போலிநபர்களை பெற்றோராக நடிக்க வைத்து நிச்சயதார்த்தம் லாட்ஜில் மாணவியை கொன்று காதலன் ஓட்டம்

0
242

கும்பகோணம் : கும்பகோணம் அருகே லாட்ஜில் கல்லூரி மாணவியை கொலை செய்துவிட்டு காதலன் தலைமறைவானார்.

ஏற்கனவே திருமணமானதை மறைத்து அவர் போலியான பெற்றோரை காண்பித்து காதலி வீட்டில் நாடகமாடிய திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரம் கோயில் எதிரில் உள்ள விடுதி ஒன்றில் கடந்த 12ம் தேதி மதியம் 11 மணியளவில் அவளிவநல்லூர் அண்ணாநகரை சேர்ந்த வீரையன் மகன் சுபாஷ்சந்திரபோஸ் (36) என்பவர், ஒரு பெண்ணுடன் தங்கியுள்ளார்.

மறுநாள் மாலை அறை கதவு வெளிப்புறமாக பூட்டியிருப்பதை பார்த்து ஊழியர்கள் மாற்று சாவியை கொண்டு திறந்து பார்த்தபோது, இளம்பெண் கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

புகாரின்படி திருநீலக்குடி போலீசார்   பெண்ணின் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு கும்பகோணம்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அறையில் நடத்திய சோதனையில் அந்த பெண், திருப்புறம்பியத்தை சேர்ந்த பாண்டியன் மகள் கீர்த்திகா (19) என்பதும், கும்பகோணத்தில் உள்ள தனியார் பாராமெடிக்கல் கல்லூரி மாணவி என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து கீர்த்திகாவின் பெற்றோரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது:

கீர்த்தனாவின் உறவினர் வீடு அவளிவநல்லூரில் இருந்ததால், அங்கு அடிக்கடி சென்று வந்தபோது சுபாஷ் சந்திரபோசுடன் காதல் ஏற்பட்டது.

அவர் நான் ஆசிரியராக பணி செய்கிறேன், எனக்கு திருமணமாகவில்லை. உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கீர்த்திகாவிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இதனை நம்பிய கீர்த்திகா, சுபாஷ்சந்திரபோசுடன் கன்னியாகுமரி உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று வந்துள்ளார். அவர்களுக்கு திருமணம் செய்துவைக்க கீர்த்தனாவின் பெற்றோரும் முன்வந்தனர்.

அப்போது அவர்களிடம் சுபாஷ்சந்திரபோஸ், போலியாக தாய், தந்தை, உறவினர்களை உருவாக்கி, மாப்பிள்ளை பார்க்க பெண் வீட்டார் வந்தபோதும், பெண் வீட்டுக்கு சென்றபோதும் அழைத்து சென்றுள்ளார்.

இதை நம்பி கடந்த ஏப்ரலில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர். அதன்பிறகு இருவரும் பல இடங்களுக்கு சென்று தங்கியுள்ளனர்.

இந்தநிலையில், ஏற்கனவே தங்கியிருந்த லாட்ஜில் கடந்த 12ம் தேதி தங்கினர். சுபாஷ்சந்திரபோஸ் நடவடிக்கையில் இருந்து அவருக்கு ஏற்கனவே திருமணமானது தெரியவரவே கீர்த்தனா வாக்குவாதம் செய்திருக்கிறார்.

இதில் ஆத்திரமடைந்த அவர், தலையணையால் கீர்த்தனாவை அமுக்கி கொன்றுள்ளார்.

அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக சி.எப்.எல். பல்பை உடைத்து தொண்டை, முகம் உள்ளிட்ட இடங்களில் கிழித்து முகத்தையே சிதைத்துள்ளார்.

இவ்வாறு விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, விடுதியில் போலீசார் ஆய்வு செய்தபோது, சுபாஷ்சந்திரபோசின் செல்போன் சிக்கியது.

மேலும் அறையில் இருந்து 3 கைலிகளை கைப்பற்றினர். எனவே, 3 பேர் சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

கண்காணிப்பு கேமரா இல்லாததால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. பின்னர், அவரது செல்போனில் 12, 13ம் தேதிகளில் யார், யார் பேசியுள்ளனர் என்பதை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.