லிவிட்டு அவசரமாக சென்னை திரும்பினார்.

திருநெல்வேலியில் சுற்றுப்பயணத்தில் இருந்த ஜெயலலிதாவைச் சந்தித்து நடராஜன் சில விஷயங்களைச் சொன்னார். நடராசன் சொன்னதற்கு ஜெயலலிதாவும் ஒத்துக்கொண்டார். இரு அணிகளின் இணைப்புக்கு உடன்பாடுகள் தயாராயின.

ஜானகி முதலமைச்சர், ஜெயலலிதா கழகப் பொதுச் செயலாளர். அல்லது, ஜானகி முதலமைச்சர், கழகப்பொதுச் செயலாளர். ஜெயலலிதா துணை முதலமைச்சர், கழகத்துக்கு துணைப்பொதுச் செயலாளர் என்று முடிவானது.

இந்த உடன்பாட்டை ஜானகி தரப்பு ஏற்றுக் கொண்டது. ஜெ.தரப்பும் ஏற்றுக்கொள்வது போல் பாவலா காட்டியது. தென்காசிப் பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, ஜா.-ஜெ.அணிகள் இணைந்து பணியாற்றவேண்டும் என்ற தொனியில் பேசினார்.

திருநெல்வேலியில் வைத்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா, நீங்களும் ஜானகியும் இணையவேண்டும் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளனவே என்ற நிருபர்களின் கேள்விக்கு இணையலாம் என்று பதில் சொன்னார்.

ஜெயலலிதாவின் சுயரூபம் எனக்குத் தெரியும்! – ஆர்.எம்.வீ

rmv_and_jaya_19461

ஜெயலலிதா இவ்வளவு இறங்கிவந்ததை உணர்ந்த ஜானகி அதிரடியாக இறங்கிவந்தார். கட்சி நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்டார். அனைவரும் இரு அணிகளின் இணைப்புக்குப் பச்சைக்கொடி காட்டினார்கள்.

ஜானகி கறாராக எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. முதலில் இணைவோம். பிறகு பேசிக்கொள்வோம் என்று சொல்லிவிட்டார். அதையடுத்து உயர் மட்டக்குழுக்கூட்டத்தைக் கூட்டினார்.

அதில் ஆர்.எம்.வீரப்பன் மட்டும் ஜெ.அணியோடு இணைவது என்ற முடிவுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். காங்கிரஸை மிரட்ட ஜெயலலிதா போடும் நாடகம் இது.

நம் அணியிலிருந்து யாராவது ஒருவர்போய் ஜெயலலிதாவுடன் நேரில் பேசிப்பாருங்கள்… அப்போது தெரியும், அவருடைய உண்மையான சுயரூபம் என்னவென்று எனச் சொல்லிவிட்டு அந்தக் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

ஜானகியும் அவரது அணியும் இணைப்பு உறுதி என்ற நிலையில் செயல்பட, ஜெ.அணி சார்பில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சுற்றிச் சுழன்று உற்சாகமாக வேலை பார்த்தார்.

இரண்டு அணிகளும் சேர்ந்துவிட்டால், எங்களுக்கு இரண்டு பங்கு இடங்களை விட்டுக்கொடுத்து இ.காங்கிரஸ் எங்களோடு உடன்பாடு காணும் என்று பத்திரிகைகளுக்கு எல்லாம் பேட்டி கொடுத்தார் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ஜானகி அம்மாளும் அவற்றை எல்லாம் அப்படியே நம்பினார்.

நம் அணியில் இருப்பவர்கள் யாரும் இணைப்புக்கு எதிராக எந்தக் கருத்தையும் வெளியில் பேசக்கூடாது என்று கடும் உத்தரவு போட்டார். இந்த நேரத்தில் பூட்டாசிங் மட்டுமல்ல, தமிழக காங்கிரஸும் உண்மையில் மிரண்டுதான் போனது.

ஆட்டத்தைக் கலைத்த நடராசன்… அவமானப்பட்ட கே.கே.எஸ்.எஸ்.ஆர்…

திடீரென நடராசனிடம் இருந்து, போதும்… வேஷத்தைக் கலையுங்கள் என்ற ரீதியில் உத்தரவு வந்தது. “ஜெயலலிதாவைத் தலைவியாகவும், முதல்வராகவும் ஏற்றால்தான் இணைப்பு… என்று எஸ்.டி.எஸ் மூலம் அறிக்கை வெளியிட்டார் நடராசன். ஜெ.அணியும் திடீர் பொதுக்குழுவைக்கூட்டியது.

இணைப்பு பற்றி ஏதோ சொல்லப்போகிறது என்று எதிர்பார்க்க, நானே முதலமைச்சர்…. நானே தலைவி… இதனை ஏற்பவர்களுடனே கூட்டணி என்று கொக்கரித்தார் ஜெயலலிதா.

அதில், கே.கே.எஸ்.எஸ்.ஆரின் மூக்கு உடைபட்டது. ஜானகி அம்மாள் ஏமாந்துபோனார், பூட்டாசிங் மிரண்டுபோனார். தமிழகத்தில் எந்த அணியும் நமக்கு வேலைக்காகாது… நம்மிடமே இவ்வளவு ஆட்டம் காட்டுகிறார்களே! என்று நினைத்த அவர் ராஜீவ் காந்தியிடம் நடந்தவற்றை எல்லாம் புட்டுப்புட்டு வைத்தார். தமிழகத்தில் யாருடனும் கூட்டணி இல்லை என்று காங்கிரஸ் அறிவித்தது.

இந்த விவகாரத்தில் அதிகம் நொந்துபோய் இருந்தவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்தான். இந்த அவமானத்தைப் பொறுக்கமுடியாத அவர் நேராக போயஸ் கார்டன் போனார்.

ஜெயலலிதாவைச் சந்தித்தவர் கோபமாக, “உங்கள் அட்வைசர் நடராஜன் சொல்லித்தானே, இரண்டு அணிகளுக்கான இணைப்பு வேலைகள் எல்லாவற்றையும் நான் முன்னால் நின்று செய்தேன். அப்போது எல்லாம் அமைதியாக இருந்துவிட்டு திடீரென ஏன் இப்படி நடந்துகொண்டீர்கள்?” என்று வெடித்துள்ளார்.

கே.கே.எஸ்.எஸ்.ஆரைக் கூர்மையாகப் பார்த்த ஜெயலலிதா, “அப்படியானால் ஜா. அணியோடு இணைவதில் உங்களுக்கு ஏன் அவ்வளவு விருப்பம் என்று நக்கலாகக் கூறிவிட்டு, இரண்டு அணிகளும் இணைந்துவிட்டால் நீங்கள் எல்லாம் அந்த அம்மா பின்னால் போய்விடுவீர்கள்.

அப்புறம் என் கதி என்ன? ஒரு வருடமாக ஊர் ஊராகச் சுற்றி அலைந்துவிட்டு கடைசியில் தனியாக நிற்பதுதான் என் கதியா? உங்களையும், காங்கிரஸ் கட்சியையும், அந்த ஜானகி அணியையும் ஆழம்பார்க்கத்தான் இணைப்பு என்று ‘சும்மா‘ சொல்லிப் பார்த்தோம் என்றாராம் ஜெயலலிதா!

கதை தொடரும்!

இந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.