புலிகளிடம் இருந்து கருணாவை பிளந்தனர் – ஆயுதப் போராட்டம் அழிந்தது.. அகிம்சைப் போரும் அழிந்து போகுமா?

0
199

முரட்டுத்தனமான பிடிவாதங்களும் தமிழர் அரசியலின் சாபக்கேடும்!!

சரி பிழைகள் ஆயிரம் விமர்சனங்களுக்கு அப்பால் 3 தசாப்த ஆயுதப் போராட்டமும், அதன் வழி பெற்றப்பட்ட பேரம் பேசும் பலமும் புலிகளின் அழிவின் பின் அழிந்து போனது.

இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுக்காலத்தில், சமாந்தரமாக புலிகளை பிளவுபடுத்துவதில் பேரினவாத சக்திகள் முழுமூச்சுடன் ஈடுபட்டன.

அதற்காக புலிகளின் பலம்பொருந்திய தளபதியாகவும், கிழக்கை கட்டுப்பாட்டுள் வைத்திருந்தவருமான கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளீதரனை புலிகளின் தலமையுடன் முரண்பட வைப்பதற்கான அரசியல் காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதற்கு எப்போதுமே தமிழரிடம் ஆழ்மனதில் உறைந்து போயிருக்கும், பிரதேசவாதத்தை பேரினவாத சக்திகளும் அவர்களுக்கு துணைபோனவர்களும் துரும்பாக பயன்படுத்தினர்.

இதனை தமிழரின் வரலாற்று அனுபவங்களோடும், தூரநோக்கோடும் சிந்தித்து விடுதலைப் புலிகளின் தலைமையும், கருணாவும், மக்கள் நலனை முன்னிறுத்தி, விட்டுக்கொடுப்புகளை செய்திருந்தால் புலிகளின் பாரிய உடைவை தவிர்த்த்திருக்க முடியும்.

ஆனால் தனிப்பட்ட ஈகோக்களும், மக்கள் நலனை முன்னிறுத்தாத நகர்வுகளும் இறுதியில் புலிகளை முள்ளிவாய்க்காலில் மூழ்கடித்தன.

இதனை நான் கூறுவதனால் கருணாவின் பிளவுக்கும் புலிகளின் அழிவிற்கும் சம்பந்தம் இல்லை என பலர் வாதிட முன்வரலாம். ஆனால் கருணாவின் பிளவும், அதனால் கிழக்கு புலிகளிடம் இருந்து தூரே விலகிச் சென்றமையுமே முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் பெரும் பங்கு வகித்தது என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.

இங்கே எனக்கு ஞாபகம் வருகிறது நடராஜா குருபரன் தனது ‘மௌனம் கலைகிறது’ தொடரில் எழுதிய விடயம்.. அதாவது ஊடக சந்திப்பு ஒன்றிற்கு சென்றிருந்த அவர்   ‘கருணாவின் பிளவால் புலிகளுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை’ என புலிகள் சொல்கிறார்களே எனக் கேட்டதற்கு, தயாமாஸ்ரர் சொன்னாராம் ‘உவங்கள் விசரன்கள் உப்பிடி சும்மா சொல்லுவாங்கள், அதுதானே இப்ப பிரச்சனையே’ என்று.

அந்த ஞபாகம் இப்போ மீண்டும் வருகிறது. ( இங்கே விடுதலைப் புலிகள் குறித்து, எனது விமர்சனத்தை முன் வைத்ததனால், கட்டுரையின் நோக்கை புரிந்துகொள்ளாமல், பலர் வரிந்து கட்டிக்கொண்டு விதண்டாவாதம் புரிய வருவார்கள்… போலித்தனமான துதிபாடல்களையும், விசுவாசங்களையும் கைவிட்டு உண்மையை தரிசியுங்கள்)

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம், இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு, பிரிக்கப்பட்ட வடக்கையும் கிழக்கையும் மீண்டும் இணைத்தல், மாகாண சபைகளுக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்குதல், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, படையினராலும், பௌத்த கோவில்களாலும், பெரும்பான்மையினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் வாழ்விடங்களை விடுவித்தல், காணாமல்  ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடித்தல்,   என பல பாரிய சவால்கள், தமிழ் மக்களின் முன் முன்னிறுத்தப்பட்டுள்ள தற்போதைய சூழலில் இவையாவற்றையும் மறக்கடிக்க, நீர்த்துப் போக, திசை திருப்ப தற்போதைய தமிழர் அரசியலை எதிர்சக்த்திகள் பயன்படுத்துகிறார்கள், பயன்படுத்துவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆதனால் எரிகிற விளக்கில் எண்ணை ஊற்றும் எழுத்துக்கள் சமூக வலைத்தலங்களை வியாபித்து நிற்கின்றன.

இந்தக் கட்டுரையை நீட்டி முடக்கி ஆலாபிக்க நான் முனையவில்லை.. மனம் நன்றாகவே களைத்துப் போயிற்று.

முரண்பாடுகள் இல்லாமல் அரசியல் இல்லை… அரசியல் இல்லாமல் முரண்பாடுகள் இல்லை.. முரண்பாடுகளுக்குள் உடன்பாடுகள் காண்பது இன்றைய காலத்தின் கட்டாயம்… இங்கே தனிப்பட்ட நலன்களா? தனிப்பட்ட ஈகோக்களா?

அரை நுற்றாண்டுக்கும் மேலொக சொல்லொணாத் துயரங்களை சுமந்து நிற்கும் ஒரு இனத்தின், மக்களின் நலன்களா முக்கியம் என்பதனை ‘வடக்கின் போரில்’ ஈடுபட்டுள்ள அனைவரும் கவனத்தில் கொண்டால் நன்மை பயக்கும்…

இல்லையேல் முரட்டுத்தனமான பிடிவாதங்களும் தமிழர் அரசியலின் சாபக்கேடும் தொடர்வதை கடவுள் வந்தாலும் தடுக்க முடியாது…

– ராஜா பரமேஸ்வரி

http://globaltamilnews.net/archives/30213

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.