வடமாகாணசபை நெருக்கடிகள் – கருணாகரன் (கட்டுரை)

0
332

தமிழ் மக்கள் மீண்டும் துக்கப்படுக்கூடிய விதமாக அரசியல் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. பெரும் எதிர்பார்ப்புகளோடு பதவியேற்ற வடக்கு மாகாணசபை இப்போது நம்பிக்கை வீழ்ச்சியில் புதையுண்டிருக்கிறது.

மதிப்புக்குரியவர்களாகக் காட்சியளித்த முதலமைச்சரும் பிரதம நீதியரசருமான சி.வி. விக்கினேஸ்வரனும் அவருடைய அமைச்சர்களும் மதிப்பிறங்கும் விதமாகச் சந்திக்கு வந்துள்ளனர்.

உறுப்பினர்களும் கூடத்தான். ஊழல் மற்றும் அதிகார துஸ்பிரயோகக் குற்றச்சாட்டுகளில் தொடங்கிய விவகாரம் பகையாக முற்றி இப்பொழுது ஆளாளுக்கு அடிபட்டுக்கொள்கிற அளவுக்கு வலுத்துள்ளது.

சனங்களை மறந்து விட்டுத் தங்களைப் பற்றிச் சிந்தித்ததன் விளைவே இது என்பதைச் சொல்லித்தான் யாருக்கும் விளக்க வேண்டுமென்றில்லை.

போரினால் பெரும்பாதிப்புகளைச் சந்தித்த மக்களின் அவலங்களைத் தீர்த்து வைப்பதற்கு உதவும் என்று கருதப்பட்ட வடக்கு மாகாணசபை இப்போது சனங்களை மறந்து விட்டுத் தங்களுடைய பதவி நலன்களுக்காக அடிபடுகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

தகுதியானவர்கள் இருக்குமிடமே தகுதி பெறும் என்று சொல்வார்கள். சனங்களைக் குறித்துச் சிந்திக்காத இதயங்கள் தங்களைக் குறித்தே சிந்திக்கும் என்பது பொது வழக்கு. இங்கே நடந்து கொண்டிருப்பது அதுதான்.

அதனால்தான், சனங்களின் தேவைகளுக்காக ஆளுநரைச் சந்திக்க முன்வராத மாகாணசபை உறுப்பினர்கள், முதலமைச்சரைப் பதவியிலிருந்து இறக்குவதற்காக ஆளுநரின் காலில் வீழ்ந்து கிடக்கிறார்கள். இப்படி ஒவ்வொன்றிலும் வீழ்ச்சியடைந்திருக்கிறது வடக்கு மாகாணசபையின் செயற்பாடுகளும் உறுப்பினர்களின் நடத்தைகளும்.

இதனால் சந்தி சிரிக்கும் அளவுக்கு நிலைமை சீரழிந்து விட்டது. இதைச் சீர்ப்படுத்துவதற்கான முயற்சிகளில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் முயற்சிகளை எடுத்திருந்தார்.

எனினும் இந்தக் குறிப்புகளை எழுதும்வரை அந்த முயற்சிகள் முழு உறுதிப்பாட்டை எட்டவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆகவே அடுத்து என்ன நடக்கும் என்பது கேள்வியாகவே உள்ளது.

தற்போது யாழ்ப்பாணத்தில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு தமிழ்நாட்டு அரசியல் களத்தில் அ.தி.மு.க அணிகளுக்கிடையே நடந்ததற்கு ஒப்பானது.

அங்கே எடப்பாடியும் ஓ. பன்னீர்ச்செல்வமும் என்றால், இங்கே விக்கினேஸ்வரனும் மாவை சேனாதிராஜாவும். அதனால்தான் நீயா நானா என்ற விதமாக முகப்புத்தகங்களில் கிண்டல் தெரிவிக்கின்றனர் பலரும்.

வடமாகாணசபையின் முறைகேடுகளையும் குறைபாடுகளையும் பற்றி கடந்த மூன்று ஆண்டுகளாகப் பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியும் விமர்சித்தும் வந்துள்ளனர். தேனீயும் தொடர்ச்சியாக அந்தப் பதிவுகளை வெளியிட்டுக் கவனப்படுத்தி வந்தது.

இருந்தபோதும் அதைக் குறித்து தமிழ் மக்களும் மாகாணசபை நிர்வாகமும் முதலமைச்சரும் கவனத்திற்கொள்ளவில்லை.

மட்டுமல்ல, மாகாணசபையைப் பொறுப்பேற்று நடத்தும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் மாகாணசபையின் குறைபாடுகளைப் பற்றியும் அதன் மீது பொது வெளியில் பொறுப்போடு முன்வைக்கப்பட்ட விமர்சனங்களைக் குறித்தும் அக்கறை கொள்ளவில்லை.

இதனால் இந்தப் பிரச்சினைகள் முற்றி, ஆளும் கட்சியினராலேயே அமைச்சர்களின் மீதான குற்றச்சாட்டுகள் சபையில் முன்வைக்கப்பட்டன.

அந்த அடிப்படையிலேயே முதலமைச்சர் விசாரணைக் குழுவை நியமித்தார். அந்த விசாரணைக்குழுவின் அறிக்கை அமைச்சர்களைப் பொருத்தமற்றவர்கள் என்று கண்டது.

இதனையடுத்து அவர்கள் ஒரு தன்னிலை விளக்கத்துடன் பதவியிலிருந்து விலக வேண்டும் என முதலமைச்சரால் கேட்கப்பட்டது.

கூடவே ஏனைய இரண்டு அமைச்சர்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால், அவர்கள் இந்த விசாரணை நடக்கும் வரையிலும் பதவியை விட்டு ஒதுங்கியிருக்குமாறு முதலமைச்சரால் கேட்கப்பட்டது.

விசாரணைகள் முடிவடைந்த பிறகு அந்த முடிவுகளுக்கு ஏற்ப மீள் நிலை பற்றிச் சிந்திக்கலாம் என்றும் கூறப்பட்டது.

ஆனால், இந்த அறிவிப்பை சபை ஏற்கவில்லை. சபையிலிருந்த அரைவாசிப்பேர் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என எழுந்து வெளிநடப்புச் செய்தனர்.

விக்கினேஸ்வரன் நீதிபதியாகவும் நீதியரசராகவும் இருந்த காலத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகளுக்கு எதிர்ப்போ மறுப்போ ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

ஆனால், அவர் மாகாணசபையில் முதலமைச்சராக இருந்து வழங்கிய தீர்ப்பை அவருடைய சகபாடிகளே ஏற்க மறுத்து, அவருக்கு எதிராகத் திரும்பியிருக்கிறார்கள்.

இதுதான் நீதி முறைமைக்கும் அரசியல் நடத்தைக்கும் இடையிலான வேறுபாடு. இதை இப்போது மிகத் தெளிவாகப் புரிந்திருப்பார் விக்கினேஸ்வரன்.

இதைப்போலவே, ஒரு போதுமே ஆளுநரையும் அவருடைய செயற்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்ன சிங்கங்களும் இனமானக் கொம்புகளும் ஆளுநரே தஞ்சமென்று கிடக்கிறார்கள்.

878418482np-against-vignewswaran-mசனங்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக, பிரதேசங்களின் முன்னேற்றத்துக்காக ஆளுநரைச் சந்திக்க மறுத்த – ஆளுநரின் முகத்தையே பார்க்க மாட்டோம் என்று சொல்லிக் கொண்டு திரிந்த இந்தச் சுயமரியாதைச் சிங்கங்கள், புனிதர்கள் எல்லாம் இப்போது தங்கள் சொந்தத் தேவைக்காக – பதவிப் போட்டிக்காக ஆளுநரின் காலடியில் போய்க்கிடக்கிறார்கள்.

இதேவேளை அடுத்த அமைச்சரவை ஆளுநரின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யுமா? அப்போது இவர்களுடைய தேசியப் பற்றும் சுயமரியாதையும் என்னாகும்?

இப்படிப் பலவற்றைச் சொல்லிச் செல்லலாம்.

இதற்குள் மாகாணசபையின் முதலமைச்சருக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையில் அரசியல் கருத்து மோதல்கள் வெடித்துள்ளன.

நீயா நானா என்ற அளவில் களம் சூடாகி விட்டது. மாவை சேனாதிராஜா கட்சியின் தலைவர் என்பதையும் விட, கட்டளைத் தளபதியைப்போன்ற பாத்திரத்தையே இந்தப் பிரச்சினையில் வகித்துக் கொண்டிருக்கிறார்.

இதனால் தமிழரசுக் கட்சியினர் அனைவரும் மாவையின் காலடி நிழலே தஞ்சம் என்று அடைக்கலம் புகுந்திருக்கின்றனர்.

mavai-vicky-மாவையே எல்லோரையும் மிரட்டிக் கொண்டிருக்கிறார். கரணம் தப்பினல மரணம் என்ற மாதிரி.

இதைச் சற்று விரிவாக அல்லது விளக்கமாகச் சொல்வதென்றால், தமிழரசுக் கட்சிக்கு மாறாக யாராவது சிந்தித்தால், அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவர்.

அத்தோடு அவர்களுக்கு ஏதாவது நடந்தால் அதைக் கட்சி பொறுப்பெடுக்காது என்ற விதமாக. அதாவது வஞ்சம் தீர்த்துக் கொண்டிருக்கிறார் மாவை. இதனால், காத்திருந்து கொத்தும் பாம்பு என்று சித்திரிக்கப்படுகிறார்.

அதாவது முதலமைச்சராகுவதற்குக் கனவு கண்டவர் மாவை. அதற்கான வாய்ப்பு அப்பொழுது விக்கினேஸ்வரனால் தவறிப்போனது.

அதற்குக் காத்திருந்து இப்போது அந்தப் பழியைத் தீர்த்துக் கொள்கிறார் மாவை. இதுவே மாவையின் சீற்றத்துக்குக் காரணம்.

sivagnanam_tnasivagnanam_tna

மறுபக்கத்தில் 1987 இல் இருந்து மாகாணசபை முதலமைச்சர் கனவோடிருக்கிறார் சி.வி.கே. சிவஞானம். ஆகவே இந்தச் சந்தர்ப்பத்தைத் தன்னுடைய கனவுக்காகப் பயன்படுத்திக் கொள்ள விளைகிறார் சிவஞானம்.

இதற்காக அவர் தான் ஒரு அவைத்தலைவர், நடுநிலையாளன் என்பற்கு அப்பால், ஆளுநரிடம் தனக்குச் சார்பானவர்களைக் கொண்டுபோய்ப் பேசியிருக்கிறார். விக்கினேஸ்வரனுக்கு எதிராகப் போர்க்கொடியோடிருப்பது சிவஞானமே.

இப்போது சிக்கியது சி.வி. விக்கினேஸ்வரன்தான். பேசாமல் மறுபடியும் கொழும்பில் தமிழ்ச்சங்கம் அல்லது கம்பன் கழகம் என்று அவர் சரணடைய வேண்டியதுதான்.

அல்லது இப்போது கிடைக்கப்பெற்ற ஞானத்தோடு அவர் தன்னுடைய ஆச்சிரமத்துக்குப் போய்க்கொள்ளலாம். சனங்கள்தான் இதிலும் பாடம் படிக்கத் தெரியாமல் குப்பைத் தொட்டிக்குள் மேலும் ஏதாவதுகிடைக்கும் என்று தேடப்போகிறார்கள். அப்படித்தேடினால் மறுபடியும் குப்பையே கிடைக்கும்.

மாவை போன்றவர்கள் காலங்காலமாக கதிரையிலேயே குறியானவர்கள்.அரசியலில் நல்ல மனிதர்களை அனுமதிக்க விரும்புவதில்லை.தாம்சார்ந்த மக்கள்மீது அக்கறையற்றவர்கள்.

நானறிந்தவரை ஒரு உற்சாகமான,மக்களுக்கான அரசியலை முன்னெடுத்ததில்லை.இனிவரும் காலங்களில் இப்படிப்பட்டவர்களை பரந்துபட்ட மக்கள் ஓரம்கட்டவேண்டும்.ஜனநாயக சிந்தனையுள்ள உற்சாகமான மனிதர்கள் அரசியலில் முக்கிய பங்கினை ஆற்றவேண்டும்.

அப்போதுதான் விழிப்புணர்வுள்ள நல்ல சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும் என்றொரு முகநூல் நண்பர் எழுதியிருக்கிறார். முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் சிறப்பாக – பெருந்திருவிழாப்போல நடக்கிறது.

ஆனால், சனங்கள் திக்குமுக்காடிப்போயிருக்கின்றனர்.

உண்மையில் இதனுடைய தொடக்கம் முதற் கோணல் முற்றும் கோணல் என்கிற மாதிரி, அடிப்படைத் தவறே.

அந்தத் தவறின் விளைச்சல்களே இப்போது இப்படி ஆகிக் கொண்டிருக்கிறது. மாகாணசபைத் தேர்தலின்போது மக்கள் நம்பிக்கை வைத்துத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினைத் தெரிவு செய்திருந்தனர்.

ஆனால், எந்த அடிப்படையில் அந்த நம்பிக்கை வைக்கப்பட்டது என்று யாருக்கும் இப்போது நினைவிருக்காது.

இப்போது வடமாகாணசபையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு முதன்மைப் பொறுப்பு தமிழரசுக் கட்சிக்குரியதே.

தொடர்ச்சியாகவே தமிழரசுக் கட்சி தவறிழைத்து வருகிறது. விக்கினேஸ்வரனையும் குருகுலராஜா உள்ளிட்ட புது முகங்களையும் அரசியல் அரங்கிற்குக் கொண்டு வந்து இறக்கியது தமிழரசுக்கட்சியே.

மிக நெருக்கடியான காலங்களில் அரசியல் போராட்டங்களில் பங்கேற்றிருந்த பல ஆளுமைகள் இருக்கும்போது அவர்களையெல்லாம் புறமொதுக்கி, அவமதித்து விட்டு பிரமுகர்களைக் களத்திலிறக்கி மேட்டுக்குடி (கனவான்) அரசியல் செய்ய முயற்சித்தது தமிழரசுக்கட்சி.

இதற்கான வழிகாட்டல்கள் சம்மந்தனுடையதும் மாவை சேனாதிராஜாவினுடையதுமாகும். ஆகவே இவர்களே இதற்குத் தார்மீகப் பொறுப்பேற்க வேணும்.

விக்கினேஸ்வரன் உள்ளிட்டவர்களின் தவறுகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டு வந்தன.

அப்போது கூட சம்மந்தனும் மாவையும் அவற்றைக் குறித்து பாராமுகமாகவே இருந்தனர்.

இதற்கு இவர்கள் ஒரு நியாயத்தைக் கூற முற்படலாம். விக்கினேஸ்வரனின் நிர்வாகத்தில் தாம் தலையிடாமல் அவரைச் சுயாதீனமாக இயங்க விட்டோம். இப்போது நிலைமை எல்லை மீறும்போது தலையிடுகிறோம் என. இது சுத்த ஏமாற்றாகும்.

vigneswaranவிக்கினேஸ்வரனின் பிற்கால நடத்தைகளும் தீர்மானங்களும் தமிழரசுக் கட்சியின் தலைமைப்பீடத்துக்கு (கவனிக்கவும், ஏனையவர்கள் விக்கினேஸ்வரனுக்குப் பின்னுக்கு வாலாட்டிக் கொண்டிருந்தனர் – சிறிதரன், குருகுலராஜா உள்ளிட்ட பலர் ) விருப்பமற்ற முறையில் இருந்தது.

அவர் தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து நின்றதற்கும் தனித்துத் துலங்கியதற்கும் எழுக தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்றுத் தமிழரசுக் கட்சி மற்றும் கூட்டமைப்புக்கு நெருக்கடியைக் கொடுத்ததற்கும் இன்று கணக்குத்தீர்த்திருக்கிறது தமிழரசுக்கட்சி. அதன் வெளிப்பாடே விக்கினேஸ்வரன் மீதான நம்பிக்கையற்ற தீர்மானம்.

இதற்கு ஏனைய தரப்பினரும் தெரிந்தோ தெரியாமலோ ஆதரவளித்திருக்கின்றனர். எதிர்க்கட்சிகள் கூட இதில் நிதானமற்றே நடந்து கொள்கின்றன.

இதனால் விக்கினேஸ்வரன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலமாக அவர் பதவியிழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

இதற்கு எதிராக இளைஞர்களில் ஒரு தொகுதியினர் தெருவில் இறங்கிப் போராடக் கிளம்பியிருக்கிறார்கள்.

விக்கினேஸ்வரனுக்கு ஆதரவாக தமிழ் மக்கள் பேரவை கதவடைப்புக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. இது கொஞ்சம் அதிகப்படியான நடவடிக்கையே.

என்ன செய்வது, உள்ளரங்கில் பேசித்தீர்த்திருக்க வேண்டிய நடவடிக்கைகள் சந்தியில் வைத்துப் பிரித்துப் பார்த்து பிணக்காக்கப்பட்டுள்ளன. தமிழரசுக் கட்சியின் இயல்பும் ஆளுமையும் இதுதான்.

இனிமேல் இந்தக் கட்சியினால் எதையும் செய்ய முடியாது (“தமிழ் மக்களை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேணும்”) என்று சொல்லி, அதன் தலைவர் S.J.V. செல்வநாயகம் தமிழரசுக் கட்சியைக் குப்பைக் கூடைக்குள் போட்டார்.

ஆனால், அவருடைய வாரிசுகள் தாமே என்று தம்மைத்தாமே கூறிக்கொள்வோர் அதைக் குப்பைக் கூடைக்குள்ளிருந்து எடுத்து, அதற்கு அலங்காரம் பண்ணி வைத்துக் கொண்டு கூத்தாடுகிறார்கள்.

இதை மக்கள் நம்பி ஏற்றுக்கொண்டதே இன்றைய ஏமாற்றங்களுக்குக் காரணமாகும்.

அதற்கான தண்டனையையே மக்கள் இன்று பெற்றுக்கொண்டிருக்கின்றனர்.

உண்மையில் S.J.V. செல்வநாயகத்தை இந்த ”வாரிசுகள்” மதிப்பதாக இருந்தால், அவர் கைவிட்ட கட்சியை இவர்களும் கைவிட்டுப் புதிய முறைமைக்குள் சென்றிருக்க வேணும். அதுவே அவருக்குச் செய்யும் மரியாதையாக இருந்திருக்கும். அதுவே செல்வநாயகத்தின் விருப்பமாகவும் இருந்தது.

ஆனால், அதை இவர்கள் செய்யவில்லை. இவர்கள் செய்வதெல்லாம் செல்வநாயகத்தைத் தங்கள் வியாபாரத்துக்கான உபயோகப் பண்டமாக – கருவியாகப் பயன்படுத்திக் கொள்வதுதான்.

இப்போது யாழ். மாட்டீன் வீதி அலுவலகம் கூவத்தூர் சொகுசு விடுதியாக மாறியிருக்கிறது.

வடக்கு மாகாண சபை தமிழக சட்டசபையாக மாறியிருக்கிறது. வடக்கு ஆளுநர் தமிழக ஆளுநரின் நிலையில் உள்ளார்.

தமிழக ஆளும் கட்சி ஏம்எல்ஏக்கள் போன்று வடக்கு மாகாண சபை தமிழரசுக் கட்சி உறுப்பினா்கள். அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில் சனங்கள்.

எப்படியோ ஊழல்வாதிகளுக்கு சரியான பாடமாக இந்த நடவடிக்கை அமைய வேண்டும்! பதவி விலக்கினால் மட்டும் போதாது பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண மக்களுக்கு வகை சொல்ல வேண்டும்.

ஊழல் அமைச்சர்கள் மீது வழங்கப்பட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களின் தீர்வு நியாயமானது.

அவரின் முடிவு பாராட்டுக்குரியது என்கின்றனர் பெருந்திரளானவர்கள்.

இது வடக்கு மாகாணத்தில் பல்வேறு அரச நிறுவங்களில் நிகழும் ஊழல்கள், அதிகாரத் துஷ்பிரயோகங்கள், பண மோசடி, ஆணவம் செய்பவர்களுக்கு முன் எச்சரிக்கையாக அமைய வேண்டும்.

குறிப்பாக வடக்கு மாகாணக் கல்வியில் நிகழும் நிர்வாகச் சீர்கேடுகள், அதிகாரத் துஷ்பிரயோகங்கள், பண மோசடிகள் போன்றவறைக் கட்டுப் படுத்தப்பட வேண்டும்.

அதேநேரம் வடக்கு மாகாண முதலமைச்சர் தனது எல்லைகுட்பட்ட விடயங்களில்

சிறந்த நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்தி வடக்கு மாகண அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு அரும்பாடுபட்டு உழைக்க வேண்டும்.

தவறின் எதிர்காலத்தில் அவரும் தாமாகவே பதவி விலக முன்வர வேண்டும் என்றெல்லாம் கூறப்படுகிறது. ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவரவர் நலன்களிலேயே குறியாக இருக்கின்றனர் எல்லோரும்.

வேறு ஒன்றுக்குமல்ல, ஆளுநரின் காலில் மன்றாட்டம்

வரிச்சலுகை வாகனங்களைப் பெறும்வரை திண்டாட்டம் என்று கூறும் அளவுக்கான சுய நலத்திற்காகத்தான். சிப்பிக்குள்தான் முத்தெடுக்கலாம்.

குப்பைக்குள் குப்பையைத்தான் எடுக்கலாம் என்று தெரியாமலா சொன்னார்கள்?

-கருணாகரன்-

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.